அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
இந்தக் கட்டுரையை இப்போதுதான் வாசித்தேன்.
எழுத்தாளர் தேவனின் கதைகளில் வரும் கணவன் – மனைவி – குடும்பம் சம்பந்தமான ஆரோக்கியமான நகைச்சுவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் தொட்ட உயரம் யாரும் தொடவில்லை என்பது என் கருத்து. சமீபத்தில் இந்த அளவிற்குச் சிரிப்பை வரவைக்கும் ஒரு கட்டுரையை எங்குமே வாசிக்கவில்லை.
எனக்கென்னவோ அருண்மொழிநங்கை அவர்கள் ஒரு புத்தகம் எழுதினால் அது அந்த ஆண்டின் பெஸ்ட் செல்லர் ஆக இருக்கும் என்றே தோன்றுகிறது. ஜாக்கிரதை, உங்கள் வீட்டிற்குள்ளேயே தொழில்முறைப் போட்டியாளர் இருக்கின்றார் உங்களுக்கு:-)
உங்கள் மீதான சிங்கம், புலி படிமம் உண்மைதான் என்று எனக்கும் ஒரு எண்ணம் இருந்ததுண்டு, கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது விழாவில் உங்களைப் பார்க்கும் வரை.
உங்களுக்கு நினைவிருக்கலாம். விழா தொடங்குமுன் அன்று மதியம் நீங்கள் தங்கியிருந்த அடுக்ககத்தில் ராமச்சந்திர சர்மா நிறைய பாடல்கள் பாடினார். அப்போது ஒரு அன்பர் ஈரோடு சந்திப்பிலும் இவரை நிறையப் பாட வைத்துக் கேட்டிருக்கலாம். வெட்டியாக இலக்கியம் பேசிக்கொண்டு இருந்துவிட்டோம் என்று சொன்னார். “இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று ஒரு குபீர் சிரிப்புடன் நீங்கள் சொன்னீர்கள். அந்த நொடியில் உங்கள் மீதான சிங்கம் புலி படிமம் என்னளவில் போய்விட்டது.
அன்புடன்
கோபி
பெங்களூர்
அன்புள்ள கோபி,
சிங்கம்புலி படிமத்தை கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்திருக்கிறேன். கிராமத்தில் மிகப்பெரிய மீசை வைத்திருப்பவர்தான் ஆகப்பெரிய கோழையாகவும் அசடாகவும் இருப்பார் இல்லையா?
ஜெ
திரு ஜெயமோகன்,
நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த விதமான தொடர்ந்த மாற்றம் ‘கனிவது’ அல்லாமல் வேறென்ன?
எல்லாவற்றையும் கருணையோடு (empathy) அணுகுதல் என்பதை நோக்கி நகர வேண்டும் தானே? I think only such an inner transformation is real evolution for anyone from any walk of life.
எனக்கு உங்கள் அளவிற்கு இதை விரிவாக சொல்ல தெரியவில்லை. But I can relate with the soul of the article, soul of what you have said. மீண்டும் மீண்டும் படிக்க நிறைய யோசிக்க வைக்கும்.
நன்றி
மங்கை செல்வம்
அன்புள்ள மங்கை
நன்றி
உங்கள் கடிதங்களில் உள்ள கலப்பின நடை கொஞ்சம் கஷ்டப்படுத்துகிறது. கவனிக்கக்கூடாதா?
ஜெ
அன்புள்ள ஜெ.,
என்னை ஒரு காலத்தில் அலைக்கழித்து விடை காணும் முன்பே என்னை விட்டு விலகிய கேள்விக்கு இப்போது பதில் கிடைத்திருக்கிறது.
என் ஆளுமை மீது எப்போதுமே எனக்கு ஒரு வெறுப்பு உண்டு. அது எனக்குப் பிடித்த ஆளுமை இல்லை என்பதே அதன் காரணம். என் ஆளுமையை மாற்ற பல குட்டிக்கரணங்கள் போட்டிருக்கிறேன். அதில் சில தற்காலிக வெற்றிகளும் அடைந்து இருக்கிறேன் – என்னுடன் இருப்பவர்கள் திகைக்கும் அளவு வெற்றி. அனால் அந்த வெற்றிகள் சில நாட்களே நீடிக்கும்.
ஆளுமை என்பது முகத்தைப் போன்றதா முடியைப் போன்றதா என்று பல நாட்கள் யோசித்து வழக்கம் போல கிடப்பில் போட்டுவிட்டுப் பிழைப்பைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.
இப்போது உங்கள் கட்டுரை ஒரு புதிய கதவைத் திறந்து இருக்கிறது.
தன்னைத் தானே அவதானிப்பது எத்தனை சவாலான ஆனால் நிறைவான விஷயம் என்பதை சிறிய அளவில் அறிந்து இருக்கிறேன். உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி
ரத்தன்