வெள்ளையானை – கடிதம்

 vellai

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

என் பெயர் சதிஷ்வரன். வெள்ளையானை நாவல் பற்றி YouTubeல் பேசியிருந்தேன்(

https://youtu.be/cJqFxS5rpek). நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் அதைப் பகிர்ந்திருந்ததை இப்பொழுதுதான் கவனித்தேன். மிகவும் நன்றி. உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்.

வெள்ளையானை எனக்கு மிகப்பெரிய திறப்பாக இருந்த புத்தகம். குறிப்பாக இந்தியா வரலாற்றைப்பற்றித் தெரிந்துகொள்ள பெரிய ஊக்கமாக அமைந்தது. எங்கிருந்து துவங்குவது என்ற குழப்பத்தில் இருந்தபோது உங்கள் வலைத்தளமே மீண்டும் உதவியது. அதில் வெள்ளையானை பற்றிய சில பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கும் போதுதான் Roy Moxham பற்றிய அறிமுகம் கிடைத்தது.

அவருடைய புத்தகங்களிலிருந்து துவங்கலாமென முதலாவதாக அவரின் “The Theft of India: The European Conquest of India 1498-1765”, படித்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது “The great hedge of India” படித்துக்கொண்டிருக்கிறேன். அதுவும் அருமை.

அதற்கிடையில் போர்த்துகீசியர்(Portuguese) எப்படி முதன்முதலாக கடல் தாண்டி தங்கள் முதல் காலனி ஆட்சியை அமைத்தார்கள் என்பது பற்றிய ஒரு அருமையான புத்தகமும் படிக்க முடிந்தது. புத்தகத்தின் பெயர் “Conquerors: How Portugal Forged the First Global Empire” by Roger Crowley.

இவை அனைத்திற்குமே வெள்ளையானையே துவக்கமாக அமைந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி. அருமையான படைப்பிற்கு நன்றிகள் பல.

வீடியோ பதிவில் தவறுகள் ஏதேனும் இருந்திருந்தால் மன்னிக்கவும். இன்னும் நிறைய பேசலாம் என நினைத்து வீடியோவின் நீளம் காரணமாகச் சேர்க்கமுடியவில்லை. (குறிப்பாக கதை ஏய்டனின் வழி சொல்லப்படுவது எவ்வளவு பொருத்தமானது என்பதற்கு அவனின் Irish பின்புலமே காரணம், போன்ற குறிப்புகள்)

மேற்குறிப்பிட்ட புத்தகங்கள் பற்றியோ, உங்களின் புத்தகங்கள் பற்றியோ, வீடியோ பதிவுகள் செய்தால் உங்களிடம் பகிர்கிறேன்.

அதுவரை நன்றிகளுடன்,

சதிஷ்வரன்.

முந்தைய கட்டுரைசகடம் -சிறுகதை விவாதம் – 4
அடுத்த கட்டுரைமரபைக் கண்டடைதல் – கடிதங்கள்