கொல்லிமலைச் சாரலும் முதல் மாங்காயும்

kolli1

புதியவாசகர் சந்திப்பு, ஈரோடு

நாகர்கோயில் ரயில் நிலையத்தில் பழம்பொரியை பார்த்தேன். “ச்சேச்சே’ என விலகி அப்பால் சென்றேன். பழம்பொரி மட்டும் சாப்பிடக்கூடாது, டீயும் சாப்பிடவேண்டும், டீ சாப்பிட்டால் ரயிலில் தூக்கம் வராது, ஆகவே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டேன். ஆனால் ஒரு வட்டம்போட்டு மீண்டும் பழம்பொரிக்கு அருகிலேயே வந்திருப்பதை உணர்ந்தேன். “பால் கிடைக்குமா?” என்று கம்மிய குரலில் கேட்டேன். “ஆமாம்” என்றான்.

“நீயொக்கே என்னே ஜீவிக்கான் அனுவதிக்கில்ல அல்லெடா?” என ஜெகதி ஸ்ரீகுமார் குரலில் நெஞ்சுக்குள் குமுறிவிட்டு ஒரு பழம்பொரி வாங்கிக்கொண்டேன். டீ சாப்பிடவில்லையே, பழம்பொரிதானே’ என நினைத்தபோது ஆறுதலாக இருந்தது. டீயோடு சேர்ந்த பழம்பொரிதான் கெடுதல் என்று அப்போது தோன்றியது.

kol

சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் ஒரு பெண் வந்து “ஜெயமோகன்தானே?” என்று கேட்டார். ஆமாம் என்றேன். “நானும் நாமக்கல் இளையவாசகர் சந்திப்புக்குத்தான் வருகிறேன். என் அண்ணாவும் வருகிறார்” என்றார். அங்கிருந்தே சந்திப்பு தொடங்கிவிட்டதுபோல் ஓர் உணர்வு. சுசீந்திரம் காக்குமூரைச் சேர்ந்த ஓர் இளைய வாசகியும் வந்திருந்தார்.

விஷ்ணுபுரம் சந்திப்புகளில் பெண்கள் கலந்துகொள்வது குறைவாகவே இருந்தது. பொதுவாகவே தமிழ்நாட்டில் இலக்கியக் கூட்டங்களில் பெண்களின் பங்களிப்பு அனேகமாக இருக்காது. பங்குகொள்பவர் என்றால் அவர் பெரும்பாலும் பெண்கவிஞராகவே இருப்பார். வாசகி என எவரேனும் இருக்கிறார்களா என்ற ஐயம் உருவாகும். பின்னர் ஓரிரு வாசகியர் பங்குகொண்டார்கள். அந்த எண்ணிக்கை மிகவும் பெருகியிருக்கிறது இப்போது.

kolli4

நாமக்கல் வரதராஜன், மகேஷ் இருவரும் நெடுநாட்களாகவே நண்பர்கள். பயணத்தோழர்கள். ஈரோடு புதியவாசகர் சந்திப்பின் இன்னொரு பகுதியை நாமக்கல் அருகே அவர்களின் நண்பர் அன்பரசன் அவர்களின் பண்ணைவீட்டில் வைத்துக்கொள்ளலாம், அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறோம் என்றார்கள். முந்தைய அறிவிப்பு கண்டு விண்ணப்பித்தவர்களில் விடுபட்டுப்போனவர்கள் 30 பேருக்குமேல் இருந்தார்கள். அவர்களுக்கான சந்திப்பு இது.

