குடியரசுதினம்-கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு நலமாய் இருப்பீர்கள் என நம்புகிறேன். திருவையாற்றில் இம்முறை இசை ஏமாற்றமளித்ததும் அதன் காரணங்கள் பற்றியும் படித்தேன், மிகவும் வருத்தமாக இருந்தது. பரப்பியல் இயக்கங்கள் வளர்ச்சியடைவதும், உட்பூசல்களால் வீழ்ச்சியடைவதும் பின்பு அவற்றுள் சில மீண்டும் மறுமலர்ச்சியடைவதும் காலங்காலமாக உலகெங்கும் நடைபெறுவது தான் என்றாலும், நவீன இந்தியாவில் அந்த வீழ்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் அதிகமுண்டோ எனத் தோன்றுகிறது. சமீபத்தில் ஒரு வாசகர் ‘இந்தியர்கள் குழுவாக இணைந்து செயல்பட இயலாதவர்களா’ எனக் கேட்டிருந்ததும், அதற்கு உங்கள் பதிலும் நினைவுக்கு வந்தது. எனவே மீண்டும் என் ஐயத்தின் காரணத்திற்கு வருகிறேன். எங்கள் நிர்வாகப் பயிற்சி வகுப்பின் பகுதியாக பிரான்சிஸ் புகுயாமா என்பவர் எழுதிய ‘டிரஸ்ட்’ என்ற நூலை படித்தோம். அதன் கருத்து என்னவென்றால் “முதலாளித்துவம் ஒரு சமூகத்தில் தழைக்க வேண்டுமானால், அச்சமூகத்தில் பரஸ்பர நம்பகத்தன்மை என்பது மேலோங்கியிருக்க வேண்டும். அதாவது சொத்துரிமை, அதைப் பாதுகாக்கும் நீதிமன்றங்களின் பலம் என்பதையும் தாண்டி, தனி மனிதர்களின் நடுவே பரஸ்பரம் நிலவக் கூடிய நம்பகத்தன்மை மட்டுமே ‘சமூக முதல் (Social Capital)’ என்பதை உண்டாக்கும். அமெரிக்க ஐரோப்பியர்கள் individuality என்பதை வழிபட்டாலும், இந்த ‘நம்பகத்தன்மை’ என்ற குணத்தை போற்றுவதனாலேயே சுலபமாக ஒன்று சேர்கிறார்கள். சமூக படிமங்களாலும், சட்டங்களாலும் பாதுகாக்கப்படும் இந்த நம்பிக்கை அறமே மக்கள் குழுக்களாகவும் நிறுவனங்களாகவும் இணைந்து கைக்காசை முதலாக போட்டு risk எடுத்து செயல்பட்டு வெற்றி பெற வழிவகுக்கும். இதன் உட்கருத்து என்னவென்றால், சொந்தங்களையும் சாதிகளையும் தாண்டி மற்றவரை நம்பாத நிலை இருக்கும் சமூகங்களில், பொருளாதார இணைவுகளாக முதலாளித்துவ ஜனநாயக சமூகங்களாக வெற்றி பெற முடியாது”. (நூலின் கருத்தை மட்டும் சொன்னேன், மொத்த நூலையும் பார்த்தால் தரம் சற்று குறைவு தான்…அமெரிக்க வலதுசாரத்துக்கே அடையாளமான ஏராளமான முன் முடிவுகளுடனும், மதம் சார்ந்த மேட்டிமையும் அரைகுறை ஆதாரங்களும் மலிந்த நூல். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பித்து அமெரிக்க மக்களின் குடிமை உணர்வும் முதலாளித்துவ நிறுவனங்களின் அபார வளர்ச்சியும் ப்ரோடேஸ்டன்ட் வாழ்கை முறை காரணமாகவே வந்தது – கத்தோலிக்க நாடுகளிலோ மற்ற பிரபுத்துவ அடையாளம் எஞ்சிய சமூகங்களிளோ இத்தகைய வளர்ச்சி மிகவும் மந்தமாகவே இருக்கும் என வாதிடுகிறது. இந்நூலின் முன்னோடியாக மேக்ஸ் வெபர் எழுதிய ‘The Protestant Ethic and the Spirit of Capitalism’ என்ற நூலையும் குறிப்பிடுகிறார்கள், நான் படித்ததில்லை). நம் நாட்டில் பழங்குடி/நிலப்பிரபுத்துவக் கால குழு அடையாளங்கள் கரையும்போது, யாரை