திராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள் விளக்கங்கள்

புலவர் ஆ பழனி

 

திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும்

திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக…

அன்புள்ள ஜெமோ

 

திராவிட இயக்கம் பற்றிய ஒரு வரைகோட்டுப் படத்தை அளித்திருக்கிறீர்கள். அதில் அழகியல்ரீதியாக உங்கள் மதிப்பீடுகளையும் முன்வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்குரியது. உண்மையில் இப்படி ஒரு முழுமையான இலக்கிய வரைபடம் இதுவரை எவராலும் போடப்படவில்லை. இதுவரை இருந்தது எல்லாம் மதிப்பீடே இல்லாத ஒட்டுமொத்தமான பட்டியல்கள்தான். இனி இதையே வேறு வேறு வடிவில் தாங்களும் சொல்லிக்கொண்டிருப்பார்கள். இது ஏற்கனவே தங்களுக்கும் தெரியும் என்ற பாவனையில் ஓரிரு பெயர்களைச் சேர்ப்பதைப்பற்றி பேசுவார்கள்.

 

நீங்கள் முற்போக்கு இலக்கியத்திற்கு போட்ட அந்த வரலாற்றுச் சித்திரம்தான் [இடங்கை இலக்கியம்]இப்போது அத்தனைபேராலும் சொல்லப்படுகிறது. ஆனால் சுயமாக வாசித்து அப்படி ஒன்றை போட அவர்களால் இயலவில்லை. யார் முக்கியம் யார் முக்கியமென்றே தெரியாமல் எல்லா பெயர்களையும் ஒரே பட்டியலாகப் போடத்தான் அவர்களால் முடியும். ஆனால் அந்த வரைபடம வந்தபோது எவருமே அதை பொருட்படுத்தியதாகக் காட்டிக்கொள்ளவில்லை.

 

இந்த திராவிட இயக்க இலக்கியத்தின் சித்திரத்தை உருவாக்கவே எவ்வளவு வாசித்திருக்கவேண்டும், எவ்வளவு விவாதித்து மதிப்பிட்டிருக்கவேண்டும். அது இவர்களிடமில்லை. இவர்களிடமிருப்பதெல்லாம் சண்டையும் பூசலும் போட்டு உருவாக்கிக்கொண்ட ஒரு சில புரிதல்களும் வாதங்களும் மட்டும்தான். அதற்குரிய சில கலைச்சொற்கள். இந்த பட்டியலையும் இதிலுள்ள பெயர்களையும் இனி பலரும் பேசுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

 

எஸ்.பாஸ்கர்

 

ம இலெ தங்கப்பா

இடங்கை இலக்கியம்

அன்புள்ள பாஸ்கர்

 

அது எப்போதுமே அப்படித்தான். முழுமையாக வாசிப்பது என்பதே ஓர் அதிகாரம். அவர்கள் அஞ்சுவது அதைத்தான். உதாரணமாக, கு.சின்னப்ப பாரதி, டி.செல்வராஜ் இருவரும் முற்போக்கு முகாமின் சிறந்த எழுத்தாளர்கள் என அவர்களால் ஏற்கப்பட்டதே க.நா.சு அதைச் சுட்டிக்காட்டியபின்னர்தான். அதற்குமுன் கட்சிப்பொறுப்பில் இருந்த கே.முத்தையாவைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்

 

ஜெ

இலக்குவனார்

 

அன்புள்ள ஜெ

 

திராவிட இயக்க இலக்கியம் பற்றிய உங்கள் சுருக்கமான மதிப்பீடும் வரலாற்றுத் தொகுப்பும் முக்கியமானது. அதில் இதுவரை எவரும் சேர்க்காத விந்தன் தமிழ்ஒளி இருவரையும் சேர்த்திருக்கிறீர்கள் ஒரு கேள்வி. அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன் போன்றவர்கள் இந்தப்பட்டியலில் வரமாட்டார்களா? வைரமுத்துவை எங்கே சேர்ப்பீர்கள்?

 

ராஜன் அருணாச்சலம்

சாலை இளந்திரையன்

அன்புள்ள ராஜன்

 

அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன் போன்றவர்கள் வானம்பாடி குழுவைச் சேர்ந்தவர்கள். அது வேறு அழகியலும் கருத்தியலும் கொண்ட இலக்கியப்போக்கு. பொதுவாக அவர்களின் வழி கற்பனாவாத மார்க்ஸியம். அவர்களின் அழகியல் பாப்லோ நெரூதா , கலீல் கிப்ரான், வால்ட் விட்மான், ரூமியில் இருந்து பெற்றுக்கொண்டது.

 

அவர்கள் அறியப்பட்டவர்களாக ஆனபோது அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு திமுகவின் அதிகார வட்டத்திற்குள் நுழைந்தனர். மற்றபடி திராவிட இயக்கத்துடன் அவர்களுக்குத் தொடர்பில்லை.