கொல்லிமலை அடிவாரத்தில் மாந்தோப்புகள் சூழ அமைந்த பண்ணைவீடு. கஷ்டப்பட்டு 25 பேர் தங்கலாம். பெண்களுக்கு சற்று அப்பால் இன்னொரு பண்ணைவீட்டில் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லா ஏற்பாடுகளையும் வரதராஜனும் மகேஷும்தான் செய்தார்கள். விண்ணப்பங்களை ஒருங்கிணைப்பதை பாரி, மணவாளன் இருவரும் பார்த்துக்கொண்டார்கள்.

kol2

ஒப்புநோக்க நீர்வளம் கொண்ட பகுதி. வாழை, வெங்காயம் எல்லாம் நிறையவே பயிரிட்டிருந்தார்கள். ஆனால் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவு. பல வீடுகளில் கொல்லிமலைப் பழங்குடிகளே வாழ்ந்தார்கள். ஆகவே வேலைக்கு ஆள் கிடைக்காது. பெரும்பாலும் மாமரம் நடப்பட்டிருப்பது இதனால்தான். பண்ணைவீட்டை கவனித்துக்கொள்ள ஒருவரை வைத்துக்கொண்டால்போது. மேமாதம் தவிர எப்போதும் ஆழ்துளைக்கிணறு வைத்து நீர் இறைக்கவேண்டியதில்லை. என்றார்கள்

பண்ணைவீட்டை இப்போதுதான் கட்டியிருக்கிறார் அன்பரசன். ஓராண்டுக்குள்தான் நிலத்தை வாங்கி சமப்படுத்தி வேளாண்மையை தொடங்கியிருக்கிறார். மாமரக்கன்றுகள் இடையளவுக்கே உயரம் கொண்டிருந்தன. வாழைகள் கொஞ்சம் தலைக்குமேல் எழுந்திருந்தன. அங்கே மலைக்காற்று வீசிக்கொண்டிருந்தது. அந்தக்காற்றில்தான் மின்விசிறி சுழல்கிறது என்றார் ஒரு நண்பர்.

kol

இருபத்தேழுபேர் வந்திருந்தார்கள். அவர்களுக்கு இது ஒரு செலவுகுறைவான விடுமுறையாகவும் இருக்குமென நினைக்கிறேன். இன்று இத்தகைய ஓர் வெளித்தங்கல் வேறுவகையில் எண்ணினால் மிகமிகச் செலவேறியது. அதைவிட எவருடன் சென்றாலும் சென்றதுமே புட்டியைத் திறந்துவிடுவார்கள். அதன்பின் அவர்களுக்கு கொல்லிமலையும் கோடம்பாக்கமும் எல்லாம் சமம்தான். குடிக்காதவர், கொஞ்சம் நுண்ணுணர்வு கொண்டவர், கொஞ்சம் சூழலையும் புதியகாற்றையும் விரும்புபவர் வாழ்க்கையையே வெறுத்துவிடவேண்டும்.

இச்சந்திப்புகளில் முதன்மையான வெற்றி என நான் கருதுவது இதில் பங்கெடுப்பவர்கள் ஒருவருக்கொருவர் கொள்ளும் நட்பே. இணையான ரசனை உடையவர்கள் சந்தித்துக்கொள்ளும் இடம் இது. விஷ்ணுபுரம் விழாவே இவ்வாறு இணையான மனமுள்ள இளையவர்களின் சந்திப்புவிழாவாக ஆகிவிட்டிருக்கிறது. நம் சூழலில் இது மிக அரிது. அலுவலகத்தில் சூழலில் வாசிப்புப் பழக்கம் கொண்ட, கலையறிமுகம் கொண்ட இன்னொருவரை சந்திப்பதற்கே நமக்கு வாய்ப்புகள் இல்லை

kol

முன்பு சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் முதலியோர் ஒருங்கிணைத்த காகங்கள், கணையாழிச் சந்திப்புகள் போன்ற நிகழ்வுகள் அவ்வகையில் முக்கியமான நட்புமையங்களாக இருந்தன. இன்றளவும் தொடரும் என் இலக்கிய நட்புகள் பெரும்பாலும் அப்போது உருவானவையே. பின்னரும் காலச்சுவடு அத்தகைய கூட்டங்களுக்கு முயன்றிருக்கிறது. ஆனால் மையமாக ஓர் எழுத்தாளர் இல்லாமல் இலக்கியச் சந்திப்புகள் தொடரமுடியாது என்பதே எப்போதுமுள்ள விதி

