எழுச்சியின்மையின் கலை – சீ.முத்துசாமியின் புனைவுலகு
சீ.முத்துசாமியின் மலைக்காடு- ஹரன் பிரசன்னா
அன்புள்ள ஜெ,
ஒரு வருடம் கழித்து மீண்டும் எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள். அவரின் ஒரு புதிய நாவலான மலைக்காடு நாவலை வாசித்தேன். சீ.முத்துசாமியின் சிறுகதைகள் 1977ல் எழுதப்பட்டு காலத்தால் பல்லாண்டுகள் முந்தியிருந்தாலும், நான் படித்தது என்னவோ நாற்பதாண்டுகள் கழித்து 2017ல் விஷ்ணுபுரம் விருது சமயத்தில்தான். அவரின் நாவல்களும் சிறுகதைகளும் ஒரு குறிப்பிட்ட மனநிலைகளில் சொல்லப்படுபவையாகவே முதலில் எனக்குத் தோன்றின. சில சமயங்களில் அவை ஒரு புகார் போல ஒலிக்கும். சில சமயங்களில் இறுதிவரி திருப்பம் வரை வந்து அதை உரைக்காமல் முந்தைய வரியிலேயே நின்று விடும். அவரது படைப்புகளை வாசிக்கையில் ஏன் இந்த உத்தியை கையாள்கிறார் என யோசித்திருக்கிறேன். உடல் நலமிலாத கணவன் மற்றும் சிறுவயது குழந்தைகளின் வயிற்றுப்பாட்டிற்காக தோட்ட வேலைக்குச் செல்லும் பெண்ணைப் பற்றிய சிறுகதையின் இறுதிவரி அவனைக்காண வந்த அந்தக் கணவனின் நண்பன் கிளம்புவதற்கு முன் அவன் முன் வந்தமர்ந்து “அக்காளப்பத்தி ஒண்ணு சொல்லனும்..” ( கவச குண்டலம் ) என்று சொல்வதோடு முடிந்துவிடும். முதல் வாசிப்பில் அது ஒரு சிறுகதைக்கான உத்தியோ என எண்ணியிருந்திருக்கிறேன். அப்படியிருக்கும் பட்சத்தில் அதை அவர் இன்னும் சுவாரசியமாகவும் எழுதியிருக்காலாமே. அந்தளவிற்கு சிறுகதை தருணங்கள் நிறைந்த இடம்தானே இது. காவியங்கள் முதல் சீரியல்கள் வரை அலசிப்போட்ட ஒரு லட்சியப் பெண்ணின் வாழ்வு ஒன்றை முழுமையாக சொல்லி இறுதியில் ஒரு திருப்பத்தை இங்ஙனம் வைப்பது ஒரு வித வாசிப்பின்பத்திற்காக கற்பனை செய்து எழுதப்படுபவை. அவ்வகைக் கதைகள் சராசரி எழுத்தாளர்களாலேயே போதுமானதளவு எழுதப்பட்டும் இருக்கின்றன. உண்மையில் பிற்காலத்தில் வந்த அத்தகைய வெகுஜனக் கதைகளைப் படித்தபின் இவரின் கதைகளைப் படிப்பதாலேயே கூட இந்தச் சிக்கல் எனக்கு எழுந்திருக்கலாம்.
