துரியோதனன் அந்தக் கணத்தை பின்னரும் பலமுறை எண்ணி எண்ணி வியந்தான். மச்சர்களுடன் நிகர் நின்று பொருதிக்கொண்டிருந்தபோது எண்ணம் ஏதும் இன்றி அவன் வில் தாழ்த்தி செயலிழந்தான். உள்ளத்தில் ஒரு சொல் எஞ்சவில்லை. உடலெங்கும் ஒரு விதிர்ப்பு கடந்து சென்றது. வானில் இடியிடிக்கையில் அரண்மனையின் சிற்றறைகளுக்குள் கார்வை முழங்குவது போன்று அவனுள் அலைகொண்டு அடங்கியது. என்ன அது என தன்னுணர்வு கொண்டபோது இடத்தொடை துடிக்கத்தொடங்கியது. அதிர்ந்துகொண்டிருந்த கையில் வில் நடுங்கியது. பற்கள் இறுக கிட்டித்திருந்தன. கண்கள் கலங்கி நீரணிந்திருந்தன.
என்ன என்ன என்று அவன் உள்ளம் பதறி எழ, தொலைவில் “ஆசிரியர் துரோணர் வீழ்ந்தார்! பரத்வாஜரின் மைந்தர் துரோணர் களம்பட்டார்! விண்புகுந்தார் நல்லாசிரியர்! துரோணர் முழுமை கொண்டார்! புகழ்பெறுக துரோணரின் பெயர்! நீடுவாழ்க துரோணரின் குடி!” என்று வாழ்த்தொலிகள் பரவி அணுகி வந்தன. முதல் கணம் அந்தச் செய்தி செவியில் விழுந்ததுமே எழுந்தது ஒரு தளர்வுதான். அது விந்தையானதோர் நிறைவை ஒத்திருந்தது. நெடுநாள் எதிர்பார்த்திருந்த செய்தியொன்று வந்தடைந்ததுபோல். எதிர்பார்த்திருந்தேனா, இதையா, என்று பிறிதொரு உள்ளம் வியந்தெழ அப்பால் ஓர் உள்ளம் செயலற்று அந்த உளக்கொந்தளிப்பை வெறுமனே நோக்கிக்கொண்டிருக்க துரியோதனன் தேர்த்தூணை பற்றிக்கொண்டான். மெல்ல பின்னடைந்து தேர்த்தட்டில் அமர்ந்து வில்லை மடியில் வைத்துக்கொண்டான்.
அவனுடைய பாகன் தேரை பின்னுக்கிழுத்து கௌரவப் படைகளுக்குள் கொண்டுவர கவசப்படை வீரர்கள் முன்னெழுந்து அரணமைத்து அவனை படைமுகப்பிலிருந்து விலக்கினார்கள். புரவியில் வந்து இறங்கிய துச்சாதனன் மூச்சிரைக்க “மூத்தவரே!” என்றான். அவனை வெற்று விழிகளால் திரும்பிப்பார்த்தபின் நோக்கு திருப்பிக்கொண்டான் துரியோதனன். துச்சகன் அவனைத் தொடர்ந்து வந்திறங்கி “ஆசிரியர் களம்பட்டார்!” என்றான். துரியோதனன் வில்லை ஓங்கி தேர்த்தட்டில் எறிந்துவிட்டு எழுந்தான். “அஸ்வத்தாமரிடம் இன்னமும் முறைப்படி செய்தி சொல்லவில்லை. நானே சென்று சொல்கிறேன். இக்கணமே” என்று தேரிலிருந்து பாய்ந்திறங்கி புரவிக்கு கை காட்டினான்.
துச்சாதனன் திகைத்து நோக்க புரவியில் வந்திறங்கிய சுபாகு “பொறுங்கள், மூத்தவரே! ஒருகணம் பொறுங்கள்!” என்றான். துரியோதனன் “இதற்கு பழிநிகர் கொள்ளவேண்டியவர் அஸ்வத்தாமர். அஸ்வத்தாமரிடம் சென்று செய்தி சொல்கிறேன். இக்களத்தில் ஆசிரியரின் குருதிக்கு நிகராக ஐவரின் குருதியை கொள்ளுங்கள்… பழி வெல்லுங்கள் என்று கேட்கிறேன்” என்றான் துரியோதனன். சுபாகு “பொறுங்கள். ஒருகணம் பொறுங்கள். எதுவாயினும் எண்ணிச்செய்வோம்” என்றான். “என்ன எண்ணுவதற்குள்ளது? இனி எண்ணிச்செய்ய பொழுதில்லை நமக்கு… ஆசிரியரின் பலி நமக்காக… பழிகொள்ளும் பொறுப்பும் நமக்குரியதே” என்று துரியோதனன் கூவினான்.
