அக்கினிப்பிரவேசம் – ஜெயகாந்தன் கதை
மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன் கதை
ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம். ஈரோடு வாசகர் சந்திப்பின் போது தாங்கள் பிரபஞ்சனின் மரி என்கிற ஆட்டுக்குட்டி கதையை பற்றிய தங்களின் விமர்சனப் பார்வையை கூறுனீர்கள். கதை முழுவதும் செயற்கையான கட்டமைப்பு, கதாப்பாத்திரங்கள் தன்னியல்பில் செயல்படாமல் ஆசிரியரின் கைப்பாவையாக செயல்பட்டது, சட்டென்று திருந்தும் மரி, ‘நா.பார்த்தசாரதி’ தனமான லட்சிய நடத்தைக்கொண்ட கதாநாயகன் எனக் கூறினீர்கள். எனக்கும் அப்படியே தோன்றியது.
ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம் கதையிலும் ஆரம்பம், கட்டமைப்பு மற்றும் crisis பகுதிவரை கச்சிதமாக, தனது கருதுக்காகவே உருவாக்கப்பட்ட(ideal) கதாபாத்திரங்கள் மூலம் சிந்தனை தூண்டும் விதமாக நேர்த்தியாக சொல்லி இருந்தார். தான் சொல்லப்போகும் கருத்தை மனதில் கொண்டு ஒற்றைப்படையாக இல்லமால் கச்சிதமான கதாப்பாத்திர உருவாக்கத்தின் மூலம் கட்டாயத்திற்கும் விருப்பத்திற்கும் இடையில் மௌனமான மயக்க நிலையல் அந்த சம்பவத்தை நிகழ்த்தி இருப்பார்.
ஆனால் solution பகுதியில் வரும் அம்மா கதாப்பாத்திரம் தன்னியல்பில் நடந்துக்கொல்லாமல் ஆசிரியரின் கைப்பாவையாக தானே செயல்படுகிறாள். ‘நெருப்பை அள்ளி அவள் தலையில் கொட்டினால் என்ன?’ என சிந்தித்த மறுநிமிடம் ‘எல்லாம் மனசுதான்டி கொழந்தே, நீ சுத்தமாயிடே, மனசக்கெடுத்துக்காதே’ என மாறுவது செயற்கை தனம் தானே. பிற அனைத்தும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டாலும் இந்த கதாப்பாத்திரம் செயற்கைதனமாக தானே வெளிப்படுகிறது?
இரண்டு கதையையும் நான் ஒப்பிடவில்லை, ஏனென்றால் இரண்டும் வெவ்வேறு ட்ரீட்மென்ட். ‘செயற்கைத்தனம்’ இதை புரிந்துக்கொள்ளவே ஒப்பிட்டு எழுதினேன்.
அன்புடன்
ஆனந்த்ராஜ்
அன்புள்ள ஆனந்தராஜ்,
சாதாரணமாக வாசிக்கையில் எழும் வினாதான் இது. பல எழுத்தாளர்களும் இந்தப்பார்வையை முன்வைத்திருக்கிறார்கள். முதலில் நாம் அறிந்துகொள்ளவேண்டியது கலைக்கு குறிப்பிட்ட இலக்கணங்கள் ஏதுமில்லை என்பதே. அதன் வெளிப்பாடு, அது ஆற்றும் பணிசார்ந்து கலைப்படைப்புக்களை நாம் வகைபிரித்துக்கொண்டே செல்வது அந்தப் புரிதலின் அடிப்படையில்தான். .
கலையில் ஆசிரியன் குரல் எழாத, அல்லது ஆசிரியனின் தரப்பென ஏதும் திரளாத எழுத்துக்கள் உண்டு. ஆசிரியனின் குரல் ஒலிக்கும், ஆசிரியனின் தரப்பு உருவாகி நின்றிருக்கும் படைப்புக்களும் உண்டு. முதல்வகை எழுத்து என அசோகமித்திரனை சொல்லலாம். உலக இலக்கியத்திலும் அவருக்கு பல முன்னோடிகள் உள்ளனர். மாப்பஸான் முதல் ஹெமிங்வே வரை. ஆனால் இரண்டாம் வகை எழுத்திலும் இலக்கியமேதைகள் உண்டு. மிகச்சிறந்த உதாரணம் தல்ஸ்தோய்தான்.
