தென்காசி- கடிதங்கள்

ஜெ

 

தென்காசி கோயிலின் ஊர்த்துவர் பற்றி எழுதியிருந்தீர்கள்

 

‘ஓங்குநிலை ஒன்பதுற்ற திருக்கோபுரம்
பாங்குருவம் பத்துப் பயில் தூணும்
தேங்குபுகழ் மன்னர் பெருமான் வழுதிகண்ட
தென்காசி தன்னிலன்றிஉண்டோ தலத்து?’

 

தென்காசி கோபுரம் மற்றும் சிற்பத்தூண்களைப்பற்றிய கவிதை இது. இங்குள்ள திருவோலக்க மண்டபத்தில் உள்ளது இந்த ஊர்த்துவர் சிலை. அருகே மகாதாண்டவர் சிலை உள்ளது. இது தமிழகத்தின் பேரழகுகொண்ட சிலைகளில் ஒன்று. இதைப்பற்றிபலர் எழுதியிருக்கிறார்கள்

 

ஆர். சௌந்தரராஜன்

வானோக்கி ஒரு கால் – 2

வானோக்கி ஒரு கால் -1

அன்புள்ள ஜெ,

 

தென்காசி, இலஞ்சி ஆலயங்களுக்குச் சென்றதைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள். நான் உடனிருக்கவேண்டும் என விரும்பினேன். நான் மிகமிக விரும்பும் இடங்களில் ஒன்று தென்காசி ஆலயம். அங்குள்ள கல்யாணகிருஷ்ணன் [கையில் மன்மதனின் வில் ஏந்தியவர்] என்னுடைய கனவுச்சிலைகளில் ஒன்று. இலஞ்சியும் அழகான ஊர். குறிப்பாகப் பின்னணியில் உள்ள மலைகள்.

 

சிலைகளை ரசிக்க ஒரு மனநிலை தேவை. முன்பு ஒருநிமிடம் பார்த்துவிட்டுச் செல்வேன். அதன்பின் நின்று பார்க்க ஆரம்பித்தேன். சிலைகளை அரைமணிநேரமாக பார்க்கவேண்டும். அவை நம் கனவில் வரவேண்டும். நாம் மனதைத்திறந்து வைத்தால் மட்டுமே அவை நமக்குள் நுழையும். சிலைகளைப் பார்க்கையில் பேசிக்கொண்டிருக்கக்கூடாது. கண்மூடி கும்பிடக்கூடாது.

 

நம் ஆலயங்களில் மிக அற்புதமான துவாரபாலகர் சிலைகள் உண்டு. ஆண்மை வீரம் ஆகியவை செறிந்தவை. அவற்றை பலபேர் பார்ப்பதே இல்லை. நானேகூட சிலைகளைப் பார்க்கும் வழக்கமில்லாதவனாகவே இருந்தேன். என்னைச் சிலைகளின் கலையுலகுக்கு அறிமுகம்செய்வதவர் நீங்கள்தான். ஆகவே உங்களை என் ஆசிரியராகவே நினைக்கிறேன்

 

மகேஷ் டி.எம்

முந்தைய கட்டுரைஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅரூ அறிபுனை விமர்சனம்-3 ,இருப்பு சார்ந்த வினாக்கள்