ஆனால் அவ்வருட இறுதியில் சீ.முத்துசாமி அவர்களின் படைப்புகளை முழுமையாக வாசித்தபின் நோக்கியபோதுதான், அவர் இங்ஙனம் ஒரு உத்தியைக் கையாளுவது வெறும் இறுதிவரி திருப்பத்திற்காக மட்டுமல்ல எனப்புரிந்தது. அதற்கான முதன்மைச் சான்றாக இருப்பது அந்த கதைகளில் உள்ள கதை சொல்லியின் இடம்தான். அது தன்மையில் எழுதப்பட்டிருக்கும். அல்லது வீட்டுக் குழந்தைகளின் பார்வையில் இருக்கும். முதன்மை பாத்திரம் கதைசொல்லியின் ரத்த உறவாக இருக்கும்.உதாரணமாக மலைஉச்சிபங்களா கதையை சொல்லலாம். அது பெற்றோரின் வாழ்க்கைப்பாட்டைச் சொல்லும் பிள்ளைகளின் பார்வையில் சொல்லும் கதை. அதானாலேயே பிள்ளைகளுக்குப் பிடிபடாத விஷயங்கள் பூடகமாக இருக்கும். இந்தப்பார்வை பிடிபட்டபிறகு அவரது படைப்புகளை மனம் சற்று படபடக்காமல் வாசிப்பது என்பதே இயலாது..ஆம். தன் மக்களின் கதையை எழுதுகிறார். பெரும்பாலும் உள்ளதைச் சொல்கிறார். அவருக்கு, தோட்ட வாழ்க்கை வாழும் கதை மாந்தர்கள் அனைவருமே அவரின் குடும்பத்தினர் போலத்தான். ஒரு கதையை அக்குடும்பத்தில் வாழ்ந்து முடித்து சலித்த பாட்டனார் போல சொல்வார். அதில் நீ செய்வது சரியா என்ற ஆதங்கம் இருக்கும். ஒரு சீற்றம் இருக்கும். சில இடங்களில் கையறு நிலையில் இருக்கும் தலைவனாக, தலைவியாக அல்லது ஒன்றும் அறியாத பாலகர்களாக சொல்வார். அவற்றில் சில பூடகங்களே ஏஞ்சியிருக்கும். இது தவிர வெகு சில கதைகளில் மட்டும் கூரிய அங்கதமும் புரட்சிப் போராட்டங்களும் வெளிப்படுகின்றன. இதில் கையறு நிலை என்ற இடத்திலிருந்தே பல கதைகளை அவர் எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம். குறிப்பாக அவர் கதைகளின் தலைப்புகளைப் பார்த்தாலே அவை பிடிபட்டுவிடும். இரைகள், இருளில் அலையும் குரல்கள், மண்புழுக்கள், விளிம்பு, அகதிகள், பாலைவனத்தில் விதைகள் முளைப்பதில்லை – என தலைப்புகளே அந்த உள்ளடக்கத்தின் துயரம் அல்லது ஆங்காரத்தை சொல்லிவிடுகின்றன. ( ஒரு சிறு உட்குறிப்பு:- சீ.முத்துசாமி அவர்களின் பேட்டியை வல்லினத்தில் பார்த்தபின், இந்த ”பாலைவனத்தில் விதைகள் முளைப்பதில்லை” என்ற தொகுப்பு மட்டும் பண்டைய மலேசிய இலக்கிய உலகத்துடன் அவர் பூசலிட்டு விலகிய காலத்தில் எழுதிய கதைகளா என்ற என் ஐயத்தை நவீனிடம் தனியாக கேட்க வேண்டும் என நினைத்திருந்து பின் நேரில் காணும்போது கேட்க மறந்துபோனேன் :-) )
சிறுகதைத் தொகுதிகள் வழியாக வெளிப்பட்டவர் இருபதாண்டுகள் இடைவெளிக்குப்பின் தன் மண்புழுக்கள் நாவல் வழியாக மீண்டும் மலேசிய இலக்கிய உலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறார். முதல் தலைமுறையாக மலேய மண்ணிற்கு தோட்ட வேலைக்காக வந்த மனிதர்களின் வாழ்க்கைப்பதிவு அது. 1940களில் அங்கு சென்றமைந்த மக்கள் குறித்த ஒரு ஆவணமாகவே மண்புழுக்கள் நாவல் கருதப்படுகிறது. ஒரு கருப்பு வெள்ளை ஆவணப்படமாக. அதற்கடுத்து பன்னிரெண்டு வருடங்கள் கழித்து எழுதி அதே பின்புலத்தில் வந்திருக்கும் அவர்களின் அடுத்த தலைமுறைக்கான நாவலாக மலைக்காடு இருக்கிறது. ( ஈஸ்ட்மெண் கலர் ? ) அவரது மற்றநாவல்களுடன் ஒப்பிடுகையில் இது தலைப்பிலிருந்தே வேறுபட்டிருக்கிறது. மலைக்காடு நாவலை வாசிக்கையில் முதலில் உணர்ந்த ஒன்று எப்பொழுதும் அவருடன் இருக்கும்அந்த ’துர்வாசர்’ இந்த நாவலில் காணப்படவில்லை என்பதுதான். மாறாக அனைத்தினையும் தள்ளிநின்று கூர்ந்து கவனிக்கும் ஒரு ’பாணன்’ தான் தென்படுகிறார்.
