அன்பு ஜெயமாகனுக்கு,
உங்களின் ” உலகின் மிகப்பெரிய வேலி” எனும் கட்டுரையை படித்தேன் மிகுந்த கிளர்ச்சியையும் என்னுடைய பழைய சந்தேகம் ஒன்றையும் தூண்டிவிட்டது.கடந்த இரண்டு வருடங்களாக நான் இந்த பதிவை எனது வலைதளத்தில் படித்து வருகிறேன்.அந்த பதிவு நாம் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற தருணம்.
வலைத்தளப் பதிவை முழுவதும் பதிவிட்டுள்ளேன்.இதன் உண்மை தன்மை பற்றியும் விளக்கங்களையும் தருமாறு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
கிருத்திகேசன்.
இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட வரலாறு
மறைக்கப்பட்ட வரலாறு….
1947 ஆகஸ்டு 15 நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம். மௌண்ட் பேட்டன், நேருவை அழைத்து, உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம் அதை எப்படிக் கொடுப்பது என்று கேட்க நேருவுக்கு குழப்பமாக இருந்தது. எதை அடையாளமாக வைத்து சுதந்திரத்தைப் பெறுவது…..(பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியது என்பதற்கு எந்த சாசனமும் இல்லை).
உடனே நேரு மூதறிஞர் ராஜாஜியை அணுகி,”எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது, அதனால் தாங்கள் தான் தீர்வு கூற வேண்டும்”என்று கூற,உடனே ராஜாஜி “கவலை வேண்டாம், எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வர். நாமும் அன்னியன் கையால் சுதந்திரம் பெறுவதை விட, குரு மகானின் கையால் செங்கோலைப் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம்”, என்றார்.
நேருவும் “நேரம் குறைவாக உள்ளது.. உடனே ஏற்பாட்டை செய்யுங்கள்”, என்று உத்தரவிட்டார்.ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்ல,அப்போது கடும் காய்ச்சலில் இருந்த ஆதீனம் அவர்கள், உடனே முறையாக செங்கோல் தயாரித்து, தங்க முலாம் பூசி, இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்படைத்து, கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் உடன் அனுப்பி வைத்தார். (தேவாரத்தில் இருந்து கோளறு பதிகம் பதினோரு பாடல்களை குறித்துக் கொடுத்தார்–இந்த பாடல்களை அப்போது ஓதுவார் மூர்த்திகள் பாட வேண்டும்).
ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் அவர்கள் செங்கோலுடன் டில்லி போய் சேர்ந்தனர்.அப்போது ஆயிரம் ஆண்டு அடிமைத் தளையில் இருந்து, பாரதத்தின் விடுதலை பெறும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர். அந்த சுதந்திர வைபவ தினத்தில் மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை குரு மகா சன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்று, செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவார் மூர்த்திகள், வேயிறு தோளிபங்கன் என்று துவங்குகிற தேவார திருப்பதிகத்தைப் பாட, பதினோராவது பாடலின் கடைசி வரி,
“அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே”–
இந்த வரியைப் பாடி முடிக்கும் போது தான், சுவாமிகள் செங்கோலை நேருவிடத்தில் கொடுத்தார். அந்த நிகழ்வைத் தான் நாம் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறோம்.
இந்த நிகழ்வு தமிழுக்கும் தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை..இந்த வரலாற்று விஷயத்தை பாடப் புத்தகத்தில் வெளியிட்டு, நாடறிய செய்யாமல் சதி செய்யப்பட்டது.நண்பர்களே இவ்வளவு பெருமை வாய்ந்த செய்தியை நாடறியச் செய்வோம்.
திருவாவடுதுறை ஆதீன மடத்தில், இந்த செங்கோல் வைபவம், கருப்பு வெள்ளை புகைப்படமாக உள்ளது. புகைப்படத்தில் 15.8.1947 என்று தேதியிட்டு இருப்பதையும்,நேரு, கையில் செங்கோலுடன் இருப்பதையும், தம்பிரான் பண்டார ஸ்வாமிகள் அருகில் உள்ளதையும் காணுங்கள்….
