தமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூல் வாங்க
இனிய ஜெயம்
பொதுவாக வாசித்த நூல் குறித்துதான் உங்களுக்கு உவகையுடன் எழுதுவேன். முதன் முறையாக இனிமேல் வாசிக்கப்போகிறேன் எனும் நூல் குறித்து குதூகலத்துடன் எழுதுகிறேன். அண்ணன் அனீஷ் கிருஷ்ணன் அவர்கள் வசம் நீங்கள் மதிப்புரை எழுதச்சொன்ன, பேசுகையில் நீங்கள் என் வசம் குறிப்பிட்ட, தமிழ்நாட்டில் லகுகீச பாசுபதம் நூல் குறித்து இணையத்தில் ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா என அலசினேன். ஆச்சர்யம் ஒரு வாசகர்,முனைவர் அந்த நூலை அறிமுகம் செய்து எழுதி இருக்கும் ஒரே ஒரு பதிவு [கண்ணில் படமால் இன்னும் ஒன்றோ இரண்டோ இருக்கக்கூடும்] கண்ணில் பட்டது.
http://drbjambulingam.blogspot.com/2019/03/blog-post_9.html
கண் முன்னால் இருந்தும்,கருத்தில் விழாத வரலாற்று ஒழுக்கு ஒன்றினை திரை விலக்கிக்காட்டும் சுவாரஸ்யத்தை தன்னுள் கொண்ட, ஆழமான களப்பணி அடங்கிய ஆய்வு நூல் என்று புரிகிறது.
நான் லகுலீசர் சிற்பத்தை முதன் முதலாக பார்த்தது எல்லோராவில். உங்கள் வசம் அது என்ன என்று கேட்டேன், இடது கை நடுவிரல் நகத்தை கடித்தபடி சற்று நேரம் பார்த்திருந்து விட்டு,இவர் லகுலீசர் என்று விட்டு, என் கேள்வியால் தொடர்பு அறுந்திருந்த , அந்த எல்லோரா குடைவரைகளை உருவாக்கிய மன்னர் வம்சம் குறித்து பேசத் திரும்பி விட்டீர்கள்.
பின்பொரு முறை அஜிதனுடன் எல்லோரா செல்லும் போது, அதே சிலை முன் நின்று, சொன்ன பெயர் நினைவில் எழாமல் தலையை சொறிந்துகொண்டிருந்தேன். அதன் பின் நெடு நாள் கழித்து அந்தப் பெயர் குடிமல்லம் பசுபதி நாதர் குறித்து வாசிக்கையில் வந்து இணைந்தது. நான் அதுவரை அறியாத செய்திகளில் ஒன்று சோழர்கள் பாசுபத மார்க்க சைவ நெறியை சேர்ந்தவர்கள் என்பது. பாசுபத நெறியை தேடி வாசிக்கையில் அது குடிமல்லத்துக்கு வழி காட்டியது.
சிந்து வெளிப் பண்பாட்டில் துவங்கும் பசுபதி வழிபாட்டின் முதல் வடிவம் என கி மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த குடிமல்லம் பசுபதி நாதர் லிங்க உருவத்தை குறிப்பிடுகிறார்கள். கிபி இரண்டாம் நூற்றாண்டில் குஜராத்தில் பிறந்து பாசுபத மார்க்கத்தை நெறிப்படுத்தி அதை வளர்த்து எடுத்தவர்,ஈசர் எனும் மரியாதை விகுதி இணைத்து விளிக்கப்படும் லகுலீசர்.
முதன்மையாக லகுலீச பாசுபதம் துவங்கிய காலம் முதல், பிற்கால சோழர்கள் காலம் வரை, அதன் காலம் அது பரவிய இடங்களின் வரைபடம் முதன்மையாக பௌத்தத்தை அடியொற்றியதாக, அதை பின்தொடர்ந்து சென்று நிலையமைத்த ஒன்றாகவே பாசுபத மார்க்கம் இருக்கிறது. குறிப்பாக பௌத்தமும் சமணமும் கொல்லாமை அகிம்சை இவற்றை முன்வைத்து வேகமாக பரவிய இந்த காலத்தில், அவற்றின் டைலடிக்ஸ் எதிர் முனையாக லகுலீச பாசுபதம் இயங்கியது எனலாம்.
