(2011 ல் எழுதப்பட்டது,மறுபிரசுரம்)
ஜெ.எம்,
இந்து மதம் சார்ந்த குறிப்பிட்ட ஏதோ ஒரு சாதியில் பிறந்து விட்டாலும் – மதம்,சாதி ஆகிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டதாகவே என் பெற்றோர் காலத்திலிருந்து எங்கள் குடும்பச் சூழல் இருந்து வந்திருக்கிறது.கோயில்களுக்குச் சென்றாலும்,விழாக்கள் பண்டிகைகள் கொண்டாடினாலும் -மத , சாதி முத்திரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் வெளியில் இருந்து அவற்றைப் பார்க்கும் நோக்கும் , சடங்குகளுக்கு முதலிடம் தராத மனப்போக்கும் இயல்பானதொரு நடப்பாகவே எங்கள் வீட்டில் இருந்து வந்தது.
பள்ளித் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிய என் அம்மாவுக்கு நெருக்கமான ஒரு கிறித்தவத் தோழி இருந்தார்.இன்றும் கூட ‘சித்தி’ என்ற உறவில் என்உணர்வுகளுக்குள் உறைந்து நிற்பவர் அவரே.
அம்மாவும் சித்தியும் எத்தனை நெருக்கம் கொண்டாடினாலும் , சித்தி வீட்டுக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நாங்கள் பங்கேற்றாலும் அந்தச் சித்தி எதையும் வலுவில் என்னுள் திணித்ததில்லை;பிரச்சினையோ நோய்களோ வந்தபோது’ஜெபம்’செய்கிறேன் என்று தொடங்கியதுமில்லை.இத்தனைக்கும் அம்மாவும் அவர்களும் ஒன்றாகச் சில ஆண்டுகள் ஒரு கிறித்தவப் பள்ளியில் பணி புரிந்தவர்கள்.
என் அம்மாவும் பைபிளை நன்கு கற்றுத் தேர்ந்தவர்;வீட்டிலேயே ஒரு வடமொழி ஆசானை ஏற்பாடு செய்து கொண்டு சுலோகங்களையும் பொருளோடு கற்றுத் தேர்ந்தவர்.அவரும் என்னை என் போக்கில் விட்டாரேயன்றி எதையும் என் மீது வலிந்து புகட்டியிருக்கவில்லை.
ஆனாலும் ஒரு சிற்றூரில் – நான் படித்த தமிழ்வழிப்பள்ளி மற்றும் கல்லூரிகளின் சூழலும், எங்கள் சுற்றுப்புறம் மற்றும் ஊர்க் கோயில்களின் சூழலும்,நான் பெற்ற தமிழ் இலக்கியக் கல்வியும் என்னைக் கிறித்தவத்தின் பால் பெரிதும் வசீகரிக்கவில்லை.
பிறகு என் வாழ்நாளின் செம்பாதி ஒருகிறித்தவ நிறுவனத்திலேயே – பணி நிமித்தம் கழிந்திருந்தாலும், அங்கும் ’தோழிகள்’ வழி சில மாயத் தூண்டில்கள் சாஸ்வதமாக வந்து கொண்டே இருந்தாலும் (அது என் தாயின் தலைமுறையில் இல்லை) என் இலக்கிய வாசிப்புக்களும், அதனால் நானடைந்திருந்த விசாலமான கண்ணோட்டங்களும் எதற்குள்ளும் எல்லை குறுக்கிக் கொள்ளாதவளாகவும்,உறுதியான நிலைப்பாட்டுடனும் என்னைக் கட்டமைத்தன.வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் என்னை வழி நடத்தி வருவது இலக்கியம் மட்டுமே என நம்பி அதற்குமட்டுமே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் நான். .
வீட்டுச் சூழலில் எதைப் பற்றியும் எப்படியும் பேசலாம்,விவாதிக்கலாம் என , நானும் என் தாயும் வகுத்திருந்த தாராள மனப்போக்குக்கு என் மகள் வடிவில் சோதனை வரும் வரை – இப்படியொரு விஷயம் பிரச்சினையாகும் என நான் எண்ணிப் பார்த்ததே இல்லை.
நான் பணி புரிந்த ஏழாம் நாள் அட்வெண்டிஸ்ட் பள்ளியில் பள்ளிக் கல்வியும் , ஒரு சி.எஸ்.ஐ கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பும் (நான் வேலை புரிந்தது,ஒரு கத்தோலிக்கக் கல்விநிறுவனத்தில்) பயின்றாள் என் மகள்.
பள்ளி நாட்களில் தரப்படும் பைபிள் வாசகங்களைக்கூட என் அம்மா கல்மிஷமின்றி – மிகுந்த ஈடுபாட்டோடு கற்பித்த நாட்களின்நினைவுகள் இன்னும் பசுமையாக என்னுள்.
எந்தக் கணம் அந்த மாற்றம் நிகழ்ந்ததோ…..அல்லது படிப்படியான மூளைச் சலவைக்கு அவள் சூழலும் நட்பும் அவளை ஆளாக்கியதோ தெரியாது…
கிறிஸ்து ஒருவரே உண்மையான கடவுள் என்றும் – பிற எதையும் அறிந்து கொள்ள விருப்பமில்லை – வேறு எதிலும் எந்தச் சாரமும் இல்லை -எதைப் பற்றி அறியும் நாட்டமும் இல்லை என்று கூறும் எல்லைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் சென்று விட்டாள்.
(பிறவற்றைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் தீர்ப்புச் சொல்வது எப்படிச் சாத்தியம்?எனப் பல முறை விவாதித்தபோதெல்லாம் எனக்கு எஞ்சியது கசப்பே)
நானும் பலவகைத் தத்துவங்கள்பற்றிப் பேசிப் பார்த்தேன்;நூல்கள் தந்தேன்.எதற்கும் செவி கொடுக்கக் கூட அவள் ஆயத்தமாக இல்லை.
நான் ஏசுவையோ அவரது கோட்பாடுகளையோ அவரது அன்பு வழியையோ என்றும் மறுதலித்தவளில்லை.‘எந்தரு மகானுபாவோ..’