அன்புள்ள கிருத்திகேசன்
இன்னும் பத்தாண்டுகளில் வாட்ஸப் வரலாறு என ஒரு தனித்துறையே உருவாகிவிடும்போலும். இந்தமாதிரி நாளுக்கு இருபதாவது வந்துகொண்டிருக்கிறது. இதில் எனக்கு சுவாரசியமாக இருந்தது அந்த செங்கோல்கொடுக்கும் படம். இல்லையேல் முதல் நான்கு வரிகளுக்குமேல் வாசித்திருக்க மாட்டேன்
இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த நாட்களில் நாடெங்கிலுமிருந்து மடங்களின் தலைவர்களும் ஆன்மிகத்தலைவர்களும் வெவ்வேறு வகையில் நேருவுக்கு வாழ்த்து தெரிவித்து குறியீட்டுரீதியான பரிசில்கள் அளித்தனர். அவற்றில் ஒன்றே இந்தப்படம் என நினைக்கிறேன். இதைப்போன்ற வேறு படங்களையும் நான் கண்டிருக்கிறேன். இப்படி ஒரு பரிசு அல்லது ஆசி அளிக்கப்பட்டது வரலாறு. அது ராஜாஜி கோரியமையால் அளிக்கப்பட்டது என்பதற்கும், அதன் மூலமே ஆட்சிமாற்றம் நிகழ்ந்தது என்பதற்கும் சான்றுகள் இல்லை . அது வாட்ஸப் வரலாறு.
மேலே சொன்ன வாட்ஸப் செய்தியிலுள்ள சில விஷயங்களைக் கவனிக்கவேண்டும். நீங்கள் ஆர்வத்துடன் கேட்டிருப்பதனால் இதை எழுதுகிறேன். முதலில் ‘வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது’ என்னும் வரி. நூற்றுக்குத் தொண்ணூறு வாட்ஸப் வரலாறுகளில் இந்த வரி உள்ளது. முதல் விஷயம் இது வாசிப்பவருக்கு பிறருக்குத் தெரியாத ஏதோ தனக்குத்தெரியும் என்னும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. ஆகவே ஆர்வத்துடன் வாசித்து பகிர்ந்துகொள்கிறார்.
அதைவிடக் குறிப்பிடத்தக்க இன்னொரு உளநிலை இதற்குள் உள்ளது. இப்படி மறைப்பவர்கள் நம்மைச்சூழ்ந்து இருக்கிறார்கள், எதிரிகளிடமிருந்து நாம் போராடி நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும் என்ற எச்சரிக்கை. இது தமிழகத்தில் அத்தனை மேடைகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கும் ஒரு கூப்பாடு. எதிரிகளிடம் ஜாக்ரதையாக இருக்கவேண்டும், நம் மண்ணை திருடுகிறார்கள், நம் பண்பாட்டை அழிக்கிறார்கள், நம் பெண்களைக் கொண்டுசெல்கிறார்கள்… இந்தியாவிலேயே வேறெந்த பகுதியிலும் இந்தக் கூப்பாடு இப்படி எங்கும் நிறைந்து ஒலிப்பதில்லை
நம் குறைகளை, பிரச்சினைகளை பேசுபவர்களை நாம் கவனிக்கமாட்டோம். ஆனால் நம்மை எதிரிகள் அழிக்கவிருக்கிறார்கள் என்றால் ஆமாம் என்போம். அந்த எதிரி இலுமினாட்டியாக இருக்கலாம். வடவராக இருக்கலாம். அமெரிக்க ஏகாதிபத்தியமாக இருக்கலாம். ஐ.எஸ்.ஐ.எஸ் ஆக இருக்கலாம். செவ்வாய்கிரகத்தவராகவே இருக்கலாம். சொன்னால் அப்படியே கவ்வி தலைமேல் சூடிக்கொள்வோம். மாற்று மருத்துவர்கள், இயற்கைவேளாண்மையாளர்கள், சூழியல்போராளிகள் அத்தனைபேரும் இதைத்தான் சொல்கிறார்கள்
இதை ஒருவகை பழங்குடி மனநிலை என்று சொல்லலாம். வரலாற்றை, உலகச்சூழலை கொஞ்சம் கூட அறிந்து வைக்காமல் ஒரு நண்டுவளைக்குள் வாழ்வதிலிருந்து உருவாகும் புரிதல் இது. சற்றேனும் பொதுநாகரீகமும் வாசிப்பறிவும் கொண்ட ஒரு சமூகம் இத்தகைய பிரமைகளைக் கொண்டிராது. குறைந்தபட்சம் இத்தகைய அசட்டுத்தனங்களுக்கு அறிவியக்கத்திலிருந்தாவது எதிர்ப்பு எழும். இங்கே அறிவியக்கம் என்பதே இந்தக் கேவலம்தான்.
