இரவு – திறனாய்வு

KIRATHAM_EPI_47

அன்புள்ள ஜெயமோகன் சார்,

இரவு நாவலை உங்களின் தளத்தில் வாசித்தேன்.விஷ்ணுபுரம், வெண்முரசு போல் இல்லாமல் நிகழ்காலத்தில் கதை நடக்கிறது. நீலியையும் இரவு வாழ்க்கையையும்,தவிர மீதி நாம் தினமும் சந்திப்பது,கேள்விபட்டதுதான்.ஆனால் அந்த சம்பவங்களின் மூலம் கிடைக்கும் தரிசனங்கள்,சாக்த தத்துவங்கள், நாம் உக்கிரமாக சந்திக்கும் தருணங்கள் எப்படி வாழ்க்கையை செதுக்குகிறது?,அதை எப்படி அந்த கணத்தில் சந்திக்கிறோம்,அதன் பொருள் என்ன என்பது எல்லாம் மிகவும் புதியது. இப்படியாக பட்ட தருணங்களை சந்திப்பவனின் மனவோட்டங்களை அப்பட்டமாக வெளிபடுத்துகிறீர்கள்.முதல் கவிதையிலே கூறிவிடுகிறீர்கள் இரவு…இயந்திரங்கள்,கணக்கு வழக்குகள், ஊடகங்கள், அமைப்புகளுக்கு எதிர்பக்கம் என.அதை அப்படியே விட்டுவிடாமல் சந்தேகத்தோடு இன்றைய இரவு என்ன என்பதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.

முதலில் இயந்திரமாகிய ரயில், உன்னிகிருஷ்ணன் நாயர் கை இடுக்கில் வைத்திருக்கும் ஊடகமாகிய தினபத்திரிக்கை,பின்பு தொழிற்சங்கம் என்னும் அமைப்பு, ஆட்டோவிற்கான பணகணக்கு , பின்பு நகரத்தின் மீது போர்த்தியிருக்கும் இரவு. அதன் பின்பு யாரும் இல்லாத புழக்கம் கைவிடப்பட்ட அல்லது புழக்கத்தை எதிர்நோக்கி நிற்கும் ஒரு பழங்கால கட்டிடம்.அதற்குள் புதிதாய் வரும் ஒருவன்.சரவணன்.மழை பொழிய ஆரம்பிக்கிறது. எர்ணாகுளம் எனக்கு மிகவும் பிடித்த ஊர். நான் முதன் முதலில் எர்ணாகுளத்தில் இறங்கியபோது அது “ஆலங்குளம் ,இடையங்குளம்” போல் ஒரு சிறிய நகராக இருக்கும் என்று இறங்கினால் மாபெரும் நவீன நகரமாக தோன்றியதே திகைப்பை கொடுத்தது. இவ்ளோ பெரிய சிட்டிக்கு ஏன் எர்ணாகுளம் என பெயர் வைத்திருக்கிறார்கள்? என என்னை கூட்டிக்கொண்டு சென்றவரிடம் கேட்க அவர் கொச்சி பெரிய சிட்டி என்றார். அது எங்க இருக்கு ? என கேட்க கூட்டி சென்று காட்டினார். ஆனால் அதையும் சிலர் எர்ணாகுளம் என்றும் கொச்சி என்றும் கூறி குழப்ப அதை அப்டியே விட்டுவிட்டு அந்த நகரின் பனியில் திரிந்த நாட்கள் இன்னும் பசுமையாக இருக்கிறது. ஆனால் இரண்டாவது கவிதை இரவு என்பது “கரும்சாயம்” என்கிறது.

திகைத்து நின்ற இரவு: “அணைக்கட்டுகளின் சுவர்களில் கையை வைத்தால் அப்பால் தேங்கியிருக்கும் பிரமாண்டமான நீர்வெளியின் எடையை கைகளில் உணரமுடியும் என்று தோன்றும் ” இது இரவின் மூன்றாம் அத்தியாத்தின் கடைசி பத்தியில் வரும் வரி. ஆனால் அட்மிரல் கமலத்தின் அழகைபற்றி கூறும்போதே மனதில் ஒருமாதிரி எடையும் திகைப்பும் கூடத் தொடங்கியது. அட்மிரல் இரவுலாவிகளாய் இருப்பதை பற்றியும்,பகல் இரவுக்கும் கண்களுக்குமான உறவை பற்றி கூறும்போதும்,சரவணன் போலவே எனக்கும் இரவு ஒரு புதிர் தன்மையையும் பெருமையும் கொடுத்தது. மஜீத் காதல் பாட்டுகளை பாடும்போது யாரை எண்ணி பாடுகிறார் என்று அவரின் கண்ணை பார்த்து கேட்க மனம் ஏங்கியது.

தாயின் கனிவான இரவு : “தனிமையின் ஒவ்வொரு சொல்லுடனும் தாயின் கனிவுடன் உரையாட இருளால் முடியும்” என கவிதை சொல்கிறது. மனிதர்கள் இரவில் வாழ்ந்தாலும் பகலில் வாழ்ந்தாலும் ஒரு அமைப்பை உருவாக்கி கொள்கிறார்கள். ஆனால் அனைவரும் தனியாய் இருக்கிறார்கள். பிறகு அமைப்பை உருவாக்கிகொள்வது எதற்காக? என்று கேள்வி எழுந்தபடியே இருக்கிறது. காடுகளுக்குள் மேனனும் கமலமும் பார்க்கும் மிருகங்கள் கூட கூட்டம் கூட்டமாக தான் செல்கிறது. சிறுத்தைபுலி மட்டும் தனியாக தண்ணீர் குடிக்கிறது. அது எது? . கண்ணாடி கோப்பையும் அதனுள் இருக்கும் திரவமும் ,இரவில் அது துலங்கும் அழகும்….படிக்கும்போது அறைக்குள் கண்ணாடி கோப்பை இருக்கிறதா? என தன்னிச்சையாக மனம் தேடியது. கேரளா முழுக்க எங்கேயும் உணவகங்களில் குடிக்க சிவப்பான, வெதுவெதுப்பான நீரை பலவகையான கண்ணாடி கோப்பைகளில்தான் தருகிறார்கள். நினைவை இழந்து பார்க்கவைக்கும் ஓவியம் போல நீலிமா தனது தந்தையான நாயரோடு வருகிறாள். சென்னையில் வசிக்கும்போது தனது காதலனை இழந்தவள். சரவணன் சென்னைக்காரன் என்றதுமே ஒரு சிரிப்பு அவளுக்கு வந்து செல்கிறது. ஒருவேளை தனது பால்யத்தின் நினைவுகள் வந்திருக்கலாம். பெண்களின் பால்யத்தின் நினைவுகள் கழண்டு செல்வதை வெண்முரசில் அம்பையிடம் கூறும் தேவதைகள் மூலம் அழகாய் விவரிக்கபட்டு இருக்கும். நினைத்தாலே திகில் அடிக்கும்..”அப்படியே கழண்டு கொள்ளும் பால்யத்தின் நினைவுகள்” .கேரள பெண்களின் முகத்தில் எங்கேயோ கொஞ்சம் இருக்கும் குழந்தைத்தனமும் , இடியே விழுந்தாலும் முகத்தை சுருக்கிவிட்டு அப்படியே நார்மலாகும் குணமும் இன்னமும் எனக்கு புதிர்தான். அதைவிட புதிரானது கமலம் இங்கு வருபவர்களின் நினைவுகளை கிளறாதீர்கள் என்பது. தாயின் கனிவான இரவுக்குள்ளும் மர்மம் இருக்கும் போல. சரவணனும் நீலிமாவும் தனியாக இருக்கும்போது அவர்களின் செயல்கள் பொண்ணு பார்க்க செல்லும்போது “பொண்ணும் மாப்பிளையும் ” தனியாக முதன்முறையாக சந்தித்துகொள்வது போன்று பல பாவனைகளோடும் , திணறல்களோடும் இருந்து விட்டு பிறகு ஆண் பெண் விளையாட்டை ஆரம்பிப்பது ஒரு குறும்படத்திற்கு சமம். “ஐ அம் அ ஸ்பின்ஸ்டர் ” நீலிமா இந்த வார்த்தையை கூறும்போது “சரி அப்றோம் என்ன ?” என்ற தொனி கேட்கிறது. இது பெண்ணின் முடிவையும் ஆணின் செயல்பாட்டுக்கான தொடக்கதையும் எதிர்பார்த்து கூறுவது. ஆனால் சரவணன் எல்லா ஆண்களையும் போல அமைதி ஆகிறான்.

சொல்லபடாதவற்றின் இரவு: ஒரு ஆணும் பெண்ணும் கொள்ளும் காதலை அவர்கள் அறிந்து கொள்ளும்முன் அருகில் உள்ளவர்கள் அறிந்துகொள்ளுகிறார்கள். ஆண் -பெண் உறவின் நுடபங்களை இந்தியமனம் சரியாக அறிந்துகொள்கிறது. ஏனென்றால் நம் நினைவும் செயலும் அதில்தான் அடங்கியிருக்கிறது. அதுவும் பெண்கள் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் கண்காணித்துகொண்டே இருக்கிறார்கள்.கண்காணிப்பின் வழியால் அடைந்த ஞானத்தை தாங்கள் செய்வதை இன்னும் பெரிய காதலோடு இன்னும் பெரிய பெரிய மர்மத்தோடு மூடிக்கொள்கிறார்கள். சரியாய சரவணனின் சொல்லபடாத கனவின் மனதை கமலம்தான் படிக்கிறார். அட்மிரல் முகத்தை பார்த்து சரவணனை தொடர்வதுபோல் கமலம் சரவணனின் மனதை கொண்டு அவனை தொடர்கிறார் “இரவுக்கு ஆயிரம் கண்கள்” . காதல் என்பது ஒரு இரவா?

