உகவர் – கடிதங்கள்

ugavar-chennai

உகவர் வாழ்க்கை

ஜெ,

வணக்கம். உகவர் வாழ்க்கைச் சிக்கல்கள் மற்றும் உளவியல் சிக்கல்கள் குறித்த கடிதங்களைப் படிப்பதற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

இன்று ‘வி’யின் கடிதத்தினை காலையில் படித்தேன். பின்பு அலுவலகம் வந்து நாளிதழ் வாசிக்கையில் ‘மிண்ட்’ பத்திரிக்கையில் கண்ட செய்தி மேலும் வருத்தமளித்தது. அந்தக் கட்டுரைக்கு ஆன்லைன் லின்க் கிடைக்காததால், அதன் சாரத்தினை ஒரு படமாக இணைத்துள்ளேன்.

அவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, இந்திய நகரங்களில் உகவர்களை ஏற்கும் மனப்பான்மை இன்னமும் குறைவாகவே இருக்கிறது. அதிலும், சென்னையில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மிகக்குறைவாக இருக்கிறது. ‘முழுமையாக ஏற்கக்கூடியது’ என்று சொல்பவர்கள் 20%மும், ‘ஒருபோதும் ஏற்க முடியாது’ என்று சொல்பவர்கள் 40%மும் உள்ளனர். பிந்தைய எண் மும்பை, டெல்லியை விட இரண்டு மடங்குக்கு மேல் அதிகம். மேலும் சில தகவல்கள் படத்தில்.

இக்கடிதங்களுக்கு ஆதுரமாகவும் வழிகாட்டுதலுடனும் பதில் சொல்லும் உங்களுக்கு என் நன்றிகள்.

 

ஸ்ரீகாந்த் மீனாட்சி

 

அன்புள்ள ஜெ

நலம்தானே?

உகவர்களைப் பற்றிய குறிப்புகள், கடிதங்களை வாசித்தேன். நம் சாமானிய ஒழுக்கவியலால் அவர்கள் எவ்வாறு துன்புறுகிறார்கள் என்பதைக் கண்டபோது ஒவ்வொரு காலகட்டத்திலும் இவ்வாறு பாலியல் சார்ந்த ஒடுக்குமுறை இருந்துள்ளது என்பதை உணரமுடிகிறது. சென்றகாலகட்டத்தில் இவ்வாறுதான் விதவைகள் ஒடுக்கப்பட்டார்கள். அதற்கு முன் பெண்கள் ஒட்டுமொத்தமாகவே பாலியல் ஒடுக்குமுறையில் இருந்தார்கள். பாலியல் நாட்டம் கொண்ட பெண்ணை சமூகம் வெறுத்த்து. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மூன்றாம் பாலினத்தின் உரிமைகளைச் சமூகம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. உகவர்களைப் பற்றிய பார்வையிலும் மாற்றம் வரும் என நினைக்கிறேன்

சரவணக்குமார். டி.எம்

 

அன்புள்ள ஜெ

உங்கள் தளத்தில் உகவர்கள் பற்றி வந்த கடிதங்கள் எனக்கு மிகப்பெரிய திறப்பை அளித்தன. நான் இதுவரை நினைத்திருந்த்தே வேறு. அவர்கள் ஒரு திரிந்த சுவை காரணமாக ஒருபால் உறவை நாடுகிறார்கள் என நினைத்திருந்தேன். அதாவது ஒரு வக்கிரமாகவே எண்ணியிருந்தேன். அது அவர்களின் பயாலஜிகல் இயல்பு , அவர்களால் அதை மாற்றிக்கொள்ள முடியாது என்பதெல்லாம் எனக்கு இப்போதுதான் தெரிந்த்து. அவர்களால் பிறபால் உறவை அனுபவிக்க முடியாது என்பது அதிர்ச்சியாகவே இருந்த்து. அவர்கள் அதை ரகசியமாகக் கொண்டாடவில்லை. அவர்கள் அந்த உணர்வுகளுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருந்தது. அவர்களைப் பார்க்கும் பார்வையே மாறிவிட்டது. எந்தக் கட்டுரையும் அளிக்காத தெளிவை இப்படிப்பட்ட தனிப்பட்ட கடிதங்கள் அளிக்கின்றன. ஏனென்றால் எழுதுபவருடன் நாமும் அடையாளம் காண முடிகிறது

ராஜீவ்குமார்

படைப்பு முகமும் பாலியல் முகமும்

ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடும்

ஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்

ஒருபாலுறவின் உலகம்

ஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்- 2017

ஒருபாலுறவு, தீர்ப்பு

ஒருபாலுறவு, தீர்ப்பு- கடிதங்கள்

படைப்புமுகமும் பாலியல்முகமும் – கடிதங்கள்

ஓரினச்சேர்க்கை-கடிதங்கள்

ஓரினச்சேர்க்கை- அனுபவக்கட்டுரை

பாலுணர்வை அறிதலும் எழுதுதலும்

முந்தைய கட்டுரைதிரைப்படம் – ஏற்பின் இயங்கியல்
அடுத்த கட்டுரைசிவ இரவு – கடிதம்