மேலே சொன்ன மனநிலையின் இன்னொரு பகுதிதான் ‘நாம் ரொம்ப ஒசத்தி’ என்ற நம்பிக்கை. நம் இனம் தூயது, நம் மொழிதான் பழையது, நம் இலக்கியங்கள்தான் உயர்ந்தவை, நம்மிடம் மட்டுமே மருத்துவமும் கலையும் உள்ளது, நம்மைப்போல் எவருமே இல்லை… இந்தப் பிலாக்காணங்களை கேட்டுக்கேட்டு நம் தலைமுறைகள் வளர்ந்து மண்ணாந்தைகளாக நின்றுகொண்டிருக்கின்றன. மனம்விரிந்து வெளியே உள்ள எதையுமே படிக்கவும் தெரிந்துகொள்ளவும் திராணியற்றவர்களாக ஆகியிருக்கிறார்கள்.
சரி, நாமே சொல்லிக்கொள்ளும் நமது பெருமைகளை எல்லாம் இப்போது நாம் கற்றுக்கொண்டிருக்கிறோமா? பேணிக்கொள்கிறோமா? தமிழின் இலக்கண இலக்கியங்களை தெரிந்த எத்தனைபேர் இங்குள்ளனர்? தமிழரின் கலைச்செல்வங்கள் எந்த லட்சணத்தில் பேணப்படுகின்றன? தமிழரின் கலையும் அறிவும் இன்று கற்கப்படுகின்றனவா? அதற்கு ஆளே இல்லை. ஏனென்றால் நாம் இதையெல்லாம் பேசுவோம், ஆனால் நம்ப மாட்டோம். நமக்கு பிழைக்கும் வழி நன்றாகவே தெரியும். நமக்குத்தேவை வெற்றுப்பீற்றல். அதற்குரிய சில பொட்டுபொடி செய்திகள், அதற்குத்தான் வாட்ஸப் வரலாறு
இந்தியச் சுதந்திரப்போராட்ட வரலாறு எல்லா தரப்பிலிருந்தும் எழுதப்பட்டுள்ளது. ராஜாஜி எழுதியிருக்கிறார். தமிழர்கள் பலர் எழுதியிருக்கிறார்கள். எல்லாருமே மோசடியாளர்கள் என்று நம்ப எவ்வளவு டன் அறியாமை தேவை. ஆதீன வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன . அவற்றிலும் இந்த அதிகாரக் கைமாற்றக்கதை இல்லை. சுதந்திரம் எப்படி சட்டபூர்வமாக கைமாறப்பட்டது என்பதை சும்மா கூகிள் செய்தாலே அறியமுடியுமே. இந்தத் தகவல்யுகத்தில்கூட இந்த வாட்ஸப் வரலாறு சுற்றுகிறது என்றால் நம் அசட்டுத்தனத்தின் எல்லைதான் என்ன?இந்தியாவில் எத்தனை மடங்கள் உள்ளன, எவ்வளவு மதநிறுவனங்கள் உள்ளன, ஒவ்வொன்றுக்கும் உரிய இடம் என்ன என்றாவது இதைச் சொல்பவர்கள் எண்ணியிருப்பார்களா?
வரலாற்றில் தெளிவாகவே உள்ளது. 1947 ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்தியாவின் வெவ்வேறு மடங்களைச் சார்ந்த மடாதிபதிகளும் அவர்களின் பிரதிநிதிகளும் நேருவைச் சந்தித்து வாழ்த்து அளித்து தங்கள் மடங்களின் சம்பிரதாயங்களின்படி அவரை ஏற்றுக்கொள்ளும் சடங்குகள் நடந்தன. அதன்பின்னரே நேரு அந்த புகழ்பெற்ற ‘விதியுடனான ஒப்பந்தம்’ உரைக்காக வானொலிக்குச் சென்றார்.
இது செய்திகளின் யுகம், எல்லாமே எளிதில் கிடைக்கும் காலம். கொஞ்சம் படிப்போம். கொஞ்சம் தர்க்கபூர்வமாகச் சிந்திப்போம். நம்மைநாமே முட்டாள்களாக ஆக்கிக் கொள்ளாமலிருப்போம்.
ஆனால் ஒன்றுண்டு, இந்த புகைப்படம் எனக்குக் காட்டும் ஒரு வரலாற்றுத் தருணம். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இங்கிருந்து சைவத்தின் வாழ்த்தும் சென்றிருக்கிறது. அந்த மாபெரும் தருணத்தில் தமிழகமும் உடனிருந்திருக்கிறது. அது எனக்குப் பெருமையளிப்பதுதான்
ஜெ
https://dheivamurasu.org/sambanthar-kolarupathigam-indiaindependence/
மறுபிரசுரம் முதற்பிரசுரம் மே 9 2019