உருவாக்கப்பட்ட இரவு: ஒரு சிறுமியை வன்புணர்வு செய்தவனின் விடுதலைக்கு தான்தான் காரணம் என எண்ணி வக்கீல் தொழிலை விட்டுவிட்டு பிரசாண்டனாந்தா ஆசிரமத்தில் சுவாமியாக இருக்கும் உதயபானு முதன்முதலில் சரவணனை சந்திக்கும்போது ” புதிய ரெக்ரூமன்டா என கேட்கிறார். கடைசியில் அவர் ” ஓடிடு, இவங்களோட இருக்காத,இது ரொம்ப ஆபத்தான விளையாட்டு, ரட்சபட்டுக்கொள்” என்கிறார். வக்கீல் புத்தி. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய வி.கே கிருஷ்ணமேனனின் உறவினர் உதயபானு..கிருஷ்ணமேனனை பற்றிய சித்திரம் மத்தாய் எழுதிய ” நேருயுகத்தின் நினைவுகள்” என்னும் நூலின் விமர்சனமாக ஜெயமோகன் அவர்கள் எழுதிய கட்டுரையில் வருவது நினைவுக்கு வந்து சிரிப்பு வந்தது.ஆறாம் அத்தியாயத்தில் சுவராசியமான விஷயங்கள் இரண்டு …ஓன்று : தமிழகத்தினுள் நிறைய குடியேறிய தெலுங்கு பேசும் மக்களின் மொழிகேற்ப தமிழ் தனது உச்சரிப்பை மாற்றிகொண்டது என்பதுடன் முகத்தை வைத்து பிரசாண்டனந்தா ஜாதியையே கூறுவது. இப்போதுலாம் எனது முகத்தை யாராவது கூர்ந்து பார்த்தால் என்னில் ஜாதியை தேடுகிறானோ? என்று ஒரு பதட்டம் தொற்றிகொள்கிறது.இன்னொன்று சுவாமி பிரசாண்டனாந்தாவின் அபாரமான தர்க்கம்.தர்க்கம் என்பது அறிதல்களை கோர்த்து கோர்த்து முழுமையை உருவாக்குவது என்பது எனக்கு ஒரு பெரிய அறிதலாக இருந்தது. அட்மிரல் அகவய தேடல்கள் இல்லாமல் இருக்கும்போது கமலம் கொஞ்சம் அகவயமாய் இருக்கிறார், அவரும் முகர்ஜியும் ஓவியக்கலை பற்றி பேசி ஒரு இரவை உருவாக்குகிறார்கள்.

மௌனமாக காத்திருக்கும் இரவு: சரவணன் ஓவியத்தில் அத்தனை ஜுவாலமுகிகளை,யட்சிகளை ரத்த நிறத்தில் பார்த்ததும் பயம் கொள்கிறான்.ஆனால் முகர்ஜி யட்சிகளை பார்க்கவே கேரளம் வந்திருக்கிறார்.சரவணனுக்கு நீலிமா முகம் மனகண்ணில் வந்து சென்றிருக்கும். முகர்ஜி “யக்ஷி என்பது ஒரு ஆளுமை அல்ல. ஒரு தருணம்தான். எல்லா பெண்ணும் ஏதோ ஒருதருணத்தில் யக்ஷியாக ஆகி திரும்பி வருகிறாள்”என்கிறார்.இது புரிந்து கொண்டால் பெண்களை புரிந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.ஆனால் வாழ்வின் அனைத்து தருணங்களுக்கும் ஒரு யட்ஷி என கோடிகணக்கான யட்சிகள் இருக்கிறார்கள்,முகர்ஜியே கொஞ்சம் யட்சிகளைதான் வரைந்திருக்கிறார்..யட்ஷிகளை பார்க்கவேண்டிதான் ஆண் மௌனமாக இருக்கும் பெண்ணை பலவிதங்களில்,”இந்த கலர் சேலை உனக்கு நல்லா இல்லை என கூறுவதிலிருந்து வன்புணர்வு வரைக்கும் நோண்டுகிறானோ? .பிரசாண்டனந்தா கருப்பான பட்டாடை உடுத்தி இருக்கும் யானை போன்ற ராத்திரி யட்சியை வணங்குகிறார். யானையின் மீது இருக்கிறவனுக்கு இருக்கும் அகங்காரத்தை அதாவது ராத்திரியில் விழித்திருக்கும் அனைவரையும் எச்சரிக்கிறார். தியானமண்டபத்தின் கதவுகளை திறக்க காற்று பீறிட்டு வந்து விளக்கை அணைக்கிறது என்று வாசிக்கும்போது சரவணனுக்கு கேட்கும் கடிகாரசப்தம் போல எனது மனம் அடிக்கும் சப்தம் எனக்கு கேட்க ஆரம்பித்தது.

கடலின் இரவு: சாக்தமதம் என்றால் என்ன ? என்று இன்றுதான் தெரிந்தது.தாய் வழிபாடு.ஆனால் “தாயிடம் உணரும் பேரன்பின் அலகிலாத வல்லமையை இயற்கையிடமும் உணரும்போது சாக்தம் உருவாகிவிட்டது என முகர்ஜி கூறுகிறார்.கடலில் மீன்கள் என பல்லாயிரம் வழிபடு தெய்வங்களாக உலகம் முழுதும் அன்னைகளாகவும், யட்சிகளாகவும்,இருக்கிறார்கள். கிறிஸ்துவின் சீடராக இருக்கும் தோமாவின் பேரில் மீனவனாக ஒருவர் வருகிறார்.அவரை பார்த்து ”எ பியூட்டிபுல் புரபஷன்” என கூறிவிட்டு எதையோ நினைத்து உடனே சிரித்துக்கொண்டு ‘நாட் ப்ர·பவுண்ட் பட் டீப்” என்கிறார் மேனன். மீனவர்கள் கடல் என்னும் இயற்கையில் இருக்கும் அன்னைகளை யட்சிகளை தேடுகிறார்கள் போல. கமலம்,அட்மிரலை பிரிந்து வரும் சரவணன் குப்பை கடலில் பார்ப்பது பெருச்சாளிகளை குறிப்பாக அதன் கண்களை. கடலில் மீனாட்சி என்றால் குப்பையில் மூஷிகி.

நிறையாத இரவை நோக்கி பாயும் குறையாத இரவு : இந்த அத்தியாத்தை படிக்கும்போது எல்லா வழிமுறைகளும் இரவா? அல்லது நாம் அதை இரவாக்கி வைத்திருக்கிறோமா? என சந்தேகம் வந்தது.பாதர் தாமஸும் நாயரும் குற்றவாளிகளின் உளவியலையும் அவர்களின் மனநிலையையும் அலச மேனன் பாதரை செம ஓட்டு ஓட்டுகிறார்.இது எல்லாம் நான் 23 வருடங்களாக கேட்டவை . எத்தனை பாதர்கள்,சிஸ்டர்கள்,பிரதர்கள். மதர்கள்.அப்போது கேட்க மட்டும் செய்ததாலோ என்னவோ அந்த கருத்துக்கள் எதுவும் எனது மனதில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை ,மேனனின் நிலை போல. ஆனால் அவைகள் அனைத்தும்” இன்னும் அறிதல் ,இன்னும் அறிதல்” என்று ஒரொரு நொடியும் தேடினாலும் நிறையாமல் அலையும் மனிதனின் ஆத்மதிற்க்கு குறையாத கடல்கள். தோமா கூறுகிறார் “பாவத்தில் இருக்கும் ஈர்ப்பு இருக்கிறதே அது சாதாரணமானதல்ல. பாவமளவுக்கு உயிர்த்துடிப்பான இன்னொன்று கிடையாது. பாவம் அளவுக்கு நம்மை மூழ்கடிக்கும் வல்லமை வேறு எதற்குமே கிடையாது. சொல்லப்போனால் லூசி·பர் ஏசுவை விட மகத்தானவன். என்ன இருந்தாலும் அவன் மூத்தவன் அல்லவா? இருந்தாலும் ஏன் லூசி·பர் தோற்கிறான் என்றால் மானுடகுலம் நீடித்து வாழவேண்டும் என்று பரமபிதா நினைக்கிறார் என்பதனால்தான். ஏசு ஜெயித்தால் மட்டுமே மானுட குலம் வாழ முடியும். அது மட்டும்தான் ஏசு ஜெயிப்பதற்கான காரணம். மற்ற எல்லா காரணங்களும் லூசி·பருக்குச் சாதகமானவை” என்று. இது மாதிரி பூஜையில் பாதர்கள் பேசமாட்டார்கள்,சரக்கு அடித்துக்கொண்டு அவர்களுக்குள் உரையாடிகொள்வார்கள் போல. பூஜையில் சொன்னால் ஜனங்கள் லூசிபருக்கும் ஒரு சிலை வைக்கவேண்டும் என கூறுவார்கள். இன்னமும் எத்தனை மதங்கள் தோன்றிக்கொண்டு இருகின்றன. எவ்வளவு தத்துவங்கள். நாயர்தான் இன்னும் இன்னும் என முன் நகர்கிறார். சரவணனுக்கு அதில் எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லை. தமிழ் குணம். இரண்டு மலையாளிகள் சந்தித்துகொண்டால் இப்படிதான் பேசி வருவார்கள். [சென்னை டு எர்ணாகுளம் இரயிலில் [கவ்காத்தி ரயில் ]ஐந்து தடவை போய் வந்தால் போதும் மலையாளத்தின் மொத்த சரித்திரத்தையும் தெரிந்து கொள்ளலாம். என்ன ” நீ தமிழன் உனக்கு ஒரு வெண்ணையும் தெரியாது” என்ற பாவனையில் அப்ப அப்ப ஓரகண்ணால் பார்த்தும் கொஞ்சம் குரல் இறக்கியும் பேசி கொள்வார்கள். இப்போது அவர்களின் பாவனைகளுக்கு அகப்பட்டவர்கள் வட இந்திய இளைஞர்கள்] . சரவணின் மனம் நீலிமாவிடம் திரும்ப அவர்கள் பேசியபடியே இருக்கிறார்கள். சாப்பாட்டு மேஜையில் வேறொரு வழிமுறையில் உள்ள மஜீத் “இபிலீஸ் விளக்கின் ஒளியின் தடத்தில் கடைமுற்றம் பகலாக இருக்கும். சாதாரணமான பகல் அல்ல பொன்வெளிச்சம் உள்ள பகல். அந்த வெளிச்சத்தில் ஹாஜி வெள்ளி நாணயங்களை பரப்பிவைத்து அவற்றை பொன் நாணயங்களாக மாற்றினார் என்று சொல்வார்கள். ஆயிரம் தீக்கண்கள் கொண்ட விலங்குகள் போல மரக்கலங்கள் கடலில் பொறுமை இழந்து ஒன்று மீது இன்னொன்று மெல்ல முட்டி அலைபாயும் சீனவிளக்குகளின் ஒளியில் மனிதர்களுடன் அவர்களின் நிழல்களும் அசைய நகரமே ஜின்னுகளும் இபிலீஸ¤களும் கலந்து நடனமிடுவது போலிருக்கும். ”இப்போ போப்பூரினு ராத்ரியில்ல மோனே.. பகல் மாத்ரமே உள்ளூ” என்கிறார். இரவையும் பகலாகவே பார்க்கும்,மாற்றும் ஒரு உலகம். தேவதூதர்களும் சாத்தான்களும் கலந்து பறக்கும் ஒரு வியாபார உலகம். ஆனால் கடைசியில் கமலம் கூறுகிறார் ” நீங்கள் மூன்று சாத்தான்களும் போய் வாருங்கள்” என்று கூறுகிறார். இதுவும் குறையாத கடலில் இருந்து நிறையாத கடலுக்கு வரும் உண்மைதான்.