இச்சந்திப்பில் பலர் முன்னர் அறிந்த முகங்கள். ஆனால் இப்படி ஒரு வாசகர் சந்திப்பில் முன்னர் கலந்துகொள்ளாதவர்கள். கார்த்திக் குமார் முன்பொருமுறை வீட்டுக்கு நண்பர்களுடன் வந்திருக்கிறார். விஷ்ணுபுரம் விருதுவிழாவிலும் ஊட்டி சந்திப்பிலும் கலந்துகொண்டிருக்கிறார். லக்ஷ்மி விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்திருக்கிறார். சந்தோஷ் சென்னை நட்புச்சந்திப்புகளில் இருந்திருக்கிறார். தீனதயாளன் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வந்தவர்.

kolli7

இது என் நண்பர்கள் ஒருங்கிணைக்கும்  எட்டாவது  புதியவாசகர் சந்திப்பு. ஈரோடு காஞ்சிகோயிலில் 3 சந்திப்புகள். கொல்லிமலையிலும் கோவையிலும் தஞ்சையிலும் ஊட்டியிலும் ஒவ்வொன்று நிகழ்ந்தது. புதியவாசகர்கள் அனைவரும் சந்தித்துவிட்டார்கள் என நினைத்திருந்தோம். ஆனால் ஒவ்வொரு அறிவிப்புக்கும் முற்றிலும் புதிய வாசகர்கள் வருகிறார்கள்.

சென்றமுறை வந்த ஒருவர் என் படைப்புகளில் பலவற்றை வாசித்திருந்தார். வெண்முரசும் வாசித்துக்கொண்டிருக்கிறார். எப்படி இலக்கிய அறிமுகம் வந்தது என்று கேட்டேன். 2.0 பற்றிய கட்டுரையை சங்கர் பரிந்துரை செய்திருந்தது வழியாக உங்கள் தளத்திற்கு வந்தேன். இலக்கியம் பற்றி தெரிந்துகொண்டேன் என்றார். ஆச்சரியமாக இருந்தது.

ko3

இத்தகைய சந்திப்புகளில் முகங்கள் இன்னும் அணுக்கமாக அறிமுகமாகின்றன. சட்டென்று நமக்குத்தெரிந்தவர்களாக வாசகர்கள் மாறிவிடுகிறார்கள். ஆனால் இத்தகைய சந்திப்புகளில்கூட அதிகம் பேசாமல் ஒதுங்கிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களை எப்படி கையாள்வது என்பது ஒரு புதிர்தான். அவர்களின் தனிமைக்குள் ஊடுருவுவதா வேண்டாமா என்பது தெரியவில்லை.

இந்தச் சந்திப்பு ஒரு வழக்கமான சந்திப்பு – அளவளாவல் அல்ல. அப்படித்தான் ஆரம்பித்தோம். திட்டமிட்ட உரையாடல் ஏதும் இல்லாமல் நடக்கவேண்டும் என்று. ஆனால் இப்போது இதற்கு ஒரு ’கரிக்குலம்’ அதுவாகவே உருவாகி வந்துவிட்டிருக்கிறது. பெரும்பாலும் இச்சந்திப்புகளுக்கு வந்த நண்பர்களின் கேள்விகள் வழியாக திரண்டது அது. இப்போது அது மிகத்தெளிவாகவே அமைந்துவிட்டது.

ko1

இக்கருத்துக்கள் பெரும்பாலானவை சுந்தர ராமசாமி போன்ற ஓர் இலக்கிய முன்னோடியை இளம்வாசகனாக நான் 1985-இல் சந்தித்தபோது கேட்கப்பட்டவை – பேசப்பட்டவை. ஆனால் புதிய குறிப்புகளுடன், புதிய உதாரணங்களுடன் மீண்டும் பேசவேண்டியிருக்கிறது. தமிழில் வாசிக்கவருபவர்கள் பெரும்பாலும் சில அடிப்படைச் சிக்கல்கள் வழியாகவே நுழைகிறார்கள். அவை நம் சூழலில் உள்ள ‘வைரஸ்’ தொற்றுக்கள். அவற்றை களையாமல் ஒரு வாசகன் இலக்கியவாசகனாக ஆகமுடியாது.

