ஈழ இலக்கியம் – கடிதங்கள்

கைலாசபதி
கைலாசபதி

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள்

குட்டுதற்கோ…

போலிச்சீற்றங்கள்

ஜெ

ஜெயமோகனின்வாயை கொள்ளிக்கட்டையால் சூடு வைக்க சொல்லிவைக்கணும் இல்லை நாம் செய்யணும்– இது இலங்கையின் இலக்கியம் பற்றி நீங்கள் சொன்ன கருத்துக்காக வந்த பலநூறு எதிர்வினைகளில் ஒன்று. அப்படி நீங்கள் என்ன சொன்னீர்கள்? இலங்கையில் அரசியல் – கருத்தியல் சார்ந்தே இலக்கியங்களை மதிப்பிடுகிறார்கள், அழகியல் விமர்சனம் இல்லை. ஆகவே தனக்கு ஏற்புள்ள கருத்துகொண்ட எல்லா எழுத்தாளர்களையும் ஒரே பட்டியலாகப் போட்டுவிடுகிறார்கள். இவ்வளவுதான்.

சரி, இதற்காகத் திட்டித்தீர்த்த கும்பலில் எவராவது அழகியல் விமர்சனம் உண்டு என்கிறார்களா என்றால் அது தேவை இல்லை என்கிறார்கள். அழகியல்விமர்சனம் தேவை என்று சொல்வதே ஒரு கருத்தியல்நிலைபாடு, அது அரசியல் என்கிறார்கள். அரசியல்சார்ந்தே இலக்கியத்தை பார்ப்போம் என்றுதான் அத்தனைபேரும் சொல்கிறார்கள். ஆனால் வெட்டுவோம் குத்துவோம் குடலை உருவுவோம் என்றவகையில் முகநூலில் மட்டும் நூற்றுக்கணக்கான பதிவுகள்.

அவற்றை பின்னூட்டமாக இட அனுமதிக்கும் எழுத்தாளர்கள்கூட இலக்கியவிமர்சனத்தில் இந்த வன்முறைக்கும் காழ்ப்புக்கும் என்ன இடம் என்று கேட்கவில்லை. ஒரு வார்த்தை கண்டிக்கவில்லை. ஈழ இலக்கியத்தில் இத்தனை ஈசல்கள் பறக்க இதுதான் காரணம். ஈழத்தவர் ஏன் ஒருத்தரை ஒருத்தர் சுட்டுக்கொண்டு அழிந்தார்கள் என்றால் இத்தனை அழிவுக்குப்பின்னரும் இவர்களிடம் இருக்கும் இந்த கண்மூடித்தனமான வெறிதான் காரணம்.

நாமும் இலக்கியச்சண்டை போடுகிறோம். ஆனால் இப்படி எதையுமே புரிந்துகொள்ளாத கண்மூடித்தனம் இங்கே வந்ததே கிடையாது. வெட்டுவோம் கொல்லுவோம் என்ற பேச்சே வந்ததில்லை. இது அந்தக்காலம் முதலே இப்படித்தான் இருந்தது என என் சைவ நண்பர் சொன்னார். கதிரைவேற்பிள்ளை போன்றவர்கள் சைவர்களைப் பற்றி எழுதிய வன்முறையெல்லாம் இவர்களின் வரலாறுதான். நல்லவேளை நானெல்லாம் தமிழ்நாட்டில் பிறந்து இங்கே வாழ்கிறேன், இந்த வன்முறைக்கும்பலுக்கு வெளியே மூச்சுவிட முடிகிறது என்ற நிம்மதிதான் உருவாகியது

இந்தச் சிறு விமர்சனத்துக்குக் கூட அங்கே இடமில்லை என்றால் அங்கே என்னதான் இலக்கியம் பேசுகிறார்கள்? எதைத்தான் விவாதிக்கிறார்கள். அடச்சை என்று சொல்லத்தோன்றுகிறது

எஸ்.ராமச்சந்திரன்

அன்புள்ள ராமச்சந்திரன்

அந்தக்குரல்களை நானும் கேட்டேன். அவர்கள் இலக்கியவாசகர்களோ இலக்கியம் பற்றி தெரிந்தவர்களோ அல்ல. இங்கே தமிழகத்தில் தெரியாதவர்களுக்கு தங்களுக்குத் தெரியாது என்றாவது தெரியும். ஈழத்தவர்களில் கணிசமானவர்களிடம் அந்த இயல்பு இல்லை. அவர்களை வைத்து ஈழ இலக்கியத்தை மதிப்பிடவேண்டியதில்லை.

எச்சூழலிலும் இலக்கியம் மையப்பெரும்போக்குக்கு எதிரான விசையாகவே எழும். எதிர்ப்பினூடாகவே நிலைகொள்ளும். தமிழகத்திலும் சிற்றிதழ்களில் இலக்கியம் அவ்வாறே வளர்ந்தது. பெரும்பான்மையின் ரசனை அறிவுத்திறன் ஒழுக்கம் ஆகியவற்றுடன் ஒத்துப்போவது இலக்கியமாக அமைய முடியாது. எங்கும் அதுவே நெறி.