தோழியான இரவு: இந்த அத்தியாயம் ஆரம்பமே திகிலும் குழப்பமுமாக ஆரம்பித்தது. நடு இரவில் ஒரு அழகான பெண் ஒரு ஆண்,எங்கு செல்லவேண்டும் என்று தெரியாமல் செல்லவேண்டும் ..எங்கோ? .நீலிமா தன்னை யட்சி என்று சொல்லிக்கொண்டு நிஸாகந்தி பறிக்க பாம்புகள் அதன் அடியில் இருக்கும் என கூறிக்கொண்டே செல்கிறாள். பெண்கள் அதுவும் அழகான பெண்கள் ஒரு நிமிடமாவது தங்களை யட்சிகள் என உணர்வார்களோ? இல்லை ஆண்கள் அருகில் இருக்கும்போது யட்சிகளாய் மாறுவார்களா? சரவணன் அவளை கிறுக்கு என கூற ” ”ஆக்சுவலி, எனக்கு மெண்டல் பிராப்ளம் இருந்தப்பதான் நான் ரொம்ப ·ப்ரியா இருந்தேன்னு நினைக்கிறேன். எதைப்பத்தியுமே கவலை இல்லை. நான் பாட்டுக்கு நடுராத்திரியிலே இறங்கி காட்டுக்குள்ளே போயிடுவேன். என பதில் சொல்கிறாள். எல்லா யட்சிகளுக்கும் தேவை சுதந்திரம்தனா? எதில் இருந்து? ,சரவணன் கூறுகிறான் “”மனுஷனுக்கு பெரிய விஷயங்கள் வேண்டாம். அதான் அவன் மனசோட இயல்பு. ஒரு நூறுகோடி ரூபாய இல்லாட்டி நாலுகைப்பிடி வைரத்தை மனுஷன் கையிலே குடுத்தா பதறிப்போயிடுவான். பயத்திலே சாவான். அதுமாதிரித்தான். இந்த உலகம் வேற மாதிரி இருக்கு. இங்க எல்லாமே தீயா எரியற மாதிரி, உருகி வழியற மாதிரி இருக்கு. ஒரு சாதாரண கண்ணாடி டம்ளரைப்பாத்தாக்கூட அழகிலே மனசு மலைச்சுபோயிடுது. இது ஒரு கனவு…இந்தக் கனவிலேயே வாழமுடியுமான்னு தோணிட்டுது… கனவிலே இருந்து முழிச்சுக்கலேன்னா ஆபத்து. திரும்பி வரவே முடியாதுன்னு பட்டுது…வெல்…ஆக்சுவலி..”நான் என் வேகத்தை இழந்தேன் ”அதாவது, எனக்கு பைத்தியம் பிடிச்சிடுமோன்னு பயந்துட்டேன் .நீலிமா””தேர் இஸ் நோ ஹாப்பினஸ் வென் யூ ஆர் ஸோபர்” என்கிறாள். கலங்கிய நிலையில் தான் இன்பம் என்றால் துன்பத்திற்கும் அதைத்தானே கூறுகிறோம் .தெளிவு என்பது எல்லாவற்றிக்கும் தர்க்கத்தை கொண்டு அளவிடுவது. நீலிமா நமது மனதில் தோன்றும் தர்கத்திற்கு அப்பாற்பட்டவளாகவே இருக்கிறாள். ஒரு பெண்ணை குறித்து ஆண் தர்க்கபூர்வமாக கொண்டுள்ள அனைத்தில் இருந்தும் விடுபட்டு இருக்கும் நிலைதான் யட்சி. ஆனால் உள்ளுற ஆணுக்கு அதன் மீதுதான் பற்றும் பயமும். பயப்படுகிறவர்களை யட்சிகளுக்கு பிடிக்கும் போல. காண்டீபதில் சுபத்திரை அர்ஜுனனை பார்த்து கூறுகிறாள்” ஆற்றல் அணைந்து போய் நிற்கும் ஆணை பெண்களுக்கு பிடிக்கும் ” என. எல்லா ஆற்றலையும் கொண்டு எதிர்நீச்சலிலே இருக்கிறவன் கரை சேர்வதே இல்லை. நீலிமாவின் முத்தத்தை பெற்றுக்கொண்ட சரவணன் திடீரென தனது உடம்பில் நிஸகாந்தி மனம் வீசுவதை உணர்கிறான். கள்ளிபாலையில் யட்சி குடியேறிவிட்டது.

“நான்” என்னும் இரவு” : கவிதையின் கடைசி வரியாக வரும் “மிக எளிமையாக மிக இருண்ட ஒரு சொல்லாக “நான்” …இதை வாசிக்கும்போது மனம் அடையும் கிளர்ச்சிக்கு அளவே இல்லை. நீலிமா சரவணனிடம் “”நான் அன்னைக்கு எப்டியோ இமோஷனலாயிட்டேன்…ஏன்னா, நீங்க பின்னாலே காலெடுத்து வைக்கிறீங்கன்னு தோணிட்டிருந்தது. அன்னைக்கு முழுக்க நான் தவிச்சிட்டே இருந்தேன். ·பாதர் ஒரே தியாலஜியா போட்டுத்தள்ளிட்டிருந்தார். என்னாலே உக்காந்திருக்கவே முடியலை. அழுகை அழுகையா வந்தது. அப்பதான் நீங்க வந்து வாசலிலே நின்னீங்க. மைகாட், அந்த மொமெண்டை எப்டி சொல்றது. என் லை·ப்ல அது ஒரு கிரேட் மொமெண்ட். அப்டியே உடம்புக்குள்ளே இருந்து என்னென்னமோ பொங்கி வந்தது…ஒரு செகண்டிலே நான் கண்ட்ரோல் பண்ணிக்காம இருந்திருந்தா அப்பவே அத்தனை பேர் முன்னாடி பாய்ஞ்சு வந்து கட்டிப்பிடிச்சு முத்தமா குத்திருப்பேன்..”

நான் நெகிழ்ந்து என் கையை அவள் தொடைமேல் வைத்தேன். அவள் தன் இரு கைகளாலும் என் கையைப் பற்றிக்கொண்டாள். ”ஆச்சரியம்தான் இல்லை? ஒரு செகண்டிலே நரகம் சொர்க்கமா ஆயிடுச்சு. அதுக்கு முன்னாடிவரை நான் ஏன் உயிர்வாழணும்னு நெனைச்சிட்டிருந்தேன். அதுக்குப் பிறகு நான் தான் உலகிலேயே அதிர்ஷ்டசாலின்னு தோணிட்டுது…” என கூறுகிறாள். இப்படி எல்லாம் ஒரு பெண் கூறும் தருணத்தை அனுபவித்தவர்களுக்கு “நான் ,நான் ,நான் ” என்று இருப்பதை தவிர வேற எதுவும் இருக்காது என்று தோன்றுகிறது. ஆசீர்வதிக்கபட்டவன் சரவணன் . ஆனால் இவ்வளவு எளிமையாகவா ஒரு பெண் இருப்பாள்? அது ஒரு தருணம் போலும். ஆண் அடி எடுத்து வைத்தாலே ஆயிரம் கணக்கு போடும் பெண்களில் லட்சத்தில் ஒருத்தி ஒரு நொடியில் தனக்கானவனை கண்டு கொள்வாளாக இருக்கும். நீலிமாவுக்கு அவளை கட்டும் கட்டுகள் என்பது கடந்தகாலம் தான், அது கரைந்து அவள் அவளுக்கான ” நான் ” என்னும் இருண்ட சொல்லை கண்டடைந்து கொள்கிறாள். சரவணனுக்கான இருண்ட சொல்லாக கொடுங்கை அம்மனின் தயவால் பிறந்த நீலிமா அமைகிறாள். முகர்ஜி, கமலம் எல்லாருக்கும் கொஞ்சம் நவீனமான தாந்திரிகம் ஆஸ்ரமத்தில். சரவணனுக்கும் நீலீமாவுக்கும் கொஞ்சம் நவீனமான தாந்திரீகம் கொடுங்கல்லூர் அம்மன் கோவில். ஆனால் கண், மூக்கு என்று எதுவும் இல்லாத அந்த அம்மனின் உருவம் சரவணனுக்குள் உயிர் பெற ஆரம்பிக்கிறது. ஆணும் பெண்ணும் பாதி பாதி கலந்த முழுமையான “நான்”.

