தங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து படிப்பவன் நான் நீங்கள் ஒருமுறை வலைத்தளத்தை நடத்த ஆகும் செலவு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் , தங்களின் தளத்தில் தங்கள் google adsense போன்ற விளம்பர நிரல்களை சேர்க்கலாமே இதன் மூலம் நல்ல வருவாய் வருமென என் நண்பன் சொன்னான் இதனை கொண்டு நீங்கள் வலைத்தளத்தை செலவின்றி நடத்த முடியும்
நன்றி
ராம்குமாரன்
அன்புள்ள ராம் குமாரன்,
இதைப்பற்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். இன்றைய வாசிப்பின் மிகப்பெரிய சிக்கல் எவரும் 15 நிமிடம் தொடர்ச்சியாக வாசிப்பதில்லை என்பதே. அதற்குள் ஒருமுறை முகநூல் சென்று பார்ப்பார்கள். மின்னஞ்சலை பார்ப்பார்கள். தொடர்ச்சியாக கவனம் கலைந்துகொண்டிருப்பதே இன்றைய இணையச் சூழலின் மிகப்பெரிய சிக்கல்.
இவ்வாறு கவனம் கலைப்பதில் பெரும்பங்கு வகிப்பவை விளம்பர வரிகள், விளம்பரப் பக்கங்கள். என் இணையதளம் வடிவமைக்கப்பட்டபோதே அது வாசிப்புக்கு உகந்ததாக அமைக்கப்பட்டது. ஆகவே தேவையற்ற மின்னல்களும் அழைப்புக்களும் பக்கங்களில் இருக்காது. விளம்பரம் என்றாலே அது வாசிப்பில் ஊடுருவுவதும் கவனக்கலைப்பும்தான்.
விளம்பரங்களை நம்பி இயங்கும் இணையதளங்கள் கவனமற்ற வாசிப்புக்கும் உரியனவாக தங்களை மாற்றிக்கொண்டாகவேண்டும். கட்டுரைகள் 400 வார்த்தைகளுக்குள் அமையவேண்டும். தலைப்புகள் பெரிதாக கண்களை உறுத்துவனவாக அமையவேண்டும். தனித்தலைப்புகள், அடிக்கோடிட்ட வரிகள் என அவற்றின் அமைப்பிலேயே கூர்ந்து வாசிக்கவேண்டியதில்லை என்னும் செய்தி இருக்கும். என் தளத்தில் அச்சில் இருபது பக்கம் வரும் கட்டுரைகள்கூட உள்ளன. கூர்ந்து வாசிப்பதற்கான அறைகூவல் இந்தத் தளத்தில் உள்ளது.
அந்த அறைகூவலை விடுத்துவிட்டு வாசிக்கமுடியாதபடி பக்கங்களை அமைப்பது சரியல்ல. ஆகவேதான் விளம்பரங்கள் போடத் தயங்குகிறேன்
ஜெ