சகடம் – சிறுகதை விவாதம் -1

நக

ஒரு சிறுகதை விவாதம்

அன்புள்ள ஜெயமோகன்,

ஒரு சிறுகதையை வாசித்து முடித்தவுடன் எழும் முதல் உணர்வை வைத்தே அது சிறந்த படைப்பா இல்லையா என முடிவு செய்கிறோம். ஆம் என்றால் மேலும் உட்சென்று நம்மை அசைத்த கூறுகளை அடையாளம் காண்கிறோம். அக்கூறுகளைக் கொண்டு மேலுமொருமுறை அதை ஓட்டி மனதில் ஒரு இடமொதிக்கி அதை நிரந்தரம் கொள்ளச் செய்கிறோம். இல்லையென்றால் முன்பை விட இருமுறை கவனமாக திரும்பிப் பார்த்து அதில் நம்மை ஒட்டவைத்துக் கொள்ளும் அம்சம் தென்படுகிறதாவென மீண்டுமீண்டும் தேடுகிறோம். இல்லையென்ற நிச்சயத்திற்குப் பின்பே அதை உதிர்த்து முன் செல்கிறோம்.

நண்பர் நாகபிரகாஷின் சிறுகதையை ஒன்றிற்கிருமுறை வாசித்தேன். முதன்மையாக என்னைக் கவர்ந்தது இக்கருவிற்கு அவர் எடுத்துக் கொண்ட உணர்ச்சியற்ற கூறுமுறை. அது வாசகன் படைப்பை உதாசீதனப் படுத்தவிடாமல் கூர்ந்து படிக்க அறைகூவுகிறது. தாம் ஒரு இலக்கியம் தெரிந்தவனின் படைப்பைத் தான் வாசிக்கிறோம் என்பதை அந்தக் கூறுமுறை தெரிவிக்கிறது.

கதையின் உள்ளடக்கமென்பது நான்கு சிறுசிறு சம்பவங்களின் தொடர்சங்கிலி. காலத்தால் முன்பின்னென தொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சிறுவனின் கையேந்தலில் ஆரம்பித்து அதற்குக் காரணமான அவன் தந்தையின் இருவிடக் கையேந்தல்களை கோடிடுகிறது. ஒன்று நியாயமான அவன் உழைப்பிற்கான கூலிக்காக அவன் முதலாளி வீட்டில். இரண்டாவது அதன் விளைவாக கடன்காரனிடம். இவ்விருடங்களுக்கு நடுவில் தான் ஒரு வழிப்போக்கரிடம் பணம் பறிக்கும் வாய்ப்பிருந்தும் அதை செய்யாமலிருக்கிறான். கொள்கையினாலல்ல தயக்கத்தினால். மிஞ்சிய அந்த ஐந்து ரூபாயை மட்டும் வைத்துக் கொள்கிறான்.

இவ்வனைத்திற்குமான ஆதியூற்று கடைசி சம்பவமாக வருகிறது. தன் மனைவியின் எடையை தாங்க முடியாதவனின் கைநழுவல்தான் அனைத்து இடங்களிலும் அவனின் கையேந்தல்களாக வருகிறது. உழைப்பிற்கான வலிமையைக் கொண்டவனாயினும் விதியின் பாரத்தை சுமக்க இயலாததைக் கூறும் கதையிது. தந்தையில் ஆரம்பித்து மகனுக்கு கைமாறும் வாழ்க்கைச் சகடத்தை இது காட்டுகிறது.

சாரம்சமாக நல்ல கருவாயிருந்தாலும் இது ஒரு நல்ல புனைவாக மாறாத்திற்கு முதன்மைக் காரணம். கதை கருத்து வடிவிலேயே கடைசி வரை பயணிக்கிறது. அது வாழ்க்கையாக உருமாற்றம் கொள்ளவில்லை. அதற்கு முதன்மைத் தேவை நுண்தகவல்கள் அல்லது நுண்சித்தரிப்புகள். இளவயதினனின் பார்வையில் கதை விரிவதால் அவனைப் பற்றிய குணாதிசியங்களை அந்த பருவத்திற்கேயான தனித்த மனவோட்டங்களை சொல்லியிருந்தால் இதன் புனையுத்தன்மை இன்னும் தரமேறியிருக்கும். உதாரணமாக ஜெவின் ’யானை’ சிறுகதையை எடுத்துக் கொள்வோம். அது கொஞ்சம் ”நார்மல்” தனத்திலிருந்து விலகிய ஒருவனிடம் தரப்படுத்தப்பட்ட அனைவருக்காமான கல்வி அவனிடம் செலுத்தும் வன்முறையை தன் முக்கிய சரடாய் கொண்ட கதை. ஆனால் அதே வேளையில் அந்த சிறுவனின் உளயியல்பை அவனின் கற்பனை வளத்தையும் விரிவாக சித்தரிக்கிறது. ஒரு கதையை அதன் சாராம்சத்திற்காக மட்டும் நாம் படிப்பதில்லையே. சிலசமயம் அக்கதையின் பக்கவாட்டு சிதறல்கள் கதையின் கருவைவிட வாசகனுக்கு முக்கியமாகப் படலாம். இம்மாதிரியான கூறுகள் தான் ஒரு புனைவை செழுமையாக்கும். அதன் விடுபடலே ’சகடம்’ கதையின் முக்கியப் பிரச்சனை.