பிடிபட்ட கரடியாகிய இரவு: முந்தைய அத்தியாயத்திற்கு அப்படியே எதிர்பதமான அத்தியாயம். சரவணனிடம் மிகவும் அழுது ரொமன்சாக காதலை கூறிய நீலிமாவா இது ?, ஆச்சரியமூட்டும் பெண்மையின் மறுபக்கம். அவள் சொல்வதை அப்படியே கேட்க பெற்ற சரவணன் உண்மையிலே அபாக்கியவான். இப்படி எல்லாம் ஒரு பெண் ஆணிடம் பேசினால் பிறகு அவனுக்கு அவளைவிட்டு வேறு விமோசனம் உண்டா? உங்களின் கதைகளில் மட்டும் வரும்[அல்லது உங்களின் கதைகளை மட்டும் அவதானித்ததில் எனக்கு தோன்றும்] கதாபாத்திரங்கள் தங்களின் கீழ்மைகளை, தங்களை நேசிப்பவர்களை குறித்து என்ன எண்ணுகிறார்கள் என்று அவர்களிடமே கூறும். காதலுக்காய் கெஞ்சியதின் மூர்க்கத்தை சரிசெய்யும் துடிப்பு. அப்பட்டமான ஆண் வெறுப்பு. கொஞ்ச நாள் முன்பு கொடுங்கல்லூரில் மனதுக்குள் உருவமாய் எழுந்த நீலியை நேரில் பார்க்கிறான் சரவணன். ஆனால் அவன் அவளுக்காய் தனது வேலையை எல்லாம் விட்டுவிட்டு மறுபிறப்பு எடுத்து அவள்தான் இனி என்று முடிவு எடுத்தபின் தான் அவள் தனது சுயரூபத்தை காட்டுகிறாள். அவனும் தனக்கு அவள் எப்படி வேணும் என்ற தனது சுயரூபத்தை காட்ட அவளின் உள்ளில் இருக்கும் நீலி, ரத்ததிற்காய் அலைபவள் அவனை கொன்று ரத்தத்தை குடிக்கபோவதாய் கூறும்போது புல்லரித்தது.முந்தைய அத்தியாயத்தில் “நான்” என்று மேம்போக்காய் கண்டுகொண்டவர்களின் சுயம் வேலைசெய்கிறது.ஆனால் அதற்கு பிறகுதான் சரவணன் முழுதுமாய் கொஞ்ச நேரம் வாழ்கிறான். உச்ச கட்ட காதலும், உச்சகட்ட வெறுப்பும் கலந்தவள்தான் ஆணுக்கு முழு வாழ்க்கை வாழ கணங்களை அளிப்பாள் போல. அவர்கள்தான் அம்மன்களாய் இருந்து அருள் பாலிக்கிறார்கள். அவர்களின் கைக்குள் சென்றவர்கள் பிடிபட்ட கரடிதான்.

கடலின் இமையா விழியாகிய இரவு:கடலை கவிதையாகவும் படிமமாகவும் எவ்வளவோ விதத்தில் இலக்கியம் கையாண்டு இருக்கிறது. எனது சாதரண விழிகளும் கடலை பார்க்கும்போது என்னலாமோ எண்ணியிருக்கும். சரவணன் நீலிமாவை அவளது வீட்டில் இறக்கிவிட அவள் அதை சர்வசாதரணமாக கையாண்டு அவனின் ஆண் அகங்காரத்துக்கு சம்மட்டியால் அடிக்கிறாள். ஆனாலும் நீலியை தரிசித்தவர்கள் அல்லது நீலி என்னும் பெண்ணின் மனம் என்னும் தொன்மத்தை தரிசித்தவர்கள் அதில் இருந்து விலகுவது கடினம் என்பதை சரவணின் மனவோட்டத்தில் நீலிமாவின் அழகை அவன் தனது மனதுக்குள் ”எத்தனைபேரழகு!” ஆம், அது தான் நான் நினைத்துக் கொண்டது. அவளை நான் கண்ட கணம் முதல் கணம்தோறும் அவள் அழகு அதிகரித்தது. பார்க்கும்தோறும் அவள் அழகு கொண்டாள் .என் இமைகளால் விசிறி விசிறி அவளை நான் மேலும் சுடரச் செய்கிறேன் போல! ஆனால் இந்தக் கணத்தில் அவள் அழகு அதிஉச்சத்தில் இருப்பதாகப் பட்டது. மேலும் அழகாக ஆக முடியாமையால் இன்றிரவே அவள் இறந்து விடுவாள் என்பதுபோல. நாளை அவள் இருக்கமாட்டாள். இந்தக் காட்சிதான் நான் என்றென்றும் என் நினைவில் வைத்திருக்கப்போகும் கடைசிப் பிம்பம்.முட்டாள்தனம். இதைத்தான் ரொமாண்டிசிசம் என்கிறார்கள். அகங்காரமும் பலவீனமும் சரிசமமாக கலந்து உருவாவது இது. இது மிகச் சர்வசாதாரணமான ஒரு தருணம். நான் இது எனக்கு மட்டுமே நிகழக்கூடிய ஒரு பிரபஞ்ச தருணம் என்று கற்பனைசெய்துகொள்கிறேன். ”நீ ஒரு ரொமாண்டிக் ·பூல்” என்று சொன்னாள். ஆமாம், உண்மைதான். அவள் சொன்னவை எல்லாம் உண்மை. முழுக்க முழுக்க உண்மை என்பதுதான் அவற்றை அத்தனை குரூரமானவையாக ஆக்கியது. ” உணமை ” இதற்கு எதாவது அர்த்தம் இருக்கிறதா? அதை என்னால் தாங்க முடியுமா? மரணம் உறுதி என்ற உண்மையை போல் மனித பிறவிக்கு வேறு உண்மை ஏதும் தேவையா ? அதை நினைத்து கொள்ளமுடியாதபடி நம்மை ஏன் இயற்கை உருவாக்கியது? என்று கேள்விகள் சுழல தொடங்கியது. ஆனால் அதற்கு விடை கிடையாது என்பதுதான் குருரமான “உண்மை”என்று நினைக்கையில் மனதில் திகில் பரவதொடங்குகிறது. இதுதான் இந்த அத்தியாயத்தின் தரிசனம் என நினைத்துகொண்டேன். எத்தனை பேரழகு என்பது பெண்ணின் உடம்பு மட்டும் அல்ல உலோகங்களான குருரமும், பிடிவாதமும், கூர்மையும் தான் அதை வெல்ல முடியாது என பாதிரியார் தாமஸ் கூறும்போது எரிச்சல் கிளம்பியது. மேலும் கூறுகிறார் ”இதோபார் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சதவீதம் ஆண்கள் பெண்களை கவனிப்பதே இல்லை. இளமையில் அவர்களின் அழகு அவர்களின் பார்வையை திசை திருப்புகிறது. முதுமையில் அவர்களின் அழகின்மை திசை திருப்புகிறது. கவனித்துப் பார்த்த எந்த ஒரு ஆணும் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் யட்சியைக் கண்டிருப்பான். தப்பவே முடியாது…” என்று. தாமஸ் அதை சந்திக்க திராணியில்லாதவர் என அவரே கூறி,ஆனால் உண்மையில் அவருக்கு தேவை ” காட்டாறு” என்கிறார்.இவ்வளவு வாழ்ந்த வாழ்க்கையில் இந்த உண்மையை புரிந்து கொள்ளவே இல்லையென்று பட்டது

ஆத்மாவின் புன்னகையான இரவு : “உண்மையை கண்ணோடு கண்கொண்டு பார் ” எவ்வளவு குரூரம்.ஆனால் அதை பார்த்து தாண்டாவிட்டால் வாழ்க்கையே இல்லை. தாண்டிவிட்டால் பிறகு புன்னகை. ஆனால் ஒவ்வொரு நொடியும் தாண்ட வேண்டியிருப்பதுதான் வாழ்வின் மாபெரும் சித்திரவதை. “முட்டாள் சொற்கள் இல்லாமையின் இருளில் இருக்கிறான் என்றால் அறிவுஜீவிகள் சொற்களின் இருளில் இருக்கிறார்கள்” சரவணன் தனக்கு தோன்றும் இந்த வரியை குறித்து வைக்க வேண்டும் என விரும்பினான் ஆனால் நான் குறித்து வைத்துகொண்டேன். வெறும் சொற்களை கொண்டு ஒரு தத்துவத்தை உருவாக்கி அதில் ஒரு இனத்தை அடைத்து வைக்கமுடியும் என நினைக்கும் பேதைமை. முதலில் சொற்களால் கண்டுகொண்ட “அறிவுஜீவிதம்” என்ற வாழ்க்கையை காட்டிலும் அனுபவித்து புரிந்துகொள்வது என்பது ஒரொரு சம்பவத்திற்கும் ஒரு தத்துவத்தை தருவது. அல்லது சொற்களின் வழி அறிந்த தத்துவத்தை கண்டுகொள்வது. ஆகையால் தாமசைகாட்டிலும் சொற்களைக் காட்டிலும் அனுபவம்,அதை புரிந்து கொள்ளல் மிக முக்கியம் என்பது தான் இதன் ” உண்மை” .அதை கண்டுகொண்டு அடுத்த உண்மையை கண்டு கொள்ள செல்வதும் அதிலேயே அடிமையாகி நிற்பதும் அவரவரின் சாய்ஸ்.சரவணன் நேரே செல்வது தோமாச்சனிடம்.தோமாச்சன் தத்துவவாதியோ, ரசவாதியோ அல்ல. இரவிலேயே அவரின் கர்மமண்டலமாகிய கடலுக்குள் தனது வாழ்வு முழுவதும் சென்றவர். அது அவரின் இயல்பாக இருக்கிறது, சரவணனோ வாழ்நாள் முழுதும் கடலில் இந்த படகின் அமரத்தில் நின்றுகொண்டு இருக்க வேண்டுமா என ஏங்கி தன்னிரக்கம் கொள்கிறான். அறிவுதான் எத்தனை மடமை கொண்டது. ஒரு இரவு முழுவதும் தவம் போல் அதில் நின்றவுடன் அவனின் அத்தனை கொதிப்புகளும் அடங்கி கடலும் வானும் தானும் சமம் என உணர்கிறான்.ஆத்மாவின் புன்னகை என்னும் விடுதலை .