ஆனால் எல்லாவற்றைப் பற்றியும்- நாங்கள் நிகழ்த்திக்கொண்டிருந்த அறிவு பூர்வமான விவாதங்களுக்கான திறந்தவழி ,ஒரு காலத்தில் என் நெருக்கமான தோழியுமாக இருந்த அவளிடம் – என் ஒரே மகளிடம்- முழுக்க முழுக்க – முற்றிலுமாய் அடைத்துப் போய்விட்டது.இனி அது அடையா நெடுங்கதவு மட்டுமே. ஒரு முட்டுச் சந்து!
20 வயது வரை படங்களை உற்சாகமாக விரும்பிப் பார்ப்பவள்..பாடல்களை ஆசையாய்க் கேட்பவள், கதைகளை விருப்பமாய் வாசிப்பவள்- பைபிள் வாசிப்பைத் தவிர – , பார்க்கும் வேலை சார்ந்த வாசிப்புக்களைத் தவிர- வேறு எந்த ஆர்வமும் அற்ற நிலைக்கு – மற்ற எல்லாம் ’பாவம்’ என எண்ணும் நிலைக்கு ஆட்பட்டு விட்டாள்.
கல்லூரிச் சூழலிலிருந்து விலகிப் பணிச் சூழலுக்கு மாறி அங்கே காதல் வயப்பட்டு விரும்பியவரையே மணந்த பின்னும் கூட (அவர் என்னைப் போலப் பிறப்பால் மட்டும் இந்து ,மற்றபடி குறுகிய கண்ணோட்டங்களிலிருந்து விடுபட்டவர்) நாளுக்கு நாள் அவளது only God பிடிப்பு இறுகிக் கொண்டுதான் போகிறதே தவிரப் பொதுவான அறிவு சால் நிலைப்பாட்டுக்கு அவள் வருவதாக இல்லை.
நல்ல காலமாக அவள் கொண்ட காதல் என்னைக் கொஞ்சம் காத்தது;மருமகன் இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனங்களுக்கு அப்பாற்பட்டவர்;ஏதோ தன் காதலால் , நல் உள்ளத்தால் அவளது கிறுக்குத்தனங்களைச் சற்றே பொறுத்தாலும் குழந்தைகள் வளரும் சூழல் -மருமகன்,நான் என எங்கள் இருவருக்குமே சற்றுக் கவலை அளிப்பதாகத்தான் இருக்கிறது.
குழந்தைகள் மீது எதுவும் திணிக்கப்படக் கூடாது என்ற எங்கள் ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் ஏதோ அரைமனதோடு அவள் ஏற்றுக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது.
அதுவும் எனக்கு சற்று பயம்தான்.
அறிவுக்கான வழிகள் அந்தப்பிஞ்சுகளுக்கு அடைபட்டுப் போனால் அது எத்தனை பெரிய கொடுமை..அது நிகழாமல் பாதுகாப்பதே எனக்குப் பெரும் பதட்டமளிப்பதாய் இருக்கிறது.
அன்பு ஜெ.எம்,மீண்டும் சொல்கிறேன்.நான் இளமையிலிருந்து அறிந்த ஏசு…,உங்கள் எழுத்துக்கள் வழி உறுதிப்பட்ட ஏசு..only God போன்ற இப்படிப்பட்ட மூடத்தனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு பெருமகனல்லவா.. அவள் ஏசு மீதும்,பைபிள் மீதும் வைத்திருக்கும் பற்றுக்கும் பிடிப்புக்கும் நான் எதிரியில்லை…அது மட்டும் புத்தியின் பாற்பட்டதாக இருந்திருந்தால்..!.
அவற்றைக் காரணம் சொல்லிக் கொண்டு ஞானம் வருவதற்கான எல்லா வாயில்களையும் இறுக அடைத்தபடி -வேறு எதையுமே படிக்காமல்…எதுகுறித்தும் தர்க்க பூர்வமாகச் சிந்திக்காமல் இப்படி அவள் இருப்பது உண்மையில் எனக்குத் திகிலூட்டவே செய்கிறது ஜெ.எம்.
தற்செயலாக ஒரு சிறிய நல்லது நடந்தாலும் – அது அவர் நிகழ்த்தும் அற்புதம் எனச் சொல்லிச் சொல்லி அவள் மாய்ந்து போகும்போது , அவள் படித்த விஞ்ஞானமெல்லாம் எங்கே போய் ஒளிந்து கொண்டது என்று எனக்குள் கூச்சமெடுக்கிறது.
இயல்பில் அவள் உல்லாசமானவள்,வேடிக்கையும் விளையாட்டுமாக இருக்க ஆசைப்படுபவள்;இப்போதும் அப்படிப்பட்ட இயல்புகள் அவளிடம் தலை தூக்காமல் இல்லை;ஆனால் வலிந்து அவற்றை அடக்கப் பார்க்கும் அவள் முயற்சி எனக்கு வேதனை தருகிறது. .
ஒரு கதையில் selling soaps and selling prayers என்று சுஜாதா சொல்வார்
கூவிக் கூவி யாரோ எதையோ விற்று விட்டுப் போனதால் என் மகள் அறிவின் மீது இப்போது அடர்த்தியான புழுதி படிந்து கிடக்கிறதே..இதைக் கழுவ எந்த அற்புதத்துக்காக நான் காத்திருக்க வேண்டும்?
நெடுநாளாக இதைத் தங்களிடம் பேச எண்ணியிருந்தேன்.
தங்கள் அண்மைப்பதிவான மெய்ஞ்ஞானம் சில்லறை விற்பனை..
இதைப் பகிரும் எழுச்சியைக் கிளர்த்தியதால் உடன் எழுதியிருக்கிறேன்.
இது என் தனி நபர் சோகமல்ல. இன்று பல சமயங்களும் சார்ந்ததாய் அறிவுத் துறை மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அராஜகத் தாக்குதல் இது என எண்ணியபடி என் சொந்த வருத்தத்தைச் சமூகம் சார்ந்த அறிவின் இழப்பாய் மடை மாற்றிக் கொள்கிறேன்.
