யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை
ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்
ஒருதுளி இனிமையின் மீட்பு
அலைதலும் எழுத்தும்- அனோஜன் பாலகிருஷ்ணன்
அன்புள்ள ஜெ
பொதுவாக ஈழ இலக்கியம் மலேசிய இலக்கியம் ஆகியவற்றை இங்கே பேசும்போது ‘இதோடு அவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்’ என்ற பாணியிலேயே சொல்வார்கள். ஆகா ஓகோ என புகழ்வார்கள். ஆனால் விமர்சனப்பார்வை இருக்காது. ஒரு சலுகை காட்டும் பாவனைதான் இருக்கும். ஆனால் உங்கள் தளத்தில் கடுமையான விமர்சனப்பார்வை உள்ளது. அதோடு தொடர்ச்சியாக ஈழ இலக்கியம், மலேசிய இலக்கியம் ஆகியவற்றை அறிமுகம் செய்து விவாதிக்கச் செய்கிறீர்கள். மலேசியா நவீன், இலங்கை அனோஜன் போன்றவர்கள் இங்கே எழுதும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்குச் சமானமாக பேசப்படுகிறார்கள். இதற்கு முன்னால் இப்படி ஒரு பரிமாற்றம் நடந்ததே இல்லை. உங்கள் தளத்தின் முக்கியமான கொடை இது என நினைக்கிறேன்
ஆர். ராதாகிருஷ்ணன்
அன்புள்ள ஜெ
ஈழ இலக்கியம் பற்றிய சண்டைகள் அங்குள்ள எழுத்தாளர்களை ஆழமாக நம் மனதில் நிறுத்துகின்றன. இந்தச் சண்டைகளும் பூசல்களும் இல்லாவிட்டால் அங்குள்ள எழுத்தாளர்களை நாம் இந்தளவுக்கு நினைவில்கொள்வோமா என்று சந்தேகம்தான். அனோஜனுக்கு வாழ்த்துக்கள்
எஸ்.அருண்
அன்பின் ஜெ,
‘யானை’ சிறுகதை பரவலான கவனத்திற்கு உள்ளாகியதில் மகிழ்ச்சியே. இத்தளத்தில் வெளியாகிய வாசகர் கடிதங்கள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானவையாக இருந்தன. முகம் தெரியாத நுட்பமான வாசகர்களிடம் சென்று சேர்ந்திருப்பது மிகுந்த திருப்தியைத் தந்திருக்கின்றது. மிகப் புத்துணர்ச்சியாக உணர்கிறேன். இன்னும் வாசிக்க வேண்டியவையும், எழுதிச் சென்றடைய வேண்டிய இடங்களும் தூரங்களும் இன்னும் அதிகம் என்பதிலும், நம் முன்னோடிகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கின்றன என்பதிலும் தெளிவாகவே இருக்கிறேன். படைப்பூக்கத்தை இன்னும் துலங்கச் செய்த அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
அன்புடன்
அனோஜன் பாலகிருஷ்ணன்