யட்சிப்பாலை

 Alstonia_scholaris

கடைசி முகம் – சிறுகதை

அன்புள்ள ஜெ வணக்கம்…

எதேச்சையாக இந்த பாடலை காண நேர்ந்தது இப்பாடலில் உள்ள வேளிமலை என்ற வரியும் படத்தின் தலைப்பான காடு என்ற வார்த்தையும் பாடல் துவங்கும் பொழுது காட்சிப்படுத்தி இருந்த யானை கூட்டங்களும்…

காடு வாசித்தபொழுது இருந்த உக்கிரமான தீவிரமான மன நிலையை நினைவூட்டியது இந்த சிறிய எளிய இனிய பாடல்.

https://youtu.be/aFWdNIF6QRc

மு . கதிர்முருகன்

கோவை

yakshi-620x451

அன்புள்ள கதிர்

அந்தப் படம் 1973 ல் வெளிவந்த  காடு. மது- விஜயஸ்ரீ நடித்தது. கதை நடப்பது வேளிமலை அடிவாரத்தில்தான்  எஸ்.எல்.புரம் சதானந்தன் எழுதிய கதை. ஆகவே பாடல் வேளிமலையைப் பற்றியது.

ஏழிலம்பால பூத்து பூமரங்கள் குடபிடிச்சு
வெள்ளிமலையில் வேளிமலையில்
ஏலேலம் பாடி வரும் குயிலிணைகள் குரவையிட்டு
வெள்ளிமலையில் வேளிமலையில்

 பொன்கினாவின் பூவனத்தில் பாரிஜாதம் பூத்துலஞ்ஞு
என் மனசின் மலநிரைகள் பொன் அசோக மலர் அணிஞ்ஞு

 ஆகாச தாமரபோல் என் மடியில் வந்நு வீணு
ஆத்ம சகி நீ பிராண சகி நீ

 எந்நுமெந்நும் ஒந்நு சேரான் என் ஹ்ருதயம் தபஸிருந்நு
ஏகாந்த சந்த்யகளில் நின்னே ஓர்த்து ஞான் கரஞ்ஞு

 காணான் கொதிச்ச நேரம் கவிதபோல் என் முன்னில் வந்நு
ஆத்ம சகி நீ பிராண சகி நீ

மலையாளத்தில் எனக்குப் பிடித்த பல பாடல்களை எழுதிய ஸ்ரீகுமாரன் தம்பி இதன் ஆசிரியர். ஆனால் இசையமைப்பாளர் மலையாளி அல்ல. இந்தி இசையமைப்பாளரான வேத்பால் வர்மா

இப்போது நான் குடியிருக்கும் இடம் கள்ளியங்காடு. இதற்கு அப்பால் வில்லுக்குறி வரை இருக்கும் இடம் பஞ்சவன்காடு. இந்த இரு நிலங்களும் கள்ளிமுட்கள் நிறைந்த அடர்காடுகளாக இருந்திருக்கின்றன. பேச்சிப்பாறை அணை வந்ததும் இவை வளம் மிக்க வயல்களாயின. இப்போது புறநகர்களாகி விட்டிருக்கின்றன.

அக்காலத்தில் இங்கே இரண்டு புகழ்பெற்ற யட்சிகள் கோலோச்சினர். பஞ்சவங்காட்டு நீலி, கள்ளியங்காட்டு நீலி. இருவரைப்பற்றிய கதைகள் கேரளத்தின் தொன்மங்களில் நிறையவே உள்ளன. இரு யட்சியர் கதைகளும் வெவ்வேறு வடிவில் படங்களாக வந்துள்ளன

yakshi1_by_aruncpdy_d6p9v72-pre

1971ல் பஞ்சவன்காடு திரைப்படமாக வந்தது. குஞ்சாக்கோ இயக்க வைக்கம் சந்திரசேகரன் நாயர் எழுதிய கதைக்கு தோப்பில் பாசி திரைவடிவத்தை எழுதியிருந்தார். பிரேம் நசீர் உள்ளிட்டவர்கள் நடித்தபடம்.அதிலுள்ள கள்ளிப்பாலைகள் பூத்து புகழ்பெற்ற பாடல். ஜி.தேவராஜன்  இசையமைக்க வயலார் ராமவர்மா எழுதிய பாடல்.