ஜெயகாந்தன் கருத்துத் தளத்தில் செயல்படும் படைப்பாளி. அவ்வகையில் அவருக்கு முன்னோடி மாக்ஸிம் கார்க்கிதான். இவ்வகை எழுத்தில் ஆசிரியருக்கு தரப்பு உண்டு. அது அக்கதையின் ஒட்டுமொத்தமாகத் திரண்டு எழும். அரிதாக ஆசிரியரின் குரலாக கதைமாந்தரும் ஒலிக்கக்கூடும். அதில் ஆசிரியனின் குரலோ கருத்தோ ஒலிப்பது கலைப்பிழை அல்ல, அக்கலையின் நோக்கமே அதுதான். அது எவ்வண்ணம் ஒலிக்கிறது என்பதே முக்கியமானது. அது வாசகனின் உள்ளத்தில் எழுகிறதா என்பதே கேள்வி.
இவ்விரு கதைகளும் அதை சரியாக அடையாளம் காட்ட மிகச்சிறந்த உதாரணங்கள். உதாரணமாக, ஜெயகாந்தனின் கதையின் அம்மா ஒரு வழக்கமான முற்போக்குக் கருத்துக்களைச் சொல்லும் ‘வகைமாதிரி’ [டைப்] கதாபாத்திரம் என வைத்துக்கொள்வோம். அந்த அம்மாள் பெண்ணிடம் ‘நீ கற்பு தவறவில்லை. கற்பு என்பது உடல்சார்ந்தது அல்ல. அது உள்ளம் சார்ந்தது. கடந்தகாலகட்டத்தின் மதிப்பீடுகளைக் கடந்து நீ மேலெழவேண்டும். கற்பு என்பதற்கெல்லாம் நாம்தான் புதிய வரையறைகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும்’ என்று ஒரு பேருரை ஆற்றி கதையை முடித்திருந்தார் என்றால் இந்தக்கதை எப்படி இருக்கும்?
ஆனால் அந்த அம்மாள் அந்தத்தருணத்தில் ஒரு எளிய பிராமண அன்னை என்ன செய்வாளோ அதைத்தான் செய்கிறாள். எந்தக்குடும்பத்திலும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான் அது. அவள் அப்போது பேசுவதும்கூட அந்த சந்தர்ப்பத்தில் ஒரு சராசரி அன்னை பேசும் வார்த்தைகள்தான். அவளுக்கு எந்த ‘கருத்துநிலைபாடும்’ இல்லை. அவள் எந்தக் கருத்தையும் சொல்லவுமில்லை. அவளுடைய அச்சம் அண்டைஅயல் பற்றித்தான். அவர்கள் தன் பெண்ணின் வாழ்க்கையை வம்புகளாகப் பேசிப்பேசியே அழித்துவிடுவார்கள் என்று மட்டும்தான் நினைக்கிறாள். உண்மையாக ஒரு குடும்பத்தில் நிகழக்கூடிய ஒன்றை மட்டுமே இக்கதை காட்டுகிறது.
அவள் குமுறிக்கொந்தளிக்கிறாள். இப்படி ஒருவன் செய்துவிட்டானே என்ற குமுறல். தன் பெண் இத்தனை மக்காக இருக்கிறாளே ந இன்னொரு குமுறல். ஆனால் மத்தியவர்க்கம் அந்தப் பிரச்சினையை ’எப்படியாவது’ கடந்துவிடத்தான் முயற்சி செய்யும். பிரச்சினைகளில் இருந்து தப்பி ஓடுவதும் ஒளிந்துகொள்வதும் கண்ணைமூடிக்கொள்வதும்தான் அவர்களின் வழக்கம். அதையே அவளும் செய்கிறாள். தான் மரபிலிருந்து கற்றுக்கொண்ட இரண்டு விஷயங்கள் வழியாக அந்தத் தருணத்தை கடந்துசெல்கிறாள். ஒன்று, அகலிகை கதை. இன்னொன்று ஒரு வழக்கமான பழமொழி. “தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தட்வை அசிங்கத்தை காலிலே மிதிச்சுடறோம்… அதுக்காக காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப் போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார் – எல்லாம் மனசுதான்டி… மனசு சுத்தமா இருக்கணும்” என்கிறாள்.
