திருவையாறு இம்முறை

இருபத்தொன்றாம் தேதி கிளம்பி அதிகாலை நான்குமணிக்கு தஞ்சை சென்று சேர்ந்தேன். ரயில்நிலையம் அருகே அரங்கசாமியின் ஊழியர் நிற்பதாகச் சொன்னார். குளிரில் காத்து நின்றேன். அருகே கனராவங்கியின் ஏ.டி.எம். உள்ளே நுழைந்து ஆயிரம் ரூபாய் எடுத்தேன்.

பணத்தை எடுப்பதற்குள் கார்டை எடுப்பது என் வழக்கம், பணத்தை எடுத்தால் கார்டை கைவிட்டு கிளம்பிவிடுவேன் என்பதனால் அருண்மொழி இதை வலியுறுத்தி பயிற்றுவித்திருக்கிறாள். கார்டை எடுத்தபோது கைதவறி கீழே விழுந்தது .எடுத்து கவருக்குள் வைப்பதற்குள் பணம் திரும்ப சென்றுவிட்டது. மீண்டும் கார்டை போட்டு ஆயிரம் ரூபாய் எடுத்தேன். உள்ளே சென்ற பணம் என் கணக்கில் கழிக்கப்படுமா என இனிய பதற்றம் வயிற்றை அதிரச்செய்தது.

அரங்கசாமியின் கிளை அலுவலகம் தஞ்சையில் ஒரு வீட்டில். அங்கே நாலைந்து அறைகள் காலியாக இருந்தன. அங்கேயே தங்கலாம் என்று திட்டம். சென்னையில் இருந்து கெ.பி.வினோத் வந்தார். நான் வருவதற்கு முன்னரே கடலூர் சீனு வந்திருந்தார். நான் கொஞ்சநேரம் பேசிவிட்டு தூங்கிவிட்டேன் கிருஷ்ணனும் அரங்கசாமியும் எட்டுமணிக்குத்தான் வந்தார்கள்.

அறையிலேயே குளித்துவிட்டு கிளம்பினொம். காலையுணவு உண்டுவிட்டு திருவையாறு. அந்தக் குழுவில் திருவையாறுக்கு நானும் கிருஷ்ணனும்தான் முன்னரே சென்றவர்கள். திருவையாறு விழாக்கால சந்தடிகளும் சலசலப்புகளுமாக மங்கலமான கலைவுடன் இருந்தது – கல்யாணவீடுகளில் பெண்களை போல. எங்கும் இசைகக்டைகள். சாப்பாட்டுக்கடைகள். ஒரு புத்தகக் கடை. அதில் பாதி கிழக்கு வெளியிட்ட ஆன்மீக நூல்கள். இலக்கியம் என்றால் பாலகுமாரன் மட்டும்தான்.

இந்தமுறை திருவையாறு நிகழ்ச்சி ஒட்டுமொத்தமாக பெரும் ஏமாற்றம். அதைப்பற்றி விரிவாக எழுதப்போவதில்லை. நான் விசாரித்தறிந்தவரை இதுதான் பின்புலம். திருவையாறு அறக்கட்டளை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு தரப்பினர் கைகளில் இருந்திருக்கிறது. பாலமுரளிகிருஷ்ணா தலைமையில் தெலுங்கு பிராமணார்களிடம் முதலில் . பின்னர் தமிழ் அய்யர்கள் அதை கைப்பற்றினர். குன்னக்குடி வைத்தியநாதன் இருந்தபோது தமிழின் மிகச்சிறந்த இசைக்கலைஞர்கள் அங்கே வந்துகொண்டிருந்தார்கள்.

இப்போது அய்யர்கள் பெரும்பாலும் இதை புறக்கணிக்கிறார்கள் என்றார்கள். அய்யங்கார்களும் ராவ்களும்தான் பிராமணர்களாக தென்படுகிறார்கள். காரணம், இப்போது இந்த அமைப்பு இசைவேளாளர் கையில் இருக்கிறது. ஆகவே இசைவிழா மிகமிக சாதாரணமாக இருக்கிறது. பெருங்கூட்டம் கூடுகிறது. அவர்கள் இசைமேலும் இந்த அமைப்புமேலும் நம்பிக்கை கொண்டவர்கள். சாதி அரசியல்களை அறியாதவர்கள். ஆனால் நிகழ்ச்சிகள் ஏமாற்றுகின்றன.

முதல் ஏமாற்றம் முக்கியமானவர்கள் இல்லை என்பதுதான். திருவையாறின் கவற்சியே பல தரப்பட்ட இசைக்கலைஞர்களை மாறிமாறி அடுத்தடுத்து கேட்பதுதான். விரிவாக அல்ல என்றாலும் அது ஒரு தனி அனுபவம். அந்த அனுபவம் முழுமையாகவே தவறிவிட்டது. பெரும்பாலும் கத்துக்குட்டிகள், ஓய்ந்துபோன தாத்தாக்கள்.

