காடு அமேசானில் வாங்க
காடு வாங்க
அன்புள்ள ஜெ,வணக்கம்.
இது எனக்கு ஜெயமோகனின் நான்காவது நாவல்.முதலில் வெள்ளை யானை பிறகு அறம்,ரப்பர் அடுத்து இதோ காடு.முதல் முறை காடு வாசித்தபோது ஒன்றிரண்டு அத்தியாயங்களாக நின்று நிதானமாக வாசித்து, பின்பு வாசித்தவரை கொஞ்ச நேரம் அசை போட்டு அசை போட்டுத்தான் அடுத்த நகர்வு என்றுதான் வாசிக்க முடிந்தது. நீங்கள் அடிக்கடி சொல்வது போல் வாசக இடைவெளி கள் மிகுந்த நாவல்.வாசித்து முடித்ததும் அதே சூட்டோடு மறு படியும் வாசிக்க வேண்டும்போலெழுந்த உளத்தூண்டலை ஒதுக்க முடியவில்லை.இந்தமுறை காடு பல புதிய தரிசனங்களைத் தந்தது..முதல் முறையை விட இரண்டாம் முறை வாசிக்கும்போது நாவல் மேலும் துலங்கிய அனுபவத்தைக் கொடுத்தது.அடடா! என்னவொரு நாவல். கொன்னுபுட்டான்யா! என்று புலம்பிக்கொண்டேன் நாவலில் வரும் அய்யரைப்போல.அய்யருக்காவது புலம்புவதற்கு அவ்வப்போது கிரிதரன் மாட்டிக்கொள்கிறான்.எனக்கு புலம்புவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் நல்ல துணை கிடையாதென்பதாலேயே இக்கடிதம்.
நாவலில் வரும் அத்தனை பாத்திரங்களும் வாசகனுக்குப் பல வாழ்வியல் அனுபவங்களைப் போகிற போக்கில் சொல்லிச் செல்கின்றன.ஒவ்வொரு சிறிய பாத்திரமும் காத்திரமான முத்திரையுடன்தான் வந்து போகிறார்கள்.வந்து போகிறார்கள் என்று சொல்வது மிக மிக தட்டையான சொற்பிரயோகம் .அனைவரும் நமக்குள் தங்கி விடுகிறார்கள்.பொதுவாக நாவல் வாசிக்கும்போது எழுத்தாளனை வியக்கும் வரிகளை அடிக்கோடிடுவது என் வழக்கம்.ஆனால் என்னமோ தெரியவில்லை காடு முழுவதும் பென்சில் கோடுகளால் வரிந்து வைத்திருக்கிறேன்.பல நாட்கள் தூக்கத்தை விழுங்கிய நாவல். நனவிலும் கனவிலும் காட்டின் வரிகள்தான் ஸ்குரோலில் ஓடிக்கொண்டிருந்தது.ஒரு நாள் பிற்பகலில் தூக்கம் கண்ணசர புத்தகத்தை அப்படியே ஒரு குழந்தையை மார்பில் கிடத்தியது போல் கவிழ்த்து வைத்துக்கொண்டு தூங்கி விட்டேன் போல.தூக்கத்தில் ஒரு கனவு.எஞ்சினீயர் பங்களா.பங்களா முன்பு நிற்கும் ஜீப்பின் பின்னால் உள்ள பக்கவாட்டு சீட்டில் எதிரும் புதிருமாக மலையனும் மலையத்தியும் அமர்ந்திருக்க மலையத்தியின் இடுப்பில் ஒரு கூடை.டிரைவர் சீட்டில் யாரு? அட ! நம்ம அய்யரு.ஜீப்பு ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ணுகிறது.அய்யர் பதட்டத்துடன் சாவியை முடுக்குகிறார்.கிர்ர்ர்..கிர்ர்ர்ர்..உள்ளிருந்து கிரி கையை ஆட்டிக்கொண்டு ஓடி வருகிறான்.இத்துடன் விழிப்பு வந்து விட்டது.அன்று நான் படித்து மூடிய பக்கம் அய்யர் பங்களாவில் மலையன் பூஜை செய்த பகுதி.அதன் பிறகு இரண்டு நாளைக்கு புத்தகத்தைத் திறக்கவே இல்லை.மற்றொரு நாள் வானொலியில் மழைக்குருவி படத்தில் வரும் நீல மலைச் சாரல் என்ற பாடல் இசைத்துக்கொண்டிருந்தது அதில் திசையெல்லாம் மழையில் கரைந்து தொலைந்ததென்னஎன்று ஒரு வரியைக்கேட்டதும் அட! இது நம்ம ஜெயமோகனின் வரிகள் அல்லவா? கவிஞர் காட்டிலிருந்து வரிகளை உருவிக்கொண்டாரோ?என்று நினைத்துக் கொண்டேன்.அந்த அளவிற்கு காடு என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.