“ஆசிரியர் துரோணர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை நீங்கள் இன்னமும் முழுதறியவில்லை, மூத்தவரே” என்று சுபாகு சொன்னான். “பேடியை முன்னிறுத்தி பிதாமகரை வீழ்த்தியதைப் போலவே இக்கொலையையும் புரிந்திருக்கிறார்கள் பாண்டவர்கள்.” துரியோதனன் திகைத்து “அறப்பிழையாகவா? நெறி மீறியா கொன்றனர் ஆசிரியரை? அர்ஜுனனா அதை செய்தான்?” என்றான். “ஆம், அஸ்வத்தாமர் கொல்லப்பட்டாரெனும் பொய்ச்செய்தியை ஆசிரியரிடம் சொன்னார்கள். பீமன் அஸ்வத்தாமரை கொன்றுவிட்டான் என முரசறைந்து அறிவித்தார்கள். மைந்தன் மடிந்தான் என ஆசிரியர் உளம் உடைந்து வில் தாழ்த்தி தேரில் அமர்ந்திருக்கிறார். அத்தருணத்தில் அர்ஜுனன் அம்பெய்து அவர் நெஞ்சை பிளந்திருக்கிறான்” என்றான் சுபாகு.
“அர்ஜுனனா? அவருடைய முதல் மாணவன் அல்லவா அவன்?” என்றான் துரியோதனன். சுபாகு “வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டார், நேர்நின்று வெல்லப்படவில்லை என்பது ஆசிரியருக்குப் பெருமைதானே? அதை முதல் மாணவன் அன்றி எவர் அளிக்க முடியும்?” என்றான். “கீழ்மை!” என்றான் துரியோதனன். “ஆசிரியர் அதை எவ்வண்ணம் ஏற்றார்? அஸ்வத்தாமரைக் கொல்ல பீமனால் இயலாதென்று அறியாதவரா அவர்?” சுபாகு “ஆம், ஆனால் யுதிஷ்டிரர் தன் வாயால் அதை சொன்னால் நீங்களாயினும் நம்பியிருப்பீர்கள்” என்றான். பெருமூச்சுடன் துரியோதனன் “இந்தக் களத்தில் ஒவ்வொருநாளும் கொல்லப்படுவது அறம்தான். இப்போருக்குப் பின் எவருக்கும் சொல்ல எதுவும் எஞ்சப்போவதில்லை” என்றான்.
“அதன்பின்னர் நிகழ்ந்தது மேலும் கீழ்மை” என சுபாகு தொடர்ந்தான். “திருஷ்டத்யும்னன் தேரில் பாய்ந்தேறி அவர் நெஞ்சில் உதைத்து தலையை வெட்டி முடிபற்றிச் சுருட்டி மேலேற்றிக் காட்டி கூச்சலிட்டு அமலையாடியிருக்கிறான். அவர் தலையை தூக்கி களத்தில் வீசியிருக்கிறான். தரையை நிறைத்துக்கிடந்த உடல்களிலிருந்து அவர் தலையை சற்றுமுன்னர்தான் எடுத்தார்கள்.” துரியோதனன் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான். அச்சொற்கள் அவன் உள்ளத்தை அடையவில்லை என்று தோன்றியது. சுபாகு “முழுச் செய்தியையும் அஸ்வத்தாமர் இன்னமும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் சிகண்டியை எதிர்த்து போரிட்டுக்கொண்டிருக்கிறார். அவரிடம் செய்தியின் முழுமையை அறிவிக்க எவரும் செல்லவேண்டியதில்லை என்று சொல்லிவிட்டு நான் வந்தேன்” என்றான்.
துரியோதனன் வெறுமனே உதடுகளை அசைத்தான். “மூத்தவரே, அவர் பழிநிகர் கொள்ளும் வெறியை அடைவார் எனில் நமக்கு நன்று. பாண்டவத் திரளுக்கெதிராக தன் அரிய படைக்கலங்களுடன் எழுவாரெனில் நாம் வெல்வோம். ஆனால் இது உளச்சோர்வின் நாள். நோக்குக! நமது படைகள் முழுமையாகவே சோர்ந்து கால் தளர்ந்து நின்றிருக்கின்றன. உத்தர பாஞ்சாலத்தின் படைகளின் பெரும்பகுதி அழிந்தும்விட்டது. உளச்சோர்வு திரளிலிருந்து தனிஉள்ளத்திற்கு எளிதில் முனைகொள்ளக்கூடியது. தலைவனில் சுழிமையமென எழும் விசை அது. ஒருகணச் சோர்வில் அஸ்வத்தாமர் அம்பெடுத்து தன் கழுத்தில் தானே வைத்துக்கொண்டாரெனில் நாம் பிறிதொரு பெருந்தீரனையும் இழந்தவர்களாவோம்” என்று சுபாகு சொன்னான்.
