இயற்கைக் கடலைமிட்டாய்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
இன்றைய நாள் எங்கள் அனைவரின் வாழ்விலும் மீண்டும் ஒரு முக்கியமான நாள். எட்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் கேட்ட ஒரு செய்தி எங்களை நிலைகுலைய செய்தது,அது என்னவெனில் கங்கை நதியினை பாதுகாக்க கோரி 114 நாட்கள் தொடர் உண்ணாநோன்பு இருந்து இறந்து போன நிகமானந்தா எனும் 36வயது துறவி பற்றியது அது. அன்றைய நாள் முதல் ஏதேனும் ஒரு தருணத்தில் அவரினை பற்றி நினைத்து கொண்டு தான் இருக்கிறோம்.
ஹரித்துவாரின் உள்ளது மத்ரி சதன் எனும் சிறிய ஆசிரமம், அதன் அனைத்து துறவிகளும் கங்கை நதியினை பாதுக்கப்பதை தங்கள் வாழ்நாள் கடமையாக கொண்டு இருக்கின்றனர்.அதில் நிகமானந்தா தன்னுயிரை நீக்கி கொண்ட இரண்டாவது சாது என அறிந்த போது இன்னும் பதட்டம் கூடியது. தொடர்ந்து இணையத்தின் வழியே அவர்களின் சட்ட பூர்வ போராட்டங்கள் பற்றி அறிந்து கொண்டோம்.மேலும் அதற்காக அவர்கள் எடுத்து கொண்ட காந்திய வழிமுறையான உண்ணாநோன்பினை கடந்த 20 வருடங்களாக விடாப்பிடியாக கை பிடித்து போராடி வருவது பெரும் வியப்பினையும் ஒரு வித உறுத்தலையும் உண்டாக்கியது.ஏன் எனில் இன்று கூட அந்த ஆசிரமத்தில் 140 நாட்களினை கடந்து 26வயதே ஆன இளம் துறவி சுவாமி.ஆத்ம போனந்த் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அதிகாரமோ,ஊடகங்களோ கண்டும் காணாதது போல் தான் உள்ளது.அது மிகுந்த மனச் சோர்வை உருவாக்கியது, இருப்பினும் முடிந்தளவு எதிர்மறையானவற்றை தவிர்த்தும்
நேர்மறையானவற்றையே அதிகம் கவனிக்கவும் செயல்படுத்தவும் துவங்கினோம்.
எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல், கங்கை மற்றும் அதன் கரைகளில் இருக்கும் கும்ப் எனப்படும் கும்பமேளா நடக்கும் இடத்தினையும் பாதுகாக்க மிகப்பெரிய சுழலிலயல் புரிதலுடன் ஆத்மார்த்தமாய் போராடி வருவது எங்கள் அனைவரையும் அவர்கள் நோக்கியும் அவர்கள் கொண்டுள்ள உண்மை நோக்கியும் பயணிக்க வைத்துள்ளது.ஆம் இன்று நாங்கள் குக்கூ நண்பர்கள் 17பேர் ஹரித்துவார் நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.நாளை காலை மத்ரி சதன் ஆசிரமம் சென்று நிகமானந்தா மற்றும் தண்ணீருக்காக உயிர் கொடுத்து போராடிய துறவிகள் குறித்து நாங்கள் எழுதிய நெருப்பே தெய்வம் நீரே வாழ்வு எனும் சிறிய புத்தகத்தினை சமர்பிக்க உள்ளோம்.
அடுத்த இரு நாட்கள் சூழலியல் போராளிகளான சுந்தர்லால் பகுணா மற்றும் அவரின் மனைவியினை சந்தித்து உரையாட உள்ளோம்.
மரபினை விரும்புவதும் வெறுப்பதும் குறித்த உங்களின் கட்டண உரையாடல் நிகழ்வுகளில் கலந்து கொண்டு திரும்பிய நாள் முதல் எங்களுக்குள் இன்னும் இந்த பயணத்திற்கான தீவிரத்தை கூட்டிக்கொண்டோம்.எங்கள் மனத்தில் வெகு நாட்கள் இருந்த பலகேள்விகளுக்கு அந்த நிகழ்வினை கேட்டு தெளிந்து கொண்டோம்.அன்றைய நாள் நிகழ்வு முடிந்த பிறகு உங்கள் நிறைவான முகம் கண்டு நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.இன்று வரை அந்த உரையாடலின் ஒலி வடிவத்தினை மீண்டும் மீண்டும் நண்பர்கள் கேட்டு வருகிறோம்.
கடந்த மாதம் பிப்ரவரி14 தேதி சர்வோதைய தினம் அது ஜெகந்நாதன் அய்யாவின் நினைவு தினம் கூட,அந்த நாள் கிருஷ்ணம்மாள் அம்மாவுடன் நாங்கள் அனைவரும் உடன் இருந்தோம்.இலட்சிய வாழ்வினை வாழ்ந்து இறந்து போன மனிதனை தேடி அந்த நாள் 400க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து சேர்ந்து இருந்தார்கள். அவரின் சமாதியில் சர்வ சமய பிராத்தனை கடந்த ஆறு வருடங்களாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.அது மூன்று நாட்கள் நிகழ்வாக காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தின் உள்ளே அமைந்துள்ள ஊழியரகத்தத்தில் நடைபெறுகிறது.உலகம் முழுவதும் இருந்து கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் அய்யாவுடன் சேர்ந்து சமூக வேலை செய்தவர்கள் அங்கு வந்து சேர்கிறார்கள்.நேரு,குமரப்பா என அத்தனை மகத்தான ஆன்மாக்கள் வந்து தங்கியிருந்து பணியாற்றிய இலட்சிய இடம் அது,அதனை தங்கள் தலையில் கல் சுமந்து கொண்டு வந்து கட்டிய விதத்தினை அம்மா கூறியது மிகவும் உயிர்ப்பான சம்பவமாக இருந்தது.
நிகமானந்தா,சுந்தரலால் பகுணா மற்றும் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் என லட்சிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பவர்களின் கரங்களை இறுக பற்றி கொள்கிறோம்.அந்த
நேரத்தில் ஜெகநாதன் அய்யாவினை நீங்கள் பேட்டி எடுத்த நாளின் உரையாடல்கள் எங்களுக்குள் வந்து செல்கிறது. எங்களுக்கு நடக்கும் பேரனுபவங்கள் அனைத்திலும் உங்கள் படைப்புகள் மற்றும் உங்கள் இருப்பின் ஏதோ ஒரு வித பங்களிப்பினை உணர்கிறோம் பூரணமாக
ஸ்டாலின்
கள்ளிப்பட்டி