சமணம்,சாதிகள்-கடிதம்
அன்புள்ள ஐயா
சமீபத்தில் ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் உள்ள “சந்திரப்பிரபா தீர்த்தங்கர்” ஆலயத்திற்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு தூணிலிருந்த சிற்பத்தைப் பற்றி விளக்கம் கேட்ட போது,அது “புல்லப்பை” என்ற பெண் துறவியின் சிற்பம் என்றார் கோயிலைப் பராமரிக்கும் முதியவர்.
மேலும் அதைப் பற்றி தேடிய போது, ஈரோடு புலவர் ராசுவின் ஒலிக்குறிப்பு ஒன்றைக் கேட்கமுடிந்தது. “பெண்களுக்கு சமண மதத்தில் வீடுபேறு என்பதில்லை. அதனால் பெண்கள் உண்ணாநோன்புற்று மறுபிறப்பில் ஆணாகப் பிறந்து துறவு பூண்டு வீடுபேறடைய வேண்டி நோன்புற்று உயிர்விடுவர் . புல்லப்பை செய்ததும் அதைத் தான்.” என்று சொல்கிறார். அவர் அப்படி உயிர்விட்ட செய்தி அந்த கல்வெட்டில் சொல்லப் பட்டிருக்கிறது.
இது உண்மையா? சமண மதத்தின் முற்போக்கு அம்சத்தைப் பற்றி கொண்டிருந்த அபிப்பிராயங்கள் இதனால் கேள்விக்குள்ளானது போல இருந்தது. தயை கொண்டு தெளிவுறுத்துக.
கே.கே.குமார்
அன்புள்ள குமார்,
இன்று உலகிலுள்ள எல்லா மதங்களுக்கும் பொருந்தும் ஓர் உண்மை உண்டு, அவை எவையும் இன்றைய உலகுக்காக உருவாக்கப்பட்டவை அல்ல. எனவே இன்றைய சூழலுக்கு முழுமையாக பொருந்துவனவும் அல்ல.
எந்த மதமானாலும் அது உருவாகும் காலகட்டத்தின் சமூக அமைப்பின் நெறிகளையும் ஒழுக்கங்களையும் விழுமியங்களையும் ஏற்றுக்கொண்டிருக்கும். அந்தக்கால பொதுவான நம்பிக்கைகளை தானும் முன்வைத்திருக்கும். சமணத்திலேயே ஒன்றை நீங்கள் கவனிக்கலாம், அத்தனை தீர்த்தங்காரர்களும் ஷத்ரிய குடியில் பிறந்தவர்களே. வேறெந்த குடியிலும் தீர்த்தங்காரர் பிறக்க முடியாது என அந்த மதம் எண்ணியது. அன்றைய சமூக யதார்த்தத்தை காட்டுகிறது அது.
மதங்கள் அவற்றின் வளர்ச்சிப்போக்கில் அவை செல்லுமிடங்களில் உள்ள பலவற்றை ஏற்றுக்கொண்டு தங்களை மாற்றிக்கொள்கின்றன. அகிம்சையை அடிப்படை விழுமியமாகக் கொண்ட பௌத்த மதம் லடாக்குக்கும் திபெத்துக்கும் சென்றபோது புலால் உண்பதை ஏற்றுக்கொண்டது. வேறுவழியில்லை, மலைகளில் வேறு புரோட்டீன் உணவே இல்லை. அங்கே சமரசம் செய்ய மறுத்த சமணம் மலைகளுக்கு செல்லவே இல்லை.
சமணம் அன்றைய பழங்குடிப் பண்பாடுகளிலிருந்து உருவான மதம். வேதமறுப்பு அதன் அடிப்படை என்பதனால் அசுரர், அரக்கர், நாகர் என அன்றைய வைதிகநூல்களால் குறிப்பிடப்பட்ட மக்களில் இருந்து உருவாகி எழுந்ததாகவே அது இருக்கும் என்பது ஆய்வாளர் கூற்று. வேதங்கள் அளவுக்கே அவர்களின் மதமரபும் தொன்மையான வேர்கள் கொண்டது.