இச்சூழலில் இதனை எதிர்கொள்வதற்கான என் நிலைப்பாடு பற்றியும்,பொதுவான நிலைப்பாடுகள் பற்றியும் நீங்கள் சில கருத்துப்பகிர்வுகள் அளித்தால் மனம் சற்று இதம் பெறும்.
எஸ்
****
அன்புள்ள எஸ்,
முதலில் நான் உங்களிடம் ஏற்கனவே சொன்னதையே திரும்பச் சொல்ல விழைகிறேன். ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் அடுத்த தலைமுறைகளின் – மக்கள், பேரர்கள்- விஷயங்களில் அதீதமாக ஈடுபடுவது என்பது ஆழமான வருத்தத்தையே கொடுக்கும். உங்களுக்கு புரிந்த உலகம் போய்விட்டது. புதிய உலகின் கட்டாயங்களும் சிக்கல்களும் உங்களுக்கு தெரியாது. அதன் மதிப்பீடுகள் புரியாது. அந்நிலையில் அதில் ஈடுபடுவதும் சரிசெய்ய முனைவதும் தோல்விகளையும் கசப்புகளையும் மட்டுமே அளிக்கும். அதனால் ஆவது ஒன்றும் இல்லை.
ஆகவே ஒரு கட்டத்தில் முடிந்தவரை விலகிக்கொள்வதும், ஒட்டாமலிருப்பதும், ஆன்மீகமான நிறைவு அளிக்கும் விஷயங்களில் மட்டுமே ஈடுபடுவதும் மட்டுமே வழியாகும். உங்கள் லௌகீகக் கடமைகளைச் செய்துவிட்டீர்கள். அங்கே இனி உங்களுக்கு வரவுசெலவுகள் இல்லை. அங்கே நிகழக்கூடிய எதற்கும் நீங்கள் பொறுப்பு இல்லை. அடுத்த ஐம்பது, நூறு வருடங்களில் நடக்கப்போகும் அனைத்தையும் நீங்கள் சரிசெய்துவைத்துவிட்டுச் செல்ல முடியாது. உங்கள் மகளின் வாழ்க்கையை நீங்கள் முழுக்க வரையறைசெய்து கொள்ள முடியாது.
கடுமையாகவே சொல்கிறேன், சிலவருடங்களுக்கு பின் நீங்கள் இறந்துவிட்ட பின்னர் இதெல்லாம் நிகழ்ந்தால் என்ன செய்ய முடியும்? எதிர்காலத்தையும் நீங்கள் சுமக்க முடியுமா என்ன? அந்தவகையான ஒரு மனவிலக்கம் உங்களுக்கு இருந்தாலொழிய நிறைவான ஓய்வுவாழ்க்கை அமையாது.
*
அந்த மனவிலக்கத்துடன் பிற ஒருவரின் பிரச்சினையாக, ஒரு சமூகப்பிரச்சினையாக மட்டுமே இதைப்பார்ப்பீர்கள் என்றால் என் எண்ணங்கள் சிலவற்றைச் சொல்கிறேன்.
ஒருமனிதர் அவருக்கு விருப்பமான மதத்தை தேர்வுசெய்ய, அதில் நிறைவைத் தேட முழு உரிமை உள்ளவர். அதில் பிறிதொருவர் தலையிட்டு அவர்மேல் அழுத்தம் கொடுப்பது தார்மீகமானதல்ல. ஆன்மீகமான முழுமை நோக்கிச்செல்ல ஒவ்வொருவருக்கும் முழு உரிமை உண்டு.
ஆனால் இது பொதுவாக மதங்களுக்கு பொருந்தும் அளவுக்கு மதக்குழுமங்களுக்கு [கல்ட்டுகள்] பொருந்தாது என்றே நினைக்கிறேன். கிறிஸ்தவம் இஸ்லாம் போன்றவை மதங்கள். கத்தோலிக்கசபை, தென்னிந்திய திருச்சபை, இரட்சணியசேனை, லுத்தரன் சபை போன்றவை அதன் கிளைகள்.
பெந்தேகொஸ்தே சபைகள், யொகோவா சாட்சி , செவெந்த் டே அட்வெண்டிஸ்டுகள் போன்றவை மதங்கள் அல்ல, வழிபாட்டுக்குறுங்குழுக்கள். இவை ஒருவகை மனநோய் வட்டங்கள் என்றே நான் நினைக்கிறேன்.
நான் வாழும் சூழலில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் நிறைய உண்டு. என் அண்டைவீட்டார்கூட அவர்கள்தான். இந்த அமைப்புகள் இவற்றின் உறுப்பினர்களை மூளைச்சலவை செய்கின்றன. அவர்களை மீளமுடியாத ஒரு சுழலில் சிக்க வைத்துவிடுகின்றன. அவற்றின் வழிமுறைகள் தீவிரமானவை, ஆபத்தானவையும்கூட.
முதலில், அவை அவர்களை பிறரிடமிருந்து விலக்குகின்றன. சமூக வாழ்க்கையை முற்றாக தடைசெய்கின்றன. பிறரைச் சாத்தானின் படைகளாகச் சித்தரிக்கின்றன. என் அண்டைவீட்டில் பத்து வருடங்களாகக் குடியிருக்கும் பெண்மணியின் குழந்தைகள் இன்று வரை என் குழந்தைகளுடன் ஒரு சொல் கூடப் பேசியதில்லை. விளையாடியதில்லை. பேசுவது பாவம். பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் மாலை பாவமன்னிப்பு கோரவேண்டும். பத்துவருடம் முன் என் மகன் ஒரு சொல் பேசியதற்கு அந்த அம்மையார் வந்து மனறாடினார் ‘என் மகனை பாவத்தில் ஆழ்த்தவேண்டாம் என்று உங்கள் மகனிடம் சொல்லுங்கள்’ என்று.
