என்ன அளவுகோல்?

கி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு

அன்புள்ள ஜெ

சமீபத்தில் ஈழ எழுத்தாளர்களைப் பற்றி நீங்கள் சொன்னதை ஒட்டி ஒரு விவாதம் நிகழ்ந்தது. அதன்பின்னர் இப்போது திராவிட எழுத்தாளர்களான அண்ணா கலைஞர் பற்றிச் சொன்னமைக்காக விவாதம் நிகழ்கிறது. என்னுடன் வாசிப்பு சம்பந்தமான சர்ச்சைகளில் ஈடுபடும் ஒரு நண்பர் ‘இவருக்கு இப்படி தரம்பிரித்து அடையாளப் படுத்தும் அதிகாரத்தை யார் கொடுத்தது?” என்று கேட்டார். “இது நாட்டாமைத்தனம்” என்று சொன்னார்.

நான் இதற்குப் பதில் சொல்லவில்லை. எனக்கு தெரிந்த பதில் என்பது ஒருவருக்கு அவருடைய எழுத்துக்கள் சார்ந்து அந்த மதிப்பு கிடைக்கிறது என்பதுதான். அந்த மதிப்பு இருப்பதனால்தான் அவர் சொல்வது சர்ச்சை செய்யப்படுகிறது. அதே வரியை நூறுபேர் சொல்லியிருப்பார்கள். அதை எவரும் கவனிப்பதில்லை என்று நினைத்தேன். உங்கள் பதில் என்ன?

செல்வன்

 

அன்புள்ள செல்வன்,

ஒரு சுற்று முகநூலிலும் இணையத்திலும் உலவிவிட்டு வாருங்கள். தரம்பிரித்து அடையாளம் சொல்லாமல் இலக்கியம், அரசியல், சினிமாவில் எவரேனும் எந்தக்கருத்தையேனும் எங்காவது சொல்லியிருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு எனக்கு சொல்லுங்கள். நான் எவரையும் இதுவரை பார்த்ததில்லை. அப்படி எவரேனும் இருந்தால் அவர் உளநோய் கொண்டவர் அல்லது ரமணருக்கு நிகரான ஞானி.

அத்தனை கருத்துக்களிலும் விமர்சனம் அடங்கியிருக்கிறது. அத்தனை விமர்சனமும் தரம்பிரித்தலை அளவுகோலாகக் கொண்டது. ஒவ்வொருவரின் தெரிவுகளும் வேறு. அதற்கான அளவுகோல்களும் வேறு. ஒருவர் அரசியலை அடிப்படையாகக்கொண்டு தரம்பிரிக்கலாம். ஒருவர் இன, மொழி, மத அடையாளம்கொண்டு பிரிக்கலாம். நான் இலக்கியங்களை அழகியல் அடிப்படைப்படி தரம்பிரித்து அடையாளப்படுத்துகிறேன். இலக்கியவாசிப்பின் அடிப்படையே அதுதான். அவ்வாறு வாசிக்கும் ஒவ்வொருவரும் செய்வதனால்தான் சிலநூல்கள் சிறந்தவை என மேலெழுந்து வருகின்றன. சில நூல்கள் அப்படி அல்ல என நிராகரிக்கப்படுகின்றன. சினிமா, ஓட்டல்சாப்பாடு எல்லாமே இப்படித்தான் தெரிவுசெய்யப்படுகின்றன.

இது இல்லாத துறை உண்டா என்ன? விடுதியில் தங்கியிருக்கையில் சற்றுமுன் கார்நிபுணர் ஒருவர் 2018-இல் வெளியான கார்களில் எது சிறந்தது என சொல்லிக்கொண்டிருப்பதை பார்த்தேன். அவர் கார்களின் இயந்திர அமைப்புக்கும்  விசை மற்றும் விரைவுக்குமான உறவு ஆகியவற்றை கருத்தில்கொண்டு அந்த முடிவுகளுக்கு  வருகிறார். அவற்றை விளக்கிக்கொண்டிருந்தார். இவ்வுலகில் திறனாய்வு செய்யப்படாத பொருளோ கருத்தோ இல்லை. அந்தத் தெரிவில் அவர் என்னென்ன கார்களை நிராகரிக்கிறாரோ அந்த நிறுவனத்தின் முகவர்களிடம் பேசினால் அவர்கள் தனிப்பட்ட முறையில் அந்த நிபுணரை வசைபாடக்கூடும். அந்தத் தெரிவே தவறு என்றும் தெரிவுசெய்ய அவருக்கு என்ன அதிகாரம்  என்றும் தெரிவில் அவருடைய தனிப்பட்ட சார்புகள் உள்ளன என்றும் சொல்லக்கூடும். ஆனால் பொதுவெளியில் சொல்லமாட்டார்கள் – தொழிலறம் என ஒன்று உண்டு, அது தடையாகும். ஆனால் இலக்கியத்தில் அதையே பொதுவெளியிலும் சொல்லிக்கொண்டிருப்பார்கள். இதுதான் வேறுபாடு.