துச்சாதனன் “ஆம், அதற்கும் வாய்ப்புள்ளது. இப்போருக்கு அஸ்வத்தாமர் எழுந்ததே தந்தையின் ஆணையினால்தான். அவருக்கு இப்போரில் அடைவதற்கு என எதுவுமில்லை. இங்கு தீர்த்துக்கொள்ள வேண்டிய வஞ்சங்களும் ஏதுமில்லை. மூத்தவரே, அவர் உத்தரபாஞ்சால நிலத்தின் மேலும் பற்றுகொண்டவர் அல்ல. தந்தையின்பொருட்டே அங்கே முடி சூடி இருக்கிறார். அனைத்தையும் துறந்து காடேகும் விழைவுகொண்டவர். உள்ளத்தால் அவர் முனிவர் என்கிறார்கள்” என்றான். “அனைத்திற்கும் மேலாக நெடுநாட்களாக அவர் கொடுங்கனவுகளால் துயருறுகிறார்” என்று துச்சகன் சொன்னான். “என்னிடம் அவர் தனியாக அதை சொல்லியிருக்கிறார். இப்போர் மைந்தர்களின் அழிவில் முடியுமென்றும் ஆகவே எந்நிலையில் போரை நிறுத்திக்கொண்டாலும் இரு குடியினருக்கும் அது நலம் பயக்குமென்றும் சொன்னார். இப்போரில் அவர் சினம் மீதூறி இளமைந்தரை கொல்லக்கூடும் என அஞ்சுகிறார். மூத்தவரே, பலமுறை கனவில் அந்த அறிவிப்பு அவருக்கு வந்துவிட்டது. அவர் அஞ்சிக்கொண்டிருப்பது தன்னுடைய பெருஞ்சினத்தைத்தான். அவர் உள்ளம் மேலும் போருக்கு எழாமல் ஒழியவே வாய்ப்பு மிகுதி.”
மூச்சின் ஒலியில் துரியோதனன் “பிறகென்ன செய்வது?” என்றான். “மூத்தவரே, இத்தருணத்தில் நன்கு உளம் தெளிந்து சொல் கூர்கொண்டுள்ள ஒருவர் சென்று அஸ்வத்தாமரிடம் செய்தியை சொல்லட்டும். எவ்வண்ணம் உரைக்கவேண்டுமோ அவ்வண்ணம் கூறவேண்டியுள்ளது. நாம் வெற்றுணர்ச்சிகளையே வெளிப்படுத்துவோம். அவை நம்மை மீறி சொற்கொந்தளிப்பாகவே வெளிப்படும்” என்றான் சுபாகு. துரியோதனன் “இக்களத்தில் இப்போது உளம் தெளிந்தவர் யார் உள்ளனர்?” என்றான். சுபாகு “கிருபர் எந்நிலையிலும் கலங்கா உளம்கொண்டவராகவே இருக்கிறார். இப்போரில் எந்த அழிவும் இன்று வரை அவரை உளம் தளரச்செய்யவில்லை. அவர் வேள்வி இயற்றும் அந்தணரின் ஊழ்கநிலை கொண்டு போரிட்டுக்கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்” என்றான். “அவர் அஸ்வத்தாமரை இளமையிலேயே அறிந்தவர், தோள் சுமந்து வளர்த்தவர். அவர் சென்று உரைக்கட்டும் அஸ்வத்தாமரிடம்.” துரியோதனன் “ஆம், அவர் உகந்தவர்” என்றான். “ஆனால் தாங்கள் எவரிடமேனும் பேசியாகவேண்டும். எனவே தாங்கள் சென்று கிருபரிடம் உரையுங்கள். தங்கள் உணர்வுகளை அவர் அடையட்டும்” என்று சுபாகு சொன்னான்.
“ஆம், அதுவே வழி” என்றபின் துரியோதனன் கையூன்றி தாவி குதிரையிலேறிக்கொண்டான். அதை தூண்டி நிலம்பரவி இடையின்றி விழுந்து கிடந்த உடல்களை கடந்து தாவி அவன் விரைந்து செல்ல அவனைத் தொடர்ந்து துச்சாதனனும் சுபாகுவும் சென்றனர். துச்சாதனன் திரும்பி துச்சகனிடம் “களத்தை ஒருக்குக! களம் பின்னடையக்கூடாது” என்றபின் முன்னால் சென்றான். துச்சகன் அவர்கள் செல்வதை நோக்கியபின் கைதூக்கி “முன்னேகுக! ஒருங்குசேர்க! அணிகுலையாதமைக!” என ஆணையிட்டான். மிக அப்பால் கர்ணனின் முரசொலிகள் கேட்டுக்கொண்டிருந்தன.