அன்புடன்,

பாலாஜி பிருத்விராஜ்

அன்புள்ள ஜெ,

சகடம் கதையை இருமுறை வாசித்தேன். கதையின் ஆதார பிரச்சனையாக எனக்கு தோன்றுவது, யார் கதைசொல்லி என்பதுதான். முதலில் அந்த சிறுவனின் பார்வையில் விரியும் கதை, ஓரளவு கதை சூழலை விளக்கி மேலெழ முயற்சிக்கிறது. அதற்குள் பரமேஸ்வரனை பற்றி “மூன்றாம்” நபர் பார்வையில் கதையின் தடம் மாறுகிறது. அதுவரை நான் மனதில் உருவாக்கி வந்த சூழலுக்கும், பரமேஸ்வரனின் கதைக்கும் சற்றும் சம்மந்தம் இல்லை. எப்படியும் ஆசிரியர் ஒரு இணைப்பை இறுதியில் உருவாகிவிடுவார் என்ற நம்பிக்கையில் மேற்கொண்டு படித்தேன். ஆனால் பரமேஸ்வரனின் கதை ஒரு காட்சி சித்தரிப்புடன் நின்று விட்டது. தொடக்கமும் இல்லாமல் முடிவும் இல்லாமல். மீண்டும் கடைக்கு அந்த சிறுவனின் பாதையில் திரும்பிய கதை விட்ட இடத்தில இருந்து தொடங்குகிறது. ஒரு சிறிய செய்தியை சொல்லி விட்டு, ஆசிரியர் பரமேஸ்வரனும் (அப்பா), அமுதனும் (சிறுவன்) அந்த கடைக்கு வந்ததற்கான காரணத்தை சொல்கிறார். ஆனால், அதிலும் அவர் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் நடந்த சண்டையை, அவன் அம்மா நினைவிழந்தை சொல்லி, அம்மா பிழைத்து கொள்வாள் என முடித்து கொள்கிறார்.

முதலில், இந்த கதைக்கு இத்தனை சூழல் மாற்றம் தேவை இல்லை என்பது என் கருத்து. அடுத்து, நாயை பற்றிய அவதானிப்பு, யோகா பற்றிய உரையாடல் எதுவும் கதையின் மையத்திற்கு வலு சேர்க்கவில்லை. வாலாட்டாமல் படுத்து கிடந்தது நாய் முகம் தெரியாத அம்மனிதனின் காலால் உதை பட நேர்ந்ததை, அமுதனின் அம்மா அவன் அப்பாவிடம் வாங்கிய அடியுடன் தொடர்பு படுத்த ஆசிரியர் முயற்சித்து இருக்கலாம். ஆனால் அது சரியாக இணைக்க படாமல், வாசகன் சற்று வலிந்து உருவாக்கி கொள்ள வேண்டியிருக்கியது. அம்மா பிழைத்த கொள்வாள் என்ற இறுதி முடிச்சுக்கு நியாயம் செய்யும் வகையில் கதை கட்டமைக்க படவில்லை. ஆசிரியனின் குரல், கால குழப்பம், நேரடியான கதைக்கு  தேவை இல்லாத காட்சி மாற்றங்கள் ஆகியவை இக்கதையின் பலவீனமாக கருதுகிறேன். ஆசிரியர் இதை ஒரு அனுபவ குறிப்பாய் சிறுவனின் பார்வையில் இருந்து எழுதி இருக்கலாம்.

அன்புடன்,

மதன்.எஸ்

அன்புள்ள ஜெ,

இணையம் எங்கும் தேர்தல்வெறி கொந்தளிக்கிறது. டிவியில் வேறு எதுவுமே இல்லை. இந்நிலையில் சாவகாசமாக சிறுகதை விவாதத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள். ஒரு சிறுகதையை இப்படி ஆராய்வதும் பலகோணங்களில் விவாதிப்பதும் வாசகர்களுக்குச் சிறுகதை பற்றிய தெளிவை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. கூடவே அந்த எழுத்தாளருக்குக் கவனம் கிடைக்கிறது. அந்த காலகட்டத்தில் அவர்கள் ஏங்கும் ஃபீட்பேக்கும் கிடைக்கிறது. நல்ல விஷயம். ஆனால் ஏற்கனவே இந்தத் தளத்தில் நடந்த சிறுகதை விவாதத்தில் ‘அவர் எங்க ஆளு’ என்று ஒரு சாதிக்குரல் எழுந்ததும் நீங்கள் சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கியதும் ஞாபகம் வருகிறது. சும்மா சொல்லிவைத்தேன்..

