ஓநாயும் புல்லும்- சௌந்தர்

ஓநாய்குலச்சின்னம்-கடலூர் சீனு

அன்புள்ள  ஜெ  சார்

புத்தக திருவிழாவில்  வாங்கி  ஆறு மாதமாக  படிக்காமல்  இருந்த  நாவல்களில் ஒன்று,  ஜியாங்  ரோங் எழுதிய ”ஓநாய் குலச்சின்னம்” வெண்முரசின்  அடுத்த  நாவல்  வரையிலான  நேரத்தில் நேற்று படித்து   முடித்தேன்.

ஒரு நாவல்  எப்படி  பல்வேறு  கட்டுரைகளை , நிகழ்வுகளை, வெவ்வேறு  சம்பவங்களை  இணைக்க  முடியும் என்பதற்கு  இந்நாவல் ஒரு நல்ல முன்னுதாரணம்  .

வெண்முரசின்  ‘புல்வேதம்’   எனும்  சொல்லில்  தொடங்கி , ஜாரெட்  டைமென்ட் ,  மனசானபு புகோகா,  வரையியிலான  சித்தாந்தங்களை இணைத்து  கொள்ள  செய்த  மிகசிறந்த  அனுபவம் இந்நாவல்  .

மையமான  கதை  என்பதை  விட , ஒரு  காலகட்டத்தின்,  பண்பாட்டின், அல்லது  வாழ்வாதாரத்தின் , ”எழுதல்,  பறத்தல், விழுதல்”, என்கிற  முப்பரிமாண  களம்  இந்நாவலின் வழியே  நம் கண் முன்  விரிந்து, ஆடும்  ஒரு  நடனம் .

சீன  மைய  நிலத்தின் ஹேன்  இனத்து  மாணவனான  ஜென்  சென் , மங்கோலிய பாரம்பரிய  மேய்ச்சல்  நிலமான  , பீஜிங்கின்  வடக்கிலிருக்கும்  ”ஓலோன் புலாக்  ‘ எனும்  கதை  களத்திற்கு  வந்து  சேர்கிறான் , பில்ஜி  எனும்  முதியவரும் , ஆசானும் , தந்தை  ஸ்தானத்துக்கு  உரியவருமான ஒரு  தலைமை  ஆசிரியர் போன்றவரின்  நட்பும் , நாள்தோறும்  அவரின்  வழிகாட்டலுமாக , மிக  இனிய  பயணமாக  தொடங்கும்  நாவல் , ஓநாய்கள்  எப்படி  மேய்ச்சல்  நிலத்தின்  நண்பர்கள்  என  அவர்  நடத்தும் நேரடி களப்பணியிலும்   மற்ற  அனைத்து  விலங்குகளும்  எப்படி  ஒன்றோடு  ஒன்று  தொடர்புடையவை , ஓநாய்களை  குறைவாக  வேட்டை  ஆடவேண்டியதின்  அவசியம் , அவற்றை  வாழவைப்பதன்  அவசியம் , டெஞ்சர்  எனும்  கடவுளின்   மீதான  நம்பிக்கை , அதனுடன்  மேய்ச்சல்  நிலம்  முழுவதற்குமான உறவு  என  அவர்  , ஜென்  சென்னுக்குள்  அந்த  வாழ்வின்  மீதான  மிகப்பெரிய  காதலை  வளர்த்து  விடுகிறார்.

பில்ஜியின்  எதிர்ப்பையும்  தாண்டி  ஓநாய் குட்டி  ஒன்றை  வளர்க்க  தொடங்கி , அதனோடு  தன்  முழு வாழ்வையும்  பிணைத்துக்கொண்டு , ஒவ்வொரு  நாளும்  ஓநாய்கள்  பற்றிய  துல்லியமான  அறிவை  பெறுகிறான் , இந்நிலையில்  நான்கே  வருடத்தில்  மேய்ச்சல்  நிலம்  உருமாறுகிறது , பாவோ  போன்ற  அதிகாரிகளும் , டோர்ஜி  எனும்  அந்த  நிலத்தின்  பேராசை  கொண்ட  மனிதர்களாலும் , இயந்திரங்களின்  உதவியுடன் , புராதன  மேய்ச்சல்  நிலத்தை ” விவசாய  சொர்க்கபூமி ‘யாக  மாற்றுகிறார்கள் , இந்நிலையில்  பூர்வ குடிகளும் , அதன் வாழ்வும் , ஆன்மாவும்  என்னவாகிறது . என்பதே  நாவலின்  முடிவு.