துரியோதனனும் இளையோரும் கிருபர் போரிட்டுக்கொண்டிருந்த இடத்தை அடைந்தபோது ஏற்கெனவே முரசொலிகளினூடாக செய்தியை அறிந்து கிருபர் வில்தாழ்த்தி பின்னடைந்திருந்தார். துரியோதனன் புரவியிலிருந்து பாய்ந்திறங்கி கிருபரை நோக்கி செல்லும்போதே மீண்டும் உணர்வெழுச்சி கொண்டு கைகள் விரிய உரத்த குரலில் “ஆசிரியரே! மூத்த ஆசிரியர் களம்பட்டார். வஞ்சத்தால் வீழ்ந்தார்! கீழ்மையால் வெல்லப்பட்டார்!” என்று கூவினான். கிருபர் வில்லையும் அம்பறாத்தூணியையும் தேர்த்தட்டில் வைத்துவிட்டு படியினூடாக கால்வைத்து மெல்ல இறங்கி “என்ன நிகழ்ந்தது?” என்றார். “பாண்டவ வீணர்கள் ஆசிரியரை கொன்று வீழ்த்தினார்கள். ஆசிரியரே, நெறிமறந்து அனைத்து எல்லைகளையும் கடந்து அவரை கொன்றார்கள்” என்று துரியோதனன் சொன்னான். “இக்களத்தில் இதைப்போல் ஒரு கீழ்மை இதுவரை நிகழ்ந்ததில்லை.”
இடையில் கைவைத்து நின்று எழாக் குரலில் “சொல்க!” என்றார் கிருபர். “ஆசிரியரே, அஸ்வத்தாமர் களம்பட்டார் எனும் பொய்ச்செய்தியை அவருக்கு உரைத்திருக்கிறார்கள். அஸ்வத்தாமன் என அவர்கள் சொன்னது மாளவனின் யானையை. அதைக் கேட்டு ஆசிரியர் உளம் அழிந்து வில் தாழ்த்தியபோது அர்ஜுனன் நீளம்புகளால் அவர் நெஞ்சை துளைத்தான். துருபதன் மைந்தன் தேரில் பாய்ந்தேறி அவர் நெஞ்சில் உதைத்து வீழ்த்தி வாளால் தலையை அறுத்து தூக்கி வீசி பந்தாடினான். குருதி உடலெங்கும் வீழ்த்திக்கொண்டு அமலை கொண்டாடினான்” என்றான் துரியோதனன். கிருபர் “யார் கூறியது அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான் என்று?” என்றார். “அனைவரும்! அனைவருமே கூறியிருக்கிறார்கள்” என்று துரியோதனன் சொல்ல அவனுக்குப் பின்னால் நின்ற சுபாகு “யுதிஷ்டிரர் தன் வாயால் கூறியிருக்கிறார்” என்றான்.
துரியோதனன் “ஆம்! சொன்னவன் சொல்பிழைக்காதவன் என புகழீட்டிய யுதிஷ்டிரன். கீழ்மையின் உச்சத்தில் நின்றிருக்கிறான் இங்கு… ஆசிரியரே, இக்களத்தில் இன்று முழுமையாக தோற்றுவிட்டவன் அவனே” என்றான். “அவன் சொன்னாலன்றி மூத்த ஆசிரியர் அதை நம்பியிருக்க மாட்டார்” என்ற கிருபர் இரு கைகளையும் விரித்து “இனி இக்களத்தில் உடைந்து சரிய ஏதேனும் எஞ்சியுள்ளதா என்ன?” என்றார். “அவர்கள் அறத்தின் முன் தங்களை முற்றாகவே வீழ்த்திக்கொண்டு பல நாட்களாகிவிட்டன. பிதாமகரை வீழ்த்த பேடியை துணைக்கொண்டபோதே அனைத்துச் சொற்களையும் அவர்கள் கடந்துவிட்டார்கள். இரவுப்போர் புரிய முடிவெடுத்தபோது அரக்கர்களாகவே ஆகிவிட்டார்கள்” என்று துரியோதனன் கூவினான். “இனி அவர்களை நாம் எவ்வகையிலும் வெல்லலாம். அனலிடலாம். புனல்பெருக்கை உருவாக்கலாம். நச்சு பரப்பலாம். நோய்கொண்டு நிரப்பலாம். வஞ்சமும் பொய்மையும் புன்மைச்செயல்கள் அனைத்தும் இங்கே ஏற்கப்பட்டுவிட்டன.”