 

வைரமுத்து அழகியல்ரீதியாக வானம்பாடி மரபைச் சேர்ந்தவர். புனைகதையில் அவர் தன்னை புதுமைப்பித்தன், அழகிரிசாமி மரபினராகவே சொல்லிக்கொள்கிறார்

 

ஜெ

கா. அப்பாத்துரை

அன்புள்ள ஜெ

 

நீங்கள் இதற்குமேலும் விரித்து விரித்து எழுதவேண்டிய தேவை இல்லை என நினைக்கிறேன். மிகத்தெளிவாகவே  திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும் கட்டுரையில் அனைத்தையும் சொல்லிவிட்டீர்கள். திராவிட இயக்கம் எதுவாக இருந்தது எதுவாக இல்லை, அதன் சாதனைகள் என்ன அதன் குறைபாடுகள் என்ன என்று விளக்கிவிட்டீர்கள்.

 

இங்கே முகநூலில் களமாடும் கும்பல் அப்படி ஒரு கட்டுரையை எழுதுவதுபோகட்டும் கடைசிவரை வாசிக்கவே தகுதி அற்றது. அதிலுள்ள பெயர்களும் வரலாற்றுச்சித்திரமும் அவர்கள் அறியாதது. இப்படி ஒரு கட்டுரை வரும்போது தங்களால் அதைப்போல ஒன்றை எழுத முடியாது என்பதை, இதுவரை அதைப்போல ஒரு ஒட்டுமொத்தப்பார்வையை எழுதவே இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். அந்தக்கட்டுரையை அப்படியே விட்டுவிடுவார்கள். அதை விட்டுவிட்டு ஏதாவது சில்லறைச் செய்தியைப் பிடித்துக்கொண்டு தேவையில்லாமல் அலப்பறை கொடுப்பார்கள். அதை எல்லாம் நாங்கள் எப்போதோ பேசிவிட்டோம் என்பதுபோல பாவலா காட்டுவார்கள். ஆனால் ஏன் இதுவரை அதேபோல ஒரு கட்டுரையை எழுதவில்லை என்பதை மட்டும் சொல்லமாட்டார்கள்.

 

இந்தக்கும்பலுடன் பேசுவது வெட்டிவேலை. ஆணித்தரமாக, முழுமையான பார்வையுடன் நீங்கள் முன்வைத்த கட்டுரையை மழுப்புவதற்காகவே கூச்சல்போடுகிறார்கள். கடந்துசெல்லுங்கள். நீங்கள் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள்

 

எஸ். ராமச்சந்திரன்

தேவநேயப் பாவாணர்

அன்புள்ள ராமச்சந்திரன்

 

நான் பேசுவது வாசகர்களிடம். அவர்களிடம் எனக்கு சொல்ல ஏதாவது எஞ்சுவது வரை மட்டுமே பேசுகிறேன். விவாதம் என்பது உண்மையில் ஒரு ஆர்வமூட்டும் சொற்சூழல். அதற்குள் வைத்து சிலவற்றைச் சொன்னால்  அதை வாசிக்கிறார்கள். அவ்வளவுதான் இவ்விவாதங்களின் பெறுபொருள்

 

ஜெ

தமிழ்ஒளி

ஜெமோ அவர்களே,

 

நீங்கள் திராவிட இயக்கம் பற்றி விமர்சித்து எழுதியபோது என் நண்பர்கள் சிலர் மகிழ்ச்சி அடைந்தனர். நான் சொன்னேன், மகிழ்ச்சி அடையவேண்டாம். அவர் ஒரு பச்சோந்தி. நூல்விட்டுப்பார்க்கிறார். அவர்கள் கவ்வியதும் அந்தப்பக்கமாகச் சென்றுவிடுவார் என்றேன். அது நடந்துவிட்டது

திராவிட இயக்கம் மக்களை அதிகாரப்படுத்தியது, சீர்மொழியை அளித்த்து என்றால் அதுதானே பெரிய கலாச்சார சக்தி? அதை ஏன் எதிர்த்தீர்கள்? நீங்கள் திராவிட இயக்க அழகியல் பற்றிப் பேசியதெல்லாமே பசப்பு. பொய். அவர்கள் எந்தப் பண்பாட்டுச்செயல்பாடுகளையும் செய்யவில்லை. இழிவுபடுத்துவதும் வசைபாடுவதும்தான் அவர்களின் கலாச்சாரச் செயல்பாடு. நீங்கள் அதற்கு வெள்ளையடிக்கிறீர்கள். அதை நியாயப்படுத்தி இடதுசாரி எழுத்திலிருந்து விந்தனையும் தமிழ்ஒளியையும் கொண்டுபோய் அங்கே சேர்க்கிறீர்கள். வள்ளலார் பக்தரான முவ வை அங்கே கொண்டுசென்று வைக்கிறீர்கள். அவர்களுக்கு நீங்களே ஆதாரங்களை உருவாக்கிக் கொடுக்கிறீர்கள்

 

இதற்குப்பெயர்தான் ஐந்தாம்படை வேலை. நீங்கள் சொல்வதுபோல கூலிப்படைவேலை

அஸ்வத்தாமன்

வேழவேந்தன்

அன்புள்ள அஸ்வத்தாமன்

 

நல்ல புனைபெயர். தலையில் காயம் ஆறாமல் இருக்கும். வன்மமே சிரஞ்சீவித்துவத்தையும் அளிக்கும்

 

ஜெ

இடங்கை இலக்கியம்

 

முந்தைய கட்டுரைஉலுத்தர்
அடுத்த கட்டுரைதனிமை – கடிதங்கள்