அந்த மதக்குழுமத்தின் நூல்கள் தவிர பிற எதையும் வாசிப்பது தடை செய்யப்படுகிறது. பிற கருத்துக்களில் இருந்து முற்றாக அவர்கள் விலக்கப்படுகிறார்கள். ஆகவே அவர்கள் மூடிய கருத்துச்சூழல் ஒன்றில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் ஒற்றை நோக்கை உடைக்கும் எதையுமே அவர்கள் அறிவதில்லை.
மேலும், சாத்தான் என்ற கருதுகோள் அவர்களை அனைத்தில் இருந்தும் விலக்குகிறது. அவர்களின் தரப்பு அல்லாத எதுவும் சாத்தானே. சாத்தான் தர்க்கத்தின் அதிபன். அழகிய வாதங்கள் கொண்டவன். ஆகவே அவர்களிடம் பிறர் விவாதிக்கமுடியாது. ஏனென்றால் நமது தரப்பு எந்த அளவுக்கு நியாயமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்கள் அதை சந்தேகப்படுவார்கள். சாத்தானுக்கு ஆயிரம் முகங்கள்!
சாத்தான் உணர்ச்சிகளை பயன்படுத்துபவன். மனதைக் கரைப்பவன். ஆகவே அவர்களிடம் நாம் கெஞ்ச முடியாது, மன்றாடமுடியாது. உணர்ச்சிகளை காட்டமுடியாது. தாயோ தகப்பனோ கணவனோ மகளோ பேச முடியாது. அவற்றையும் அவர்கள் சந்தேகப்படுவார்கள். ஆம், அவர்கள் சாத்தானின் குரலில் பேசுகிறார்கள்!
அவர்களிடம் அவர்களின் மதத்தைப்பற்றிக்கூட விவாதிக்கமுடியாது. ஏனென்றால் சாத்தானுக்குத்தான் பைபிள் மிக நன்றாக தெரியும். அவன் பைபிளைத் திரிப்பதில் நிபுணன். பைபிளைப்பற்றி வேறுஎவர் பேசினாலும் அவர்கள் சாத்தானே.
இவ்வாறு எல்லா வாசல்களையும் அடைத்துவிடுகிறார்கள். உள்ளே சென்றவர்கள் மீள்வதற்கான வழிகள் மிகமிகக் குறைவு.
*
இதன்பின்னர் இவர்கள் மனித மனங்களை மெல்ல மெல்ல மழுங்கடித்து அடிமைப்படுத்த ஆரம்பிக்கிறார்கள். இந்த வழிமுறைகள் உலகமெங்கும் நெடுநாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு, நுணுக்கமாகப் பயிலப்பட்டு, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டவை. மேலைநாடுகளில் இவர்களை கண்காணிக்கவும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் வழிகள் உள்ளன. இங்கே இந்தியாவில் சிறுபான்மைச் சட்டங்களால் இவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
உள்ளே செல்பவர்களுக்கு இவர்கள் சொல்லும் கருத்துக்களில் முதன்மையானது இன்ப மறுப்பு. எல்லாவகையான கேளிக்கைகளும், கலைகளும், பிற இன்பங்களும் பாவத்தால் ஆனவை என்கிறார்கள். எந்த அளவுக்கு இன்பத்தை மறுக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் தூய்மையாகிறார்கள். எந்த அளவுக்கு துயரத்தை அனுபவிக்கிறார்களோ அந்த அளவுக்கு மேம்படுத்தப்படுகிறார்கள்
ஆகவே இன்பங்கள் சார்ந்த குற்ற உணர்ச்சியை ஆழமாக உருவாக்குகிறார்கள். உடைகள் அணிவது, நகைகள் அணிவது , உண்பது , காதலிப்பது, புணர்வது எல்லாமே பாவமாக ஆக்கப்படுகின்றன. சொல்லப்போனால் பிரார்த்தனை செய்வதும் மதத்தை பரப்புவதும் மட்டுமே பாவமல்லாத செயல்கள். பிற அனைத்துமே பாவங்கள், தூயமைப்படுத்திக்கொள்ள வேண்டியவை.
இந்த பாவ உணர்வில் இருந்து ஒருபோதும் நீங்காத குற்ற உணர்ச்சி உருவாக்கப்படுகிறது. ஏனென்றால் எந்த மானுட மனத்துக்கும் இன்பம் தேவையாகிறது. அது ரகசியமாகவாவது இன்பத்தை அனுபவிக்கிறது. இல்லையேல் ஏங்குகிறது. ஆகவே இவர்களுக்கு குற்ற உணர்ச்சி நீங்குவதே இல்லை.
அந்தக்குற்றவுணர்ச்சியையே இவர்கள் பெரும் சங்கிலியாக மாற்றுகிறார்கள். பாவத்தைக் களைவதற்காகப் பிரர்த்தனையும் பிராயச்சித்தமும் செய்யச் சொல்கிறார்கள். அவர்களின் அமைப்புகளுக்கு கப்பம் கட்டச் சொல்கிறார்கள். பிரார்த்தனை செய்யும்தோறும் குற்றவுணர்ச்சியின் வேகம் அதிகரிக்கிறது. இந்த விஷ வட்டத்தைவிட்டு அவர்களின் உறுப்பினர்கள் வெளிவருவது அனேகமாக சாத்தியமல்ல.
வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு சிறிய இழப்பும், சரிவும், துக்கமும் கடவுள் கொடுத்த தண்டனை என்கிறார்கள். இவர்களின் கடவுள் கருணையே உருவான ஏசுவோ மாதாவோ அல்ல. யெகோவா போன்ற பழிவாங்கும் கோபம் மிக்க பாலைவனத்தெய்வம்தான்.
ஆரம்பத்தில் கடவுளின் கருணையைப்பற்றி, அருள் பற்றி, அந்த பரவசம் பற்றித்தான் இவர்கள் பேசுவார்கள். ஆழமாக உள்ளே சென்றுவிட்டால் பின்னர் கடவுளின் தண்டனை பற்றிய பேச்சே அதிகமாக இருக்கும். ஒரு சிறிய சபலத்தைக்கூட , ஒரு சிறிய ஐயத்தைக்கூட அறிந்து உடனடியாக தண்டிக்கக்கூடிய கடவுளை ஒவ்வொரு கணமும் அஞ்சியபடியே இவர்கள் வாழ நேர்கிறது.அந்த அச்சத்தில் இருந்து மீட்பே இல்லை. ஏனென்றால் மீட்பு என்று எண்ணுவதே கடவுளின் தண்டனைக்குரியது!