எளிமையான அரசியல்கருத்துக்கள், சமூகப்பொதுப்புரிதல்கள், அரசியல்சரிகள் ஆகியவற்றைச் சார்ந்து சிந்திப்பதும் அவற்றை எழுத்தில் தேடுவதும் முதல் சிக்கல். இதன் அடுத்தபடி என்பது இலக்கியத்தை ஒரு தெளிவான ‘கூற்று’ ஆக மாற்றிக்கொள்ள முயல்தல். இலக்கியவடிவங்கள், இலக்கிய அழகியல்முறைமைகள் குறித்த தெளிவின்மை இரண்டாவது சிக்கல். இலக்கியம் என்னும் தனித்த அறிவியக்கம் பற்றிய புரிதலின்மை இன்னொரு சிக்கல். இறுதியாக கலைச்சொற்கள் சார்ந்த குழப்பங்கள்.

kolli5

அரிதாக இன்னொரு சிக்கலும் உண்டு. அது முதற்சிக்கலைக் கடந்ததுமே உருவாவது. இலக்கியத்தை வாழ்க்கையிலிருந்து புரிந்துகொள்வதைத் தவிர்த்து வெறும் வடிவப்புதிராக, மொழிப்புதராக அணுகுவது, அதை வாசிப்பவன் என்னும் மெல்லிய தன்னம்பிக்கையை – அதற்குள் உள்ளீடாக இருப்பது தாழ்வுணர்ச்சி – உருவாக்கிக்கொள்வது, அதில் நின்றுகொண்டு எள்ளல் எளிய நிராகரிப்பு என பேசுவது. இவ்வகையினரில் உண்மையிலேயே உள்ளூர அழகுணர்வு, நுண்ணுணர்வு உடையவர்களை சிலவற்றைச் சொல்லி மீட்டுவிடலாம். எஞ்சியோர் அவ்வழி சென்று அவர்களுக்குரிய இடத்தை அடையவேண்டியதுதான்.

இந்தச் சந்திப்புகளில் முதலில் இலக்கியம்பற்றிய பொதுவான உரையாடல், வினாக்களுக்கான விடைகள். வருபவர்கள் கொண்டுவரும் படைப்புகளை முன்வைத்து விவாதம் இன்னொரு பகுதி. ஒன்றரைநாள் அமர்வுதான். ஒரு நீண்ட மாலைநடை. பொதுவாக கறாரான இலக்கியவிவாதம்தான், ஆனால் அதை கூடுமானவரை நகைச்சுவையும் நிகழ்வுக் கதைகளுமாக ஆர்வமூட்டுவதாக ஆக்கிக்கொள்வோம்.

ko2

இங்கே பேசப்படுவனவற்றை பெரும்பாலும் பதிவிடுவதில்லை – அவற்றைச் சுருக்கி எழுதிய கடிதங்களையும் வெளியிடுவதில்லை. ஏனென்றால் ஒன்றரைநாளில் பேசப்பட்டவற்றை முழுக்க எழுதினால் அச்சில் ஐநூறு பக்கம் வரும். அதை இரண்டுபக்கமாக சுருக்கினால் அதை வாசிப்பவர்களுக்கு எப்பயனும் இல்லை. சுருக்கி எழுதுபவர் கேட்டவற்றை தொகுத்துக்கொள்கிறார். பங்கெடுத்த இன்னொருவர் நினைவை தொகுத்துக்கொள்ள அது உதவும்.

இச்சந்திப்புகளின் புகைப்படங்கள் வெளிவரும்போது பலர் ’இவ்வளவு வசதிக்குறைவாக அமர்ந்து பேசவேண்டுமா?’ என கேட்பதுண்டு. அதைப்பற்றி நான் சொன்னேன். இந்த இடத்தை பார்வையிடச் சென்ற நண்பர் கிருஷ்ணன் “பெரிய வசதி இல்லை சார், ஆனா நேர்பின்னாடி பெரிசா கொல்லி மலை இருக்கு’ என்றார். வசதிகளை பெரிதாகக் கொள்பவர்களிடம் கொல்லிமலை இருக்கிறது என்றால் அதனாலென்ன என்றுதான் கேட்பார்கள். கொல்லிமலை அருகிருப்பதை முதன்மையாக நினைப்பவர்களுக்கு உரியது இந்தக் கூடுகை. அவர்களுக்கு வசதிகள் பொருட்டல்ல.

