வெள்ளியங்கிரியில்…

vellingirin 1

அன்புள்ள ஜெ

மேற்குத் தொடர்ச்சி மலைஅருகில் வாழ்பவர்கள் பேறு பெற்றவர்கள். நாள் தோறும் வேளிமலையோ அல்லது குருடிமலையோ ஒளி சூடி நிற்பதைக் காணமுடியும்.

சென்ற வாரம் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை உச்சிக்கு சென்று  திரும்பினேன். ஏழு மலைகள் . ஆறாம் மலையின் முடிவில் சிறிய சுனை. ஆண்டிசுனை. பெயர் தெரியாத ஆண்டிகளே இம்மலைகளின் ,நிலத்தின் வற்றாத பண்பாட்டு ஊற்று போலும். கூட்டம் ஆரம்பிக்கவில்லை. நள்ளிரவில் வெகு சிலர் மட்டும் அங்கே நின்றிருந்தோம்.  . தலைக்கு மேலே தண்ணிலவு. கரிய பெருமலைகள் சூழ சலனமின்றி சிறு குளம்.  குளிப்பது ஓர் அரிய அனுபவம்

முதல்மலை சுமார் 1000 ஒழுங்கற்ற கற்படிகளால் ஆனது. ஏழாம் மலை தனித்த கூம்பு போல நிற்கிறது. கடினமான கோணத்தில் சறுக்கும் மணல்திட்டுகளும் பாறைகளும் கொண்டது. உச்சியில் பெரும்பாறைகள் ஒன்றுடன் ஒன்று பின்னி தோரண மலையாக அமைந்துள்ளன. நெடிதுயர நிற்கும் கல்லின் கீழே ஒரு குகை. அதில் ஐந்து சுயம்பு லிங்கங்கள். எத்தனை நூற்றாண்டுகளாக மக்கள் வந்து வழிபடுகிறார்கள் என்று அறியக்கூடவில்லை. அந்த அறிதலின்மையே இவ்விடத்தின் புதிரை அதிகரிக்கிறது

vellingiri2

ஏழாம் மலையின் இறக்கம் மிகவும் அபாயமானது.  மூங்கில் கழியை  ஊன்றி சறுக்கு விளையாட்டு வினையாகாமல் பார்த்து இறங்க வேண்டும். ஐந்தாம்  மலையில் சீதாவனத்திற்கு நடுவே குறுகிய பாதை. ஒர்புறம் அடர்ந்த சோலைக்காடு. மறுபுறம் பாதாளம். அரிய மூலிகைகள் செறிந்த வனம். பார்க்கும் போதே அழைத்து உளம் மயக்குகிறது. சிலபேரை உள்வாங்கி உன்மத்தம் கொள்ளவைத்து உயிர் உறிஞ்சி இருக்கிறது. தற்காலிக கடைகள் அமைத்துள்ள மலைவாழ் மக்கள் காட்டுப் பாதையில் மறுபுறம் இறங்கி மன்னார்காடு சென்று விடுகின்றனர்,

திரும்பி வருகையில் ஐந்தாம் மலையில் சூரிய உதயம் . மூன்று திசைகளில் மலைகள், மலைகள். கீழ்வானில் செக்கச் சிவப்பு . மலைகள் பசும் நீலத்திலிருந்து நீலப் பச்சை வரை பல இடை நிறங்களில். நிறங்களின் அலைநீள வேறுபாட்டை கண்களால் பகுக்க முடியும். ஆயினும் சொற்களால் முடியாது. தாங்கள் இமயப் பயணத்தில் குறிப்பிட்டது போல, மலைக்குப் பின் மலை. அதன்பின் பிறிதொன்று. முடிவற்ற அழகு

பச்சை மரங்கள் தொலைவில் ப்ரோகோலி கீரை போல செறிந்திருந்தன. கதிர் சற்று எழுந்து வெள்ளை ஒளி வீசியது. மலைகளில் வெளிப்பட்ட பகுதிகள் ஒளிவீசின. மறைந்த பகுதிகள் கருமை வீசின. காட்டுக்குள்ளிருந்து அறியாப்புட்களின் சீழ்க்கைகள். ஒரு கோடி சீவிடுகளின் இசை.  இறங்கும்போது மூன்றாம் மலையிலிருந்து இருபுறம் அடர்காடு. வான்காட்சிகள் குறைவு. மூன்றாம் மலையில் மூங்கில் குழாயில் இடைவிடாமல் ஒழுகும் கைதட்டி சுனை. பாம்பாட்டி சித்தரின் கோயில். இரண்டாம் மலையில் வழுக்குப் பாறை. படிக்கட்டுகள் உண்டு. முதல் மலை- இரண்டாம் மலை சந்திப்பில் சிறிய வெள்ளி வினாயகர் கோயில் – 1910 இல் கோவை வெள்ள்லூர் தேவர் சமூகத்தார் கட்டியது. கல்வெட்டில் ஒவ்வொரு புரவலரின் பெயரும் ஊர்பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு ஊரின் பெயர் எலித்தின்னி

vellingiri 3

15 மணி நேரம் கழித்து மீண்டும் அடிவாரத்து பூண்டி ஆண்டவர் கோயிலை அடைந்தோம். ஒரு முதிய தம்பதியினர் மலை ஏறும்போது அந்த தாத்தா சொன்னார் “ வருசத்துக்கு ஒரு தடவை இங்க வந்துட்டுப் போனா எல்லாப் பிரச்னையும் தீந்தமாதிரிப்பா”.

அடிவாரக் கோயில் மண்டபத்தில் படுத்து, மலைகள் மேல் மிதப்பது போல கனவுகள் கண்டு உறங்கினோம்.  பயணத்தில் இனிமை காண்பதற்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் தங்கள் தளத்திற்கு நன்றி

அன்புடன்

ஆர் ராகவேந்திரன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-69
அடுத்த கட்டுரைபால் அரசியல்