இவர்களின் வழிபாட்டுமுறை மிக ஆபத்தான மூளைச்சலவை. அது சர்ச்சுகளில் வழக்கமாக நிகழும் சொற்பொழிவு, கூட்டுப்பாடல், பிரார்த்தனை மற்றும் சில சடங்குகள் என்ற வடிவில் நிகழ்வதில்லை. கொடூரமான ஒரு கூட்டு மனவசியம் அது. அவர்கள் ஒவ்வொருவரும் அதை பிறருக்குச் செய்யக்கூடியவர்களாக ஆகிவிடுகிறார்கள். அந்த குழுவில் சேரும் புதிய ஒருவர் மிக எளிதில் அந்த மனவசியத்துக்கு ஆளாகிறார்.
மானுடக் கூட்டுமனம் என்றுமே பலவீனமானது. அதைப்பற்றி விரிவான ஆய்வுகள் உள்ளன. அதற்கு தர்க்க உணர்ச்சி இல்லை. குறியீடுகளுக்கு எளிதில் ஆட்படக்கூடியது. பெரும்பான்மையின் உணர்ச்சி அனைவருடைய உணர்ச்சியாக ஆகிவிடக்கூடியது. இவர்களின் கூட்டு வழிபாட்டுமுறை தனிமனித மனத்தை கும்பலில் கரைக்கிறது.
இவர்களின் வழிபாட்டுமுறை சமன்குலைக்கக்கூடிய உச்சகட்ட ஒலிகளால் ஆன இசையுடன் கூடியது. பெரிய நிகழ்ச்சிகளில் கண்ணைப்பறிக்கும் ஒளி அமைப்புகள் கையாளப்படுகின்றன. சீரான தாளமும் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும் ஒரேவகையான சொற்களும் சேர்ந்து எளிதில் கூட்டு மனவசியத்தை உருவாக்குகின்றன. உச்சகட்ட உணர்ச்சிகளைச் செயற்கையாக உருவாக்கும் கூச்சல்களும் அழுகையொலிகளும் ஆவேசக்கூத்தாட்டங்களும் சேர்ந்து எளிய மனங்களை ஆட்கொள்கின்றன.
’அற்புத’ங்கள் ஒவ்வொரு நாளும் நிகழ்த்தப்படுகின்றன. ஒவ்வொருவரும் அற்புதங்களை அறிக்கையிடவேண்டியிருக்கிறது. அற்புதங்களை அறிக்கையிடாதவர்கள் கடவுளால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்ற நிலை உருவாவதால் அனைவருமே சொல்ல ஆரம்பிக்கிறார்கள். இது ஒவ்வொருவரையும் பாதிக்கிறது.
கூட்டுவழிபாடுகளின் தூபங்களில் பலவகையான பிரமையூட்டும் மருந்துகளை இவர்கள் பயன்படுத்துவதாக அமெரிக்க கத்தோலிக்க சபை பலமுறை குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் அது இல்லாமலேயே குறுகலான மனவெளியில் நெடுநேரம் அழுத்தமாகச் செய்யப்படும் தீவிரமான பிரச்சாரம் மூலம் மனம் உருவெளித்தோற்றங்களை அடைகிறது.
இந்தப் பிரமைகளை உருவாக்கிக்கொள்ளும் அளவுக்கு மூளையை பலவீனப்படுத்துவதற்காக தூக்கம் கடுமையாக குறைக்கப்படுகிறது. கடுமையான பட்டினி விரதங்கள் முன்வைக்கப்படுகின்றன முழு இரவு விழித்திருக்கும் ஜெபங்கள், உபவாச ஜெபங்கள் இதற்காக உருவாக்கப்பட்டு மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகின்றன
விளைவாக சிலர் கடவுளை காண்கிறார்கள். அதைவிட பலமடங்கு பேர் சாத்தானையும், பேய்களையும் காண்கிறார்கள். காரணம் இவர்களிடம் அதிகமாக செலுத்தப்படும் நம்பிக்கை என்பது அதுதான். எங்கும் எதிலும் பேய்கள். அச்சமும் அருவருப்பும் கலந்த நிரந்தர மனநிலை உருவாகிறது. மனநோய்வட்டம் பூர்த்தியாகிறது.
இவர்களின் சமூகப்பங்களிப்பென்பது மிக ஆபத்தான ஒன்று. முக்கியமாக இவர்கள் சகமனிதர்களுடன் பழகுவதில்லை. அவர்களை வெறுக்கிறார்கள். அத்துடன் இவர்களின் மதக்குழுமம் ஒழுக்க, அற நெறிகளை இவர்களுக்குள் மட்டுமே பேணச்சொல்கிறது. வருமானத்தில் பத்தில் ஒன்றை [தசமபாகம்] சர்ச்சுக்கு கொடுத்துவிட்டால் ’பிற’ மனிதர்களிடம் இவர்கள் செய்யும் எதுவும் சரியே என கற்பிக்கிறது
பிற கிறித்தவ அமைப்புகள் போல இவர்கள் சேவைகளில் ஈடுபடுவதில்லை. மானுட துயரங்கள் எல்லாமே கடவுளின் தண்டனைகள் என்றே நினைக்கிறார்கள். சுனாமி வந்தபோது அது கத்தோலிக்கர்களுக்கு கடவுள் அளித்த தண்டனை என்று ஆயிரக்கணக்கில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டார்கள். இவர்கள் கல்வி நிறுவனங்கள் நடத்துவதுண்டு, அது சிறுபான்மையினருக்கான சலுகைகளுக்காக. அதன்மூலம் மதப்பரப்புக்காக மட்டுமே. அவை பெரும்பாலும் செலவேறிய கல்வி அமைப்புகளாக இருக்கும்.