இரண்டாவது நாதஸ்வரத்தின் ஆதிக்கம். நாதஸ்வரம் எனக்குப் பிடித்த வாத்தியம். ஆனால் ஒரு சபையில் நேருக்கு நேராக அமர்ந்து அதைக் கேட்பது சரியான முறையல்ல. அதற்கான வாத்தியமெ அல்ல அது. பெருங்கூட்டத்துக்காக உருவாக்கப்பட்டது. கோயில் பிராகாரங்களுக்காக ஆனது. ராஜரத்தினம்பிள்ளைதான் அதை அமர்ந்து வாசித்து கச்சேரியாக ஆக்கினார். மேதைகளால் அது முடியும். எல்லைகளை அவர்கள் மீறலாம்.

ஆனால் இந்த சாதாரண நாதஸ்வரங்களை எவராலும் நேர்முன்னால் அமர்ந்து கேட்க முடியாது. அத்துடன் ஏகப்பட்ட ஒலிப்பெருக்கிகள். தவுலுக்கும் ஒலிபெருக்கி. அரங்கத்தில் ஐந்துநிமிடம் அமர முடியாது. முன்னரெல்லாம் காலையிலும் இரவிலும்தான் நாதஸ்வரம் இருக்கும். அந்த மனநிலைக்கு அது பொருந்தும். மைய நேரம் எனப்படும் ஐந்து முதல் ஏழு மணிவரை நாதஸ்வரம் வாசிக்கப்படும்போது விழாவின் கொண்டாட்டமே இல்லாமலாகிவிடுகிறது. இனிமேல் திருவையாறு செல்வதாக இல்லை என எண்ணிக்கொண்டேன்.

நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தது உற்சாகமாக இருந்தது. திருவையாறுகோயிலுக்குள் படுத்துக்கொண்டு பேசினோம். தமிழக வரலாறு பற்றி. பழந்தமிழ் இலக்கியம் பற்றி. இரவில் எல்லாரும் ஒரே அறையில் தரையில் படுத்துக்கொண்டு பேசிக்கொண்டு தூங்கினோம்.

மறுநாள் சென்னையில் இருந்து பாலமுருகன் வந்தார். ஏற்கனவே ஊட்டிக்கு வந்த நண்பர். காலையிலேயே கிளம்ப நினைத்திருந்தோம். எழுவதற்கு தாமதமாகியது. எட்டுமணிக்கு குடமுருட்டி ஆற்றுக்குச் சென்று குடமளவுக்கே ஆழமிருந்த நீரில் புரண்டு குளித்தோம்.

காவிரியில் குளிப்பதன் அனுபவத்தைப்பற்றி தி.ஜானகிராமன் எழுதிய வரிகள் நினைவுக்கு வந்தன.காவேரியில் குளிப்பதென்பது நீருடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல.வானத்துடனும் சம்பந்தப்பட்டது. தி ஜானகிராமன் எப்போதுமே வானத்தையும் சேர்த்துச் சொல்வதைக் காணலாம். அகன்ற ஆற்றின்மீது வானம் பரவியிருக்கும் உணர்வு குளிக்கும்போது உருவாகிறது. வானை உணர்வதன் அகண்ட மனநிலை.

கொஞ்ச நேரம் பந்தலில் அமர்ந்திருந்தோம். நம்பவே முடியாத அளவுக்கு பயிற்சியற்ற குரல்கள். எங்காவது செல்லலாம் என்றார் அரங்கசாமி. சீனு தாராசுரம் செல்லலாம் என்றார். தாராசுரத்துக்கு வழிகேட்டு கேட்டு சென்று சேர்ந்தோம். மதியம் கும்பகோணத்தில் சாப்பிட்டுவிட்டு தாராசுரம் வந்தோம்

கும்பகோணம் அருகே திருநல்லம் என்ற ஊரைச்சேர்ந்த இரு வாசக நண்பர்கள் சந்திக்கலாமா என்று கேட்டிருந்தார்கள். முன்னர் சந்தித்ததில்லை. கவிஞர் விஷ்ணுபுரம் சரவணனின் நண்பர்கள். நண்பர் சந்தான கிருஷ்ணன் திருநல்லம் ஊரைப்பற்றியும் கோயிலைப்பற்றியும் ஆய்வுசெய்திருக்கிறார். தமிழாசிரியர். அமானுஷ்யன் என்ற பேரில் எழுதும் சாமிநாதன் பள்ளி ஊழியராக இருக்கிறார்.

