சுதசோமன் பீமனை நோக்கி விரைந்துசெல்ல அவனுடன் சர்வதனும் சுருதசேனனும் இருபுறங்களிலுமாக வந்தனர். பீமனை அறைந்து பின்னடையச் செய்துகொண்டிருந்தன கர்ணனின் அம்புகள். அவன் தேர் முழுக்க அம்புகள் தைத்து நாணல்கள் என செறிந்து நின்றிருந்தன. அவன் உடலெங்கும் அம்புகள் தைத்து அவன் போரிட்ட அசைவுகளுக்கேற்ப உதிர்ந்தன. சுதசோமன் சென்ற விரைவிலேயே தந்தையுடன் சேர்ந்துகொண்டு அம்புகளால் கர்ணனை அறைந்தான். மறுபக்கம் சர்வதனும் சேர்ந்துகொண்டான். சுருதசேனன் பீமனின் பின்புறத்தையும் வானையும் காத்து நின்றான். அவர்கள் வந்ததும் பீமன் சற்று ஆற்றல்கொண்டு அம்புகளால் அறைந்து கர்ணனை தடுத்து நிறுத்தினான்.
பீமனின் உடலில் இருந்து உடைந்த கவசங்கள் உதிர்ந்தன. அவனுடைய தேரில் இரண்டு புரவிகள் கழுத்தறுந்து தலைதொய்ந்து கிடந்தன. பாகன் தேரை பின்னெடுத்துச்செல்ல முயன்று புரவிகள் கால்கள் பின்னி தலைதாழ்த்தி நிலைகொள்ள சவுக்கால் அவற்றை அறைந்துகொண்டிருந்தான். தன்மேல் அம்புகள் படாமலிருக்க ஆமையோட்டுக் கவசம் முழுமையாகவே தன்னை மூடும்படி அமரத்தில் குனிந்திருந்தான். கர்ணனின் பேரம்பு பீமனை அறையவிருக்கும் தருணம் என சுதசோமன் எண்ணினான். அவர்கள் இருவரும் அம்புகளால் ஒரு வேலியை உருவாக்கி கர்ணனை நிறுத்தினர். கர்ணனின் முகம் இருண்ட ஆலயக்கருவறைக்குள் மிக அப்பால் தெரியும் கதிர்முகத்தெய்வம்போல் உறைந்து எங்கோ திரும்பிய விழிகளுடன் தோன்றியது.
பீமன் தன் தேரிலிருந்து தாவி உடைந்து கிடந்த தேர்மகுடமொன்றில் மிதித்து நின்று கர்ணனுடன் போரிட்டான். அங்கே அம்புகள் வந்து மொய்க்க கீழே விழுந்து உருண்டு யானைச்சடலம் ஒன்றுக்குப் பின்னால் மறைந்து மீண்டும் எழுந்து வில்குலைத்தான். பீமனின் பாகன் தேரிலிருந்து இறங்கி வாளால் இரு புரவிகளின் நுகச்சரடை வெட்டி அவற்றை உதிர்த்துவிட்டு தன் முழு உடலாலும் சகடத்தை நெம்பி பக்கவாட்டில் தள்ளி தேரை தூக்கிவிட்டான். அதற்குள் படைகளின் பின்பக்கத்திலிருந்து கொக்கிகளை வீசி தேரை இழுத்து எடுத்தனர். இருவர் புதிய புரவிகளுடன் வந்து தேரில் அவற்றை கட்டினர். தேர்ப்பாகனிடம் “நீங்கள் விலகுக… புதிய பாகன் செல்லட்டும்” என்றான் படைத்தலைவன். “இது என் போர்!” என்றான் பாகன்.
தேரில் ஏறிக்கொண்டு அவன் அம்புத்திரைக்கு தலையை குனித்து முன்னால் வர பீமன் வந்து தேரில் தாவியேறிக்கொண்டான். பின்னிருந்து புதிய ஆவக்காவலன் அம்புகளை எடுத்து அளிக்க பீமன் புதுவிசை கொண்டு கர்ணனுடன் போரிட்டான். அம்புகளால் அறைந்தபடி பீமன் முன்னெழுந்து செல்ல சுதசோமன் போரிட்டபடியே சுருதசேனனிடம் “தந்தை அச்சமறியாதவர். அவரிடம் பேசுவதில் பொருளில்லை… இப்போரை அவர் நெடுநேரம் நிகழ்த்தவியலாது. அங்கருடன் நின்று போரிடும் ஆற்றல் கொண்டவர் இளைய தந்தை அர்ஜுனர் மட்டுமே. செல்க, அவரை உடனே இங்கு துணைக்கு எழச் செய்க!” என்றான். சுருதசேனன் தலைதாழ்த்தியபின் தேரை பின்னடையச்செய்து அதிலிருந்து பாய்ந்திறங்கி புரவியில் ஏறி படையினூடாகச் சென்றான்.
