ஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி

nithyachaithanyayathi.jpg.image.784.410

ஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் குரு இருந்தபோதே ஆரம்பிக்கப்பட்டது. குரு மறைந்தபின் ஓரிரு ஆண்டுகள் தவிர தொடர்ச்சியாக ஊட்டியில் இதை ஒருங்கிணைத்து வருகிறேன். தொடக்கத்தில் இலக்கிய விவாத அரங்காகவும், பின்னர்  தமிழ்- மலையாளக் கவிதைப் பரிமாற்ற அரங்காகவும் இது நிகழ்ந்தது. சென்ற சில ஆண்டுகளாக இலக்கிய விவாத அரங்காக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. தமிழின் முதன்மையான படைப்பாளிகள் இதில் பங்கெடுக்கிறார்கள்.

வரும் மே மாதம் 3, 4, 5 தேதிகளில் [வெள்ளி, சனி, ஞாயிறு] இதை ஒருங்கிணைக்க இப்போது முடிவெடுத்திருக்கிறோம். இதை ஒருங்கிணைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. ஊட்டி குருகுலம் நிகழ்ச்சிக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அங்கே 60 பேர் வரை தங்கமுடியும். அதற்குமேல் பங்கேற்பாளர்கள் வந்தால் வெளியே பங்களாக்கள் வாடகைக்கு எடுக்கவேண்டியிருக்கிறது. ஆகவே 60 பேருக்குமேல் பங்கெடுத்தால் செலவுகள் கூடுதலாகின்றன. அவற்றை மொத்தச் செலவில் பகிர்ந்துகொள்ளவேண்டியிருக்கும்.

ஆகவே நண்பர்களில் ஒருசாரார் 60 பேருக்குமேல் தேவையில்லை என்கிறார்கள்.  நிகழ்ச்சியை மட்டுப்படுத்திக்கொள்ளலாம் என்னும் கருத்து ஓங்கியிருக்கிறது. ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை. ஊட்டி குரு நித்யா நினைவுச் சந்திப்பு இது. அவர் நினைவாக நிகழும் ஒரே இலக்கிய நிகழ்ச்சி. இதை பெயரளவுக்குக் குறுக்குவது எனக்கு வருத்தமானது. வழக்கமான நண்பர்கள் இதில் கலந்துகொள்வார்கள். கூடவே பாதிப்பங்கு புதியவாசகர்களும் கலந்துகொள்ளவேண்டும். இல்லையேல் நிகழ்ச்சி உயிர்த்துடிப்புடன் நிகழாது. சென்ற மூன்றாண்டுகளில் ஏராளமான புதிய வாசகர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள்.

பங்கேற்பாளர்களிலும் ஒருசாரார் செலவு குறித்து கவலைப்படுகிறார்கள் எனத் தெரிகிறது. சென்றமுறை ஒருவருக்கு ரூ 2500 வரை ஆகியது. [நூறுபேர் தங்கினர், 80 பேர் மட்டுமே பணம் அளித்தனர்]. ஊட்டியில் மூன்றுநாள் தங்கி, உணவுண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இது கூடுதல் அல்ல. ஆயினும் பலர் இதை சுமையாக உணர்ந்தனர். குறைவாக அளித்தனர். ரூ 20000 வரை கைப்பணம் செலவாகியது.

பங்கேற்பாளர்களில் செலவை ஏற்கமுடியாத நிலையில் இருப்பவர்களின் செலவுகளை நாமே ஏற்பதே வழக்கம். இம்முறை சில நண்பர்களேனும் சற்று கூடுதலாக நிதியுதவி செய்தால் நல்லது என நினைக்கிறேன். இம்முறை மொத்தச் செலவு ரூ 3 லட்சம் வரை ஆகக்கூடும்.

முந்தைய கட்டுரைஉச்சவழுவும் பிழையும்
அடுத்த கட்டுரைபடைப்பு முகமும் பாலியல் முகமும்