இருவரையும் திருவையாறு வரச்சொல்லியிருந்தேன். அவர்கள் ஊர் கும்பகோணத்தில் இருந்து இருபது கிமீ தூரத்தில். கும்பகோணத்தில் இருந்து திருவையாறு முப்பது கிமீ. ஐம்பது கிமீ தாண்டி அவர்கள் வர மிகவும் தாமதமாகியதனால் நாங்கள் தாராசுரம் சென்றுவிட்டோம். அவர்கள் திருவையாறு வந்து கூப்பிட்டார்கள். தாராசுரம் வரச்சொன்னோம். அங்கு வந்தார்கள்

கோயில் திறக்க தாமதமாகும் என்றார்கள். அருகே மரநிழலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இருவருக்குமே வரலாற்றாய்வில் ஈடுபாடு. ராஜராஜசோழன் பற்றியும் பர்ட்டன் ஸ்டெயின்,கெ.கெ.பிள்ளை பற்றியும் பேசினோம். மாலையில் கோயிலைப் பார்த்துவிட்டு திரும்பினோம். நான் பலமுறை பார்த்த கோயில். ஒவ்வொரு முறையும் ஒரு பெரும் கனவை எழுப்புவது அதன் அமைப்பு.

கும்பகோணம் நண்பர்கள் அவ்வழியே திரும்பினார்கள். திருநல்லம் முதலிய ஊர்களைப்பார்க்க விரைவிலேயே கும்பகோணம் வருகிறோம் என அவர்களுக்கு உறுதியளித்தோம்.

மாலை எட்டரை மணிவரைதான் அரங்கில் இருந்தோம். சீர்காழி சிவசிதம்பரம் கொஞ்ச நேரம் உறுமியபடிபாடியதைக் கேட்டபோது இசையே மனிதனுக்கு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தேன். கிளம்பி திருவாரூர் கோயிலுக்குள் போய் குளத்துப்படிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மீண்டும் வரலாறு. பத்தரை மணிக்கு கிளம்பலாமென நினைத்து வந்து பார்த்தால் கோயிலின் பெரிய கோட்டைவாசல் பூட்டப்பட்டிருந்தது.

அது உள்ளிருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டோம். கோயிலுக்குள் நடந்து முன்வாசலுக்கு வந்தால் அந்த வாசலும் பூட்டப்பட்டிருந்தது. கருவறைக்குச் செல்லும் வாசல் வெளியே பூட்டப்பட்டிருந்தது. கோயில் முழுக்க தேடியபடி சுற்றி வந்தோம். இரவில் அங்கேயே தங்க நேர்ந்தால் என்ன செய்வது என்று சிந்தனைசெய்தோம். கிண்டல்செய்து சிரித்தாலும் ஒரு சின்ன பயமும் இருந்தது.

ஒருவழியாக கோயிலுக்குள் ஒரு வாசலுக்குள் வெளிச்சம் இருப்பதை கண்டுகொண்டோம். கிருஷ்ணன் வாயை இடுக்கில் வைத்து அய்யா அய்யா என்று கூப்பிட ஒரு எதிர்க்குரல் வந்தது. அவரிடம் இப்படி மாட்டிக்கொண்டதைச் சொன்னபோது நான் எல்லா இடத்தையும் பாத்தேனே என்றார். பாத்திருந்தா மாட்டியிருக்கமாட்டோமே என கிருஷ்ணன் விவாதிக்க ஆரம்பித்தார்

அந்நேரத்தில் வினோத் வரலாற்று ஐயம் கேட்க ஆரம்பித்தார். நான் அவரை அடக்கினேன். உள்ளே ஏழுபேர் இருப்பதை உணர்ந்தால் கதவே திறக்க மாட்டார் என்று பட்டது. கொஞ்சநேரம் சத்தமே இல்லை. அதன்பின் பக்கவாட்டு சுவரை தாண்டி இருவர் வந்தனர். ஒருவர் கையில் பெரிய தடி. நாங்கள் எழுவர் என்பதைக் கண்டு அவர்கள் அங்கேயே நின்று ‘யாரு?’ என்றார்கள்

அரங்கசாமி முன்னால் சென்றார். கிருஷ்ணனையும் அவரையும் கண்டதும் ‘டீசண்ட் பார்ட்டி’ என்று தெரிந்தமையால் நெருங்கி வந்தார்கள். ‘என்னா சார்?’ என்றார்கள். சுமுகமாக சில சொற்கள் சொல்லி கதவைதிறக்கச் செய்து வெளியே வந்தோம். கோயிலுக்குள் நுழையும் இடத்தில் செருப்பை போட்டிருந்தோம். அங்கே கிரில் கதவை மூடியிருந்தார்கள். ‘இதிலே தப்பிட்டு கடைசியிலே செருப்ப எடுக்கிறப்ப மாட்டினா எப்டி இருக்கும்!’ என்றார் வினோத். மாட்டவிலலை

’மொத்த டிரிப்பிலேயும் இதான் சார் ஹைலைட்’ என கிருஷ்ணன் மகிழ்ந்துகொண்டார். நள்ளிரவில் தஞ்சை வந்து அறையை காலி செய்துவிட்டு திருச்சி கிளம்பினோம். திருச்சியில் நான் விடைபெற்று மதுரைக்கு பேருந்தை பிடித்தேன்.

முந்தைய கட்டுரைநான்காவது கொலை !!! -4
அடுத்த கட்டுரைநான்காவது கொலை!!! -5