நெஞ்சில் அறைந்தபடி துரியோதனன் கூவினான் “ஆசிரியரே, எவ்வகையிலேனும் இப்புவிமீதிருந்து அழித்து மறைக்கப்படவேண்டிய பெருந்தீங்குகளென பாண்டவர்கள் இதோ மாறிவிட்டார்கள். அவர்களில் பீமன் கொடியவன் என்று இன்றுவரை எண்ணியிருந்தேன். அவனது கீழ்மை அவனாலேயே வெளிப்படுத்தப்படுவதென்பதனால் சற்று கள்ளமற்றது என்று இன்று தோன்றுகிறது. அறச்சொற்களை முகத்திலணிந்து நின்றிருக்கும் யுதிஷ்டிரனே இக்களம் கண்ட கீழ்மைகளின் உச்சம். ஆசிரியரே, இக்களத்தில் யுதிஷ்டிரர் கொன்று வீழ்த்தப்பட்டால் வெல்வது நாம் மட்டுமல்ல, நமது தந்தையர் சொல்லும்தான்.” துரியோதனன் விழிகள் உறுத்து நிற்க நெஞ்சில் மீண்டும் மீண்டும் அறைந்தபடி கூச்சலிட்டான் “ஆசிரியரே, ஒன்று கொள்க! யுதிஷ்டிரன் இங்கே வென்றால் பிறிதொரு யுகம் பிறக்கிறது. இருளின் காலம். கீழ்மையின் காலம். எங்கும் எதுவும் நிலைகொள்ளாத பிறிதொரு யுகம்.”
துரியோதனன் வெறியுடன் கைகளை வீசினான். அவன் வாய் இழுபட உதடுகளின் ஓரம் நுரை எழுந்தது. “இத்தனை நாள் இங்கு நிமித்திகர் கூறிக்கொண்டிருந்தார்கள் இனி எழுவது கலியுகம் என்று. இருளின் இறையெழும் காலம் என்று. ஆகவே நான் மகிழ்ந்தேன் என் தெய்வம் எழுகிறது என. என் இறையின் அருளால் நானே வெல்வேன் என்று கற்பனை செய்தேன். இன்று உணர்கிறேன் மெய்யாகவே கலியுகம் எழுவது யுதிஷ்டிரன் வெல்லும்போதுதான். எழும் கலியுகத்தில் அவனையே அறச்செல்வன் என முன்னிறுத்துவார்கள். அவனுடைய வெற்றியை அறத்தின் வெற்றியென்று புனைந்துரைப்பார்கள். கலியுகத்தில் அறமின்மை அறத்தின் மாற்றுரு பூண்டுதான் எழும். அறமென தன்னை எதிர்ப்பவருக்கும் அறம்கடந்த தன்னலமே என தன்னவருக்கும் அது முகம் காட்டும். ஆசிரியரே, அதை எவரும் பேசி வெல்லமுடியாது. விளக்கி அகற்ற முடியாது. சொல்லுக்கு அடங்காத ஒன்றை வெல்ல தெய்வங்களாலும் இயலாது.”
“ஆசிரியரே, அவன் காட்டுவது என்ன? உயர்ந்த நெறிகளைக் கொண்ட சொற்களை கூறலாம், ஆனால் இடரெழும் உச்சநிலைகளில் மேலும் சொற்களைப் பெய்து அந்நெறிகள் அனைத்தையும் கடந்து செல்லலாம். ஒரு குற்றவுணர்வுநடிப்பால் அதை முற்றாக மறக்கலாம். அடைந்தவற்றில் ஒருதுளியைக் கொண்டு அங்கு வந்தடைந்த வழியில் இயற்றிய அனைத்துக்கும் பிழையீடு செய்யலாம். அறமென்பதும் நெறியென்பதும் எதிரில்லாதபோது காட்டும் தன்நடிப்புகளே என்று அவன் உலகுக்கு காட்டியிருக்கிறான். அவை வெறும் அழகுச்சொற்கள் மட்டுமே, அறுதி வரை உடன் நின்றிருக்கும் கட்டுகளல்ல என்று அவன் நிறுவிவிட்டிருக்கிறான். இனி எழவிருக்கும் யுகத்தில் படைவீரர்கள் பீமனைப் போலிருப்பார்கள், வஞ்சத்தால் அடையும் விழியின்மையையே ஆற்றலெனக் கொண்டிருப்பார்கள். அரசர்கள் அர்ஜுனனைப்போல் கொல்லும் கூர்மையை மட்டுமே சென்றடைவார்கள். நெறிகற்றோர் யுதிஷ்டிரனைப்போல அனைத்தையும் சொல்லி நிறுவும் வெறும் நாவலராகவே எஞ்சுவார்கள்.”
“கலியுகம் இம்மூவரையே தங்கள் முற்காட்டாக கொள்ளப்போகிறது. ஆசிரியரே, இத்தருணத்தில் அவர்கள் மூவரும் கொன்றொழிக்கப்படுவது நமக்காக அல்ல. நாமும் கொன்றழிக்கப்படக்கூடும். ஒரு வீரன் கூட கௌரவர் தரப்பில் எஞ்சாமலாகவும் கூடும். ஆயினும் அவர்கள் அழிக்கப்படவேண்டும். அது நம் தலைமுறைகளின் நன்மைக்காக. எழும் யுகத்தில் சற்றேனும் நெறியும் அறமும் விளங்க வேண்டும் என்பதற்காக. அது உங்கள் கடமை. அஸ்வத்தாமரின் கடமையும் அதுவே” என்றான் துரியோதனன். அவனை மீறி எழுந்த அச்சொற்களை முழுதுற அவனே உணர்ந்து திகைத்துச் சொல்லிழந்து இளையோரை நோக்கியபின் “நான் வேறொன்றும் சொல்வதற்கில்லை…” என்று உடைந்த குரலில் சொல்லி கைகூப்பினான்.