முக்கியமான புள்ளிகள் இவை. ஒரு மரபார்ந்த மனம் முற்றிலும் துணிச்சலான முடிவை எடுக்கும்போதுகூட அது தன் மரபிலிருந்து எடுக்கப்பட்டதுதான், தன் மரபுக்கு அது உகந்ததுதான் என்று தனக்குத்தானே சொல்லி தானே நம்பிக்கொள்ளும். அவள் எத்தனை சொற்கள் வழியாக எங்கெங்கே சென்று தொட்டு அந்த முடிவுக்கு வருகிறாள் என அவளுடைய அந்த மனக்கொந்தளிப்பை கூர்ந்து வாசித்து அறிவது மிகமுக்கியமான ஒரு கலை அனுபவம். அவளுக்கு புராணம் தேவைப்படுகிறது. சொலவடைகள் தேவைப்படுகின்றன. அவளுடைய பாட்டிகளினூடாக அவள் கேட்டிருக்கக்கூடிய உவமைகள் தேவைப்படுகின்றன.
அவள் தண்ணீரைக் கொட்டி அவள் தூய்மையானவள் என்கிறாள். அதுவும் மரபிலிருந்து எடுத்துக்கொள்ளும் ஒரு சடங்குதான் .“நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்ல. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே” என்று சொல்கையில் சீதையை உள்ளே கொண்டுவருகிறாள்.
ஓர் இக்கட்டான சூழலில் மரபின் எல்லைகளை மீறும் சராசரி மனம் எப்படியெல்லாம் மரபை தனக்காக மாற்றிக்கொள்ளும், தன் வழியை தானே கண்டடையும் என்பதற்கான சான்று இந்த இடம். அத்துடன் தூய்மை என்னும் கருத்து எப்படியெல்லாம் ஒரு சாதாரண மனதில் உறைந்து தருணங்களில் வெளிப்படுகிறது, அது எப்படியெல்லாம் தன்னை உருமாற்றிக்கொள்கிறது என்று ஆராய்வதற்கான நரம்புமுடிச்சு இந்தப் புனைவுத்தருணம். நீரும் நெருப்பும் பத்தினிகள் பெயரும் எல்லாம் எப்படி அந்த இடத்தில் இயல்பாக வந்து பொருந்துகின்றன!
இந்த நீண்ட தன்னுரையாடலில் வரும் பண்பாட்டுக்குறிப்புகள், உளவியல் நாடகம் ஆகியவை எப்படி அந்த சந்தர்ப்பத்தில் ஒரு எளிய பிராமணப் பெண்மணி பேசுவாளோ, நினைப்பாளோ அந்த எல்லையை மீறாமலேயே வெளிப்பட்டுள்ளன. இதைத்தான் இலக்கியம் எப்போதும் இலக்காக்குகிறது. இதுதான் கலை என்பது.
இன்று இக்கதை நம்மில் சாதாரணமாக உருவாக்கும் கருத்துத்தள விவாதமெல்லாம் நாம் அந்த கதைநிகழ்வால் கொள்ளும் ஒழுக்கம் சார்ந்த உளஅதிர்விலிருந்து மட்டுமே ஆரம்பிக்கிறது. அந்த அன்னை வேறென்ன செய்திருக்கவேண்டும், அவள் செய்தது அப்பெண்ணை பற்றிய ஒரு பெரிய செய்தியை மறைப்பது அல்லவா, நாளை அவளை கல்யாணம் செய்யப்போகிறவனை ஏமாற்றுவதுதானே அது, நீரால் கழுவினால் அந்த நிகழ்வின் பாதிப்பு அகலுமா என்ன என்றெல்லாம் எண்ணி நாம் அதை விரித்தெடுக்கிறோம். அது மேலோட்டமான வாசிப்பு, ஆனால் அதுவே இங்கே நிகழ்ந்தது. அக்கதைக்குள் ஜெயகாந்தன் எந்தக்கருத்தையும் சொல்லவில்லை. எந்தத் திசையையும் சுட்டவுமில்லை. ஒரு மையக்கேள்வி எழும்படியாக நிகழ்வை ஒருங்கமைக்கிறார் அவ்வளவுதான். நல்ல கதை அதை மட்டுமே செய்யும்.
