மறைக்கப்பட்ட பக்கங்கள்

கொபி

றைக்கப்பட்ட பக்கங்கள்

இனிய ஜெயம்

படைப்பு முகமும் பாலியல் முகமும் பதிவில் வாசகர் எஸ் அவர்களின் தத்தளிப்புக்கு உங்களது பதில் மிகுந்த உத்வேகம் ஊட்டுவதாக அமைந்திருந்தது. கோடி கோடி சுண்டெலிகள் கூடி நின்று முணங்கலாம், ஆனால் எத்தனை சுண்டெலிகள் கூடிக் கூவினாலும் ஒரு சிம்ம கர்ஜனைக்கு அவை ஏதும் ஈடு நில்லாது.  படைப்பாளி எனும் தன்னுணர்வு என்நிலையிலும் ஒரு சிம்மகர்ஜனையே.

எந்த சிம்மமும் சுண்டெலிகள் மீதம் விட்டுச் சென்ற  மிச்சிலைக் கொண்டு தனது ராஜாங்கத்தை அமைப்பதில்லை. அதன் வல்லமையல் அதன் கர்ஜணையால் அது தான் வசிக்கும் களத்தின் தலைவனாகிறது.

எவராயிருதாலும் சரி ஒரு படைப்பாளின் நூலைத் தேடி வாசிக்கும் எவரும் சரஸ்வதி கடாட்சம் பெற்றவரே எவர் முன்னும் எத்தன பொருட்டும் அவர் குற்ற உணர்ச்சி கொண்டு குறுகி நிற்கக் கூடாது. அது அவரை தேடி வந்த சரஸ்வதியை அவமதிக்கும் செயல்.  உங்கள் சொல் கொண்டு, எழுந்து வந்து எஸ் வெல்ல எனது வாழ்த்துக்கள்.

இது மிக முக்கியமானதொரு காலக்கட்டம். நர்த்தகி நடராஜ் பாரதப் பெருமையாக உயர்ந்து நிற்கும் காலம். ஒரு பால் இன்பத்தை குற்றம் என வரையறை செய்த சட்டம் பின்வாங்கி நிற்கும் காலம். இதுதான் கால் பால் புதுமையர் அனைவரும் தம்மை தளைத்திருக்கும் கண்ணிகள் அனைத்தையும் உதறி எழ சரியான காலம்.

இந்த காலக்கட்டத்தில்  இத்தகு சூழலில் நிற்கும் பால் புதுமையினர்  அனைவரும் கட்டாயம் வாசித்திருக்க வேண்டிய நூல். கோபி ஷங்கர் அவர்கள் எழுதிய கிழக்கு பதிப்பகம் வெளியீடான மறைக்கப்பட்ட பக்கங்கள்  எனும் நூல்.

சென்ற ஆண்டின் துவக்கத்தில் நான் வாசித்த மிக முக்கியமான புத்தகங்களில் ஒன்று இந்த நூல். அபூர்வமாக சில நூல்கள் மட்டுமே அறிவுக் களஞ்சியமாக அமையும் அதே சமயம் சீரிய களப்பணி ஒன்றின் மூல விதையாகவும் அமையும். அப்படிப்பட்ட நூல் இந்த மறைக்கப்பட்ட பக்கங்கள்.

எழுபது கட்டுரைகள் அடங்கிய இந்த நூல் இயற்கை வழங்கும் இந்த உடலில் அமையும் பால் தேர்வு,அதற்கும் அமையும் பாலியல் நிலை இந்த அலகின் மீது முழுமையான உளவியல், உயிரியல்,அறிவியல் ஒளியை பாய்சுகிறது.  ஆண் எனும் அடையாளம் கொண்ட உடல் ஒரு முனை. பெண் எனும் அடையாளம் கொண்ட உடல் மறு முனை. இந்த இரு முனைகளுக்கு இடையே இந்த வலியமான அடையாளங்கள் கரைந்த பத்துக்கும் மேலான உடல்கள் இருக்கிறது. அவற்றின் பேதங்களை நுட்பமும் விர்வான தகவல்களும் கொண்டு விளக்குகிறது.

பால் அடையாளம் என்பது வேறு,பாலியல் தேர்வு என்பது வேறு. உதாரணமாக முற்றிலும் ஆண் உடலுக்குள் ஒருவர் முற்றிலும் பெண் தன்மை கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கலாம். தனது உடலை பெண் உடலாக மாற்றிக் கொள்வதன் வழியே,இந்த உடல் இந்த உணர்வு இந்த இரண்டுக்கும் இடையே ஒரு இசைவை உருவாக்க முயல்கிறார்கள் பலர். இவர்களைத்தான் திருநங்கைகள் என்கிறோம்.

இதே நிலை தலைகீழாக பெண் உடலுக்குள் ஆண் வாழ்ந்து, பெண் உடலிலிருந்து அவர் தனது உடலை ஆண் உடலாக மாற்றிக் கொண்டால் அவரை திருநம்பி என்கிறோம். இந்த அடிப்படையான பால் தேர்வு,பாலியல் தேர்வு இதற்குள் இயங்கும் முப்பதுக்கும் மேற்ப்பட்ட வகை மாதிரிகளை, அவற்றுக்கான ஆங்கிலக் கலைச் சொற்களுடன், தமிழில் இதற்காகவே உருவாக்கப்பட்ட தனித்துவமான கலைச் சொற்களைக் கொண்டு நூலில் அறிமுகம் செய்கிறார் கோபி ஷங்கர்.