நம்புவது என்பதே பெரும் சவால். அரசியலிலும் வர்த்தகத்திலும் மீண்டும் மீண்டும் முதலில் சொந்தக் குடும்பத்தை நம்புவதையே கண்கூடாகப் பார்க்கிறோம். மலையாளத்தானும் தெலுங்கனும் தமிழிசை பற்றி பேசினாலே சந்தேகம் பற்றியெரிகிறது. சென்னையில் ஒவ்வொரு நகர்ப்பகுதிக்கும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் இருந்ததுண்டு – அவற்றுள் பல ஈகோ மோதல்களாலும் பரஸ்பர நம்பிக்கையின்மையாலும் சிதறுண்டு செயலிழந்து நிற்பதையே காண்கிறேன். தெருவில் சாக்கடை நீர் எப்படி ஓடாமல் இருக்கும்? புகுயாமா சொல்வதை சிந்தித்தால், தனி மனித நம்பகத்தன்மை இல்லாமல் நீங்கள் அடிக்கடி சொல்லும் ‘குடிமையுணர்வு’ என்ற நிலை தோன்றாது எனப்படுகிறது. சாதி, குலம், இனம், மொழி, ஊர், மாநிலம், மதம் என்ற பெரும் வளையங்களைத் தாண்டி ஒருவரின் நம்பிக்கையை பெறுவதற்குள் மூச்சு முட்டுகிறது. மக்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து பிரிந்து உரிமைகளுக்கு அடித்துக்கொண்டு முன்னேறுவதை ‘இது தான் வழக்கமான பாதை’ என்று வரலாற்றுப் பின்னணியில் வைத்து விளக்கியும் விட்டீர்கள். ஆனால் இப்படிப்பட்ட வளர்ச்சியிலேயே சந்தேகம் என்ற வீழ்ச்சிக்கான விஷ விதையும் உள்ளதல்லவா? சண்டை போட்டு முன்னேற வைக்கும் பன்முகத்தன்மையுள்ள நாட்டில் குடிமையுணர்வைப் பொறுத்தவரை சாண் ஏறி முழம் சறுக்கும் நிலையே தொடராதா? அன்புடன் மதுசூதனன் அன்புள்ள மதுசூதனன் ஐரோப்பிய வரலாற்றிலேயே இதற்கான பதில் உள்ளது என நினைக்கிறேன். ஐரோபபா ஒரே நாடுதான் உண்மையில். ஆனால் அது பலநாடுகளாக பிரிந்து ஒன்றுடனொன்று பலநூற்றாண்டுக்காலம் போர் புரிந்தது. இத்தனைக்கும் ஐரோப்பிய மன்னர்கள் பலசமயம் இன்னொருநாட்டைச் சேர்ந்த்வர்களாக இருப்பார்கள். உதாரணமாக பிரிட்டிஷ் அரசவம்சம் ஆஸ்திரிய வேர் கொண்டது. அத்துடன் ஐரோப்பாவின் எல்லா நாடுகளிலும் உபதேசிய போராட்டங்கள் சென்ற நூற்றாண்டு வரை இருந்தன. ஐரிஷ் போராட்டம் போல. இன்று அவர்கள் அடைந்துள்ள ஒற்றுமை என்பது வரலாற்றில் படிப்படியாக தேவையின் விளைவாக உருவாகி வந்தது நமக்கும் வரக்கூடும் ஜெ ———————————- அன்புள்ள ஜெ, …. குடியரசு தினத்தில் இந்த நாட்டின் எதிர்காலம் பற்றிய அச்சமே மனதைக் கவ்வுகிறது….என்ற தங்களின் கவலை மிகவும் நியாயமானதே. ஆனால் நம் பலவீனங்களால் பயனடையத் துடிப்பது சீனா மட்டுமே என்ற ரீதியில் தங்கள் கட்டுரை சுருங்கிவிட்டது என்று கருதுகிறேன். சர்வதேச அரசியலில் “ வல்லான் வகுத்ததே வாய்க்கால் “ என்ற நிலை தோன்றி வெகுநாட்களாகிவிட்டன. இந்த நிலைக்குப் பெரும் பங்காற்றிய அமெரிக்க ஏகாதியபத்தியத்தின் சிறிதும் மனிதாபிமானமற்ற கொடுஞ்செயல்கள் தங்கள் கவனத்தை ஏன் கவரவில்லை என்று தெரியவில்லை. போபால் விஷவாயுப் பேரழிவு, சமீபத்திய மத்திய கிழக்கு நாடுகளில் விளைவிக்கப்பட்ட இனமோதல்கள் உட்பட அமெரிக்காவின் அப்பட்டமான