தன்னுள் தான் நிறைந்த நீல இரவு: சரவணன் விடுதலை அடைந்து நிதானம் ஆனபின் நேராக நீலிமாவை சந்திக்க வருகிறான். அவள் முந்தைய நாளின் எந்த சுவடும் இல்லாமல் அவனை வரவேற்கிறாள். நாயர் கலந்தப்பம் செய்ய சென்றபின் சரவணன் நினைக்கிறான் “என்னைச்சூழ்ந்து ஒரு வலைபோல இறுகி இறுகி வந்து அவளிடம் சேர்த்துக் கட்டுகிறார்கள். பெரும்பாலான ஆண்பெண் உறவுகள் அப்படி ஒரு சூழலால் நெருக்கப்பட்டே உருவாகின்றன என்று நினைத்தேன். இல்லை, அவை நீடிப்பதற்கும் அதுதான் காரணமா?” பெரிய சமுக தரிசனம். அப்படி ஒரு உறவு கிடைப்பது வரம். ஆனால் பெரும்பாலோனார் சில்லறை ஆணவத்தினால் அதை தவறவிடுவதையே கண்டிருக்கிறேன். அதிலும் பெண்கள் காரணம் கூறினால் கூட தனக்கு இழுக்கு என்பதுபோல் சென்றுவிடுவர். நமது சமுகத்தில் அதுவும் ஆணின் குற்றமாகவே பார்க்கப்படும். நீலிமாவின் அறைக்குள் இருவரும் கட்டி தழுவ மழை இருவருக்கும் பெய்து ஓய்கிறது. இனி மீண்டும் முதலில் இருந்தா? என்றே என் மனம் எண்ணியது, முதலில் இருந்துதான் ஆனால் வேறொரு கணக்கு வழியாய். சரவணன் யட்சியின் ஒரு முகத்தை பார்த்தே பயந்து ஓடியவன் கூறுகிறான் “நீ சாதாரண பெண் இல்லை. சாதாரண பெண்ணோட மறுபக்கம். இன்னும் தீவிரமான ஒரு வெர்ஷன். எனக்கு நீதான் தேவை. எந்த ஒரு சாதாரணமான பெண்கூடயும் என்னால இனிமே இருக்க முடியாது. அவகிட்டே இன்னும் கொஞ்சம் தீவிரமா இருன்னுதான் என் மனசு கேக்கும். எனக்கு ராத்திரியோட உக்கிரம் தேவைப்படுது….அதான் திரும்பவேண்டாம்னு முடிவு செஞ்சேன்.. இந்த தீவிரத்தை பயந்துதான் போயிடலாம்னு நினைச்சேன்.”என்று.யட்சிகளிடம் அகப்படவர்களுக்கு அதில் இருந்து விடுதலையே இல்லை போலும், ஆனாலும் அதுதான் வாழ்க்கை. நீலிமா நாயரிடம் தாங்கள் ஒரு முடிவுக்கு வந்திருப்பதை அறிவிக்க அவர் நெகிழ்கிறார். எல்லாம் ஒன்றுள் ஓன்று இணைந்து நிறைகிறது.

கருபுகுவதற்க்கான இரவு: இருவரும் ஒத்த இசைவோடு அன்காசியஷில் ஒரு முடிவு எடுத்து கிளம்புகிறார்கள். ஆனால் சப்கான்ஷியசில் இருவருக்கும் தெரிந்தே இருக்கிறது. முக்கியமாய் நீலிமா முடிவு பண்ணிவிட்டே கிளம்புகிறாள். ஆனால் ஒரு பாவனையாக இருவரும் கௌபாய் கதை பற்றி பேசிகொள்கிறார்கள். சரவணன் எதிர்பார்போடு நிற்கும்போது எண்ணுகிறான்” நான் அசைவிலாது அமர்ந்திருக்க காலம் நழுவிக்கொண்டே இருந்தது. அவள் பெருமூச்சுடன் திரும்பி என்னைப் பார்த்தாள். பின்பு புன்னகைசெய்தாள். என் வாழ்நாளில் அத்தகைய பேரழகுடன் ஒரு புன்னகையைக் கண்டதில்லை. ஒளிவிடும் கண்களும் மின்னும் பற்களும் சிவந்த உதடுகளும் இணைந்து கொள்ளும் ஓரு தருணம். பின்பு கைகளை நீட்டினாள். வசியம் செய்யப்பட்டவனாக நான் எழுந்து அவளை நோக்கிச் சென்றேன். அவளுடைய நீட்டிய கரங்களை மெல்லத் தொட்டேன். அவள் என்னை அள்ளி தன்னுடன் அணைத்துக்கொண்டாள்” .உண்மையாய் காதலிக்கும்போது ஆண் அவசரமேபடுவதில்லை. சரவணன் படகில் நீலிமாவோடு உறவு கொள்ள தொடங்கும் போது அவனுக்கு ” மத்யஸ்கந்தி ” ஞாபகத்திற்கு வருகிறது. வெண்முரசு முதற்கனல் 7ம் அத்தியாயத்தில் சந்தனு -சத்யவதி உறவை பற்றி “பதினெட்டு ஆண்டுகாலம் சத்யவதியின் மேனியின் வாசனையன்றி வேறெதையும் அறியாதவராக அரண்மனைக்குள் வாழ்ந்தார் சந்தனு. ஒவ்வொருநாளும் புதியநீர் ஊறும் சுனை. ஒவ்வொரு காலையிலும் புதுமலர் எழும் மரம். ஒவ்வொருகணமும் புதுவடிவு எடுக்கும் மேகம். யமுனையின் அடித்தளத்திலிருந்து சத்யவதி கொண்டுவந்த முத்துக்களின் கதைகளைப்பற்றி சூதர்கள் சொன்னார்கள். ஒன்றைப்போல் இன்னொன்றில்லாதவை அம்முத்துக்கள். நீரின் அடித்தளத்தில் மட்டுமே எழும் ரகசியமான வாசம் கொண்டவை. அவைதான் சந்தனுவை அவளுடைய அடிமையாக காலடியில் விழச்செய்திருந்தன என்றும் “அந்தமுத்தின் அழகில் மெய்மறந்து அதையே மீளமீள முகர்ந்தும் பார்த்தும் அவர் வாழ்ந்தார். நூறாண்டுகள் பழைய சோமரசம்போல, இமையத்தின் சிவமூலிகை போல அது அவரை மயக்கி உலகை மறக்கச்செய்தது. அவரது கண்கள் புறம்நோக்கிய பார்வையை இழந்தன என உள்நோக்கித் திரும்பிக்கொண்டன. கனவில் இசைகேட்கும் வைணிகனைப்போல அவர் விரல்கள் எப்போதும் காற்றை மீட்டிக்கொண்டிருந்தன. அன்னை மணம் அறிந்த கன்றின் காதுகளைப்போல அவர் புலன்கள் அவளுக்காக கூர்ந்திருந்தன” என்றும் கூறுகின்றது. ஆனால் சரவணன் நீலிமாவை ” நிசாகந்தி ” என்கிறான். இரவில் மணம் வீசி மூச்சை நிறுத்துவது. இருவரும் உறவு கொண்டு எழுந்தவுடன் , நீலிமா வானத்தில் விண்மீனை நேருக்கு நேர் பார்க்கிறாள். சரவணன் வின்மீனையே கடலுக்குள் பார்க்கிறான்.அப்போது ” காயலுக்குள் ஒரு ரகசியக் கண் திறந்து கொண்டதுபோல நான் ஒரு மீனைப்பார்த்தேன். பின்பு இன்னொரு கண். பின்பு கண்கள். பின்பு கண்களின் பெரு வெளி. மீன்படலம் சுழிக்க காயலின் பெருவிழி ஒருகணம் இமைப்பதைக் கண்டேன்”என்கிறான். நிஜத்தை விட இருளில் மினுங்கும் நிழல் தான் நமது உணமையான மனமா? இல்லை நாம் கருவாகி புகுந்தவர்களின் மனமா?

பதில் இல்லா வினாவான இரவு: காதலை சக்சஸ் பண்ணியதற்கான ஒரு விழா போல் அத்தியாயம் தொடங்குகிறது. இரவில் வாழும் குழந்தையின் அறிவு மிகவும் கூர்மையாக இருக்கிறது. ஆனால் மையம் மனதின் ஆழத்தை துழாவுவது. பிரசாண்டனாந்தா “நாமே செய்து நம்மிடம் படிந்துவிட்ட செயல்கள்தான் பழக்கம்.. நம்மைச்சுற்றியிருப்பவர்கள் காலாகாலமாகச் செய்து வரும் விஷயங்கள் வழக்கம்” என்று கூறியதை படிக்கும்போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என ஒரு நிமிடம் யோசித்தேன். இரவில் வாழும் தாந்திரிக வாழ்க்கை பற்றி எப்படி அதனால் மனது செயல்படும் என்பது பற்றி பிரசாண்டனந்தா …..

“ஜாக்ரத் – ஜாக்ரத் என்பது பல ஆயிரம் வருடங்களாக மனிதர்கள் உருவாக்கி எடுத்த ஒரு பாதுகாப்புப் படலம். முழுக்க முழுக்க பொய்யாலான ஒன்று அது. நம் உடலின் இறந்த செல்களால் ஆன மேல்சருமம் போன்றது .ஆனால் உயிரற்றவற்றால் ஆன ஒரு படலம் நம் மீது இருப்பதனால்தான் நமக்குள் இருக்கும் உயிர்ச்சருமமும் சதைகளும் பாதுகாப்பாக இருக்கின்றன. அரைமணிநேரம் மேல்தோல் இல்லாமலிருந்தால் நம் உடல் பாளம் பாளமாக வெடித்துப் புண்ணாகிவிடும். அதேபோன்றதுதான் ஜாக்ரத். சாமானியர்கள் அதில்தான் வாழமுடியும். அது கொஞ்சம் விலகினால்கூட அதிர்ச்சியில் அவர்களின் உலகம் சிதறிப்போய்விடும்.