கிருபர் நிலைமாறாத விழிகளுடன் தாழ்ந்த ஒலியில் “அஸ்வத்தாமனுக்கு சொல்லப்படவில்லையா?” என்றார். “இல்லை. தாங்களே சென்று அஸ்வத்தாமரிடம் சொல்லுங்கள். தங்கள் சொற்களிலிருந்து அவர் அதை முறையாக அறியவேண்டும். நாங்கள் வெற்றுணர்ச்சிகளால் அவரை கிளர்ந்தெழச் செய்துவிடுவோம். ஆம், அவரும் உளம் கிளர வேண்டும். ஆனால் தன் கடமையையும் இப்புவிக்கு தான் ஆற்ற வேண்டிய பணியையும் அவர் உணர வேண்டும். வெற்று உணர்வெழுச்சியாக அவர் எழக்கூடாது, வெல்லும் விசைகொண்டிருக்கவேண்டும். அதைச் சொல்லி நிகழ்த்த தங்களால் மட்டுமே முடியும்” என்று சுபாகு சொன்னான்.
கிருபர் புன்னகைத்து “அவனிடம் நாராயணாஸ்திரம் உள்ளது என்று அறிவீர்களா?” என்றார். “ஆம், அறிந்துள்ளோம்” என்றான் சுபாகு. “அதன் வரலாற்றை அறிவீர்களா?” என்று கிருபர் கேட்டார். சுபாகு “முன்பொருமுறை துரோணர் வேள்வியில் விண்ணின் நீர்வெளியில் பள்ளிகொண்ட பெருமானை அழைத்து எழுப்பினார். அவரிடமிருந்து அவர் பெற்றது அந்த அம்பு. அது இப்புவியிலுள்ள அனைத்து அம்புகளையும்விட நூறு மடங்கு ஆற்றல்கொண்டது. அதை அவர் தன் மைந்தனுக்கு அளித்தார். இப்புவியை முற்றழிக்கும் ஆற்றலை அவ்வண்ணம் அவருக்கு அளித்தார் என்று அறிந்துள்ளேன்” என்றான்.
கிருபர் “அம்புகளின் பெயர்களை நோக்குக! பிரம்மம், இந்திரம், வைஷ்ணவம், காலம், வாருணம், பினாகம், ஆக்னேயம், வாயவம், சைவம், பாசுபதம், நாராயணம்… இவை அனைத்தும் இங்குள்ள வெவ்வேறு மெய்வழிகள் என்று உணர்க! ஒவ்வொரு மெய்வழியும் எண்ணித்தொடமுடியாத தொன்மை கொண்டது. ஒன்றுக்குப் பிறிதொன்று இளையது அல்ல. ஒன்றை பிறிதொன்று இணைத்துக்கொள்கையிலேயே பிறிதொன்றைவிட பெரிதாகிறது. அனைத்து ஆறுகளும் கடல்சேர்வதுபோல் அவையனைத்தும் மெய்மைப் பெருவிரிவையே சென்றடைகின்றன என்கிறது உபநிடதம்” என்றார். “தாங்கள் அறிந்த மெய்மையை தொல்முனிவர் அனைத்திலும் கண்டடைந்தனர். அனைத்திலும் வெளிப்படுத்தினர். சொல்லில் அது வேதம். கல்லில் அது சிலை. வில்லில் அது அம்பு. எண்ணிறந்த பொருட்களில் எண்ணிறந்த வடிவில் அது நின்றுள்ளது. ஒன்றில் அதை கண்டடைவது யோகம், எங்குமென அறிந்தமைவது ஞானம்.”
“நாராயணம் என்பது நீர்வெளியில் இருந்து எழுந்த மெய்மை என்று தெளிக!” என்று கிருபர் தொடர்ந்தார். “இங்கு அசைவிலாதவையும் ஊர்வனவும் விரைவனவும் பறப்பனவும் அனைத்தும் குடிகொள்ளும் நாமறியா பெரும்பரப்பே கடல். புவி நனவெனில் கடல் கனவும் ஆழமும் கடந்த முடிவிலியும் ஆகும். கடலறிந்து மானுட உள்ளத்திற்கு அளித்த மெய்மையே நாராயணம். அது சொல்லில் நாராயணவேதம். கல்லில் அது நாராயணன் என்னும் சிலை. சுழி அவன் ஆழி. கடலோசை அவன் சங்கு. அலை அவன் கதை. கௌரவரே, எழும் ஒளியே அவன் கையில் தாமரை. நாராயணமே அஸ்வத்தாமனிடம் நுண்சொல் என தந்தையால் அளிக்கப்பட்டது.”