கிரிதரன் பற்றித்தான் எனது கடிதம் அமைய வேண்டும் என்று முன் முடிவோடுதான் எழுத அமர்ந்தேன் அது எங்கெங்கோ இழுத்துக்கொண்டு போகிறது.இந்த கிரி இருக்கிறானே அவன் ஒரு கோழை.இதை நான் சொல்லவில்லை.மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர் துரையே கொடுத்த செர்டிஃபிகேட்தான்.ஆனால் அவர் சொன்ன அர்த்தம் வேறே.இங்கு நான் குற்றம் சாட்டுவது அந்த அர்த்தத்தில் இல்லை.அவனால் வாழ்க்கை முழுவதும் ஒரு திடமான முடிவெடுத்து அதன் படி செயலாற்ற முடியாமல் வாழ்வின் போக்கிலேயே,காட்டாற்றில் நீரின் சுழிப்பின் விசையில் ஓடி ஆங்காங்கே தடுக்கும் பாறையில் சற்றே இளைப்பாறி பின் மீண்டும் ஆற்றின் போக்கிலேயே சென்று எங்கோ கரையொதுங்கும் தவிட்டைப் புதர் போல வாழ்ந்து கொண்டிருக்கிறான்.சாரமில்லாத வாழ்க்கை.அவன் வாழ்க்கை முழுவதும் மனதினை அறிவினால் ஆளத் தெரியாமல் மனம் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் தன்னை ஒப்புக்கொடுத்தவனாக வாழ்கிறான் என்பதுதான் என் குற்றச்சாட்டு.ஆனால் அவனால் அத்தனையும் ஆசைப்படமுடிகிறது.கனவு காண முடிகிறது.அதை நிறைவேற்றிக்கொள்ளும் துணிச்சலோ,தைரியமோ இல்லாதவன்.ஆனால் அவனைச் சுற்றிலும் காமம் காட்டறு போல் சுழித்துக்கொண்டு ஓடுகிறது.மாமி – கண்டன் புலையன்,குட்டப்பன் – சினேகம்மை,ரெஜினா,குரிசு,அய்யர்,வன நீலியின் கதை என அவன் கண்டதும் கேட்டதும் அனைத்தும் காமம் சார்ந்தவையாகவே இருப்பதால் அதைக் கடக்க முடியாமலும் அதிலிருந்து மீள வழி தெரியாமலும் தவிக்கிறான்.அவன் நீலியைக் கூட காமத்தின் வழியாகவே உள் வாங்கி பின்னர் அதை காதலாக மடை மாற்றிக்கொள்கிறான். நீலியை அவன் அடைய முடியாததற்கு அவனது தயக்கமும்,அச்சமும்தான் காரணம்.அந்த அச்சம் அவன் அவனைச் சுற்றியுள்ளவர்களின் தோற்றுப்போன வாழ்க்கையைப் பாடமாக எடுத்துக்கொண்டதாலா அல்லது தோற்றுப்போனவர்களின் வாழ்க்கையை மட்டுமே அவன் அறிந்ததால் ஏற்பட்ட முதிர்ச்சியற்ற அனுபவத்தாலா என தெரியவில்லை.
ஒன்றுமறியாத தூய சந்தனம் போன்ற நீலியை,மலையத்தியை, வானம்பாடியென கவலையற்று பாடித்திரிந்த தேவதையை இவன் இந்த கேடுகெட்ட சமூகத்தின் காம நாக்கு கொண்டு வருடுகிறான்.அதற்கு கபிலனைத் துணைக்கு அழைத்து பக்கத்தில் வைத்துக்கொள்கிறான்.அவனது தொடர்ந்த தூண்டலால்தான் அவள் காமத்தின் வயப்பட்டவளாக அவனது குடிசைக்கு அன்றிரவு கொட்டும் மழையில் வருகிறாள்.இவனது அச்சம் காணமாக நூலிழையில் அத்தருணத்தையும் கடந்துவிடுகிறான்.இந்த அச்சம் இவனுக்குக் கொடுத்த பரிசு என்ன? தனது பலம் என்னதென்றறியாத கீறக்காதன் எப்படி காட்டாற்றைக்கடக்கமுடியாமல் தவித்து கடைசியில் எஞ்சினீயர் மேனனது குண்டடி பட்டு அண்ணாச்சியின் வீட்டு ஹாலின் தெற்குச் சுவரில் பாடம் செய்யப்பட்ட தலையாக மாட்டப்பட்டு காலத்தின் சாட்சியாக நிற்கிறதோ அவ்வாறே கிரிதரன் பணிக்கத்தியால் உயிர்ச் சேதம் செய்யப்பட்டு வாழ் நாளெல்லாம் நடைப் பிணமாகவே வாழ்கிறான்.கீரக்காதனின் பாடம் செய்யப்பட்ட தலை கிரிதரனின்காடு விட்டிறங்கிய வாழ்க்கையின் குறியீடாகவே நான் பார்க்கிறேன்.
கடைசியில் முடிக்குமுன் ஒரு வார்த்தை.ஒரு நாளைக்கு பேச்சிமலை உச்சியில்,வானம் பூமியைத் தொடும் முதல் புள்ளியில்,வாழும் அனைத்தும் அறிந்த பறவையைத் தேடி போகத்தான் போகிறேன்.அப்பறவையிடம் அய்யர் வாழ்வில் எதற்காக ஏங்கினார் என்று கேட்கத்தான் போகிறேன். நீங்கள் சொல்லா விட்டால் என்ன?
நன்றி ( காட்டைப் படைத்த இறைவனுக்கு )
என்றும் அன்புடன்,
இரா.விஜயன்.
புதுச்சேரி-10
அன்புள்ள விஜயன்
காடு இப்போது என் நினைவில் மிக ஆழமாகச் சென்றுவிட்ட நாவல். அதை எழுதியதாக அல்ல, உண்மையிலே நிகழ்ந்ததாகவே நினைவுகூர்கிறேன். உங்கள் கடிதம் மீண்டும் பழைய நினைவுகளை கிளறுவதுபோல் இருந்தது
ஜெ
காடு- வாசிப்பனுபவம்
கன்யாகுமரியும் காடும்
காடு-முடிவிலாக் கற்பனை
காடு -கடிதம்
காடும் மழையும்
காடு- கடிதங்கள்
காடும் யானையும்
கன்யாகுமரியும் காடும்
காடும் குறிஞ்சியும்
காடு- ஒரு கடிதம்
காடு– ஒரு கடிதம்
காடு – பிரசன்னா
காடு -ஒரு பார்வை