ஸ்வப்னம் -ஜாக்ரத்துக்கு அடியில் இருக்கிறது ஸ்வப்னம். அது இரவுக்குரியது. அதுதான் ஆழம். நம்முடைய கனவுகள் எங்கிருந்து முளைக்கின்றனவோ அந்த ஆழம். சப்கான்ஷியஸ் .

சுஷ¤ப்தி-. மகத்தான இன்பத்தால் ஆன ஓர் உலகம்.

துரியம்-இன்பத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு வெளி என்று கூறுகிறார். ஜாக்ரத், ஸ்வப்னம் ஈஸியாக புரிந்து கொள்ளமுடிகிறது. சுஷூப்தி, துரியம் புரியவில்லை. ஏன் என்றால் பயந்து சாகிறவனுக்கும், எல்லைகளை கடக்காமல் ஜாக்ரத்தை தாண்டாதவனுக்கும் அது கிடையவே கிடையாது என்பதுதான் இந்த கதையின் மறுபக்கம் என புரிந்து கொள்ளமுடிகிறது. அதுவும் எல்லைகளை கண்டே பீதியாகும் என் தடித்த மனதோலுக்கு உறைக்கவே உறைக்காது. ஸ்வப்ன நிலையை தேட வேண்டிய இந்த வாழ்க்கையில் ஸ்வப்னத்திலே வாழவேண்டும் என்றால்?

பால்வீதிகளை நகைகளாக கொண்ட இரவு: மிகவும் உக்கிரமான ஒரு அத்தியாயம். தாந்திரிக பூஜை என்பது இது தான் என்று வாழ்வில் முதன் முதலாக ஆக வாசித்து காட்சிபடுத்தியது. உங்களின் ஒரு சிறுகதையில் “காசியில் ஒரு நாயரின் மனைவி லிஸ்சை போல் இந்த பூஜையின் சிலையாய் இருப்பாள், பிறகு கர்ப்பமாகி அவள் நார்மல் வாழ்க்கைக்கு ” திரும்புவாள். அந்த கதை மொத்தமும் இந்த அதிகாரத்தை படிக்கும்போது ஞாபகம் வந்தது. வெண்முரசிலும் துரியோதனன் இதுபோல் ஒரு பூஜையை செய்வான். நிர்வாணமாய் மனிதன் இருந்த காலத்தில் தோன்றிய பூஜையா இது? அப்போது தாந்திரீகம் தான் மனிதனின் முதல் பூஜை சடங்கா? பஞ்ச மகாராமகிய மலர், மாவு, மது, மாமிசம், மங்கை தான் மட்டும் வழிபடக் கூடியதாகவும் படைக்க கூடியதாவும் இருந்த ஒரு காலம். நினைக்கும் போதே எனக்கு மயக்கம் வருகிறது. சரவணன் மயங்கியது வியப்பாக படவில்லை. இருளில் பெண்ணின் உடம்பை கண்டவனுக்கு இப்படி ஒரு சூழ்நிலையில் அப்பட்டமாக பார்த்தால் மயக்கம் வராமல் என்ன செய்யும். பூஜை ரூமில் பல்லாயிரம் தாமரை மலர்கள் கொண்ட ஒரு சக்கரம் வரையபட்டிருக்கிறது. அது என்ன ? என்று யோசிக்கும்போது “பத்ம வியூகம்” ஞாபகம் வந்தது. சரவணன் பத்மவியுகத்தின் உள்ளே இருக்கிறானா? ஆயிரம் பால்வீதிகளை இரவாக கொண்ட பத்மவியூகம்.

தடம் இல்லாத இரவு: ஒரு பெண்ணிடம் உறவு கொண்டும் ஒரு பெண்ணை பூஜிக்கபடுபவளாகவும் கண்ட சரவணன் இப்போது தான் தனது பழைய வாழ்க்கைக்கு ஏங்குகிறான். தனது “புனிதமான அறியாமையை” இழந்து விட்டதாக எண்ணி மீண்டும் இங்கிருந்து ஓடி விடலாமா? என தவிக்கிறான். தான் ஏன் தாந்திரீக பூஜையில் மயங்கி விழுந்தேன் என முகர்ஜியிடம் கேட்க அவர் ”வேறொன்றுமில்லை. நம்முடைய இந்திய மனம் பலவகையான தீவிரமான மனப்பழக்கங்கள் கொண்டது. காமமும் நிர்வாணமும் இன்னமும் நமக்கு எளிதானவையாக இல்லை. நேரடியாக உடலை எதிர்கொள்ள நாம் இன்னமும் பழகவில்லை. ஆகவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நம் அகம் கடுமையான அதிர்ச்சியைச் சந்திக்கிறது… அதுதான்” என பதில் கூறுகிறார். எவ்வளவு உண்மை. இந்த அத்தியாயத்திலே நடுக்கத்துடன் படித்தது இந்த பத்தியைத்தான்..”கிறித்தவர்களை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். இந்த ஆழத்தை அவர்கள் உணர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அதை பாவம் என்ற சொல்லைக்கொண்டு மூட முயல்கிறார்கள். தலையை மூடினால் கால் வெளியே தெரியும். தன்னை ஏமாற்றிக்கொள்ளாத ஒரு கிறித்தவன் வாழ்நாள் முழுக்க பாவத்துடன் போராடித் தோற்றுக்கொண்டே இருப்பான். அதன் குற்றவுணர்ச்சியை சுமந்து அவன் ஆன்மா வளைந்திருக்கும். அதை தன்னிடமிருந்தே மறைக்க வேடங்கள் போடுவான். அந்தரங்கத்தில் அச்சம் நிறைந்தவனாக இருப்பான். அதைவெல்ல எப்போதும் பைளைப்பற்றி பிறரிடம் பேசிக்கொண்டிருப்பான். அந்தச்சொற்களெல்லாமே அவன் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது. ஒருவனை மதம் மாற்ற முடிந்தால் ஒரு கிறித்தவன் தனக்குள் இருக்கும் ஒரு அவிசுவாசியைத்தான் ஜெயிக்கிறான். பிராக்ஸி வார்…ஹஹாஹா!”என கூறி முகர்ஜி சிரிக்கிறார். ஜெயமோகன் சார் ஒரு கிருஸ்துவ ஆஸ்ரமத்தில் கிருஸ்துவ தத்துவ சூழல் தவிர வேறு எதுமே மண்டையில் ஏறாமல் 21வயது வரை வாழ்ந்த ஒரு கிறிஸ்தவனான எனக்கு இதன் முழு வீச்சும் புரிகிறது. உணமையிலே இந்த உலகம் ஆழம் நிறைந்தது, காமத்தின் ஆழம்…ஆனால் அது தொடமுடியாத இடத்தில் இருப்பதினால் எப்போதும் அதுக்குள் நீச்சல் அடித்துக்கொண்டே இருப்பது போலவே இருக்கும். ஆனால் அது தவறு என்று தோன்றி கொண்டே இருப்பதினால் மனம் முழுக்க அதில் தான் எப்போதும் இருக்கும். பத்து பெண்கள் சுற்றி இருந்தால் அதில் ஐந்து பேர் இரண்டாவது நொடியிலே கண்டு கொள்வார்கள். சுற்றி சுற்றி சரவணனுக்கு தெரியும் நீலிமாபோல் சுற்றி சுற்றி பெண்ணின் உடல்கள் தெரியும் எப்போதும். சரவணனுக்கு நீலிமா கடைசியில் நீலியாகத்தான் தெரிகிறாள். அதுபோல் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் கிறிஸ்தவ மதம் நீலிதான். சாக்தத்தின் நவீனம்.சாக்தத்தின் வேர் கொஞ்சம் மனதில் இருந்தாலே நீலியை போல் பிடித்து கொள்வது.பேரழகு கொண்ட பயங்கரம். பத்மவியூகம். தடமே இல்லாமல் மனம் முழுதும் இருப்பது இருட்டைபோல. [ ஆனால் நான் பைபிளை குறித்து உங்களிடம் மட்டும்தான் எழுதுகிறேன். அது உண்மையிலே பாதரும், மதரும் கற்று கொடுத்த பைபிள் இல்லை. நீங்கள் கற்று கொடுத்தது. அதை உங்களிடம் கூறாமல் வேறு யாரிடமாவது கூற முடியுமா? அப்படி புரிந்துகொள்ள வேறு யாரும் இருக்கிறார்களா? அது உண்மையிலே பைபிளை நான் விளங்கி கொள்ளும் தருணங்கள். மதம் மாற்ற எல்லாம் முயற்சி பண்ணுவதை எண்ணி பார்க்கவே முடியவில்லை ] .அத்தியாத்தின் கடைசி வரிகளாக வரும் “செந்நிற ஒளியில் நீலிமாவையும் கமலாவையும் சில கணங்கள் பார்த்தேன். செந்தழலால் எழுதப்பட்ட இரு ஓவியங்கள் போல தெரிந்து மறைந்தார்கள் என்பதில் இப்போது ஏன் கமலாவும் இருக்கிறாள்?