ஜெ

அன்புள்ள ஜெ

ஈழத்து கும்பலின் கொப்பளிப்புகள் இன்னமும் முடிந்தபாடில்லை. நான் நடுவே ஒரு வீடியோ பார்த்தேன். அதில் ஒரு தொலைக்காட்சி நெறியாளர் ஈழ அறிஞர்கள் என சிலரை உட்காரச்செய்து பேசுகிறார். அந்த நெறியாளருக்கு இலக்கியவாசனை கிடையாது என்பது வெளிப்படை. வெறும் வம்பர். அவருக்கு உங்கள் பெயரே இப்போதுதான் தெரிந்திருக்கும். அவர் தனக்கு வேண்டிய விதத்தில் கேள்விகளைக் கேட்கிறார். ‘ஜெயமோகன் இப்படிச் சொல்லியிருக்கிறாரே, இது தப்புதானே?” என்றவகையில் அவர் கேட்கிறார். இந்த அறிஞர்கள் ஒருவர்கூட  ‘அவர் எங்கே சொன்னார், சரியாக என்ன சொன்னார்?’ என்று திருப்பிக் கேட்கவில்லை. நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று அறிஞர்களுக்கு முன்னரே தெரிந்திருக்கவுமில்லை. நெறியாளர் கேட்பதை ஒட்டி ‘அப்டி சொல்லியிருந்தா தப்புதான்…” என்று பிலாக்காணம் வைக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஓர் அறிவுசெயல்பாட்டாளனின் அடிப்படைத் தகுதியே இன்னொருவரின் கருத்தை அவர் தன் வாயில் திணிக்க அனுமதிக்காமலிருப்பது. இந்த வம்புக்காக இலக்கியப்பேச்சுக்கு வரும் இவர் இதற்கு முன்னால் ஈழ இலக்கியம் பற்றி நீங்கள் தலையணை தலையணையாக எழுதியபோது எங்கே போயிருந்தார்? அதையாவது இந்த மொண்ணைகள் யோசிக்கவேண்டும் அல்லவா? இவர்களுக்கே ஒன்றும் தெரியவில்லை. வெறுமே டிவியில் காட்டுகிறார்கள் என்றதுமே வந்து உட்கார்ந்து அந்த ஆள் விரும்புவதை தாங்களும் சொல்கிறார்கள்.

இந்த மொண்ணைகள்தான் ஈழத்தின் மூத்த அறிஞர்கள் என்றால் இவர்களை பார்த்து எழுதும் அடுத்த தலைமுறை எந்த லட்சணத்தில் எழுதும்? சலிப்பும் கோபமும்தான் வந்தது. ஒரு தலைமுறையையே சீரழிக்க இந்த வெண்ணைகளே போதும். இவர்களை எல்லாம் தூக்கி வீசிவிட்டு சிந்திக்காவிட்டால் ஈழ இலக்கியத்திற்கு விடிமோட்சமே இல்லை

டி.சபரிநாதன்

அன்புள்ள சபரிநாதன்

தொண்ணூறுசதவீதம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நெறியாளர்களால் கட்டமைக்கப்படுபவை. சென்று அமர்ந்ததுமே அவர்கள் பவுடர் போட்டு விடுவார்கள். அது ஒரு குறியீட்டுச்செயல். அதன்பின் அங்கே பேசுவது அந்தப் பவுடர்தான்

ஈழத்து இலக்கியச் சூழலை சென்ற தலைமுறையின் கீழ்மை தரையோடு தரையாக நசுக்கியிருக்கிறது. அவர்களின் சுயநலம், கோழைத்தனம், சிறுமைகள். முந்தைய தலைமுறையின் வழிகாட்டலோ விமர்சனமோ இல்லாமல் சீரழிந்திருக்கிறது ஈழச்சூழல். புளித்துநாறும் அவர்களின் அரசியலை அடுத்த தலைமுறையும் பேசிக்கொண்டிருக்கிறது.

அவர்களை ஒதுக்கிவிட்டே அங்கே இளைய தலைமுறை எண்ணத் தொடங்கவேண்டும்.. இலக்கியம் ஓர் அழகியல்செயல்பாடு என அவர்கள் உணரவேண்டும். எங்கும் எதிலும் ஒரே அரசியலை சலிக்கப்புளிக்கப் பேசிக்கொண்டிருப்பதை கைவிடவேண்டும். கருணையின்றி தங்களைத் தாங்களே  அழகியல்சார்ந்து விமர்சித்துக்கொள்ளவேண்டும். இலக்கியத்தின் இலக்கும் எல்லையும் மிகமிக விரிந்தவை என உணரவேண்டும்.

நல்லது நடக்கும். கீழ்மைகளில் இருந்தே எப்போதும் இலக்கியம் மேலும் வீச்சு கொண்டு எழுந்திருக்கிறது. எழுபதுகளில் தமிழ்நாட்டின் பொதுச்சூழல் எப்படி இருந்ததோ அப்படி இருக்கிறது இன்றைய ஈழத்தின் பொதுச்சூழல்.

ஜெ

ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-81
அடுத்த கட்டுரைசமண வழி – கடலூர் சீனு