அந்தப்பழங்குடி மரபு ஆண்களை மையமாக்கியது. ஆகவே முழுக்கமுழுக்க ஆண்சார்ந்த உலகநோக்கு கொண்டது. அது வன்முறை சார்ந்ததாகவே இருந்திருக்கும். அதிலிருந்து வன்முறை மறுப்பு நோக்கி வந்ததே மாபெரும் புரட்சி. மகாவீரர் என அவர்களால் சொல்லப்படுபவர் அகிம்சையை மையக்கொள்கையாகக் கொண்டவர். ஒருவேளை உலகசிந்தனையில் நிகழ்ந்த முதல் பெரும் தத்துவப்புரட்சி அது. அந்த மாற்றமே சமணத்தை இன்றைய நோக்கில் முதன்மையான தத்துவ – ஆன்மீகத் தரப்பாக ஆக்குகிறது.
எந்த மதத்திலும் மூன்று அடுக்குகள் உண்டு என்று கொள்ளலாம். மெய்த்தரிசனம் மற்றும் அதன் தத்துவ விளக்கம் ஓர் அடுக்கு. நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் இன்னொரு அடுக்கு. ஆசாரங்கள் சமூக நெறிகள் ஆகியவை இன்னொரு அடுக்கு. ஆசாரங்களும் சமூகநெறிகளும் அந்த மதம் உருவாகி வலுப்பெற்ற காலத்திற்குரியவை. காலப்போக்கில் மாற்றம் அடைபவை. நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் அதன் போக்கில் வளர்ந்து உருமாறிக்கொண்டிருப்பவை. சமணத்தில் தீர்த்தங்காரர்களை முற்றும்துறந்த நிர்வாண வடிவில் வழிபடும் போக்குகளும் உண்டு, அவர்களை வைரமணிமுடி அணிந்த அரசர்களின் தோற்றத்தில் வழிபடும் போக்குகளும் உண்டு
காலத்தைக் கடந்து இன்றைய வாழ்வுக்குரியதாக வந்துசேர்வது மெய்த்தரிசனமும் தத்துவமும்தான். சமணத்தின் அடிப்படைத்தரிசனமாகிய அகிம்சை, புடவிச்சுழற்சி, ஊழ் போன்றவையே அதன் மெய்யான கொடை. அதையே இன்று சமணம் என்று கொள்ளவேண்டும். அத்தரிசனத்தை ஒட்டி சமணம் உருவாக்கியிருக்கும் மிகப்பெரிய தத்துவக்களம் ஒன்று உள்ளது.
நீங்கள் சொல்வது சமணத்தின் ஆசாரங்கள், சமூகநெறிகளில் ஒன்று. அக்காலத்தைச் சேர்ந்தது. சமணம் பெண்களுக்கு நேரடியாக அறுதியான முக்தி உண்டு என்று கூறவில்லை. அவர்கள் மறுபிறப்பில் ஆண்களாகப் பிறந்து மீண்டும் தவம்செய்யவேண்டும் என்று கூறியது. அதை சமணத்தின் ஓர் அம்சமாகக் கருதலாம். அதுவே சமணம் என்றல்ல. ஆனால் அந்நோக்கு இன்று மாறியிருக்கிறது.
இன்னொரு கோணத்திலும் பாருங்கள். இந்திய மரபில் பெண்களை காவியத்தலைவர்களாகக் கொண்ட தொன்மையான நூல்கள் எவை? சமணநூலான சிலப்பதிகாரம், நீலகேசி ஆகியவற்றையே சுட்டவேண்டும். அவ்வகையில் சமூகக் களத்தில் பெண்களின் இடத்தை பெரிதும் வலியுறுத்திய மதம் சமணம்.
ஜெ