உறையும் குருதிபோல் கறுப்பாகும் இரவு: “மூச்சு போய்டிச்சு அல்லது நின்னிடிச்சு ” “இறந்துட்டான் ” என்பதுதான் சாதரணமாய் நான் கூறுவது ஆனால் இலக்கியம்….”மரணம். எனக்கு தெரிந்த்துதான். ஆனால் ஒவ்வொருமுறையும் அருகே பார்க்கும்போது அதன் பிரம்மாண்டமான மர்மம் மனதை உறையச்செய்துவிடுகிறது. ஒரு மனிதர் , அவரது சிந்தனைகள் உணர்ச்சிகள் நினைவுகள் அறிமுகங்கள் அனைத்துடனும் அப்படியே இல்லாமலாகிவிடுகிறார். அதெப்படி என்று மனம் பிரமித்து அரற்றி மீண்டும் பிரமித்தது” என்று கூறியது மரணத்தின் வேறொரு டைமென்சனாக இருக்கிறது. இங்கு நீலி உயிர்குடித்து மரித்துரிக்கிறாள். நீலிகளுக்கும் மரணம் உண்டுதானே? . இன்ஸ்பெக்டர்,உதயபானு உற்சாகமாய் பெட்டிகொடுத்துகொண்டிருக்க கூறுகிறார்….””இல்லை. மூன்றுமணிநேரம் பழைய காட்சி. லைவ் மாதிரி காட்டுகிறார்கள்….இனி ஒருமாதம் இதை மீடியாவிலே ஓணம் போல கொண்டாடுவார்கள்… பாஸ்டர்ட்ஸ்” என்கிறார். பொள்ளாச்சி சம்பவம் நினைவில் வந்து போனது. ஏன் இன்ஸ்பெக்டர் இப்படி கூறுகிறார் …அவர் எந்த குற்றத்திலும் இன்னொரு பக்கம் இருக்கும் என்று கண்டவர்..ஒரு கொலையில் ஒரு உறவு, ஒரு பிரிவில் ஒரு சந்தோசம், ஒரு குழுவில் ஒரு நட்பு வலை, ஒரு ஏமாற்றத்தில் ஒரு அன்பு இருந்திருக்கும். அவைகள் கரைய கரைய அனைத்தும் சிதறுகிறது. ஆனால் தொடர்பு இல்லாதவைகள் தொடப்படும்போதுதான் போலிஸ் உறுமுகிறது. உலகில் உணர்வு குற்றங்கள் பெரும்பாலும் மறக்கபடுகின்றன. நன்றாக யோசித்தால் உண்மையில் அதுதான் மனித மிருகத்தின் உலகம். நீலியின் உலகம். நவீனம்தான் மிருகத்தை மனிதமாக்குகிறது. டிஎஸ்பி மேனனின் நிலைமையை நினைத்து கூறுகிறார்” ”இந்தமாதிரி வழக்குகளில் அந்தக் கணவனின் நிலைதான் பரிதாபம். அவன் ஒரு பொய்யான உலகில் இருந்திருப்பான். சோரம்போகும் பெண் கணவனிடம் மிகமிக நல்ல உறவை வைத்திருப்பாள். அதற்குக் காரணம் ஏமாற்றுவது மட்டும் அல்ல. அவளுக்குள் ஒரு குற்றவுணர்ச்சி இருக்கிறதே அதுதான். அதனால் கணவன் மனைவி உறவு மிகச்சிறப்பாக இருக்கும். ஏற்கனவே இருந்த சிறிய பூசல்கள்கூட இல்லாமல் ஆகிவிடும். கிட்டத்தட்ட ஒரு லட்சிய உறவு… ” என வாசித்தபோது குருதி உறைந்தது கமலம் இறந்ததுக்கு முன்னா? இல்லை பிறகா? என நெஞ்சம் ஆட தொடங்கியது. மேலும் நீலி உயிர்குடித்தபின் பூசகனின் நிலைமையை “அந்த கணத்திற்கு முன்புவரை அதி புத்திசாலியாக இருந்திருப்பான். உற்சாகமானவனாக இருந்திருப்பான். ஒரு துரோகம் என்பது சாதாரணமான விஷயமா என்ன? ஒருவனுடைய இருப்பை முழுமையாகவே நிராகரிப்பதுதானே…நீ மனிதனே இல்லை, நீ செத்துப்போ என்று சொல்வதுதானே? துரோகத்தைச் சந்தித்த கணவர்களில் மிகமிகச்சிலர்தான் மீண்டு வருவார்கள்…” என்று வாசிக்கும்போது டீ.வியில் பார்த்த சில முகங்கள் வந்து சென்றன. டிஎஸ்பி கூறுகிறார்” அபத்தங்களின் நடுவில் வாழ்வதனால் போலீஸ்காரர்களுக்கு குரூரம் உறைப்பதில்லை என்று. குரூரம் என்பதே ஒருவகை அபத்தம் தானே” …என்று ஏன் என்றால் அவர் ஒரு இலக்கிய வாசகர். அவர் நீலிக்கு பரிசு வாங்க செல்கிறார்.எனக்கு திரில் தேவைப்படும்போதெல்லாம் வாசிப்பதற்கு இந்த அத்தியாத்தை விட்டால் , இந்த உண்மையை விட்டால் வேறு என்ன இருக்கிறது? …அனைத்து இரவுகளும் எங்கோ உறைந்த குருதி கொண்டுதான் நிற்கிறது. பகலில் இருப்பதால் மூளைக்கு தெரிவதில்லை.

விடியமுடியாத இரவு: இந்த அத்தியாயத்தின் கவிதை :

இறந்தவர்கள்

மௌனமாக நடந்து

சென்றுசேரும் இடம்

இருண்டிருக்கும்.

அவர்கள் தங்கள் இறந்தகாலத்தில்

வாழ்வதற்கு அனுமதிக்கும்

தனிமை கொண்டிருக்கும்.

விடிய முடியாததாக இருக்கும்

இந்த ஒரு கவிதை தான் ஜெயமோகன் சார் உண்மையில் என்னை முழுவதும் என்னில் இருந்து மீட்டது. இதை படித்துவிட்டு குமுறி குமுறி மனம் கசந்து துப்பிக்கொண்டே சென்று சேரும் இருண்ட இடத்தில் இருந்து மீண்டு விட வேண்டும் என எவ்வளவு நாள் அலைந்திருக்கிறேன். வெறுமே ஒரு மயானத்துக்கு உடலாய் கொண்டு சேர்க்கபடுவதற்க்கும் நீலியை பார்க்க போவதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள். நீலி நம்மை அங்கே கொண்டு சேர்ப்பதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள். உண்மையில் நீலிகள் தான் நம்மை அங்கு கொண்டு சேர்க்கிறார்களா? நூறு நாற்காலியில் மைய பாத்திரத்தின் அம்மா அவனின் மனைவியை பற்றி கூறுவாள்” அவள் உன் ரத்தத்தை உறிஞ்சிவிடுவாள் என்று.

சரவணன் இப்போது இரவில் இருந்து பகலுக்கு வருகிறான். வம்பர்களின் உலகம் . பாறை போன்ற நிஜம் . கூலிங் கிளாஸ் செல்ல்லுபடியாகாத உலகம். ஒரு நிஜம் கூறுகிறது :இந்த மாதிரி ஒழுக்கமற்ற பெண்கள் எல்லா ஆண்களையும் ஏமாற்றிவிடுவார்கள். யட்சிகள் அல்லவா? ஆணின் ரத்தத்தைக் குடித்தால்தான் அவர்களின் தாகம் அடங்கும்… இது பொய் என்றாலும் அந்த ஆத்மாவுக்கு அது உணமைதானே? அதன் மனது இதிலிருந்து தானே அனைத்தையும் விரிக்கும். என்ன ஒரு மாயை?. அப்படி அனைத்து பொய்களையும் விரித்து எடுத்து வாழ்ந்த மனது எனது. அது ஒரு இரவு நீலியின் வாழ்க்கை. ரத்தம் குடிக்க குடிக்க நமக்குள் பொங்கி பொங்கி பெருகுவது. மேனன் ஒரு கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார். தான் தப்பிவிட்டோம் என்றா? ஒரு குடுவைக்குள் ஒரு உடலின் சாம்பல். பாறை போன்ற நிஜம். சரவணன் கனவில் முதலில் கமலாவும் பிறகு நீலிமாவும் வருகிறார்கள். நீலிமா ஏன் பிரஞ்சை மயங்கும்போது மட்டும் வருகிறாள்.விழித்திருக்கும் போது அவள் நினைவுக்கு வருவதே இல்லை.? என தனக்குள் கேட்பது சரவணன் மட்டும் இல்லை, நானும்தான்? ஏன் ஏன்? ….அப்படிதான் ஒரு காதல் இருக்குமா? அப்படி இருந்தால் அந்த காதல் அந்த பெண்ணால் அங்கிகரிக்கப்படுமா? …நீலிக்குதான் எத்தனை வடிவங்கள்? அவை விடியா இருண்ட மனம் அன்றி வேறு என்ன? அந்த நீலியிடம் இருந்து தப்பிப்பது எப்படி ?

நோய்,கவலை அகலும் இரவு: மேனன் சரவணனிடம் கூறுகிறார்: இரவு வாழ்க்கை என்பது ஒரு சீப் ரொமாண்டிசிசம். மனுஷ மனசை அப்டியெல்லாம் எவரும் அளந்து வச்சிட முடியாது. அது பெரிய கடல். லீவ் தட் கர்ல்…நீலிமா. அவ உனக்கு சரிவர மாட்டா” என்கிறார். ஏன்? பதிலாய் அவரே கூறுகிறார்.”உன்னுடைய சாதாரண வாழ்க்கையில் சாதாரணமான சந்தோஷங்களில் ஈடுபட்டு நிம்மதியாக இரு. இந்த ஆபத்தான இருண்ட பாதை வேண்டாம்… நீலிமாவை மறந்துவிடு. அவளை நீ ஒருபோதும் பகலுக்குக் கொண்டு செல்லமுடியாது. அவள் ஒரு யட்சி. யட்சிகள் பகலில் வாழ முடியாது ” என்று.முந்தைய அத்தியாத்தின் ராணுவ ஜோக்குகள் ஞாபகம் வருகிறது. மேனன் வெறும் மேனன் மட்டும். மயங்கும் பிரங்ஞையில் நீலியை தரிசிக்கமுடியாதவர். பகலில் நினைவாய் இருந்தவர். வொண்டர்புல் லைப். எப்படி பேலன்ஸ் பண்ணுவது?