‘ இங்கு  புல்லும்  மேய்ச்சல்  நிலமும் தான்  பெரிய உயிர்கள் , மற்ற  அனைத்தும் , சிறு  உயிர்கள்  தான் , ஓநாயும் , மனிதனும்  கூட ” என்கிற  வரிகள்  தான்  நாவலின்  மையம் . இந்த  வரிகள் எப்படி வெண்முரசின்   “விசும்பின் துளி விழுந்த கதிர் என புல்லைச் சொல்கிறார்கள் மூதாதையர். புல்லின் அதிதேவதையான குசை மேகங்களின் குழந்தை. மின்னல்கள் வானிலெழும்போது புல் அவற்றை வாங்கிக்கொள்கிறது என்கின்றனர். ”மண்ணில் இந்திரனுக்கு மிகப்பிரியமானவள் குசை.” ”குசை என்றும் அன்புடன் இருப்பாள்”

வரிகளுடன்  இயல்பாக  வந்து  இணைந்து  கொள்கிறது  என்பது வியக்க  வைக்கிறது. மேலும் ” இங்கிருக்கும்  அனைத்து  உயிரினமும்  எதோ  வகையில்  புல்லையே  தின்று  உயிர்  வாழ்கிறது’ ‘ என்கிற  உங்களுடைய ‘குறளினிது’  உரை நினைவில்  எழுகிறது .

அதேபோல்  ஜாரெட்  டைமண்டின் , ” சமீபத்தில் {1979} நியூ  கினிய  பாயு  என்கிற  உலக மக்களால் தொடர்பு கொள்ளப்படாத ,நாடோடி குழு, பண்பட்ட { முதலை}  வேட்டை  குழுவால், சுட்டுத்தள்ளப்படட  சித்திரம் ‘ இந்த  நாவலை  படிக்கையில்  மேலெழுகிறது.

மேலும் ,பூர்வகுடி ஆஸ்திரேலிய -வேட்டையாளர்கள் உணவு  சேகரிப்புக்காக,பின்லேண்டர்  தீவு ,டாஸ்மேனியா , போன்ற  இடங்களுக்கு  மாற்றி வைக்கப்பட்டபோது , தங்களுடைய  சுற்றுசூழல்  சார்ந்து  முற்றாக ஒழிந்தனர் , அல்லது  நவீன  தொழில் நுட்பத்துடன் , உணவு  சேகரிப்பவராக  மாறினார் , என்கிற  சித்திரம்  இந்த  நாவலின்  முடிவில்  வரும் நவீன  மங்கோலிய  சிறுவன் , யமஹா, இருசக்கர  வாகனத்தில் வந்து,  ஒரு  பருந்தை  சுட்டுக்கொன்று , வாகனத்தில்  தொங்கவிட்டு  செல்லும்  காட்சி. இருபது  வருடங்களில்  ஒரு  முழு வாழ்வும்  அழிந்து  வேறுவகை  வாழ்விற்கு  மனித  இனம் பழகிவிட்ட , அல்லது  ஆன்மாவை  இழந்துவிட்ட  சித்திரத்தையே  தருகிறது .

ஒவ்வொரு  காலகட்டத்திலும்  அதன்  ஆத்மாவாக  நின்று  நம்மோடு  பேசுவதற்கு, பெரும்பாலும்  மூதாதை  ஒருவர்  இருப்பார் , இந்த  நாவலில்  ‘ பில்ஜி ‘ எனும் முதியவர்  தான்  அந்த  நிலத்தின்  ஆத்மா , அவரோடு சேர்ந்து  ,  மேய்சசல்  நிலத்தின்  ”வான் புதையல் ” எனும்  இறந்த  உடலை  ஓநாய்க்கு  படைத்தல்,அதன்  மூலம்  டெஞ்சர்  எனும்  மேய்ச்சல்  நில கடவுளை  அடைதல்    எனும்  சடங்குடன்  முடிகிறது.

சி மோகன்

தமிழில்  சி.மோகன்  , மொழிபெயர்ப்பில்  உள்  மங்கோலிய  மேய்ச்சல்  நிலம்  கண்முன் ஒவ்வொரு  காட்சியையும்  நிறுத்தி  மூளை  அடுக்குகளில் இனி  என்றும்  இருக்கும்படியான  நினைவாக  மாற்றுகிறது

நாவலின்  தொடக்கத்தில்  பசுமையான  அடர்ந்த  புல்வெளியின்  பரப்பில், ஒருபோதும்  பார்க்க முடியாத , மறைந்து  ஒழிந்து  வாழும்  எலி  இனம் ,நாவலின்  கடைசியில்  சுதந்திரமாக, புல்வெளியை  பாழ்  படுத்தியபடி , தின்று  கொழுத்து  பயமின்றி  திரியும்  ஒரு  காட்சி, மொத்த  நிலமும்  சுரண்டப்பட்டு  விட்டதற்கான சான்று .