வரதராஜன், மகேஷ்
வரதராஜன், மகேஷ்

வசதியாக நடத்தலாம்தான். ஆனால் செலவு மிகுதியாகும். இப்போது உணவு, படுக்கைகள் அன்றி எச்செலவும் இல்லை. இடம் இலவசமாக கிடைத்தாகவேண்டும். இலவச இடங்களில் அவற்றுக்கான பிரச்சினைகளும் வசதிக்குறைவுகளும் உண்டு. மேலதிகச் செலவு செய்ய முடியாது. இத்தகைய நிகழ்ச்சிகளை அதில் பங்கெடுப்பவர்களின் செலவிலேயே செய்யவேண்டும் என்பதே முறை. நிதியுதவிகளை நாடலாம், ஆனால் அது காலப்போக்கில் சிக்கல்களை உருவாக்கலாம். தன் நிதியால் நிகழும் இயக்கமே நீடித்துச்செல்லும்.

இந்நிகழ்ச்சிகளில் அமைப்பாளர்கள் செலவில் ஒருபகுதியை ஏற்றுக்கொள்கிறார்கள், நன்கொடையாக. நான் சொந்தச்செலவில் வந்துசெல்கிறேன். செலவை பங்கெடுப்பவர்கள் பகிர்ந்துகொள்ளவேண்டும், ஆனால் கட்டாயம் அல்ல. பணச்சிக்கல் கொண்டவர்களின் பங்கை அமைப்பாளர்கள் பகிர்ந்துகொள்வார்கள். இம்முறை ஒருவருக்கு பங்கு 700 ரூபாய் வந்தது.

kolli8

முழுநாளும் தரையில் அமர்ந்திருந்ததனால் முதுகுவலி வந்து திரும்பும்போது இதைத்தான் எண்ணிக்கொண்டேன். இத்தனை எளிமையாக இதை நிகழ்த்தும்போதே இதில் ஒரு தீவிரம் நிகழ்கிறது. சிற்றிதழ்ச்சூழல் சார்ந்தது இந்த எளிமை. மாற்று இயக்கங்கள் அனைத்திற்கும் உரியது, ஆகவே இதுவே இதன் இயல்பு. பங்கெடுப்பாளர்களிடம் நாம் சொல்வது மையப்பெரும்போக்குக்கு எதிரான மாற்றை. அது அந்த நிகழ்ச்சியிலும் தெரியவேண்டும்.

வழக்கமாக என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி, அப்படியென்றால் குடிப்பவர்களுக்கு இடமே இல்லையா என்று. இல்லை என்பதே என் பதில். ஒரு மூன்றுநாள்கூட குடிக்க முடியாமலிருப்பவர் இலக்கியவாசகர் அல்ல, குடிநோயாளி. நான் மருத்துவமனை நடத்தவில்லை. அத்தகையவர் தங்களுக்கான நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம். ரொம்பவும் சலிப்படைந்தால் நான்கூட வந்து கொஞ்சநேரம் சேட்டைகளை வேடிக்கைபார்க்கக் கூடும். ஆனால் இலக்கியம்பேச மாட்டேன். ஏனென்றால் எனக்கு கொஞ்சம் நடைமுறை அறிவு உண்டு

kol

மிக அருகே மலை இருந்துகொண்டே இருந்தது ஒரு பெரிய நினைவாக எஞ்சியிருக்கிறது. மாலையில் மலையடிவாரம் ஒரு நடை சென்றோம். கோடையின் தொடக்கம். ஆனால் மலையடிவாரம் என்பதனால் நல்ல காற்று. இந்த மாலைநடை எங்கள் நிகச்சிகளில் முக்கியமான ஒன்று. பகல் முழுக்க பேசிக்கொண்டிருந்ததற்குச் சரியான மாற்று அது. கொஞ்சம் கடுமையான நடை. ஆனால் இயற்கைச்சூழலில் என்பதனால் அலுப்பு தெரியாது. வழக்கமாகப் பங்கெடுப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நடக்கும் வழக்கமே இல்லை என்பது மூச்சிரைப்பில் இருந்து தெரியும்.