“அது பாற்கடல். அமுதையும் நஞ்சையும் எடுக்கும் உரிமை அவனுக்குரியது” என்று கிருபர் தொடர்ந்தார். “நான் சென்று அவனில் இச்சினத்தை விதைத்தேன் என்றால் அவனில் எழுவது ஆயிரம்தலைகொண்டு மும்மடிப்பாக சுருண்டிருக்கும் முடிவிலோனின் நஞ்சாகவே இருக்கும்.” துரியோதனன் “ஆம், இன்று எழவேண்டியது அதுவே. அவர்கள் அழிக்கப்பட்டாகவேண்டும். ஆசிரியரே, அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன். இன்று பொய் பொய்யென்றும் தீமை தீமை என்றும் தன்னலம் தன்னலமே என்றும் நின்றுள்ளது. அவை மெய்யென்றும் நன்மையென்றும் அறமென்றும் மயங்கி நின்றிருக்கும் காலம் எழலாகாது. நாராயணம் நச்சுருக்கொண்டு எழுந்து அவர்களை அழிக்கட்டும். நம் மைந்தரை, கொடிவழிகளை அது காக்கட்டும்” என்றான்.
“அழிவை உருவாக்குபவனுக்கு நிகராகவே சொல்லிக் கிளப்புபவனும் தெய்வங்கள் முன் பொறுப்பேற்க வேண்டும்” என்றார் கிருபர். “ஆம், ஆனால் இந்தக் களத்தில் நினைத்தற்கரிய கீழ்மை இயற்றிய பாண்டவர்களுக்கெதிராக நாராயணத்தை எழுப்புகிறோம். அஸ்வத்தாமர் இறையம்பைச் சூடவேண்டிய தருணம் இது” என்று துரியோதனன் சொன்னான். “இது இனிமேல் இரு குலங்களுக்கிடையே, இரு நாடுகளுக்கிடையே நிகழும் போரல்ல. இது எழுயுகத்தில் சற்றேனும் அறம் எஞ்சவேண்டும் என எண்ணுபவர்களுக்கும் எவ்வகையிலேனும் வெல்வதே இலக்கென்று எண்ணுபவர்களுக்கும் இடையேயான போர். நீங்கள் இங்கு என்ன செய்தாலும் தெய்வங்களால் வாழ்த்தப்படுவீர்கள்.”
கிருபர் “ஆம்” என நெடுமூச்செறிந்தார். “ஆனால் நீ தெளிவுகொண்டிருப்பதுபோல் நான் உறுதிகொண்டிருக்கவில்லை. அறமும் அல்லதும் ஏற்கெனவே முற்றாக கலந்துவிட்டன. இந்த குருக்ஷேத்ரம் மந்தரமலையால் பாற்கடல் என கடையப்படுகிறது. எழுவது அமுதா நஞ்சா என்றே இங்குள்ள எவருக்கும் தெரியாது” என்றார். “எனக்கு நான் செய்யவேண்டியதில் முழு நம்பிக்கை வரவில்லை. எவர் எதிரி என்றும் எவர் நட்பென்றும் அறியாமல் வில்லேந்தியிருக்கிறேன், அரசே. களமெழுந்துவிட்டமையால் போரிடுகிறேன், அவ்வளவே.” பேச நாவெடுத்த துரியோதனனை அடக்கி “இக்களத்தில் அவன் நாராயணத்தை எடுப்பானென்றால் அழிவது பாண்டவர்கள் மட்டுமே என எவர் உறுதிசொல்வார்கள்?” என்றார். துரியோதனன் திகைக்க “ஒருவேளை கௌரவர்களும் அழியலாம். படைக்கலமேந்தி இந்தக் களத்தில் வந்த அனைவரும் அழியக்கூடும்” என்றார் கிருபர்.
துரியோதனன் உரத்த குரலில் “அவ்வாறு அழிய நேர்ந்தாலும் அது நன்றே” என்று கூவினான். “இங்கு அறம் முற்றழிந்துவிட்டது. தொல்மூதாதையர் சொல் சொல்லெனத் திரட்டி எடுத்த நெறிகள் அனைத்தும் பொருளிழந்துவிட்டன. இனி நாம் எஞ்சினால் என்ன, முற்றழிந்தால் என்ன? இங்கு பரவியிருப்பது ஒரு கொடுநோய். இது அவர்களிலிருந்து எழுந்துள்ளது. ஆம், நம்மையும் தொற்றியுள்ளது. நாமும் முற்றழிவோம். இக்களத்திலிருந்து அந்நோய் தொற்றிய ஓர் உயிரும் வெளிச்செல்லலாகாது. அனைவரும் முற்றழிந்தாலும் சரி, இச்செயலால் வென்றோம் எனத் தருக்கி அவர்கள் இங்கிருந்து சென்றார்கள் எனில் இப்புவியில் இனி மானுடர் நம்பி பற்றிக்கொண்டிருப்பதற்கு ஒன்றுமே இல்லை. அதன் பின் தெய்வங்கள் வந்தமர இங்கு ஒரு பீடமும் எஞ்சாது. ஆசிரியரே, இது உங்கள் கடன்.”