கபாலிகம்,காளாமுகம்,பைரவம் போல ஒரு குடைக்குள் நில்லாமல்,இத்தகு வலிமையான பெயரடையாளங்கள் கூட இன்றி இயங்கிக் கொண்டிருந்த,வண்ண மிகு மார்க்க பேதங்களை, அவற்றுடனான உள் முரண்களை களைந்து அவற்றை தன்னுள் இணைக்கும் பொது கண்ணியாக சதாசிவம் [அல்லது வக்க்ஷ இவம்] எனும் சிவ வடிவம் வழியே இவற்றை தொகுத்து இணைத்த படி ஒரு முனையிலும், காரணம், காரியம், ஊழ், யோகம்,துக்க நிவர்த்தி எனும் ஐந்து அலகுகள் வழியே தத்துவார்த்தமாக பௌத்தத்தை எதிர் நின்றும், அகிம்சைக்கு முரண் இயக்கமான செயலாற்றல் ஷாத்ரம் இவற்றை முன்னிறுத்தியும் லகுலீச பாசுபதம் இயங்கியது.
இந்த டைலடிக்ஸ் இன் சாட்சியம் ஒன்றை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு, கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் கிடைத்தது. அம்பிகை அவள். உலக அன்னை. கனிந்தவள். அருள்பவள். அவள் கோவிலில் அவள் சன்னதி முன்பு அமர்ந்திருக்கையில் ஒரு சடங்கு கண்டேன். ஏதோ கோவில் விழா தொடரின் ஒரு பகுதி அது. துடியான ஓசைகளுடன், கொம்பும் ஜன்டையும் முழங்க சன்னதி நோக்கி,போர்க்கோலம் கொண்டு வந்தது ஒரு வன தெய்வம். கத்தியை சுழற்றி போர் கூச்சல் எழுப்பி, அம்பிகையை போருக்கு அழைத்தது அந்த தெய்வம். அதன் பிறகான சடங்குகள் எனக்கு புரியவில்லை. ஆனால் போர் வெறி தணியாமல் திரும்ப சென்றது அந்த தெய்வம். அது மட்டும் புரிந்தது. சாக்த பூமி. அதில் எழுந்து,அன்னை என கனிந்து அமர்ந்து விட்ட சக்தி. அந்த சக்தி அப்படியே உறைந்து நின்று விடாதிருக்க,அதை எதிர்கொண்டு அழைக்கும், ஷாத்ரம் கொண்ட சக்தி.
அன்றெனக்கு அது மிகப்பெரிய பரவசத்தை அளித்தது, ஏதோ இங்கே யாருமே இதுவரை அறிந்திராத ரகசியம் ஒன்றை,நான் மட்டுமே அறிந்து விட்டேன் என்பதை போன்ற பரவசம் அது. இதுவே பௌத்தத்துக்கும் பாசுபதத்துக்கும் இடையே நிகழ்வது. பாசுபதமும் பௌத்தமும் சாக்தம் தாந்த்ரீகம் இவற்றை உள்ளிழுத்த செயல்பாட்டின் கலைத் தடயங்களை ஓடிஸா பயணத்தில் கண்டோம்.
ஓடிசாவின் மன்னர் குலங்களுக்கும், தமிழ் நிலத்தின் சோழர்களுக்கும், உறவுகள் இருந்திருக்கிறது. இந்த உறவின் சரடை புரிந்து கொண்டால், சோழர்கள் ஏன் பாசுபத மார்க்க சைவர்ளாக இருக்கிறார்கள் என்பதும் புரியும். வாசித்த மற்றொரு முக்கியமான ஆய்வுக் குறிப்பு, நமது கோவில்களில் நாம் காணும் சண்டேச நாயனார் , அவரே லகுலீசர் என்கிறது.
இவர் லகுலீசர்தான் என்பதை சொல்லவே தேவை இல்லை. பௌத்தத்தை பின்தொடர்ந்து லகுலீச பாசுபதம் தமிழ் நிலம் வந்திருக்கவே வாய்ப்பு அதிகம். இணையாக சைவத்தின் உதிரி மார்கங்களை இணைக்கும் பணியையும் அது செய்திருக்கும் என்பதை
// சுத்தமான பக்திமார்க்கம் தேவாரம் பாடிய மூவராலும்,மாணிக்கவாசகராலும் போதிக்கப்பட்டு வந்தது ஆனாலும் வேறுபட்டதொரு முறையில் சிவனை வழிபடுவோரும் சிலர் இருந்தனர். அவர்களின் கோட்பாடுகளும், வழிபாட்டு முறைகளும், கடுமையானவைகளாகவும்,இன்றைய மக்களால் வெறுக்கப்படுவனவாகவும் இருந்தன. கபாலிகம்,காளமுகம் போன்ற குழுக்களை பின்பற்றியவர்கள், காஞ்சிபுரம், திருவொற்றியூர், மேல்பாடி, கொடும்பாளூர் போன்ற இடங்களில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்தனர் என கல்வெட்டுக் குறிப்புகள் தெரிவிகின்றன///
என்று தனது தென்னிந்திய வரலாறு நூலில் நீலகண்ட சாஸ்த்ரி அவர்கள் குறிப்பிட்டிருப்பதை கொண்டு யூகிக்கலாம்.