*
இவர்களின் மதப்பரப்புப்பணி மிகவும் திட்டமிடப்பட்டது. இவர்களின் ஒவ்வொரு உறுப்பினரும் பிறரை மதமாற்றம் செய்யக் கடமைப்பட்டவர் என்பதனால் ஒவ்வொருவருமே இதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் அதிதீவிர பிரச்சாரத்துக்கு தடையாக இருப்பது இரண்டு அம்சங்கள். ஒன்று, இவர்களின் வெறுப்புவேகம் சாமானிய இந்தியனை அச்சுறுத்துகிறது. இரண்டு, இங்குள்ள சாதிமுறை மதமாற்றத்துக்கு தடையாக இருக்கிறது. மதம் மாறினால் சாதியில் இருந்து விலகவேண்டியிருக்கும். ஒட்டுமொத்தமாக ஒரு சாதியே மாறினால்தான் உண்டு.
இரைகளைக் கவனமாக தேர்வு செய்கிறார்கள். அதிகமும் இவர்கள் மருத்துவமனைகளில்தான் தென்படுவார்கள். மனம் உடைந்து ஆதரவு தேடும் நிலையில் இருக்கும் நோயாளிகளை அணுகி உங்களுக்காக பிரார்த்தனைசெய்யலாமா என்பார்கள். ஓரிரு தடவை பிரார்த்தனை செய்து நெருக்கமான பின்னர் நோயாளியிடம் ’ஓர் அற்புதம் நிகழவிருக்கிறது, நீங்கள் மனம் திரும்பினால் போதும்’ என்பார்கள். காரணம் அந்த நோயாளிகளே அற்புதத்தைத்தான் உள்ளூர எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
ஆனால் நோயாளிகளின் உறவினர்களிடம் ’ஒரு மரணம் நிகழப்போகிறது’ என்பார்கள். காரணம் அவர்கள் அதைத்தான் உள்ளூர அஞ்சிக் கொண்டிருப்பார்கள். மிக நுட்பமாக மென்மையாக வலை விரியும். ’நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம், நாங்களே பிரார்த்தனை செய்கிறோம்’ என்பார்கள். பின்னர் ’நீங்களும் செய்யுங்கள்’ என்பார்கள். ’நீங்கள் நம்பாததனால் கடவுள் கோபம் கொண்டிருக்கிறா’ர் என்பார்கள். ’உங்களுடைய தயக்கத்தால் ஒரு மரணம் நிகழவிருக்கிறது’ என்பார்கள். ’உங்களுக்கு வேண்டியவரின் மரணத்துக்கு நீங்களே காரணம்’ என்பார்கள். படிப்படியாக இந்த உணர்வுத் தாக்குதல் நிகழும்.
அவர்களின் அச்சத்தை நம் தர்க்கம் எவ்வளவு நிராகரித்தாலும் ஆழ்மனம் அதை பற்றிக்கொண்டு அதிலேயே ஒட்டியிருக்கும். அந்த அச்சம் நிறைந்த மனநிலையில் எதிர்மறையாக எது நிகழ்ந்தாலும் மனம் அதை பற்றிக்கொள்ளும். அது கடவுளின் தண்டனையா என்று பீதிகொள்ளும். அந்த பீதியை முகத்திலேயே வாசித்து ’இன்னும் பெரிய தண்டனை வரப்போகிறது’ என்பார்கள். ஓர் எல்லையில் அந்த மனம் முறியும். பறவை வலையில் சிறகற்று விழும்.
வீட்டில் இருக்கும் பெண்கள் இவர்களின் இன்னொரு இலக்கு. என் வீட்டுக்கு முன்னால் உள்ள ஒரு கத்தோலிக்கரின் வீட்டுக்கு வந்த சிலர் தனிமையில் இருந்த அந்த அம்மையாரின் மகன்களில் ஒருவர் சீக்கிரம் ஒரு விபத்தில் சாகவிருக்கிறார், கடவுள் சொல்லி நாங்கள் தேடி வந்தோம் என்றார்கள். அவர் ஆடிப்போய்விட்டார். உங்கள் கணவருக்குச் சொல்லவேண்டாம், அவர் கடவுளை பழித்தால் இன்னும் பாவம் சேரும். நீங்களே பிராயச்சித்தம் செய்யுங்கள் என்றார்கள்.
தினமும் வந்து பிரார்த்தனை செய்தார்கள். அந்த அம்மையாரை மேலும் மேலும் அச்சுறுத்தி உள்ளே இழுத்தார்கள். நாள்போகப்போக மனைவி நலிவதைக் கண்ட கணவர் பொறிவைத்து அவர்களை பிடித்து மூர்க்கமாக அடித்து துரத்திவிட்டு அந்த அம்மையாரை சொந்த ஊருக்கே கொண்டுசென்று கொஞ்சநாள் வைத்திருந்தார். அவர் மீண்டு விட்டார்.
பதின்பருவத்தில் இருக்கும் குழந்தைகள், குறிப்பாக பெண்குழந்தைகளையும் இவர்கள் இலக்காக்குகிறார்கள். அவர்களின் உணர்ச்சிகள் சிக்கலானவை என்பதனால் எளிதில் அவர்களை வீழ்த்தமுடிகிறது.
பொதுவாக இவர்களின் இரைகள் கத்தோலிக்கர்களும் சிஎஸ்ஐ சபையினரும்தான். ஏற்கனவே அவர்கள் அடிப்படை நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். சமீப காலமாக அவர்கள் விழித்துக்கொண்டு எதிர்பிரச்சாரத்தை அவர்களின் சபைகளில் முடுக்கி விட்டிருக்கிறார்கள். பல ஊர்களில் இந்த மதக்குழுமங்களின் பிரச்சாரகர்கள் நுழைவதற்கே தடை இருக்கிறது.
இஸ்லாமியர்கள், சொல்லவே வேண்டாம். அவர்களை இவர்கள் அணுகுவதே இல்லை. இவர்களால் வன்முறையை எதிர்கொள்ள முடியாது.