உதாரணமாக ஒரு பெண் மற்றொரு பெண்ணால் மட்டுமே பாலியல் தூண்டல் அடையப் பெறுபவளாக இருதால் அவள் தான் லெஸ்பியன். அன்றி கலவிக்காக இணையும் எல்லா பெண்களும் லெஸ்பியன் அல்ல. அதே நிலைதான் ஆண்கள் கலவி கொள்ளும் கே எனும் நிலைக்கும்.

ஒருவர் ஆண் உடலுக்குள் முற்றிலும் பெண்ணாக,பெண் உடலுக்குள் முற்றிலும் ஆணாக வாழ்வைதைப் போல, ஆணோ பெண்ணோ எந்த உடலுக்குள்ளும் எந்த பாலியல் தேர்வும் அற்ற பூஜிய நிலை கொண்டோரும் இங்கே உண்டு. அதே போல ஆண் உடலுக்குள் ஆணும் பெண்ணுமாக வாழ்வோர்,பெண் உடலுக்குள் ஆணும் பெண்ணுமாக வாழ்வோர், திருநம்பிகள் வழியாக மட்டுமே பாலியல் தூண்டல் பெற இயலும் எனும் நிலை கொண்டோர், இப்படி இதன் வண்ண மிகு வகை பேதங்களை துல்லியமாக வகை பிரித்துக் காட்டுகிறது இந்த நூல்.

பாரதம் உட்பட உலகம் முழுதும் பண்டைய காலத்தில் இந்த பால் புதுமையினர் என்னவாக இருந்தனர், மதிய காலத்தில், இன்றைய காலத்தில், தொன்மங்களில், புராணங்களில், அரசியலில் கலைத்துறையில் இவர்கள் என்னவாக இருந்தார்கள், என்னவாக எதிர்கொள்ளப் பட்டார்கள்,இன்றைய அறிவியல் இந்த நிலையை என்னவாக பார்த்து,விளக்குகிறது  எனும் அடிப்படை  சித்திரம் ஒன்றை அளிக்கிறது இந்த நூல்.

சாக்ரடிஸ் அறிவைப் பரப்பியதன் பொருட்டே விஷம் அளிக்கப்பட்டாரே அன்றி, பதின் வயது சிறுவனுடன் தொடர்பில் இருந்தார் என்பதற்காக அல்ல என்பதைப் போன்ற சித்திரங்களை இந்த நூலின் வழி அடையும் போது மனம் கொள்ளும் துணுக்குறல் மிக முக்கியமானது. அங்கிருந்தே தனது அறம் சார்ந்த கேள்விகளை துவங்கி, தொன்மங்கள் வரலாற்று ஓட்டம் இவற்றில் வைத்து விவாதித்து முன்னெடுக்கிறார் கோபி ஷங்கர்.

வாசகர் எஸ் போன்ற எவரும், அவர் அடைந்த இக்கட்டை அடையும் சூழலில் இந்த நூல் அவர்  கையில் இருந்தால் இதற்க்கு மேலானதொரு வழிகாட்டி வேறு ஏதும் இல்லை என ஐயமின்றி சொல்வேன். அத்தகு முழுமையான நூல் இது.

கதைகளில் அர்ஜுனன் வித விதமான வேடம் தரிப்பவனாக இருக்கிறான்.பெண்ணாக பேடியாக, நமது மரபில் தியான உபாசனைகளில் பல்வேறு முறைகளை முயன்று பார்த்தவர் ராமகிருஷ்ணர். அத்தகு சாதனை பொழுதுகளில், அர்த்தனாரியாக மாறி, அவர் உடல் கொண்ட மாற்றங்கள் அனைத்தும் கிட்டதட்ட முழுமையாகவே ஆவணம் செய்யப்படிருக்கிறது. பாரத நிலத்தின் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நலம் நாடும் அமைப்பு ஒன்றை முதன் முதலாக உருவாக்கியவர் இந்த ராமகிருஷ்ணர் மிஷனின் இயக்கத்தை சேர்ந்தவர் .  இந்த வரிசைகளை நூலுக்குள் பேசும் கோபி ஷங்கர் அவர்களும்  ராமகிருஷ்ண மிஷன் இயக்கத்தை  சேர்ந்தவர்.

ஒரு களப்பணியாக ஒவ்வொருவர்  கைக்கும் சென்று சமூக மனத்தில் மாற்றங்கள் ஏற்பட வழிவகை செய்ய மிகுந்த அர்பணிப்புடன் உழைப்புடன் உருவான  இந்த நூல் சார்ந்த கட்டுரைகளை  உலகின் முக்கிய பல்கலை கழகங்களில் பேசி விவாதித்திருக்கிறார் நூலாசிரியர். அனைத்துக்கும் மேலாக இந்த மறைக்கப்பட்ட பக்கங்கள் நூலின் ஆசிரியர் கோபி ஷங்கர் தன்னளவில் ஒரு பால் புதுமையாளர்.

கடலூர் சீனு

***

முந்தைய கட்டுரைஇருளறிவு
அடுத்த கட்டுரைஅனோஜனின் யானை – கடிதங்கள் – 6