தர்மபுரியிலிருந்து நாகப்படிணம் சென்று அங்கிருந்து கப்பலில் பிணாங்கு செல்லும் மாரியிடமிருந்து துவங்குகிறது நாவல். காஞ்ச பூமியில இருந்து என்ன சுகத்தைக் கண்ட? என்னோட மலேசியா வந்துரு.. அது பசுமையான பூமி.. சொர்க்கம்பாங்களே அது அந்த ஊருதான் என்று சொல்லும் கங்காணியின் வார்த்தையில் மயங்கி கொத்தடிமையாகப் போகப்போகிறோம் என்று அறியாமல் பயணிக்கிறார்கள். கப்பலிலேயே சூழ்நிலை பிடிபட்டுவிடுகிறது. காலரா நோயில் இறந்தவர்களை அப்படியே கடலில் தூக்கி வீசுகிறார்கள். விரைவில் இறக்கப்போகிறவரையும் தான்…மலேயா மண்ணைத் தொட்டதும் கங்காணியின் ரூபமே மாறிவிடுகிறது. ஒருபுறம் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் காட்டை பார்த்து பிரமிப்பும் மறுபுறம் தன் விதியை எண்ணி நொந்தபடியும் வாழத்துவங்குகிறார் மாரி. மாரியுடன்கூட பதினைந்தே வயதான அவரது மகன் உண்ணாமலையும் பிழைக்க வந்திருக்கிறான். அவர்களின் மூன்றாம் தலைமுறைக்கதை இது. உண்ணாமலையின் மகள் வயிற்றுப் பேரனும், தோட்ட மக்களுக்காக தண்ணீர் லாரியை மடக்கி இட்டுவந்த சாகசக்காரர்களில் ஒருவனுமான குட்டி என்னும் குட்டியப்பன், ஒருநாள் இரவில் காட்டில் தொலைந்து போன தன் ஊரைச் சேர்ந்த இருவரைத் தேடி தன் இன்னொரு நண்பனான நெட்டமணியுடன் சைக்கிளில் காட்டுக்குள் செல்கிறான். பின் அவர்கள் திரும்பவே இல்லை. அவர்கள் என்னானார்கள் என்பதே இந்நாவலின் கதையோட்டம். நாவலின் நாயகனாக வரும் குட்டியப்ப்பன் ஒரு சிறு கதாபாத்திரம்தான். அவனைச் சுற்றி, அவனுக்காக நிகழும் கதையில் வந்து போகும் ஒவ்வொரு மாந்தர்களின் வழியேதான் கதை விரிகிறது. மாந்தர் மட்டிமன்றி மலைமேட்டு முனீஸ்வரனின் வழியாகவும்
நாவலில் இந்த தலைமுறை கதை, டிரசர் பாலையா தலைமையில் லாரித்தண்ணீரை மடக்கும் அந்த சாகசத்திலிருந்து துவங்குகிறது. தொடர்ந்து தோட்ட நிர்வாகம் அறிமுகமாகிறது. பெரியதுரை ஜேம்ஸ் கோனல்லியும், துரைக்கு சலாம் போட்டுக்கொண்டு, ”நீங்க திரும்பி வர்றதுக்குள்ள அந்த நாலு பசங்களையும் காணாம அடிச்சுடறேன்” என குழையும் சின்னதுரை மலபார் வர்கீஸும், அந்த வர்கீஸ் தன் அதிகாரத்தைக் காட்டும் பெரிய தண்டலும், ”ஆமாம்! எனக்கு பெரிய தண்டல்ங்கிற பேருதான் முக்கியம் என எந்தளவிற்கும் இறங்கத்துடிக்கும் சுப்பராயனும், அந்த தோட்டத்தில் ’தமிழர் கட்சி’ யின் தலைவரான ’இங்கிலீஸ்’ மணியமும் என ஒவ்வொருவராக அறிமுகமாகி, அவற்றின் ஊடே மீண்டும் முன்னும் பின்னும் சென்று அந்த மண்ணின் தனித்தன்மையும் வரலாறும் சொல்லப்பட்டுச் சென்று கொண்டேயிருக்கின்றன. ஒருவகையில் இந்த நாவலின் இந்த உத்தி அதை மிகவும் விறுவிறுப்பாக்குவதோடு ஆங்காங்கு அவர் அளிக்கும் அதிர்ச்சியும் அதை தொடர்ந்த அதன் விளக்கமும் வாசகனுக்கு பெரும் வியப்பையும் அளிக்கின்றன. உதாரணமாக, குட்டியின் தாயான முத்தாயி தன் கணவன் கோவாலுவை ஏசும் ஓரு இடமும் அதைத் தொடர்ந்து வெளிப்படும் கோவாலுவின் இன்னொரு கோணத்தையும் சொல்லலாம். இவ்வாறான சித்தரிப்புகள் வாசிப்பை சுவாரசியமாக்குகின்றன. மேலும் சுவாரசியமாக்குவது அவரது வர்ணனைகளும், சில உருவகங்களும். பெரியதுரை அடக்கியாளும் குதிரை, மாரி, லட்சுமி, கிருஷ்ணன், கோப்ரேல் மணியம் என அவரவர்க்கு ஆங்காங்கு தென்படும் ராஜநாகம் எனச் செல்லும் புனைவலங்காரங்கள் அவரது முந்தைய நாவல்களில் கண்டிராத ஒன்று.