ஆனால் இந்துக்கள் இதைப்பற்றிய விழிப்புணர்வே அற்றவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளை இவர்களின் பள்ளிகளில் சேர்ப்பது பற்றி யோசிப்பதில்லை. அதில் உள்ள அபாயம் இவர்களுக்கு தெரியாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒன்றும் நிகழ்வதில்லை, நம் குழந்தைகள் வேறு வகையான பண்பாட்டுப்பயிற்சிக்குள் இருக்கிறார்கள். ஆனால் அபூர்வமாக அது திருப்பித்தாக்குகிறது
இந்த ஒருவருடத்திலேயே எனக்கு தெரிந்த நான்கு குடும்பங்களில் பெண்கள் இந்த மனவசிய விஷவட்டத்திற்குள் சிக்கி குடும்பம் சிதைந்து குழந்தைகளின் வாழ்க்கை பெரும் துன்பத்தில் முடிந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் மட்டுமே மீள முடிந்தது. மீண்ட பின் அந்த பெண் சொன்ன அனுபவங்கள் அச்சுறுத்தின. கிட்டத்தட்ட ஒருவருடம் குற்றவுணர்ச்சியும் அச்சமும் சுயஒடுக்குதலும் தனிமையுமாக மாபெரும் உள வதை. அந்த உள வதைமூலம் எங்கோ மேலே சென்று கொண்டிருப்பதாக ஒரு பிரமை. வெளியே வந்தது ஓர் அற்புதம் என்றார்
*
இதை எப்படி எதிர்கொள்வது? இன்று நாகரீகமான சமூகத்தில் இந்த மனநோய் பரப்புநர்கள் மிகப்பெரிய சவால் என்றே நினைக்கிறேன். சட்டபூர்வமாகவே இவர்கள் எதிர்கொள்ளப்படவேண்டும். ஆனால் அது இங்கு எளிதல்ல
முதல் விஷயம், நம்மை இவர்களிடமிருந்து விலக்கிக் கொள்வதே. இந்த வகை பிரச்சாரகர்களை எவ்வகையிலும் நம்முடன் பேச, நமக்காக பிரார்த்திக்க நாம் அனுமதிக்கவே கூடாது. இதில் சாதாரண மரியாதையை பார்ப்பதென்பது மிக அபாயகரமானது. இவர்களுக்கு அவ்வகையான எந்த மரியாதையுமில்லை என்பதை நாம் யோசிக்க வேண்டும். முழுமையாகவே இவர்களை நம் வாழ்க்கையின் எல்லா பக்கங்களில் இருந்தும் தவிர்த்து விட வேண்டும். இவர்களைப்பற்றி பெண்களிடமும் குழந்தைகளிடமும் சொல்லி வைக்க வேண்டும்.
இரண்டாவதாக, நம்முடைய ஆன்மீகப் , பண்பாட்டுப் பயிற்சியை நாம் முறையாக செய்திருக்க வேண்டும். நம்மைப்பற்றி நமக்கே ஒரு தெளிவு இருக்க வேண்டும்.
ஆனால் இது அவ்வளவு எளிதல்ல. என்னதான் பண்பாட்டுப் பயிற்சி இருந்தாலும் பலவீனமான மனம் கொண்டவர்களுக்கு அது உதவுவதில்லை. இந்தவகையான குழுமங்களில் நாம் சென்று மாட்டுவதற்கு நம்முடைய பாதுகாப்பின்மை, ஆழ்மனச்சிக்கல்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஆகவே தவிர்த்துக்கொள்வதே சிறந்த வழியாகும்.
என்னதான் கிறித்தவ சபைகளில் இவர்களுக்கெதிரான பிரச்சாரம் இருந்தாலும் கிறித்தவ நண்பர்களின் குடும்பங்களே இந்த வலையில் அதிகமாக விழுந்து பெரும் சிக்கல்களைச் சந்திக்கின்றன. அவர்களையே அதிகமாக எச்சரிக்க விழைகிறேன்.
*
இந்த குழுமங்களின் அமைப்பும் சாரமும் கிறித்தவம் சார்ந்தது அல்ல என்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும். நாஸ்டிக் மரபுகள் [Gnosticism] என்ற பேரில் கிறிஸ்துவுக்கு முன்னரே இருந்து வந்த சில சிறுவழிபாட்டுமுறைகள் கிறிஸ்தவத்துக்குள்ளும் நுழைந்து வேற்றுரு கொண்டன. இவை நாஸ்டிக் கிறித்தவ மரபுகள் எனப்படுகின்றன. இவற்றை பலகாலம் கிறித்தவ சபை வெறுத்து ஒதுக்கி வேட்டையாடியது. ஆனால் காலப்போக்கில் இவற்றின் பல சடங்குகளையும் வழிமுறைகளையும் அது தானும் ஏற்றுக்கொண்டது.
இவற்றில் பல போக்குகள் உள்ளன. பொதுவான கூறு என்னவென்றால் இறைஞானம் என்பது மறைவானது, அதை அனைவரும் பெறமுடியாது என்ற நம்பிக்கை. அதற்காக ஒருவர் கடுமையான சுயதண்டனைகள் மூலம் தன்னை தயாரித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம். பட்டினி, தனிமை, உடல்வதை எல்லாமே இவர்களின் வழிபாட்டுமுறைகளாக இருந்தன.
கிறித்தவத்தின் மெய்யியல் இவர்களுக்கு உவப்பானதல்ல. இவர்கள் கிறிஸ்துவில் இருந்து தொடங்குவதில்லை. இவர்களுக்கு ஏசுவோ மாதாவோ முக்கியமான தெய்வமாக படவில்லை. யெகோவாவும் பரிசுத்த ஆவியும் மட்டுமே கடவுளாக இவர்களால் நம்பப்பட்டன.