அத்துமீறல்களுக்கு வேறு சான்றுகளைத் தேடி அலையவேண்டியதே இல்லை. அவை பெர்கின்ஸன் போன்ற அமெரிக்க அடியாள்களின் ஒப்புதல் வாக்குமூலங்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல், பொருளாதார ரீதியாக மட்டுமல்லாது கலாச்சார ரீதியாகவும் நமக்குள்ள பெரும் அபாயங்களை மேற்கத்திய நாடுகள் ஏற்றுமதி செய்து வருகின்றன என்ற கவலையும் நமது குடியரசு தினத்தின்று கொள்ளத்தக்கவையே என்பது எனது கருத்து. ரவிச்சந்திரன் அன்புள்ள ரவிச்சந்திரன் நான் அமெரிக்காவை குறைத்து மதிப்பிடவில்லை. அதைப்பற்றி அறிவேன், பேசியுமுள்ளேன். ஆனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இரு பெரும் வேறுபாடுகள் உண்டு அமெரிக்கா ஜனநாயகம் இருக்கும் நாடு. அமெரிக்காவின் ஆதிக்கம் பற்றிய தகவல்களைக்கூட நீங்கள் அமெரிக்கர்களிடமிருந்தே அறிகிறீர்கள். சீனா பற்றி தகவல்களே இல்லை. அரசின் பிரச்சாரம் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே சீனா யோக்கியமானது என்று பேசக்கூடிய, அப்பிரச்சாரங்களையே மொழியாக்கம்செய்து நூலாக்கக்கூடிய ‘அறிவுஜீவிகள்’ சீனாபற்றிய பிம்பத்தை கட்டமைக்கிறார்கள் மேலும் அமெரிக்கா எந்த சித்தாந்தத்தின் அடிப்படையிலும் தன்னை முன்வைக்கவில்லை. சீனா போலியான ஒரு முற்போக்கு முத்திரையை குத்திக்கொண்டு பேசுகிறது. அதன் ஏகாதிபத்தியம், சாம்ராஜ்ய விஸ்தரிப்பு நோக்கு, சுரண்டல் அனைத்துமே அந்த் சித்தாந்தத்தால் போர்த்தப்பட்டு மறைக்கப்படுகின்றன அமெரிக்கா நமக்கு சவால்தான். ஆனால் சீனா பெரும் அபாயம். நம்மைச்சூழ்ந்து நம்மை அழிக்க நினைக்கும் சக்தி அது. நம்மை அழித்தால் மட்டுமே தான் முன்னேற முடியுமென நினைக்கும் தேசம். ஊடகங்களில் சீனா பற்றி ஏதும் பேசப்படுவதில்லை. காரணம் முற்போக்கு அரசியல். சீனாவைப்பற்றி பேசாமலிருக்கவே அமெரிக்கா பற்றி மிகையாகப் பேசப்படுகிறது ஜெ _____________________ ஜெ, ஒவ்வொரு இந்துவும் தன்னை இந்து என்று சொல்ல வெட்கப்படும்படிச் செய்வேன் என்பது நேற்றைய வல்லரசின் கொள்கையாக இருந்தது. தம்முடைய பங்கை வெகு சிறப்பாக அவர்கள் செய்த பிறகும் எதிர்பார்த்த விளைவை அது தரவில்லை. இந்து ராஷ்டிரம் என்பதற்குப் பதிலாக இந்தியா என்ற தேசமாக நாம் ஒன்றிணைந்துவிட்டிருக்கிறோம். அதில் சில குறைகள், பிழைகள் உண்டு என்றாலும் இவ்வளவு பன்முகப்பட்ட மக்கள் திரள் இந்த அளவுக்கு ஒற்றுமையாக, ஓரளவுக்கு வளமாக வாழ்வது என்பது ஒருவகையில் பேரதிசயம்தான். இந்தியாவின் மீது பெரு மதிப்பு கொண்டவர்களாலே கூட நம்ப முடியாத ஒன்றாகவே அது இருக்கிறது. இந்தியர் என்று சொல்வதற்கு ஒவ்வொருவரும் வெட்கித் தலை குனிய வேண்டும் என்ற புதிய இலக்கோடு இன்றைய வல்லரசு களம் இறங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. அரசியலில் ஆர்வம் இல்லாத சோனியாஜி இன்னும் 15-20 வருடங்கள் நாட்டை அந்த திசையில் வழிநடத்துவார். அதன் பிறகு அவருடைய சீமந்த