வானோக்கி ஒரு கால் -1
வானோக்கி ஒரு கால் – 2
அன்புள்ள ஜெ
நீங்கள் உங்கள் வானோக்கி ஒரு கால் கட்டுரையில் சொல்லியிருந்த விஷயங்களை பலவாறாக நானும் சொல்லிவருகிறேன். தமிழகத்திற்கு வெளியே வாழ்வதனால் என்னைப்போன்றவர்களுக்கு இதெல்லாம் தெரிகிறது. தமிழகத்திலேயே ஆலயவழிபாட்டின் ஒரு சின்ன வட்டத்திற்குள்ளேயே சுழல்பவர்களுக்கு இது கண்ணுக்குப்படவில்லை. இங்கே இந்துமதம் பற்றிப்பேசுபவர்கள் சின்ன மாற்றம் என்றாலும் ஆகமம் மாறக்கூடாது, வழிவழியான மரபுகளை மீறக்கூடாது என்றுதான் சொல்வார்கள்.
சபரி மலை விவகாரத்தில் இப்படிப்பேசிய அத்தனைபேரிடமும் தமிழக ஆலயங்களில் ஆகம முறை மீறல்களைப் பற்றி நான் பேசியிருக்கிறேன். அவர்களுக்கு ஆகமமுறையே தெரியாது. அர்ச்சகர்களுக்குக் கூடத் தெரியாது. வழிவழியான முறைகளை மிகச்சின்ன லாபங்களுக்காக முழுக்கவே மாற்றிவிடுகிறார்கள். எந்த ஒழுங்கோ முறையோ அதில் கடைப்பிடிப்பதில்லை.
சிற்பங்களை வெறும் பொம்மைகளாகக் கருதக்கூடாது. அவை ஆவாஹனம் செய்யப்பட்ட திருவுருக்கள். அப்படி ஆவாஹனம் செய்யப்படாத திருவுருக்களில்கூட மூர்த்திசான்னித்தியம் உண்டு. அவை அந்த கணக்குகளின்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக காலபைரவர் போன்ற சிலைகள் போருக்குக் கிளம்பும் உடையில் இருக்கும். சுந்தர வஸ்திரதாரியாக பெருமாளின் வடிவங்கள் இருக்கும். சில துர்க்கைசிலைகளில் அக்னியையே ஆடையாக உருவகம் பண்ணியிருப்பார்கள். நடராஜசிற்பத்தின் ஆடை பறக்கும் தழல்போல் இருக்கும். அது வடவை அக்னி. அதையே ஆடையாக அணிந்திருக்கிறார். இதற்கெல்லாம் ஆகம சாஸ்திர முறை உண்டு.
இன்றைக்கு அத்தனைபேருக்கும் அழுக்குத்துணியை கோவணமாக கட்டிவிடுகிறார்கள். இந்தச்சிலைகளுக்கு வஸ்திரதாரணம் செய்யவேண்டும் என முன்னோர்கள் நினைத்திருந்தால் அதற்கான வடிவத்தை அளித்திருப்பார்கள். சில ஊர்களில் சிற்பங்களில் ஆணியால் ஓட்டை போட்டு ஆடையை ஒட்டிவைக்கிறார்கள். எந்த ஒழுங்கும் அழகும் இல்லை. இவர்களிடம் எதுவுமே சொல்லமுடியவில்லை. தமிழகத்தில் சென்ற ஐம்பதாண்டுகளில் மதக்கல்வி அறவே இல்லாமலாகிவிட்டது. ஆகவே மூடபக்தி பெருகிவிட்டது. கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ஆளுமைகளும் இல்லை அமைப்புக்களும் இல்லை.
இங்கே ஆகமசம்பிரதாயம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் இதைப்பேசமாட்டார்கள். ஏனென்றால் இது வியாபாரம். அவர்களுக்கு வருமானம். இவர்கள் ஆகமசம்பிரதாயம் பேசுவதெல்லாம் சாதி விஷயமாக மட்டும்தான். [ இப்போது திருமாவளவனை தீட்சிதர்கள் வரவேற்றபோது ஒருகும்பல் அது ஆகமமுறை அல்ல என வசைபாடினார்கள். இதில் மட்டும்தான் ஆகமம் பார்க்கிறார்கள் மற்றபடி சிவலிங்கத்தை ஆட்டுக்கல் குழவியாக பயன்படுத்தினாலும் கவலை இல்லை]
ஒருவகையில் நீங்கள் சொல்வது உண்மை. இங்கே அர்ச்சகராக வருபவர்கள் வறுமையானவர்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லை. ஒரு துணியை சிவன்கோயிலில் கொடுத்து அது சிவன் உடலில் ஒருவாரம் இருக்கவேண்டும், அதற்கு என்ன பணம் வேண்டும் என்று கேட்கும் ‘பக்தரை’ நான் கண்டேன். ஜோசியர் சொன்னாராம். அந்த அர்ச்சகர் ஆயிரம் ரூபாய் கேட்டார். ஐநூறு ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார். நம் ஆலயங்களில் சிற்பங்கள் அழிந்துகொண்டிருக்கிறன. சிற்பங்கள் பொறுப்பில்லாமல் அழிவதைப்பற்றி நீங்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். நான்குநேரிக் காரரான ஒருவரிடம் இப்படிச் சிற்பங்கள் அழிவதைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு அது பெரிய விஷயமாகவே படவில்லை. அதைவிட முக்கியமாக வழிபாட்டு முறைகள் அழிந்துகொண்டிருக்கின்றன.
வட இந்தியாவின் கோயில்களைப் பற்றி நீங்கள் கும்பமேளா பயணக்கட்டுரையிலே எழுதியிருந்தீர்கள். அங்கே ஐநூறாண்டுக்கால அயல்மத ஆட்சியால் ஆலயங்கள் இடிக்கப்பட்டன. குடும்பவழிபாடு மட்டும் மிஞ்சியது. மீண்டும் கோயில்கள் கட்டப்பட்டபோது எவருக்கும் ஆகமமுறை தெரியவில்லை. வழிபாட்டுமுறை தெரியவில்லை. ஆகவே கோயில்கள் கும்மட்டங்கள் கூம்புகளுடன் அழகும் ஒழுங்கும் இல்லாமல் அமைந்தன. பூசை என்ற முறையே இல்லை. லேய்ஸ், மேரிபிஸ்கட் எல்லாம் நைவேத்யம் செய்யப்படுவதைக் காணலாம். தமிழகத்திலும் அந்த முறை வந்துகொண்டிருக்கிறது. ஐம்பதாண்டுகளுக்குப்பின் இங்கே ஆலயவழிபாடு எந்த நிலையில் இருக்கும் என்பதையே எண்ணிப்பார்க்கமுடியவில்லை
எஸ்.மகாதேவன்