நீங்கள் கருத்துக்களை சிந்தித்தீர்கள், ஆகவே அக்கருத்து அக்கதையில் உள்ளது என நினைக்கிறீர்கள். ஆகவே அது கருத்துசொல்லும்கதை என முடிவுசெய்கிறீர்கள். ஆகவே அது நல்ல கதை அல்ல என்ற முடிவுக்கு வருகிறீர்கள். நீங்கள் சொல்வது இதைத்தான். பலர் இலக்கியமறிந்தவர்கள் என்னும் பாவனையில் இதைச் சொல்வதுண்டு. கலை உருவாக்கும் மாயைக்கு முன் வழிதவறிவிட்டவர்கள் அவர்கள். இந்தக்கதை ‘கருத்து’ சொல்கிறது என சொன்ன பலரிடம் ‘சரி சொல்லுங்க, என்ன கருத்து? கதையிலே எங்க இருக்கு அது?’ என கேட்டு நான் மடக்கியிருக்கிறேன். அப்படி கதையிலிருந்து ஜெயகாந்தன் சொல்லும் ஒரு கருத்தை எவராலும் சொல்லமுடியாது, அவர்கள் சொல்வது ஜெயகாந்தான் இப்படிச் சொல்கிறாரோ என இவர்கள் எண்ணும் ஒரு கருத்தைத்தான்.
ஆகவே தான் தமிழில் அக்னிபிரவேசம் ஒரு செவ்வியல்படைப்பு என நான் நினைக்கிறேன். பூடகமாகப் பேசும் எந்த சிறுகதையும் அக்னிப்பிரவேசம்போல நம் பண்பாட்டின் ரகசியப்புள்ளிகளைச் சென்று தாக்கவில்லை, நம்மை மொத்தப்பண்பாட்டையே மீண்டும் பார்க்கச்செய்யவுமில்லை. ஆகவே இன்னும் பல தலைமுறைகளுக்கு அது ஒரு செவ்வியல்படைப்பாகவே இருக்கும்.
நமக்கு சீரிய ஆய்வுமுறை விமர்சகர்கள் இருந்திருந்தால் அந்த அன்னை அங்கே சொல்லும் கொந்தளிப்புமிக்க வரிகளைக் விரிவாகக் கட்டவிழ்த்து எப்படி அங்கே பாண்பாடு தலைகீழாகத் திரும்புகிறது, அதற்கு என்னென்ன மரபார்ந்த உளவியல் கருவிகள் உருமாற்றம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன என்று பார்த்திருப்பார்கள். இப்படி தமிழில் ஆய்வுசெய்யவேண்டிய நூறு படைப்புகளாவது உள்ளன. ஒன்றைப்பற்றிக்கூட நல்ல ஆய்வுக்கட்டுரை வந்ததில்லை.
இங்குள்ள ஆய்வுமுறை விமர்சகர்கள் ஆங்கிலத்தில் வாசித்ததை திரும்ப எழுதவும், எளிய அன்றாட அரசியல் சார்ந்த கருத்துநிலைபாடுகளை இலக்கியத்தில் போட்டுப்பார்க்காவும், அதனடிப்படையில் படைப்பாளிகளை நம்மவரா அல்லரா எனப் பிரிக்கவும் மட்டுமே தெரிந்த எளிய உள்ளங்கள். ஆய்வுமுறை விமர்சனத்தின் பணியையும் இங்கே அழகியல் விமர்சனமே செய்யவேண்டியிருக்கிறது.