இரவில் நன்றாகவே குளிரும் அளவுக்குக் காற்று. இரவு பதினொரு மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு முதல் அமர்வு.இந்த அமர்வில் என் நண்பர் ஜெயகாந்த் ராஜுவும் அவர் துணைவி கல்பனாவும் திருச்சியிலிருந்து வந்து கலந்துகொண்டார்கள். அவர்கள் மிகப்பழைய வாசகர்கள் என்பதனால் பேச அனுமதி இல்லை. செவிக்கு மட்டுமே அனுமதி. இருந்தாலும் அவ்வப்போது நா துடிக்கத்தான் செய்யும். ஒரு மணிநேரத்திற்குப்பின் கல்பனா தன்னை புதியவாசகர் என அதிகாரபூர்வமாக அறிவித்துக்கொண்டார்.

kolli9

ஞாயிற்றுக்கிழமைதான் பழைய நண்பர்கள் வந்தனர். கதிர்முருகன், ஈரோடு கிருஷ்ணன், அந்தியூர் மணி, ஈஸ்வரமூர்த்தி, பாரி போன்றவர்கள். மதியமே சந்திப்பு முடிந்தது. சிலர் கிளம்பிச்சென்றனர். எனக்கு ரயில் இரவு 11 .15க்கு. ஆகவே அந்திவரை அங்கே இலக்கிய அரட்டை தொடர்ந்தது. சினிமா அரசியல் இரண்டையும் முழுமையாகவே தவிர்க்கவேண்டும் என்பது நெறி. நிகழ்ச்சி முடிந்தபின்னரும் அப்படித்தான்.

அந்தியில் மலையடிவாரத்தில் மீண்டும் ஒரு நடை. இம்முறை சற்று காட்டுக்குள் சென்றோம். கடுமையாகச் செறிந்த முட்புதர்கள். அவற்றை வெட்டி வழி அமைத்திருந்தனர். இருட்டும்வரை சென்றுவிட்டு மீண்டோம். மாங்காய்கள் காய்த்து தொங்கத் தொடங்கிவிட்டிருந்தன. எங்கும் பச்சை மாங்காய்களின் இனிய மணம். இந்தப்பருவத்தின் முதல் பச்சைமாங்காயை இங்கேதான் தின்றேன்.

மாலையில் பண்ணைவீட்டு உரிமையாளர் அன்பரசனும் அவர் மனைவியும் வந்திருந்தார்கள். உடன் ஆசிரியர் சுப்ரமணியம் அவர்களும் மனைவியும் வந்திருந்தார்கள். சுப்ரமணியம் அரசுப்பள்ளி ஆசிரியர். அந்தப்பள்ளியை தனியார் பள்ளிகளைவிட தரமானதாக மாற்றி புகழ்பெற்றிருக்கிறார். அவர்களே எங்களுக்கு உணவு பரிமாறினார்கள்

kol

நள்ளிரவில் நாமக்கல் ரயிலில் தொற்றி ஏறிக்கொண்டேன். மீண்டும் ஒரு சந்திப்பின் நிறைவு. அடுத்த சந்திப்பு இன்னும் சிலநாட்களில். ஈரோடில் 30,31 ஆம் தேதிகளில் விவாதப்பயிற்சிப் பட்டறை. அதற்கடுத்து ஏப்ரலில் கோவையில் ஒரு கட்டண உரை இருக்கலாம். அதற்கடுத்து மே முதல்வாரம் ஊட்டியில் குரு நித்யா காவிய அரங்கு. அதற்கடுத்து ஜூனில் சென்னையில் குமரகுருபரன் விருது வழங்கும் விழா. அடுத்து உடனே விஷ்ணுபுரம் விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிடும். இவைதவிர மாதம்தோறும் வெண்முரசு விவாதக்கூடுகைகள் நடக்கின்றன.