”அதீத  நுகர்வு”  அல்லது  ”நுகர்வு  வெறி” , என்கிற  சொல் தான்  நாவலின்  பிற்பகுதியின்  மையம் . ஓநாய்கள்  முழுவதும்  கொன்று  ஒழிக்கப்பட்டு , பூர்வகுடி  மேய்ச்சல்காரர்கள், விரட்டப்பட்ட  பின்னர் , மிகப்பெரிய  மந்தையும் , விவசாய நிலமும்  இருக்கிறது , ஆனால்  புல்லின்  தரம், பசுமை  தன்மை , குதிரைகளின்  உயரம் , நாய்களின் உடல்வாகு , என  அனைத்தும்  தரம்  குறைந்து  விடுகிறது . இனி  புதியவர்கள்  ஒருபோதும் தரமான  மங்கோலிய  குதிரைகளை  காணப்போவதில்லை .

மசானபு  புகோகா வின் ,  ”முழுமையற்ற  மனித  அறிவானது, இயற்கையின்  பூரணத்துவத்தை  கூறுவதற்கு ,பாராட்டுவதற்கு ,போதாதது ”. என்கிற  வரிகள் , எதோ வகையில்  ” இந்நாவலின்  நாயகன்  பில்ஜியின், மறுபிறவி  சொற்கள்  தான்  என்றே  படுகிறது .

அவ்வகையில் , இன்றைய  அந்தமான்  பூர்வகுடி  குரலும் , நியூசிலாந்து  வீதிகளில்  காரிலிருந்து  வீசப்படும்  உணவுப்பொருளுக்கும் , போதைப்பொருளுக்கும்   கையேந்தி  நின்றிருக்கும்  ஆஸ்திரேலிய /நியூஸிலாந்திய  பழங்குகுடிகளின்  குரலும்  ஒன்றே. அது  நவீன  வாழ்க்கை  வாழ  தேவையான அனைத்தையும்  இழந்த ,பல்லாயிரம்  வருடங்களாக  அடைந்த  திறன்  அனைத்தையும்  இழந்த மேய்ச்சல்  நிலத்திலிருந்தது  சிறை பிடித்து  கூண்டில்  அடைக்கப்பட்டு  காட்சி  சாலையில்  வைக்கப்பட்டிருக்கும்  ஓநாயின்  குரல்

இந்த நூல்  ஒருவகையில் , மானுடவியல் , இயற்கை வாழ்வியல் , விலங்கியல் , வேளாண் சமூகவியல்  என  அனைத்தயும்  உள்ளடக்கிய  ஒரு  களஞ்சியம் .

புல்வெளியின்  பல்வேறு  பருவ நிலை  சார்ந்த  அறிவியல் , ஓநாய்களின்  திறன் ,குதிரை  வளர்ப்பு , மர்மோட்டுகள்  எனும் உயிரினத்தின்  செயல்பாடுகள் ,காட்டு விலங்குகளின்  குணாம்சம் , வீட்டு விலங்குகளின்  நடத்தை  என  ஒரு முழு  விலங்கியல்  நூலாகவும்  எனக்கு  மிக  நெருக்கமான  நூல்.

அறிவு  என்றும்  பண்படுதல்  என்றும்  நாம்  திரட்டிக்கொண்டு  உருவாக்கிய  ‘ சுயம் ‘  ஏன்  இதுபோன்ற  ஒரு காலகட்ட ,பண்பாட்டு ,அல்லது  சமுதாய  வீழ்ச்சியை படித்தாலோ , கேள்விப்பட்டாலோ , நிலை  அழிகிறது. நீங்கள்  சொல்வது  போல  இலக்கியம்  ஒருவகையில்  நிலை  அழிய  செய்வது  தான்  போலும் . இந்நாவல்  அத்தகைய  உணர்வையே  விட்டு  செல்கிறது .

நினைவில்  என்றும்  இருக்கப்போகும்  மேலும்  ஒரு நாவல்

நன்றி

சௌந்தர்.

முந்தைய கட்டுரைஷோபா சக்திக்கு…. லக்ஷ்மி மணிவண்ணன்
அடுத்த கட்டுரைஈரோடு விவாதப்பயிற்சி முகாம் -கடிதங்கள்