திரைப்பட ஏற்பு -கடிதங்கள்

திரைப்படம் – ஏற்பின் இயங்கியல்

வணக்கம். உங்கள் ஏற்பின் இயங்கியல் படித்தேன்.

 

அரசியல்பற்று ஒருவனை ஒருவகையான மிதப்பு கொண்டவனாக ஆக்கிவிடுகிறது. உலகையே சீர்திருத்தும், வழிகாட்டும் பொறுப்பை அவன் எடுத்துக்கொள்கிறான். அதற்கான தன் தகுதி பற்றி எண்ணிப்பார்ப்பதில்லை படைப்பாளி எப்படி படம் எடுக்கவேண்டும், பார்வையாளர் எப்படிப் பார்க்கவேண்டும் என்று வகுப்பெடுக்கும் எழுத்துக்களை எழுதும் விமர்சகர்கள் உருவாவது இப்படித்தான். மிக எளிய அன்றாட அரசியல்நிலைபாடுகள், அரசியல்சரி சார்ந்த அணுகுமுறைகள் இவர்களிடமிருந்து வெளிப்படுகின்றன. சமூகஏற்பு போன்ற நுண்மையான ஆய்வுகளுக்கு அதன்பின் அவர்களின் மூளை வளைவதில்லை

 

இந்த வரிகள் மிகவும் பாதித்தன. சமகால  வழிகாட்டும் மீட்பர்கள், சீர்திருத்தும் தோழர்கள் என நவீன உலகில் பெரிய மோஸ்தர் உள்ளது.

 

ஒரு கலை அனுபவம் ஆடியன்ஸால் ஏற்கபட ஆடியன்ஸுக்கு உள்ள பயிற்சி, எதிர்ப்பார்ப்பு, மன இயல்பு , குணம் போல பல விஷயங்கள் உண்டு. சொல்பவர் கலை நுணுக்கங்களை சொந்த அனுபவம், பயிற்சி, மன இயல்பு, குணம் மூலம் வடிவமைத்து கொடுத்தாலும் , அது ஆடியன்ஸுக்கு உருவாக்கும் அனுபவம் தனிதனியானது. ஒரே யுனிவர்சல அனுபவம் அமைவது மிக சிரமம் என நினைக்கின்றேன். எனக்கு தெளிவாக தெரியவில்லை.

 

இன்று அது எளிய மனிதர்கள் தங்கள் வாய்ப்புகள் வழியாக தொற்றி மேலேறுவதன் கதையாக பார்க்கப்படுகிறது

 

இந்த வரி இன்றைய சராசரி இளைஞர், குடும்ப மனநிலை, தொற்றி மேலேறுவது குறித்த எல்லா அனுபவங்களின் மீதும் கவனிப்பும், ஆர்வமும் உள்ளது. சொந்த அனுபவத்திலேயே அதுதான் நிறைய இடம் எடுத்துக் கொள்கின்றது.

 

கலை அனுபவம் என்றைக்கும் மாற்றி போட கூடியது, மூழ்க அடிக்க கூடியது, அல்லது பற்றிக் கொண்டு நகர உதவுவது. சினிமாவில் ஏதோ ஒன்று மனதை, குணத்தினை தொட்டுப் பார்ப்பதும் அவ்வாறே. சிலது நாஸ்டாலாஜிக்காக மாறி இருக்கின்றது, செயல்பட முடியாமல்  போன ஒரு வினையின் இடத்தினை பிடித்துக் கொள்கின்றது, சிலது ஆடியன்ஸ் தன்னை  விளங்கி கொள்ள, தான் காணுவதை விளங்கி கொள்ள.

 

“நெருப்பில் என்னடா சுத்தமும் அசுத்தமும் என்பது ஒரு சித்தர் வாக்காக பல ஆன்மிக உரைகளில் சொல்லப்பட்டிருப்பதை நான் கேட்டிருக்கிறேன். யானை வாழுற காட்டில்தான் எறும்பும் வாழ்கிறது’ ‘விற்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன்’ ஆகியவற்றை பழமொழிகளாக பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். என்னிடமே சொல்லியிருக்கிறார்கள்.”