தொடர்ச்சியாக இத்தனை செயல்பாடுகள் கொண்ட வேறு அமைப்புக்கள் ஏதும் தமிழகத்திலுண்டா என தெரியவில்லை. எல்லா நண்பர்களும்   உச்சகட்ட உற்சாகத்தில் இருக்கிறார்கள். முதன்மையான காரணம் ஒரு நிகழ்ச்சி முடிந்ததும் வரும் நிறைவு. நிகழ்ச்சிகள் உளச்சோர்வோ சலிப்போ இல்லாமல் பெரும்கொண்டாட்டமாக இருப்பது. அன்றாடவாழ்க்கையின் அலுப்பிலிருந்து பெரும் தப்பித்தலாக விளங்குவது.

IMG-20190318-WA0022

ஏன் அவ்வாறு வெற்றிகரமாக சந்திப்புகளும் விழாக்களும் நிகழ்கிறது என்றால் மூன்று காரணங்களைச் சொல்வேன். ஒன்று, நல்ல நோக்கம். இலக்கியம் அன்றி வேறெந்த இலக்கும் எங்களுக்கு இல்லை. இரண்டு, சரியான திட்டமிடல். மூன்று, என்ன நிகழ்ந்தாலும் நட்புநிலை திரிபடையக்கூடாது, நட்பே முதன்மையானது என்னும் புரிதல். இலக்கிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் எவருக்கும் இதையே பரிந்துரைப்பேன்

தொடக்கத்தில் இத்தகைய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கையில் நண்பர்கள் நடுவே ஓர் ஐயம் இருந்தது. அது இயல்பானதே. நமக்காக, நம் கொண்டாட்டத்துக்காக ஒருங்கிணைப்போம் என்பதே அன்று சொல்லிக்கொண்டது. இன்று மெல்ல மெல்ல ஓர் அறிவியக்கம் உருவாகத் தொடங்கியிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. புதிய முகங்கள் உருவாகி வந்துள்ளன. வாசிப்பில் தீவிரமும் அர்ப்பணிப்பும் கொண்டவர்கள். எழுதுபவர்கள். குறிப்பாக பெண்கள் குறிப்பிடத்தக்க அளவில் கலந்துகொள்கிறார்கள். எண்ணியதல்ல இது, எனவே இயல்கையில் பெருமிதம் உருவாகிறது.

கோவை புதியவாசகர் சந்திப்பு

ஈரோடு இளம்வாசகர் சந்திப்பு -2017

சந்திப்புகள் ஒரு சந்தேகம்

ஊட்டி புதியவர்களின் சந்திப்பு

புதியவர்களின் சந்திப்பு ஈரோடு

=================================================================

புதியவர்களின் கடிதங்கள் 12

ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 7

ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 2

கோவை சந்திப்பு கடிதங்கள் 3

கொல்லிமலைச் சந்திப்பு -கடிதங்கள்

கொல்லிமலைச் சந்திப்பு கடிதங்கள் 3

கோவை வாசகர் சந்திப்பு -ஒரு தாமதமான பதிவு

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 2

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 3

புதியவாசகர் சந்திப்பு கடிதங்கள்-3

புதியவர்களின் கடிதங்கள் 2

புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள்

புதியவாசகர்களின் கடிதங்கள் 10

கோவை புதியவாசகர் சந்திப்பு -கடிதங்கள்

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 1

சந்திப்புகள் கடிதங்கள்

ஊட்டி சந்திப்பு அலைகள்…

இளம்வாசகர் சந்திப்பு – கடிதங்கள்

புதிய வாசகர் கடிதங்கள்

ஊட்டி சந்திப்பு -கார்த்திக் குமார்

ஈரோடு சந்திப்பு -நவீன்

தஞ்சைச் சந்திப்பு -கடிதம்

தஞ்சை சந்திப்பு- 2017

சந்திப்புகள் கடிதம் 4

ஈரோடு சந்திப்பு 2017 – கடிதம் 3

ஈரோடு சந்திப்பு 2017, கடிதம்-1

முந்தைய கட்டுரைபுதுவை வெண்முரசு விவாதக்கூடுகை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86