என் மீதான கடும்விமர்சனங்களை முன்வைப்பவர்களை கவனியுங்கள். அவர்கள் “இவன் யார் விமர்சிக்க?” என்றுதான் கூவிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சினிமா, இலக்கியம், அரசியல் எல்லாவற்றிலும் பல்வேறு விமர்சனங்களை நாள்தோறும் கக்கிக்கொண்டுமிருப்பார்கள். அந்த விமர்சனங்களை காழ்ப்புகலந்து வெறும் வசையாக உதிர்ப்பார்கள். அதற்கான அளவுகோல்களை சொல்லத் தெரிந்திருக்காது. ஆக, அவர்கள் எதிர்ப்பது விமர்சனம் என்பதை அல்ல. அவர்களின் தரப்பு விமர்சனம் செய்யப்படுவதை மட்டுமே.

நான் முன்வைப்பவை அழகியல்விமர்சனங்கள். அழகியல்விமர்சனங்களின் அடிப்படைகள் மூன்று.

அ. இதுவரை எழுதப்பட்ட செவ்விலக்கியங்கள். அவற்றை இதுவரை வாசித்தவர்களின் நோக்குகளிலிருந்து திரட்டி எடுக்கப்பட்ட பார்வைகள், மற்றும் ஒப்பீடுகள்.

ஆ. இலக்கியவடிவம் சார்ந்த கொள்கைகள். இலக்கியத்தின் கட்டமைப்பு, உணர்ச்சிகள், கதைமாந்தர், வரலாற்றுடனான உறவு என பல தளங்களில் இக்கொள்கைகள் உள்ளன. இவை பலநூறாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வளர்ந்து வருபவை.

இ. இலக்கியம் மீதான தனிப்பட்ட வாசிப்பனுபவங்கள்.

இவற்றில் மூன்றாவது முழுமையாகவே அகவயமானது. நான் சரவணன் சந்திரனின் ‘சுபிட்சமுருகன்’ நல்ல நாவல் என சொல்கிறேன். ஏன் என்று விளக்கி எழுதுகிறேன். அதற்கு இலக்கியக்கொள்கைகள், முந்தைய இலக்கியங்களுடனான ஒப்பீடு ஆகியவற்றை அளவீடாக கொள்கிறேன். என் விமர்சனத்தை மட்டும் வாசிக்கும் வாசகன் ஒருபோதும் சுபிட்ச முருகன் நல்லநாவல் என்று சொல்லப்போவதில்லை. அவனும் சுபிட்சமுருகன் வாசிப்பான். நான் சொன்னதை அகவயமாக அவனும் உணர்வான். நான் சொன்ன விளக்கங்களை அவனும் ஏற்றுக்கொள்வான். விளைவாக அவன் மனதில் நான் ஒரு நல்ல விமர்சகன் என நிறுவப்படுகிறேன்.

இவ்வாறு நான் சொன்ன கருத்துக்கள் வழியாக எனக்கு உருவாகும் முக்கியத்துவமே என் குரலை கவனிக்கச் செய்கிறது. ‘யார் அதிகாரம் கொடுத்தது?’ என்றால் என் வாசிப்புடன் ஒத்துப்போகும் சில ஆயிரம் வாசகர்கள் இருக்கிறார்கள், அவர்கள் வெறுமனே கூச்சலிடாமல் நூல்களை மெய்யாகவே வாசிக்கிறார்கள் என்பதனால்தான். ரா.ஸ்ரீ.தேசிகனுக்கும் க.நா.சுவுக்கும், வெங்கட் சாமிநாதனுக்கும், சுந்தர ராமசாமிக்கும் உருவான அதிகாரம் இதுவே.

அதை மறுப்பவர்கள் தங்கள் தரப்பை, தெரிவை முன்வைக்கிறார்கள். உதாரணமாக, திராவிட இயக்கம் பற்றி நான் சொல்லும் விமர்சனங்களை கவனியுங்கள். அந்நூல்களை வாசிக்கிறேன். அவற்றில் நான் முதன்மையானவை என நினைப்பவற்றை எந்தத் தனிப்பட்ட உளவிலக்கமும் இல்லாமல் முன்வைக்கிறேன். எனக்கு ஏற்பில்லாதவற்றை நிராகரிக்கிறேன். ஏன் என்று விளக்குகிறேன். வசைபாடுவதில்லை, உகந்தவை அல்லாத சொற்களை பயன்படுத்துவதில்லை. க.நா.சு. முதல் நவீனத்தமிழிலக்கியத்தின் அணுகுமுறை இது.

ஆனால் திராவிட இயக்கத்தவர் சென்ற முக்கால்நூற்றாண்டாக நவீனத்தமிழிலக்கியத்தை வாசிக்காமலேயே பொத்தாம்பொதுவாக நிராகரிக்கிறார்கள். சாதிய முத்திரை குத்துகிறார்கள். எந்த அளவுகோலையும் தெரிவையும் முன்வைப்பதில்லை. இந்த விவாதத்திலேயே எத்தனை கீழ்த்தரவசைகள் என்று பாருங்கள். தங்கள் விமர்சனம் நியாயமானது என்பார்கள். ஆனால்  தங்கள்மேல் விமர்சனம் வரும்போது விமர்சனம் என்பதே ஆதிக்கம், அது தவறானது, எவருக்கு விமர்சிக்க அதிகாரம் என்று  கூச்சலிடுகிறார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைஉகவர் வாழ்க்கை – உளவியலாளர் கடிதம்
அடுத்த கட்டுரைவானோக்கி ஒரு கால் – 2