 

என்பது போல கூடவே இருக்கின்றது. ஒரு லென்ஸாக மாறி உலகை காண உதவுகின்றது.

 

சஞ்சீவ் மன்னவன்

 

அன்புள்ள ஜெ

 

நலம்தானே?

அங்காடித்தெருவை முன்வைத்து எழுதிய குறிப்பைக் கண்டேன். அந்த சினிமா வந்தபோது அழுவாச்சியாக இருக்கிறதே என நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன் என ஞாபகம். ஆனால் ஐந்தாண்டுக்குப்பின் நான் அந்த சினிமாவை மீண்டும் பார்த்தேன். என் பெண்ணுக்கு மிகப்பிடித்தமான சினிமா அது. அவள் அந்த கக்கூஸ் கழுவும் ஆள் செய்தித்தாள் வாசிக்கும் இடத்தில் எழுந்து நின்று கைதட்டினாள். எனக்கே சினிமா அப்போது வேறு ஒரு கோணத்தில் பிடிகிடைத்தது

 

அங்காடித்தெருவை இப்போது பார்த்தால் அதன் முக்கியத்துவம் என்பது ரொம்பச்சின்ன கதாபாத்திரங்கள் நம்பகமாக வந்ததுதான். சின்னக்கதாபாத்திரங்களை வித்தியாசமாக அமைப்பதுதான் சினிமாக்களின் வழி. அவர்களை இயல்பாகக் காட்டிய சினிமா அங்காடித்தெரு. அந்த கண்தெரியாத தாத்தா சொன்னதனால்தான் விற்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன் என்னும் வரி முக்கியமானதாக ஆகியது. இன்றைக்கும் நான் விரும்பும் சினிமா அதுதான்

 

சினிமாவின் டெக்னிக் எல்லாம் சின்ன விஷயம். அது எந்தப்படமானாலும் ஒரு ஐந்தாண்டு கடந்தால் டெக்னிக்கலாக பழசுதான். முக்கியமானது அதிலுள்ள ஆத்மார்த்தமான தன்மை என நினைக்கிறேன். அதுதான் ஏற்பை உருவாக்குகிறது.

 

எம். மகாதேவன்

 

அன்புள்ள ஜெயமோகன்

 

ஏற்பு பற்றி எழுதியிருந்தீர்கள். நான் அங்காடித்தெரு பார்த்தபோது அது செண்டிமெண்டல் ஆகவும் நெகெட்டிவ் ஆகவும் இருந்தது. பின்னர்தான் அது அவ்வளவுபெரிய பாஸிட்டிவ் படம் என தெரிந்தது. ஏன் அப்படித்தோன்றியது? காரணம், அந்த விளம்பரம்தான். அது ஒரு காதல்கதையை எதிர்பார்த்துச்செல்ல வைக்கிறது. அங்கே சென்றால் உடனடியாக விபத்து. அதன்பின் துக்கங்கள். அவர்கள் அதிலிருந்து மீண்டாலும்கூட நாம் எதிர்பார்த்தது உருக்கமான காதலைத்தான்

 

அதேபோல இசை. அங்காடித்தெருவின் பாட்டுக்கள் ரொமாண்டிக்கானவை. ஆகவே அதை ஒரு கொண்டாட்டமான காதல்கதையாக நினைக்கவைத்தன. அது நிகழவில்லை. ஆகவே ஏமாற்றம், ஆனால் படம் ஓடியது. அதன் நூறாவதுநாள் கடந்தபின் நான் பார்த்தேன். அப்போதுதான் அதை வேறுவகையில் பார்த்தேன்.

 

ராஜ்குமார்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-16
அடுத்த கட்டுரைவாழ்நீர் – கடலூர் சீனு