அனால், மக்கள் மறந்துவிடக்கூடாத மனிதர்களையும் சம்பவங்களையும் சரியான வருடத்தினைச் சொல்லி அதை ஆவணப்படுத்தவும் செய்கிறார். தம்பிக்கோட்டை கணபதி என்னும் பெருந்தலைவர் முதல் டிரசர் பலையா என்னும் ஒரு தோட்டப்போராளிவரை சில சீனர்கள் உள்ளிட்ட அனைவர்களின் பெயரையும் போராட்டம் நிகழ்ந்த வருடங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். மாவோ மற்றும் காந்தி குறித்த கருத்துகளும் ஆங்காங்கு வெளிப்படுகின்றன. அதிலும் நாவலின் துவக்கத்தில் மக்களின் போராட்டம் துவங்கி முன்னேறுகையில் “ அடக்கமாய் கைகட்டி ஏவிய வேலையை தன் தலைமேல் சுமந்து செய்து முடிக்கும் அடிமை இயல்பு கொண்ட மக்கள் எங்கிருக்கிறார்கள் என உலகெல்லாம் தேடி பின் அவர்களை தமிழ்நாட்டில் கண்டுபிடித்து அவர்களைத் தங்கள் பரவசம் குறையாமல் கப்பலில் ஏற்றி..” என்ற வர்ணனையில் ஒரு அடிவைக்கவும் அவர் தயங்குவதில்லை. மக்கள் போராட்டத்தினூடே அதிகாரத்தைக் கைப்பற்ற சீனர்களும், தமிழர்களும் முண்டியபடியிருக்க ஆங்கில அரசும் தோட்டநிர்வாகமும் அதை எதிர்க்க அவர்கள் அனைவருக்கும் பொதுவானவராக இருக்கும் கெப்ரேல் மணியம் அந்தக் களேபரத்திற்கிடையே அம்மண்ணின் பூர்வகுடிகளான சக்காய்களைக் காணும் தருணமும் அவர்கள் சிரித்தபடியே கடந்து போவதும் அவரின் அங்கதத்தின் ஒரு சான்று. இந்நாவலைப் படித்தபின் உங்களின் முன்னுரையை வாசித்தேன். அது வேறொரு தளத்தில் இந்நாவலை எனக்கு அடையாளம் காட்டியது. அதற்காக உங்களுக்கும் நன்றி
சீ.முத்துசாமி அவர்களின் படைப்புகள் தமிழகத்தில் கிடைக்காமல் இருந்தன. அவருக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட சமயத்தில் கூட அவரின் ஒரு சிறுகதை தொகுப்பும் குறுநாவல் தொகுப்புமே கடைசி நேரத்தில் அச்சில் கிட்டின. மற்ற புத்தகங்களை நூலகம் மூலமாகவும் மற்ற வாசகர்கள் படித்துவிட்டு தந்தவுடன் படிப்பதும் என தேடிதேடித்தான் வாசித்தேன். அவ்வாறு வாசிக்கையில் எனக்கு சில சிக்கல்கள் இருந்தன. ஆரம்ப பத்திகளில் சொன்னது போல ஒரு புகாராகவோ அல்லது கறாராகவோ அல்லது ஒரு ஆவணம் போலவோ அந்தக் கதைகள் இருந்தன. அதை உள்வாங்கிச் செல்கையில்தான் அவை எனக்குபிடிபடத் துவங்கின. ஆனால் மலைக்காடு உடனடியாகவே நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. ஒருமுறை நாவலைத் திறந்து உள்ளே சென்றுவிட்டால், அதன்பின் அதைப் படித்து முடிக்காமல் நம்மை அது கடக்கவும் விடாது
அன்புடன்,
காளி ப்ரஸாத்