கள்ளிப்பாலைகள் பூத்து
காடொரு வெள்ளிப்பூக்குட தீர்த்து
ஆரிலும் ஆரிலும் அவயுடன் சௌரஃப்யம்
ஆளிப்படரும் ஒரு உன்மாதம்

 பூமணம் பரக்கும்போள்
பிறகே பிறகே பிறகே
நக்ஷதிரங்கள் கூந்தலில் அணியும்
யக்ஷிகள் ராத்ரியில் எத்தும்
அவர் மண்ணிலே மனுஷ்யரே மன்மத கதையிலே
மந்த்ரம் சொல்லி மயக்கும்

  பூநிலாவு உதிக்கும்போள்
இதிலே இதிலே இதிலே
கந்தர்வன்மார் பூமியில் வந்நு ஒரு
சந்தன மாளிக தீர்க்கும்
அவர் சுந்தரி மாருடே ஹிருதய சரஸுகள்
ஸ்வப்னம் கொண்டு நிறைக்கும்

1919 ல் கள்ளியங்காட்டு நீலி என்றபடம் வெளிவந்தது. எம் கிருஷ்ணன்நாயர் இயக்க மது ஜெயபாரதி நடித்த படம்.

கேரளத்து யட்சிப் பாடல்களில் மிகச்சிறந்தது என கருதப்படும் பாடல் கள்ளியங்காட்டு நீலியில் இடம்பெற்றது. நிழலாய் ஒழுகிவரும் ஞான்… எஸ்.ஜானகி பாடியது. பிச்சு திருமலை எழுதி ஷியாம் இசையமைத்த பாடல்.

நிழலாய் ஒழுகிவரும் ஞான்
யாமங்ஙள் தோறும்
கொதி தீருவோளம்
நீல ராவில்

 மலங்காற்று மூளும் முளங்காடு போலும்
நடுங்ஙுந்ந பாதி ராவாஅணு என் நிருத்தரங்கம்
குடப்பால பூக்கும்போள் மணம் கொண்டு மூடும்
கள்ளியங்காடாணென் ஸ்வப்ன தீரம்
  

நறும்பூநிலாவின் விரல்தாளமேற்றி
பனங்காடு போலும் மயங்ஙுந்ந நேரம்
ஒடுங்ஙாத்த தாகத்தின் பிரதிச்சாய என்னில்
வளத்துந்நூ வீண்டும் பிரதிஹார மோகம்

 இதில் மூன்று பாடல்களிலும் கள்ளிப்பாலை வருகிறது. சரியான பெயர் ஏழிலம்பாலை. அழகான வர்ணனைகள். இந்த மரம் தரையில் ஒரு மாபெரும் குடையை வைத்ததுபோலிருக்கும். குடப்பாலை என்றும் பெயர். நீர்வளம் குறைந்த அரைப்பாலையில் வளர்வது. ஆகவே பூத்தால் பாலை மரங்களுக்கெல்லாம் இருக்கும் இயல்புப்படி பூத்தால் இலையே இல்லாதபடி குலைகுலையாக பூக்கும். பூவாலான குடைபோலிருக்கும். குடைப்பாலை என்கிறார் பிச்சு திருமலை.

‘கள்ளிப்பாலைகள் பூத்தன, காடு ஒரு வெள்ளிப்பூக்குலை சூடியது’ என்ற வரி அதை சுட்டுகிறது. பாலைப்பூவின் மணம் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை வரும். நான் 1998ல் பத்மநாமபுரத்தில் குடியிருந்தபோது கோட்டைக்கு வெளியே ஒரு புராதனமான யக்ஷி கோயிலில் கள்ளிப்பாலை நின்றது. அது பூத்தாம் கோட்டைக்குள் நறுமணம் வரும்.மென்மையான பித்தூட்டும் மணம். ’அனைவரிலும் அவற்றின் நறுமணம் பற்றி எரியும் ஓர் உன்மத்தமாகும்’ என்கிறார் பாடலாசிரியர்

பூமணம் பரவும்போது விண்மீன்களை கூந்தலில் அணிந்த யட்சிகள் மண்ணுக்கு வருவார்கள். அவர்கள் மண்ணில் மானுடரை மன்மத கதையின் மந்திரம் சொல்லி மயக்கிக் கொண்டு செல்வார்கள். கள்ளியங்காடு என்னும்போது நாம் தமிழ்நாட்டில் சொல்லும் கள்ளிமுள் அல்ல. கள்ளிப்பாலைதான். குடைப்பாலை பூக்கும்போது மணத்தால் மூடப்படும் கள்ளியங்காடுதான் என் நடன அரங்கு என கள்ளியங்காட்டு நீலி சொல்கிறாள்.

கள்ளிப்பாலை மரத்தை வீட்டிலோ வீட்டுத்தோட்டத்திலோ வளர்க்கக்கூடாது. ஆகவே அவை விலகிவிலகிச் சென்று காடோரங்களில், யட்சி ஆலயங்களில் நின்றிருக்கின்றன. நான் காலைநடை செல்லும் வேளிமலை அடிவாரத்தில் பாறைக்கு உள்ளே  ஒரு கள்ளிப்பாலை நிற்கிறது. அது பூக்கத் தொடங்கும் மாதம் இது.

முந்தைய கட்டுரைலக்ஷ்மி சரவணக்குமாரின் கொமோரா குறித்து… சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-5