உண்மையில் கிறிஸ்தவத்திற்கு முன்னரே நாஸ்டிக் மதங்களால் வழிபடப்பட்ட ஆவித்தெய்வமும், போர்த்தெய்வமும் பரிசுத்த ஆவியாகவும், யெகோவா ஆகவும் உருவம் மாற்றிக்கொள்ளப்பட்டன. இந்த மதக்குழுமங்கள் நெடுநாட்களாக கிறித்தவத்தால் ஒடுக்கப்பட்டு வேட்டையாடப்பட்டமையால் இவை ஒருவகையான ரகசியக்குழுக்களாக மாறிக்கொண்டன. குழுவாகச்செயல்படுவதில் நெடுங்கால பயிற்சி பெற்றன.மூளைச்சலவையில் தேர்ந்தன.
ஆனால் இந்த ஒடுங்குதல் காரணமாக இவை பிற மதங்களுடன் உரையாடவில்லை. காலமாற்றத்தை உணரவில்லை. இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட உறைநிலையில் இவை உள்ளன. மனிதனை அவன் வாழும் காலத்தில் இருந்து பிரித்து ஒரு புராதன இருட்டறைக்குள் அடைத்துப் போடுகின்றன இவை.
கிறித்தவத்தின் சொல்லாடல்ளை பயன்படுத்திக்கொண்டு அதன் உள்ளிருந்தே விரியும் இந்த நாஸ்டிக் மதக்குழுக்கள் கிறிஸ்தவத்தை பாதித்த வைரஸ் என்றால் அது மிகையல்ல. [பார்க்க, விவிலியத்தின் முகங்கள்.நாஸ்டிசிசம்]
*
இன்றைய சூழலில் நீங்கள் உங்கள் மகள் விஷயத்தில் என்ன செய்யலாம்?
அவர் ஒரு மனநோய் வட்டத்தில் இருக்கிறார், மதநம்பிக்கையில் அல்ல என்பதை அவருக்குச் சொல்லி புரியவைப்பது எளிதல்ல. அவரது கணவர்தான் இந்த உண்மையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவரது குழந்தையின் எதிர்காலத்துடன் அவர் விளையாட முடியாது. அவரது மனைவியின் மனம் ஆபத்தான ஒரு சுழலில் சிக்கி இருக்கிறது. மதநம்பிக்கை என்ற பேரில் மனச்சிதைவு அனுமதிக்கப்படக்கூடாது.
உங்கள் மகளுக்கு இந்த உலகை நோக்கிய ஈர்ப்பு உருவாவதற்கான காரணமாக ஆழமான மன இறுக்கம் அல்லது நிலையின்மை உணர்வு அல்லது பதற்றம் இருக்கக் கூடும். அவரிடம் ஒரு மனநிபுணர்தான் பேசமுடியும். அவர் ஒருவேளை அந்த மன இறுக்கத்தை அடையாளம் காணமுடியும். அதை அவரே காணச்செய்ய முடியும்.
உங்கள் மகளிடம் அவர் அவரது மகளுக்கு மிகப்பெரிய அநீதி ஒன்றை இழைக்கிறார் என்பதைச் சொல்லி புரியவைத்தால் நல்லது. ஒரு குழந்தை உலகை திறந்த கண்களுடன் விரிந்த கைகளுடன் எதிர்கொள்வதே அவசியமானது. அச்சமும் குற்றவுணர்வும் அதன் மனதில் ஏற்றப்பட்டால் அது ஆழமான மனச்சிதைவை அடையும். அதன் வாழ்க்கையின் அனைத்து இன்பங்களும் பறிக்கப்பட்டுவிடும். அதற்கான உரிமை எவருக்கும் இல்லை
உங்கள் மகள் சந்திக்கும் நபர்களிடமிருந்து அவரை பிரிப்பதும், அவர் அவர்களின் கூட்டு வழிபாடுகளில் கலந்துகொண்டால் அதிலிருந்து வெளியே கொண்டுவருவதும், முடிந்தால் முற்றிலும் புதிய இடமொன்றுக்கு பெயர்வதும் உதவியாக இருக்கக் கூடும்
ஆன்மீகம் என்பது எதற்கும் அடிமையாக்குவதாக இருக்காது. இந்த பூமி கோடானுகோடி உயிர்களின் வாசஸ்தலம். அதில் ஒன்றே மனிதன். இந்த பிரபஞ்சத்துக்கு அதற்கான ஒரு இலக்கும் செயல்முறையும் உண்டு. அதன் ஒரு துளியான பூமிக்கும் அதற்கான இலக்கும் வழிமுறைகளும் உண்டு. அதன் ஒரு துளியான நமக்கும் நம்முடைய இலக்கும் வழிமுறைகளும் உண்டு.
அதை நாம் நம்மை கூர்ந்து நோக்கினாலே அறியலாம். நம்முடைய சொந்த ஆசைகளாலும் அச்சங்களாலும் நாம் அதிலிருந்து நம்மை விலக்கிக்கொள்வதனாலேயே துயரங்களை அடைகிறோம்
மனிதனின் ஆகப்பெரிய ஆன்மீகம் என்பது இப்பிரபஞ்சத்துடன் முழுமையாக இணைவதில், தன்னிச்சையாக தனக்குரிய ஆற்றலை வெளிப்படுத்திக்கொள்வதில் உள்ளது. அவன் இயல்பாக இருந்தால் முழுமையுடன் இருக்கிறான். முழுமையுடன் இருந்தால் மகிழ்ச்சியுடன் இருக்கிறான்.
உங்கள் மகளுக்கு முறையான தியானப் பயிற்சி உதவக்கூடும். தியானத்தின் அடிப்படைகள் கற்பிக்கப்பட்டு அவர் தியானம் செய்தால் அதுவே பல விஷயங்களை தெளிவாக்கும்
கொந்தளிப்பில்லாமல் , ஒரு சாதாரண கடமையைச் செய்வதுபோல இயல்பாக இதைச் செய்ய முயலுங்கள். எது நிகழ்ந்தாலும் அது உங்களை பாதிக்காமல் செயல்படுங்கள்.
நல்லது நிகழட்டும். வாழ்த்துக்கள்.
ஜெ
சிலுவையின் பெயரால் கிறிஸ்து குறித்து