புத்ரியான ப்ரியங்கா ராபர்டின் வழிகாட்டுதலில் இன்னும் 25 வருடங்கள் இந்தியா இந்த திசையில் பயணிக்கும் (ராகுல்ஜி ஆட்சிக்கு வந்தாலும் உரிய நேரத்தில் அவர் அகற்றப்படுவார்). இதற்குள்ளாகவே செய்ய வேண்டியதெல்லாம் செய்யப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். ஆனால், இதில் எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், சாதி சார்ந்த வாழ்க்கைப் பார்வை கொண்ட இந்தியர்களுக்கு இந்தியா என்ற பெரும் அடையாளத்தின் கீழ் ஒன்றிணைவதைவிட மொழிவாரியான சிறு அடையாளத்தின் கீழ் இணைந்து செயல்படுவதுதான் வசதியாகவும் நன்மையும் பயக்கும் என்று தோன்றுகிறது. மதம் அதிகாரக் குவிப்பை அடிப்படையாகக் கொண்டது. சாதி அதிகாரக் குவிப்புக்கு எதிரானது. இந்தியா என்ற அடையாளம் மதத்துக்கு இணையானது. மொழி அடிப்படையிலான ஒன்றிணைவு சாதிக்கு இணையானது. இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகம் மொத்தத்துக்குமே அதிகாரக் குவிப்புக்கு எதிரான சிறிய ஒன்றிணைவுதான் அவசியம். அந்த வகையில் இந்தியா தனித் தனியாகப் பிரிந்து செயல்படுவதுதான் நல்லது என்றே தோன்றுகிறது. மேற்கத்திய சக்திகள் தங்கள் நலன் சார்ந்து செய்யும் சதிகள் அனைத்துமே நம்மால் வேறு வகையாக மாற்றிக்கொள்ளப்படும். அவர்கள் தேசத்தை அடிமைப்படுத்தினார்கள். நாம் காந்தியை உருவாக்கவில்லையா. அவர்கள் எய்வது விஷம் தோய்ந்த அம்பாக இருந்தாலும் நம் கழுத்தை அலங்கரிக்கும் மலர் மாலையாக அதை மாற்றிக்கொள்ள நமக்குத் தெரியும். maha devan அன்புள்ள மகாதேவன் நீங்கள் சொல்வது எனக்கு குழப்பமாகவே இருக்கிறது. இந்தியாவின் நிலபப்ரப்பில் கேரளம் போன்ற சிலபகுதிகளை தவிர்த்தால் மீதி இடமெங்கும் பலநூறு வருடங்களுக்கு முன்னரே பலமொழியினர் பல இனத்தவர் சேர்ந்து கலந்து வாழ ஆரம்பித்துவிட்டார்கள். மொழி, இனம் சார்ந்த எந்த பிரிவினைவாதமும் மக்களை பிளவுபடுத்தும். வன்முறையை உருவாக்கும். அழிவை நோக்கிக் கொண்டு செல்லும். நம்மை அங்கே கொண்டுசெல்லவே இன்று எல்லா எதிர் சக்திகளும் முயல்கின்றன இதை விரிவாகவே எழுதியிருக்கிறேன் ஜெ, ————————— குடியரசுதினத்தில் தொலைக்காட்சியை அணைப்பது நல்ல விஷய்ம் தான்.. ஆனால் அன்று தான் தொலைக் காட்சியில் குடியரசு தின அணிவகுப்பு, அனைத்து மாநிலங்களின் கலை, கலாசாரக் குழுக்கள் அணிவகுப்பு, தேசபக்திப் பாடல்கள் எல்லாம் வருகிறது. இவற்றைக் குழந்தைகள் பார்த்தால் இந்தியா என்ற தேசிய கருத்தாக்கம் மீது அவர்களுக்கு ஒரு பற்றும், பிடிப்பும் உண்டாகுமே. இந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்குக் குழந்தைகளை ஊக்குவிக்கலாம். என் 8 வயது மகள் ஆர்வத்துடன் இன்று காலை முதல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதை முயன்று பார்க்கலாமே. அன்புடன், ஜடாயு

முந்தைய கட்டுரைநூலகங்கள், நூல்விற்பனைநிலையங்கள்…
அடுத்த கட்டுரைதிரைப்படங்கள்