நம் நாயகர்களின் கதைகள்
சென்ற காலத்தின் அடையாளமாகத் திகழும் பெரியவர்களைப் பார்க்கச் சென்றால் எப்போதும் ஒன்று நிகழும், நாம் வரலாறென ஒன்றை நினைத்திருப்போம். அது அரசியல்கட்சிகளால், அவர்களின் சொல்பரப்புநர்களான அரசியலெழுத்தாளர்களால் கட்டமைக்கப்பட்டதாக இருக்கும். அதை மீறி பெரியவர்களின் வாயிலிருந்து நமக்குத்தெரியாத மெய்யான வரலாறு வெளிவந்து நம்மை திகைக்கவைத்தபடி முன்னால் கிடக்கும்.
தமிழகத் தலித் மறுமலர்ச்சியைப் பற்றிப் பேசுபவர்கள், இடதுசாரிகளாயினும் திராவிட இயக்கத்தவராயினும், தலித் இயக்கத்தவராயினும் , அதில் காந்தியப் பேரியக்கம் ஆற்றிய பங்கைப்பற்றிச் சொல்வதே இல்லை. ஆனால் எவர் பேசினாலும் பேசாவிட்டாலும் அது உண்மை. கரைக்கமுடியாத கல் என அது எப்போதும் நம் முன் இருக்கும்.
இங்கே காந்திய இயக்கம்தான் முதல்முறையாக தலித் மக்களின் சேரிகளைச் சென்றடைந்த முதல் அரசியல் இயக்கம்.அன்று தலித் விழிப்புணர்வு நகரங்களில், ஆங்கிலேயரை அணுகிவாழ்ந்த தலித்துக்கள் நடுவே முளைவிட்டிருந்தது. கம்யூனிஸ்டு கட்சி குழந்தைப்பருவத்தில் இருந்தது. அம்பேத்கர் பெரும்பாலும் மும்பையை மட்டுமே சார்ந்த அறிவியக்க அரசியல்வாதியாகவே திகழ்ந்தார்
காந்தியின் பேரியக்கம்தான் ஒரு பெரும் அலை என இந்தியா முழுக்க எழுந்து தலித் மக்களை நோக்கிச் சென்றது. அவர்களின் கல்வி, பொருளியல் மீட்பு, அரசியல் உரிமை ஆகியவற்றைப் பற்றிய அடிப்படைச் செய்தியை முதல்முறையாக அம்மக்களிடம் சொன்னது. பாபு ராமானுஜதாஸ் போன்ற பல்லாயிரம் தன்னலமில்லா தொண்டர்களை அது உருவாக்கியது. கிராமம் கிராமமாக அனுப்பியது.
ஆர்வமிருக்கும் ஒருவர் தான் வாழும் பகுதியின் பத்து கிலோமீட்டர் வட்டத்தை மட்டும் நோக்கினால்போதும், தன் முழுவாழ்க்கையையே தலித்துக்களுக்காகச் செலவிட்ட ஒரு மாமனிதரை, காந்தியில் இருந்து உருவான பல்லாயிரம் காந்திகளில் ஒருவரைக் கண்டடைய முடியும். அவர்களை இன்னமும்கூட தலித் மக்கள் மறக்கவில்லை என்பதை ஸ்டாலின் ராஜாங்கம் போன்ற தலித் ஆய்வாளர்கள் கண்டடைந்து அவர்களிடமிருந்தே அந்த முன்னோடிகளைப் பற்றி அறிந்து பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள்.
தமிழ் இந்து நாளிதழ் கொடிக்கால் அப்துல்லா அவர்களிடமிருந்து சி.என்.அண்ணாத்துரை பற்றிய நல்ல சொற்களை பெற முயல்கிறது. ஆனால் அவர் கூடவே தன் அரசியல்வாழ்வுக்கும், தனிவாழ்வுக்கும் முதல் ஒளியாக வந்த பாபு ராமானுஜதாஸ் பற்றிச் சொல்கிறார். தன் மகனுக்கே பாபு என அவர் பெயரிட்டது அந்த மகானின் நினைவாகத்தான்.
இன்று இந்த ஒரு மனிதரின் நினைவில்தான் பாபு ராமானுஜதாஸ் வாழ்கிறார். ஆனால் அந்த ஊருக்குச் சென்று அம்மக்களிடம் ஒருவர் பேசினால் எங்கிருந்தோ ஊறி எழுந்து வருவார்.இன்னொருவர் எம்பெருமாள் நாயிடு. அவரைப்பற்றி வேறெங்காவது ஒரு வரியாவது எழுதப்பட்டுள்ளதா? அவர்களின் மகத்தான தியாகம் வரலாற்றின் எவ்வாறு மறைந்தது?
என்றாவது ஒருநாள் தமிழக தலித் வரலாறு முழுமையாக நேர்மையாக எழுதப்படுமென்றால் நூறு ராமானுஜதாஸ்களையாவது அது பதிவுசெய்யும்.
என்னுடைய அரசியல் கல்வி பாபு ராமானுஜ தாஸிடமிருந்து தொடங்குகிறது. யார் இந்த பாபு ராமானுஜ தாஸ்? மங்களூரைப் பூர்வீகமாகக் கொண்ட, காசியில் பிறந்து வளர்ந்த ஒரு பிராமணர். காந்தி மீது அவருக்கு ஏற்பட்ட பிடிப்பு சாதிக்கு எதிரான போராட்டத்தில் அவரை உந்தித்தள்ளுகிறது.
ஹரிஜன சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். எங்கிருந்தோ எங்கள் ஊர் தேடி வருகிறார். என்னுடைய தந்தைவழிப் பாட்டனார் பிச்சாண்டியின் வீட்டில் தங்குகிறார். வீட்டிலுள்ள ஒரு பத்தாயம், அதுதான் பாபு ராமானுஜ தாஸ் மேசை, படுக்கை, இருப்பு எல்லாம். அவருடைய கைப்பையே தலையணை ஆகிவிடும். காலை நான்கு மணிக்கு எழுந்து விடுவார் – அதிகாலை கண் விழிக்கும் பழக்கம் எனக்கு அவரிடமிருந்து தான் வந்தது – அடித்தட்டு மக்களைத் தேடிச்சென்று வேலை செய்வார். ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட அந்நாட்களிலே எங்கள் ஊரில் முதன்முதலில் ஒரு பள்ளிக்கூடம் வந்தது – இரவுப் பாடசாலை; அதை உருவாக்கியவர் பாபு ராமானுஜ தாஸ். என்னுடைய பதினைந்து பதினாறு வயது வரை எனக்கு ஒரு ஆசான்போல அவர் இருந்திருக்கிறார்; அப்புறம் வேறு எங்கோ சென்றுவிட்டார். அடுத்து, பெரிய தாக்கம் உண்டாக்கியவர் டாக்டர் எம்பெருமாள் நாயுடு. அவர் லண்டனில் படித்தவர். காந்திய இயக்கத்தில் சேர்ந்ததால் கதர் மூட்டையைத் தூக்கிக் கொண்டு கிராமம் கிராமமாக மனைவியுடன் நடந்தவர். அவர்தான் ஹரிஜன சேவா சங்கத்தை இந்தப் பிராந்தியத்தில் வலுப்படுத்தினார்.