மேலும் நான் வாசிக்க நேர்ந்த தமிழ்த் தேசிய நூல் ஒன்றில்,[இது ஆய்வு நூல் அல்ல] சைவ மதத்தில் இருப்பினும் பக்தி மார்கத்தை முன்னெடுத்தாலும் , இந்த பணியில் இணைந்த திருநாவுக்கரசர் கபாலிக மார்க்கத்தை சேர்ந்தவர், திருஞான சம்பந்தர் காளாமுக மார்க்கத்தை சேர்ந்தவர், மாணிக்கவாசகர் ஜங்கமர் எனும் மரபை சேர்த்தவர் எனக் கண்டிருந்தது.
வரலாற்று ஓட்டத்தின் சைவத்தின் இத்தனை வண்ண பேதங்களையும் முழுமையாக தொகுக்கும் போக்கை, பாசுபத மார்க்கம் ராஜராஜன் காலத்தில், பெருவுடையார் கோவில் விமானம் வழியே அடைந்தது எனலாம். அந்த பிரும்மாண்ட விமானம் அது மட்டுமே தன்னளவில் சதாசிவ லிங்கம் என்று தனது கட்டுரை ஒன்றினில் குறிப்பிடுகிறார் குடவாயில் பாலசுப்ரமண்யம் அவர்கள். கோபுரத்தின் நான்கு புறமும் சிவனின் நான்கு முகங்கள். ஒரு முகம் சத்யோ ஜாதம், ஒரு முகம் தத் புருஷம், ஒரு முகம் வாமதேவம், ஒரு முகம் அகோரம். விமானத்தின் உச்சிக் கலசம் ஈசானம்.
சோமாஸ்கந்தர்,ரிஷபாருடர்,நடராஜர்,சந்திரசேகரர்,கல்யாண சுந்தரர் இந்த ஐவரும் ஈசானம் எனும் முகத்தில் அடக்கம். [இவை ஒவ்வொன்றும் ஒரு நெறிமுறையாக,வழிபாட்டு முறையாக ஸ்கூல் ஆப் தாட் ஆக விளங்கி இருக்கும் ] பிட்சாடனர்,காமசம்ஹாரர்,கலந்தராகரர்,காலசம்ஹாரர்,திரிபுராந்தகர். இந்த ஐவரும் தத் புருஷத்தில் அடக்கம். கஜசம்ஹாரர்,வீரபத்ரர்,தட்சிணா மூர்த்தி,நீலகண்டர்,கிராதர்.இந்த ஐவரும் அகோரத்தில் அடக்கம். கங்காளர்,கஜாரி,ஏகபாதர்,சக்ரதானர்,சண்டேசர்.இந்த ஐவரும் வாமதேவத்தில் அடக்கம். லிங்கோத்பவர்,சுகாசனர், அர்த்தநாரி, ஹரி அர்த்த மூர்த்தி,உமா மகேஸ்வரர்.இந்த ஐவரும் சத்யோஜாதத்தில் அடக்கம். இந்த ஒட்டுமொத்த தொகுப்பின் லிங்க வடிவமே, நாம் காணும் பெருவுடையார் கோவில் விமானம்.
இந்த வரிசையில் வைத்து, கல்மேல் நடந்த காலம் நூலில் தியோடர் பாஸ்கரன் இந்த பெரிய கோவிலில், பௌத்த ஸ்தூபியை வணங்கி வழியனுப்பி வைத்து விட்டு, அந்த இடத்தில் இந்த விமானத்தை இருத்த,அதை வணங்கி வரவேற்கும் பக்தர்கள் அடங்கிய புடைப்பு சிற்பம் மீதான ஆய்வு கட்டுரையை இணைத்து வாசித்தால், பௌத்தத்துடன் லகுலீச பாசுபதத்துடனான உறவும், வளர்ச்சியும்,வெற்றியும் என ஒரு முழுமையான மதங்களின் தொடர்பு இயக்கம் ஒன்றின் சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள இயலும்.
இந்த வரைவியல் மீதான, மேலதிக தெளிவை தமிழ்நாட்டில் லகுலீச பாசுபதம் நூல் அளிக்கும் என நினைக்கிறேன். அந்த நூலை வாசித்து விட்டு இந்தக் கடிதத்தின் எஞ்சிய புள்ளிகளை இணைத்து அடுத்த கடிதம் எழுதுகிறேன் . :)
கடலூர் சீனு
***