கிருபர் “என் கடனை நான் எவ்வண்ணம் முடிவெடுப்பது?” என்றார். “செயலின் விளைவுகளை முற்றிலும் உணரமுடியவில்லை. அவை நினைப்பெட்டா தொலைவில் எங்கோ உள்ளன. முந்தையோர் சொல் ஒன்றே இத்தருணத்திற்கு வழிகாட்டியென அமைவது. அதுவோ பின்னால் எங்கோ மறைந்துவிட நெடுந்தொலைவு விலகி வந்துவிட்டிருக்கிறோம். இங்கே எவருக்கும் செய்வதென்ன என்று உளத்தெளிவில்லை. விலங்குகள்போல் உள்ளிருந்து எழும் உயிரியல்பால் போரிடுகிறார்கள். எண்ணுபவர்கள் வஞ்சங்களை பெருக்கிக்கொள்கிறார்கள்” என்றார். துரியோதனன் அவர் கைகளை பற்றிக்கொண்டான். நெகிழ்ந்த குரலில் “ஆசிரியரே, நான் இங்கு வரும்வரை கொண்டிருந்த உணர்ச்சிகள் வேறு. நீங்கள் கூறியதுபோல விலங்குணர்வும் வஞ்சமும் மட்டுமே என்னிடமிருந்தன. ஆனால் இங்கே உங்களிடம் பேசிய சொற்கள் என்னைக் கடந்து எழுந்தவை. அவற்றை திரும்பிப் பார்க்கையில் என்னை ஆளும் மூதாதையர் குரலென்றே உணர்கிறேன்” என்றான்.
“ஆம், அவை நெடுந்தொலைவிலிருந்து எழுந்து என்னை வந்தடைகின்றன. நான் முற்றிலும் உளம்தெளிந்து நின்று அவற்றை கேட்கிறேன். இது காலச்சுழி. இதில் வென்று மிகுந்தெழுவது பாண்டவர்கள் உருவாக்கிய அறமயக்கங்களாக இருக்கலாகாது” என்றான் துரியோதனன். “அரசே, அறப்பிழை தொடங்கியது நீ அவையில் பெண்ணை சிறுமை செய்தபோது என உணர்கிறாயா?” என்றார் கிருபர். “ஆம், ஆனால் அது அறப்பிழை. ஆசிரியரே, அறப்பிழைகள் நமக்கு நெடுங்காலம் பின்னால் உள்ளன. சென்ற யுகங்களிலிருந்து நம்மை வந்தடைந்தவை அவை. அறமும் அல்லதும் தெளிந்திருந்தபோது விழைவால், ஆணவத்தால், வஞ்சத்தால் அறத்தை மீறிச்சென்றவர்கள் அன்றிருந்தனர். என்னிலெழுந்தவர்கள் அவர்களே. ஹிரண்யனும் ராவணனும் கார்த்தவீரியனும்.”
“ஆசிரியரே, அவர்கள் அறமென எழுந்த தெய்வப்பேருருக்களால் அழிக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் அறமிலிகள் அல்ல. இவர்கள் வருயுகத்தின் வடிவங்கள். அறமயக்கங்களை உருவாக்குபவர்கள். நூல்துணையும் தெய்வத்துணையும் கொண்டு அழிவை நிகழ்த்துபவர்கள். இவர்களை எதிர்த்து இனி தெய்வமும் எழப்போவதில்லை. கலியுகத்தில் வேதம் காக்க விண்ணளந்தோன் எழமாட்டான் என்கின்றன நூல்கள். இவர்களை இன்று வென்றாகவேண்டும். ஒருவேளை நாராயணம் அஸ்வத்தாமரின் கைக்கு வந்ததே இக்கடன் முடிக்கத்தானோ என்னவோ?” என்றான் துரியோதனன்.
கிருபர் நீள்மூச்சுவிட்டு “ஆம், எவ்வகையிலாயினும் இதை அவனிடம் சொல்ல வேண்டும். நீங்கள் எவரும் சொல்வதைவிட நான் கூறுவதே உகந்ததென்று தோன்றுகிறது. அவன் முடிவெடுக்கட்டும், அல்லது அந்த நாராயணமே முடிவெடுக்கட்டும்” என்றார்.