இந்தக்கதை சில சிக்கல்களைக் கொண்டிருக்கிறது. இதை வாசிக்கையில் உள்ள  கஷ்டம் என்பது கதை பல யூனிட்டுகளாக உள்ளது என்பது. அந்த கஷ்டத்தைக் கடக்க வாசகன் சிரமம் எடுத்துக்கொள்ளத் தயார்தான். ஆனால் பதிலுக்கு என்ன கிடைக்கிறது அவனுக்கு? அந்த சம்பவங்கள் இணைந்து ஒரு கவித்துவமான கணம் அல்லது வாழ்க்கை பற்றிய தரிசனம் அல்லது ஒரு உணர்ச்சிகரமான உச்சம் அமைந்திருந்தால் சரி. கதைகளை இணைத்ததும் ஓக்கே சரி, அப்ப என்றுதான் தோன்றுகிறது. எந்தக்கதைக்கும் கதைக்குள் சென்று ஆசிரியன் கண்டடைந்தது என்ன, வாசகனுக்குமுன் வைப்பது என்ன என்பது முக்கியம். வாசகன் அதிலே கண்டடைவது என்ன என்பது அதன் அடுத்தபடி. அப்படி இந்தக்கதையில் ஆழமானதாக என்ன உள்ளது? இதிலிருப்பது எளிமையான ஒரு mundane நிகழ்வு மட்டுமே. அதைச்சொல்லவா இத்தனைச் சிக்கல் என்று வாசகன் கேட்பானா இல்லையா?

இந்தப்பிரச்சினை யுவன் சந்திரசேகர் கதைகளிலும் உள்ளது. மிகச்சிக்கலான வைண்டிங் ஆன கதைசொல்ல. பல கதைகள். ஒன்றுடன் ஒன்று மிகமெல்லிய தொடர்பே இருக்கும். வாசகன் தன் கற்பனையை வீசி எறிந்து அந்தத் தொடர்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஆனால் கடைசியில் கிடைப்பது மிகச்சாதாரணமான ஒரு கதை. உதாரணமாக ஒரு கதை. பெயர் மறந்துவிட்டது. ஒரு கதாசிரியர் எழுதும் கதை. அந்தக்கதாசிரியரின் இளமைக்காலம். அந்தக்கதைக்கு ஒரு வாசகர்கடிதம் என நாலைந்து பகுதிகளாக அந்தக்கதை உள்ளது. நீளமான கதை. ஆனால் கதையின் கடைசியில் என்ன? ஒரு சின்னக்கிராமத்தில் ஒரு சாத்வீகமான பிராமண ஆசிரியருக்கு ஒரு மனைவி. வீட்டில் திருடன் புகுந்துவிடுகிறான். ஊர்க்காரர்கள் சத்தம்போட்டபோது ஓடிவிடுகிறான். அதன்பின் கணவன் மனைவிக்கு இடையே உறவுச்சிக்கல்கள் சரியாகிவிடுகின்றன. ஏனென்றால் திருடன் அவளை வலுக்கட்டாயமாக உறவு கொண்டிருக்கிறான். அது கடைசியில் தெரிகிறது. ‘எனக்குள் இருந்த பள்ளம் நிரம்பியது’ என அவள் சொல்கிறாள். அது டிவிஸ்ட். அடச்சே என்று உணர்ந்தேன். சாதாரணமான சுப்ரமணிய ராஜு, பாலகுமாரன் கதைக்கு இத்தனை சுத்துவழி தேவையா?

அதைத்தான் இந்தக்கதையிலும் சொல்வேன். கொஞ்சம் கவனித்தால் இந்தக்கதையில் பையன், அப்பா, அம்மா என மூன்று கோணங்களில் ஒரு கதை சொல்லப்பட்டிருப்பதும் சிலவிஷயங்கள் ரகசியமாக விடப்பட்டிருப்பதும் தெரியும். அதைக்கொண்டு கதையை ஊகிக்கலாம். சில விஷயங்களில் சின்ன குழப்பம். ஆனால் ஒட்டுமொத்தமாக வாசகனுக்குத் திரண்டுவருவது என்ன? Mundane detail ஒன்றுதானே? அதற்கு எதற்கு இவ்வளவு சிக்கல்?

எஸ்.ராமச்சந்திரன்

முந்தைய கட்டுரைகற்றலெனும் உலகம்: பத்மநாப ஜைனி!
அடுத்த கட்டுரைஅனோஜனின் யானை – கடிதங்கள்-2