மரி என்னும் ஆட்டுக்குட்டியை பாருங்கள். அந்த ஆசிரியரும் அவர் மனைவியும் மிகச்சரியான வகைமாதிரிக் கதாபாத்திரங்கள். அதாவது ஆசிரியர் எண்ணும் முற்போக்குக் கருத்தை சொல்லும் வாய்கள் மட்டும்தான். மரியே ஒரு சம்பிரதாயமான கதாபாத்திரம். அவள் ’கெட்டுப்போன’ பெண். ஆனால் அதற்குக் காரணம் அவள் குடும்பம்தான், அவள் அல்ல. அதை அவளே சொல்கிறாள். “எங்க அம்மாவை பழி தீர்க்கணும்னுதான் அப்படியெல்லாம் நடந்துக்கறேன் சார்” என்கிறாள்.
”என்னை நீங்க கேட்டிருக்கணும் சார். ஏண்டி ஸ்கூலுக்கு வரலைன்னு என்னை அறைஞ்சு கேட்கணும் சார். அப்படி யாரும் என்னை கேட்க இல்லேங்கறதுனாலதானே நான் இப்படி விட்டேத்தியா இருக்கேன்? என் மேல் இப்படி யாரும் அன்பு செலுத்தினது இல்லே சார். அன்பு செலுத்தறவங்களுக்குத்தானே அதட்டிக் கேக்கவும் அதிகாரம் இருக்கு?” என்று மரி தன்னையே விளக்கிக் கொள்கிறாள். மரி என்னும் ‘கெட்டபெண்’ என்ற சித்திரம் இந்த வரிகளில் மரியை விளக்கி முடிகிறது, அவ்வளவுதானே அந்தக்கதை?
இப்படி பாருங்கள், அக்னிப்பிரவேசம் கதையில் அந்தப்பெண் ‘நான் எப்படி கெட்டுப்போனேன் என்கிறீர்கள்? நான் என்ன தப்பு செய்தேன்? நல்லது கெட்டதை எனக்கு சொல்லித்தராத நீங்கள்தான் இதற்குப்பொறுப்பு. இந்தச்சமூகம்தான் பொறுப்பு’ என ஒரு பெரிய சொற்பொழிவை ஆற்றியிருந்தால் அது எப்படி இருந்திருக்கும்? அப்படி இருக்கிறது மரி என்னும் ஆட்டுக்குட்டியில் மரி பேசுவது.
அதோடு ஆசிரியர் குரலாக ஒரு விளக்கம் வேறு. “பைத்தியமே! உலகத்திலே யார்தான் கெட்டுப் போனவங்க? யாராலுமே கெட முடியாது, தெரியுமா? மனசுக்குள்ளே நீ கெட்டுப் போனவள்னு நினைக்கிறியாக்கும்? அதை விட்டுடு. நீயும் கெட்டவள் இல்லை, உங்க அம்மாவும், அப்பாவும் யாருமே கெட்டவங்க இல்லே” என்று.
அத்துடன் இன்னொன்றையும் கவனியுங்கள். அக்னிப்பிரவேசம் எழுப்பும் வினா இன்றுவரை முடியாமல் இருக்கிறது, ஒவ்வொருவரும் ஒரு விடையை அளிக்கலாம். ஒவ்வொரு முடிவைச் சொல்லலாம்.அப்படி ஒரு அறவியல், ஒழுக்கவியல் இக்கட்டை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு நின்றுவிடுகிறது அக்கதை. அந்தப்பெண் தெரியாமல் செய்தால் அது ஒழுக்கக்கேடாகுமா என்ற கேள்வி அவள் அந்தக் காமத்தில் மகிழ்ந்திருந்தால் அது ஒழுக்கக் கேடாகுமா, ஒழுக்கம் என்றால் என்ன ?- என்று விரிகிறது. அதுவே கலையின் சவால். மரி என்னும் ஆட்டுக்குட்டி அப்படி அல்ல அது பிரபஞ்சன் சொல்லும் ஒரு விடையை முன்வைத்து முடிகிறது.
இந்த வேறுபாட்டை இத்தனை விளக்கவேண்டியதே இல்லை, எளிதாக வாசகன் உணரமுடியும். தொடக்கநிலை வாசகர் என்பதனால், ஒரு விமர்சனக் கருவியை சுட்டிக்காட்டும்பொருட்டு இதை சொல்கிறேன்.
ஜெ