அன்புநிறை ஜெ,
தங்கள் தளத்தில் முந்தைய பதிவுகள் சில எனும் பிரிவின் கீழ் இன்று உச்சவழு என்ற சிறுகதையை படித்தேன். கதையை படித்தவுடன் இனம்தெரியா ஒரு மன நிம்மதியும், இருளும் என்னை சூழ்ந்தது போன்று உணர்ந்தேன். முதல் பத்தியே என்னை சரளமாக கதைக்குள் இழுத்துக்கொண்டது. கதையில் மிக கச்சிதமாக தாங்கள் விவரித்துள்ள இடவமைப்பு, கதாபாத்திர உரையாடல்கள் ஏதோ சினிமா பார்ப்பது போல மனதில் காட்சி காட்சியாக வந்து சென்றது. நேற்று வெண்முகில் நகரம் படித்துக்கொண்டிருந்த பொழுது, ஃபூரி, பூரிசிரவசிடம் கூறுவதாக இவ்வரிகள் அமைந்திருக்கும், “கூரிய மூக்கை வைத்துக்கொண்டு நீ என்ன செய்யபோகிறாய்? அந்த சிபிநாட்டு இளவரசிக்கு இவளுக்கும் சேர்த்தே மூக்கு இருக்கும்” என்றும் அதற்கு மறுமொழியாக, ஆம் மூத்தவரே” “மூக்கு பற்றிய பூசல் தொடங்கட்டும்…” என்று கூறுவதாக அமைந்திருக்கும், நேற்று படித்த உச்சவழு சிறுகதையும், இதே போன்று மூக்கு பற்றிய ஒரு சித்தரிப்பு வரும், முருகன், துரையின் முகத்தை விவரிக்கும் பொழுது, மூக்கு அம்மாம் பெரிசு என்று விவரிப்பான், உச்சவழுவில் இவ்வரிகள் வாசித்த பொழுது, நேற்று படித்த அந்த வரிகளின் மூக்கையும், இந்த கதையின் மூக்கையும் நினைத்துக்கொண்டேன்.
மேலும், உச்சவழு என்ற பெயர் டாப்ஸ்லிப்பின் தமிழ் பெயராகக் கொண்டாலும், கதையின் வடிவத்திலேயே ஒரு படிமமாக பயன்படுத்தியிருப்பது உயிர்ப்பூட்டுகிறது. கதை மாந்தன், தன் அம்மாவை கடைசி நேரத்தில் கூட வந்து பார்க்கவில்லை. அதை கடைசிவரை அவனை உருத்துகிறது, இதுதான் அவன் வாழ்வின் உச்ச ‘வழு’ என்று என் வாசிப்பில் எடுத்துக்கொண்டேன். மேலும் தாயின் பாசத்தை, சக்தியை, ஒளியை யானையைவிட வேறு எந்த விலங்குடனும் உருவகப்படுத்திவிட முடியாது, சமீபத்தில் தங்களின் கல்பற்றா நாராயணனின் தமிழ் வடிவ உரையை சொல்புதிது குழுமத்தில், மணவாளன் அவர்கள் பகிர்ந்திருந்தார், அதில் கல்பற்றா யானை சிலையை தடவிக்கொடுத்து, யானைக்கு கல்தான் நல்லது என்று சொல்வதாக கூறியிருந்தீர்கள். அதாவது யானையின் வலிமைக்கும், பிரம்மாண்டத்திற்கும்,அமைதிக்கும் ரத்தமும் சதையும் ஏதோ ஒரு வகையில் பொருத்தமின்மையை உருவாக்குகிறது என்றும், யானை என்ற idea எவ்வாறோ கல் இணைந்துகொள்வதாகவும் தாங்கள் புரிந்துகொண்டதாகவும், இவ்வளவு சிக்கலான ஒரு கருத்தை ஒரு வரியில் சொல்வதற்கு மொழியை எவ்வாறோ திருக வேண்டியிருக்கிறது என்றும் சொல்லியிருந்தீர்கள், இவ்வரிகளை வாசிக்கும் பொழுது அப்படியே உச்சவழுவில் தாங்கள் காட்டியிருக்கும் அம்மாவின் கதாபாத்திரத்தின் சித்தரிப்பு என்று எடுத்துக்கொள்ளும் வகையில் அமைந்திருந்தது, உச்சவழுவில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பீர்கள், அழுந்தி அழுந்தி நிலக்கரிபோல கருமையும் கனமும் கொண்டவளாக ஆகிவிட்டாள்.. ‘கோமதியா, அவ கரும்பாறையில்லா?’ என்றுதான் அம்மா வேலைசெய்த வீடுகளில் சொல்வார்கள். கருஞ்சுழி. தனக்குள் தானே சுழல்வது. பிரபஞ்சத்தையே அள்ளி உண்பது. என்ன ஒரு இருட்டு. இருட்டு மேலும் மேலும் இருட்டாகிக்கொண்டே செல்லக்கூடிய ஒரு சுழி. இதில் அம்மாவின் கருமையும் கனமும், கரும்பாறை என விவரிப்பும், அப்படியே கல்பற்றா நாராயணனின் உரையில் தாங்கள் குறிப்பிட்டுள்ள, பிரம்மாண்டத்திற்கும்,அமைதிக்கும் ரத்தமும் சதையும் ஏதோ ஒரு வகையில் அந்த தாயும் பொருத்தமின்மையாக இருக்கிறாரோ? என்று எண்ண வைத்தது… மிகப்பெரிய புரிதலைக் கொடுத்தது.
ஆக? பொதுவாக இவ்வாறு என் வாசிப்பை நான் தொகுத்துக்கொண்டேன். தாயின் வலிமையும் யானையின் வலிமையும், அதற்கு பொருத்தமற்ற சதையும் ரத்தமுமாக, உச்சவழுவை வலிமையும், பிரம்மாண்டமுமாக படைத்துள்ளீர்கள். மொழியை திருகி, உச்சவழு எனும் மாபெரும் படைப்பை தந்துள்ளீர்கள், யானையை கல்லில் செதுக்கும் பொழுது ஒருவித பளபளப்பு தன்மை வெளிபடும். மாமல்லபுரம் யானை சிற்பத்தில் அந்த பளபளப்பை இன்றளவும் காணலாம். இக்கதையை அதே போன்று முடிவில், பௌர்ணமி நிலவின் ஒளியில், யானையின் பளபளப்பை, கதாநாயகனின் இறுதி முடிவை நோக்கி முன்னேற்றி செல்வதாக, அமைத்துள்ளீர்கள், இதில் நாயகன் இறப்பை நோக்கிதான் செல்கிறான் என்று பொதுவாக எடுத்துக்கொள்ளத்தேவையில்லை, வெளிச்சம் அவனை நெருங்க நெருங்க, அவனின் இத்தனை நாள் இருள், உச்சவழு ஆகியவற்றிலிருந்து விடுதலையடைய வைத்தது, தான் செய்தது என்ன? செய்யப்போவது என்ன? எனும் புரிதலை அவனுக்கு ஏற்படுத்தலாம்…. ஈரோடு வாசகர் சந்திப்பில் கதையின் திருப்பம் எந்தளவிற்கு முக்கியத்துவம் என்றும், கதையின் முடிவுதான் கதையை மேலும் தொடரச்செய்கிறது என்றும் கூறினீர்கள், அதற்கு ஏற்ற கதை, மிக தற்செயலாக உச்சவழுவை படித்தேன்… இதில் இவ்வளவு காட்சி சித்தரிப்புகள், படிமங்கள் கொண்டு இத்தனை இணைப்புகளையும், புரிதலையும் அடைவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை…. இன்றைய நாளும் தங்களின் இந்த கதையுடன் பொழுது நன்றாக சென்றுக்கொண்டிருக்கிறது…
திருநெல்வேலி கட்டண உரையில் பங்குக்கொள்ள முடியவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டேன்… இன்று தளத்தைக் கண்டவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஈரோடு கிருஷ்ணன் அவர்களையும் உரையைக் கேட்டு நச்சரித்துக்கொண்டு இருந்தேன்… இனி அதற்கு அவசியமில்லை… இதில் கண்டிப்பாக கலந்துக்கொள்வேன்… இவ்வளவு விரைவாக ஏற்பாடு செய்தமைக்கு மிக்க நன்றி! மிக்க மகிழ்ச்சி!
அன்புடன்
ரா. பாலசுந்தர்