சரவணின் மனதை பற்றி :”எனக்கு அந்தரங்கமாக ஒரு விஷயம் தெரியும். நீ கமலாவால் தீவிரமாக கவரப்பட்டிருந்தாய். அவள் அப்படித்தான். நெருப்பு போல. அவளை விட்டு யாரும் கண்களை எடுக்க முடியாது. நீலிமா கமலாவின் ஒரு சிறிய மாற்றுவடிவம்தான் உனக்கு”என்றும்,உலகின் அப்பட்டங்க்களை :உண்மையை எவராலும் நேருக்கு நேர் சந்தித்து பழக முடியாது. மெடுஸாவின் முகம் மாதிரி. அதை பல்வேறு பிரதிபலிப்புகளில்தான் பார்க்க முடியும். இல்லாவிட்டால் எதற்கு இத்தனை காவியம் கதைகள் கவிதைகள் இல்லையா? பேசாமல் திரும்பிப்போ. எல்லாரும் வாழக்கூடிய எளிமையான சாதாரணமான உலகத்தில் சாதாரணமாக வாழ முயற்சி செய்” என்றும் கூறுகிறார். பிறகு இலக்கியம் நீலியினால் ஆட்கொள்ளபட்டிருப்பவர்களை குறித்து:நம்முடைய அகங்காரம்தான். நாம் அசாதாரணமானவர்கள், இலக்கியமும் தத்துவமும் படித்தவர்கள் என்று கற்பனைசெய்துகொள்கிறோம். ஆகவே பிற முட்டாள்களைப்போல அல்லாமல் நாம் உண்மைகளில் காலூன்றி வாழ்கிறோம் என்ற எண்ணம் நமக்கு நிறைவை அளிக்கிறது. அப்படி எண்ணிக்கொள்ளும்போது நாம் மேலும் முட்டாள்களாக ஆகிறோம் என்பதை நாம் அறிவதில்லை. இப்படி பிடரியில் ஒரு கோடாலிவெட்டு விழும்போது சட்டென்று எல்லாம் தெரிந்துவிடுகிறது”

மனதை விட்டு நிஜ உலகிற்கு சரவணன் வர அங்கு இயங்கிகொண்டிருக்கும் நீலிகள் குறித்து சரவணனுக்கு புரிகிறது. “எத்தனை வசைகள். கிண்டல்கள் நக்கல்கள், தர்க்கங்கள். எதிலுமே அர்த்தமில்லை. மார்க்ஸியம், தேசியம், இனவாதம், மதவாதம்… கொள்கைகள், நம்பிக்கைகள், தரப்புகள். எல்லாமே பொய். வெறுப்பையும் காழ்ப்பையும் கொட்டுவதற்கான முகாந்திரங்கள் மட்டும்தான் அவை. இவர்கள் அனைவருமே என்னைப்போல அடிபட்டு வலி தெறிக்க எங்காவது பதுங்கிருப்பவர்கள்தானா? இல்லை, பாதிப்பேர் நிஜவாழ்வில் கோழைகள். நிஜவாழ்வில் பெரும் வெற்றிடம் ஒன்று கொண்டவர்கள்” இதில் நான் யார் என்று எனக்கு நன்றாக தெரியும். இந்த நீலிகளிடம் இருந்து மீண்டு எழவேண்டும். பிரங்ஞையில் இருந்தும் நேரிலும். சரவணனாவது தெறித்து ஓடுகிறான். ஆனால் நான் எங்கு ஓட? ஓடினால் சரியாகுமா?

தேடுவோறன்றி துய்க்கமுடியாத இரவு: சரவணன் விமானநிலைய அழகான பெண்ணை சந்தித்துவிட்டு நினைக்கிறான்:பாதர் தாமஸ் என்றால் உடனே அவளிடம் ”தேங் யூ. யூ லூக்ஸ் ப்யூட்டி·புல்” என்று சொல்லியிருப்பார். அடுத்த முறை அவளை சுதந்திரமாக ரசிக்க முடியாமலாகும். தாமஸ் புரிந்தவர் என்றே நினைக்கிறேன்……மீண்டும் அவளை ரசிக்ககூடாது,நீலி எழக்கூடாது என்பதற்காகத்தான் அப்படி கூறுகிறாரா?. தாமஸ் அவருக்குள் இருக்கும் வேறொரு நீலியை சீனாவில் விதைத்துவிட்டு வர அவரை வரவேற்கும் சரவணன் அவரிடம் கேட்கிறான்: சீனா எப்டி இருக்கிறது? இன்னும் பத்து வருடத்தில் கர்த்தரிடம் வந்துவிடுமா?” என்றேன். ”வாய்ப்பே இல்லை. ஆனால் போப்பிடம் வந்துவிட வாய்ப்பிருக்கிறது” என்று சிரிகிறார்.இப்போது கம்யூனிஸ அரசின் சம்மதத்தோடு போப் பத்து கர்டினால்களை அங்கு நியமித்திருக்கிறார் என்பது ஞாபகம் வந்து புன்னகைத்துகொண்டேன். பாதர் கூறுகிறார்”கிறித்தவ மதம் உலகம் முழுக்க எப்படி பரவியது என்றால் லௌகீகமான பொருட்களை கோரி கடவுளிடம் மிக உருக்கமாக, மிக நம்பகமாக பிரார்த்தனை செய்ய கற்பிக்கும் மதம் இதுதான்…” இப்போது சீனர்கள் செல்போன் கேட்கிறார்கள்…..பிறகு ஒவ்வொன்றாய் கேட்டு…..அவர்கள் ஏமாற்றம் அடைய அடையத்தான் கிறித்தவத்துக்கு வாய்ப்பு அதிகம். ஆரம்பத்தில் உழைக்கலாம், சம்பாதிக்கலாம் என்றெல்லாம் தோன்றும். பிறகு இது எதுவும் அவர்கள் கையில் இல்லை என்று தெரியும்போது கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வருவார்கள். தேவாலயங்கள் நிரம்பி வழியும். எங்களுக்கு வேலை தேடித்தாருங்கள் கர்த்தாவே, எங்கள் பிள்ளைகளுக்கு வேலை தேடித்தாருங்கள் கர்த்தாவே, எங்கள் சம்பளங்களை கூட்டித்தாருங்கள் கர்த்தாவே..”எனகூற சிரிப்பு வந்தது. எவ்வளவு உண்மை? ஆனால் இப்போது எல்லா கோயில்களிலும் எல்லாரும் இப்போது அப்படித்தானே பிரார்த்தனை செய்கிறார்கள். ஏன்? . கர்த்தரிடம் திரும்பத்தான் வழியில் எத்தனை நீலிகள் என்று வியந்தேன். மனநிலைகளை ஊகிக்க முடியும் ·பாதர். மனநிலை மாற்றங்களைத்தான் ஊகிக்க முடியாது” என்கிறான் சரவணன் . அதானே? என்று கூறுவதை தவிர வேறு என்ன பண்ண? எப்படியெல்லாம் அது மாறுகிறது.

இதுதான் இந்த நாவலின் முக்கியமான தரிசனம் என நினைக்கிறேன்: சாம்பல் நிறமான ஒளி. காடு அந்த ஒளியில் நிழல் வடிவமாக தெரிந்தது. அந்த கிளையசைவையே பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று அதில் இருந்து ஒரு மலபார் அணில் இன்னொரு கிளைக்குக் குதித்தது. மூடுபனியின் ஒளிவெள்ளத்தில் அது நீந்தி துழாவிச் சென்றது. அதன் உடலில் நிலவொளியே முடிகளாக சிலிர்த்திருந்தது. நிலவொளி அதன் வாலாக சுழன்றது…..” சாம்பல். கருப்பும் இல்லை. வெள்ளையும் இல்லை. அதில் தெரியும் காடு.

இன்னொரு ஆழமான தரிசனம் : சரவணன் கூறுகிறான்:யுலிஸஸ் நரகத்துக்குப் போனதைப்பற்றி என்னிடம் மேனன் சொன்னார். வீரன் மட்டுமே ஆழத்திற்குச் செல்ல முடியும் என்றார். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் மேனன் தாந்தேயின் டிவைன் காமெடியைப் படித்துவிட்டு அதைச்சார்ந்து ஒரு வரைபடம் அமைத்துக்கொண்டு நரகத்துக்குச் செல்ல முயன்றவர் என்று. ஒவ்வொரு கணமும் முற்றிலும் எதிர்பாராத ஒன்று நடக்கும்போது அதை எதிர்கொள்வதுதானே வீரம்?”……இன்னும் பெரிய பெரிய சவால்”இந்த கனவு வெளியின் அடியில் இன்னும் மகத்தான வெளிகள் இருக்கின்றன. என்னுடைய ஆர்வம் அந்த ஆழம் நோக்கித்தானே ஒழிய என் தலைக்குமேல் உள்ள குமிழிகளின் பரப்பை நோக்கி அல்ல” என்கிறான் சரவணன். பிறகு “”இந்த பயணத்தில் என் நரம்புகள் ஒரு கணம் கூட தொய்வடையாது. சாதாரணமான தருணம் என்பதே கிடையாது. ஒவ்வொரு காலடியும் ஒரு சவால். இதுதான் வீரனின் வாழ்க்கை””ஷ¤ரஸ்ய தாரா..” என்கிறார் தாமஸ்.

கடைசியில் இயந்திரமாகிய விமானம்,சீனர்கள் கை இடுக்கில் வைத்திருக்கும் ஊடகமாகிய செல்போன்,பின்பு கிறித்தவம் என்னும் அமைப்பு, கர்த்தரிடம் மன்றாடும் ஜனங்களின்பணகணக்கு,பின்பு நகரத்தின் மீது போர்த்தியிருக்கும் இரவு.நீலிமா என நாவல் முடிகிறது.

நாவலின் கடைசி வரிகளாக “வீட்டு வாசலில் நீலிமா நின்றிருந்தாள். அவள் இளம்சிவப்பு சேலை அணிந்திருந்தாள். செவ்வொளியில் அவள் ஆறடி உயரமான தழல் போலிருந்தாள்…. என்று வாசித்து முடிக்கும்போது இதயம் அடித்து துடித்து முடிந்து அமைதி வந்தது. இப்போது கோழைதான் ஆனால் இனி அப்படி இருக்க போவதில்லை. ஷுருஷ்ய தாராவில் நடக்கபோகிறேன்.

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்.

***

முந்தைய கட்டுரைமூன்றாம்பிறை
அடுத்த கட்டுரைஒரு சிறுகதை விவாதம்