திலீப் குமார் கட்டுரை படித்தேன் – குட்டிக் கிருஷ்ண மாராரிலிருந்து, திலீப் குமாருக்கான பாலம் மிக அழகாகக் கட்டியிருந்தீர்கள். முன்பு யாரோ நீங்கள் ஒரு சுமாரான பேச்சாளர் என்று சொல்லியிருந்ததால், எனது எதிர்பார்ப்புகள் குறைவாகவே இருந்தது. ஆனால், உங்கள் உரை எனது எதிர்பார்ப்புகளை மிஞ்சி விட்டது – உங்கள் எழுத்தின் வீச்சு நிச்சயமாக மேடைப் பேச்சில் இல்லை. So what.. the concept was wonderful and very apt. அழகு. திலீப் குமார் கதைகளின் சாரமாக நீங்கள் எடுத்துக் காட்டியிருந்த அங்கதத்தை நானும் உணர்ந்திருக்கிறேன். அவரை 1992ல் தில்லி உலகப் புத்தகச் சந்தையில் சந்தித்திருக்கின்றேன் – நல்ல மனிதர் –
அந்தப் பூனைக் கதை எனக்கு ஜெயகாந்தனின் அக்னிப் பிரவேசத்தை நினைவூட்டியது.
அன்புடன்
பாலா
&&&
அன்புள்ள ஜெ,
திலீப் குமார் என்ற கட்டுரை சிறப்பாக இருந்தது. தமிழில் நான் மிகவும் விரும்பி வாசித்த சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். மிக லேசான கதைகள் என்றும் தோன்றும், மறக்கவும் முடிவதில்லை. அப்படி என்ன சிறப்பு இந்தக்கதைகளில் என்றும் இலக்கியவாதிகள் இந்தக்கதைகளை அங்கீகரிக்கிறார்களா என்றும் நான் குழப்பம் கொன்டது உண்டு. உங்கள் கட்டுரையைக் கண்டதும் தெளிவு பெற்றேன். நிறைய யோசிக்கவும்செய்தேன். உண்மைதான் கவித்துவமான வெளிப்பாடுக்கு நிகராகவே ஒரு நல்ல புன்னகையும் அமைய முடியும்தான்.
சிவ்ராம் தேஜஸ்
&&&
அன்புள்ள ஜெ,
திலீப்குமாருக்கு விருதளிக்கும் விழாவுக்கு நீங்கள் வருவதைக் கவனித்திருந்தால் நேரில் வந்து சந்தித்திருப்பேன். தவறவிட்டுவிட்ட்டேன். உங்கள் குரலையும் கேட்டிருக்கலாம். பரவாயில்லை. நல்ல உரை. நேர்த்தியாக ஒரு நல்ல கட்டுரை போலவே இருந்தது. அங்கதம் என்றால் அது ஓர் உன்னதமான வாழ்க்கைப்பார்வை என்று நீங்கள் சொன்னது யோசிக்கத்தக்கது. மௌனி என்று நினைக்கிறேன், அங்கதம் என்றால் நல்ல இலக்கியம் அல்ல என்றும் ஆகவே புதுமைப்பித்தன் மேலான இலக்கியவாதி அல்ல என்றும் சொல்லியிருப்பதாக எங்கோ படித்திருக்கிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன?
சுப்ரமணியம் குமார்
அன்புள்ள சுப்ரமணியம் குமார்
அந்தக்கருத்து மௌனி ஒரு பேட்டியில் சொன்னது. அது ஆழமற்ற கருத்து. அவர் அங்கதத்தை கிண்டல் என்று மட்டுமே எடுத்துக்கோன்டிருக்கிறார். அதற்குப்பின்னால் உள்ள தரிசனத்தைப்பார்க்க மறந்துவிட்டார்
ஜெ
**
ஜனவரி 7ம் தேதி உங்க்ள் Blog பார்தேன். எனக்கு ஒரு சொல் புரியவில்லை.அங்கதம் என்றால் என்ன. எனக்கு புரிந்தவரை equanimity என்று கொள்ளாமா? இது சரியா? இம் மாதிரியான ரஸ்ம் தி.ஜானகிராகன் கதைகளில் பார்க்கலாம். உதாரணமாக “கொட்டு மேளம்”.
ஆர்.வெங்கட்ராமன்
அன்புள்ள ஆர் வெங்கட்ராமன் அவர்களுக்கு,
என் இணையதளத்தில் கலைச்சொற்கள் என்று ஒரு தலைப்பு இருக்கிறது. அவற்றில் பொதுவாக இவ்விணையதளக் கட்டுரைகளிலும் நவீனத்தமிழிலக்கியத்திலும் பயன்படுத்தப்படும் சொற்களுக்கான அகராதி ஒன்று உள்ளது. பயன்படுத்திக்கொள்ளுங்கள்
உங்கள் தமிழ் நன்றாகத்தானே உள்ளது.
நன்றி
ஜெ