கர்ணன் பீமனின் அந்த விசையை எதிர்பார்க்கவில்லை. முதலில் எழுந்த வியப்புக்குப் பின் அவன் சினம்கொள்வது தெரிந்தது. “விலகிச்செல், அறிவிலி… செல்!” என்று அவன் கூச்சலிட்டான். “இன்று உன் குருதியில் ஒரு துளி அருந்திவிட்டே செல்வேன், சூதன்மகனே” என்றான் பீமன். கர்ணனின் அம்புகளால் பீமனின் தேர்மகுடம் முன்னரே உடைந்திருந்தது. தூண்கள் சிதைந்து பின்னால் பறந்தன. பீமனின் உடலில் பெரும்பகுதி கவசங்களின்றி திறந்திருந்தது. சுதசோமன் திரும்பி நோக்கி “எங்கு சென்றான் அறிவிலி?” என்றான். சர்வதன் “தந்தையை பின்னடையச் செய்க, மூத்தவரே!” என்றான். “அவரிடம் எவர் சொல்வது!” என்று சுதசோமன் சொன்னான். “இளைய தந்தை எழுந்தாலொழிய இப்போர் முடிவுறாது” என்றான்.
சுருதசேனன் புரவியில் வந்து அருகணைந்து “மூத்த தந்தை அர்ஜுனர் அஸ்வத்தாமராலும் துரோணராலும் ஒரே தருணத்தில் மறிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குத் துணையாக சுருதகீர்த்தி மட்டுமே இருக்கிறார். சாத்யகியை சகுனியும் கிருபரும் சேர்ந்து மறித்திருக்கிறார்கள். திருஷ்டத்யும்னரை மூத்த தந்தை துரியோதனரும் இளையோரும் செறுக்கிறார்கள். எவரும் எங்கிருந்தும் விலகும் நிலையில் இல்லை” என்றான். சுதசோமன் “எவராவது வந்தாகவேண்டும்… உடனே வந்தாகவேண்டும்” என்றான். பீமன் உடலில் அம்புகள் தைத்துக்கொண்டே இருந்தன. ஒவ்வொரு அம்புக்கும் அவன் மேலும் சினம்கொண்டு முன்னேறினான்.
சர்வதன் “தந்தையே! தந்தையே” என்று கூவினான். பின்னர் சுதசோமனிடம் “தந்தையை நிறுத்துங்கள்… அவர் அம்புகளின் எல்லையைக் கடந்து அணுகுகிறார்” என்றான். சுதசோமன் ஒருகணம் உளம்தளர்ந்தான். கண்முன் அது நிகழவிருக்கிறதா? அதன்பொருட்டா அத்தனை விரைந்து வந்தோம்? சர்வதன் “ஏதாவது செய்யுங்கள், மூத்தவரே. அவரை பின்னெடுங்கள்” என்றான். “நாம் உயிர்கொடுப்பதொன்றே இப்போது செய்யக்கூடுவது” என்றபடி சுதசோமன் வில்லை இழுத்து அம்புகளைத் தொடுத்தபடி கர்ணனின் அம்புகளின் எல்லையை கடந்து உள்ளே சென்றான். கர்ணனின் அம்புகள் அவன் கவசங்களை அறைந்தன. அவை உடைந்து விழ அவன் நெஞ்சில் கர்ணனின் அம்பு பாய்ந்து அவனை தேரிலிருந்து தூக்கி வீசியது.
நிலத்தில் விழுந்து நெஞ்சில் நட்ட அம்புடன் துடித்துப் புரண்டு கீழே கிடந்த சடலங்களுடன் கலந்த சுதசோமனைக் கண்டு “மூத்தவரே…” என்று கூவியபடி சர்வதன் அம்புகளால் கர்ணனை அறைந்து முன்னெழுந்தான். “நீ பின்னால் செல்” என்று பீமன் கூவினான். “பின்னெழுக… இது என் ஆணை!” சர்வதன் “தந்தையே” என்றான். “பின்னால் செல்க!” என்றான் பீமன். சர்வதன் கண்ணீருடன் தேரை பின்தங்கச் செய்தான். கொக்கிச்சரடுகளை வீசி சுதசோமனின் உடலை இழுக்க பின்னணிப் படையினர் முயன்றனர். ஆனால் கர்ணனின் அம்புகளால் கொக்கிகள் அறைந்து வீழ்த்தப்பட்டன. சர்வதன் தேரிலிருந்து இறங்கி குனிந்து ஓடி சுதசோமனை அடைந்தான். அவன் முதுகின் கவசத்தின் மேல் கற்கள் விழுவதுபோல் அம்புகள் அறைந்தன. சுதசோமனின் உதடுகள் அசைந்தன. சர்வதன் உடலை நீட்டி கையால் எட்டி கொக்கிக் கயிற்றைப் பற்றி சுதசோமனின் இடைக்கச்சையில் பொருத்தினான். கயிறு சுதசோமனை இழுத்துச்செல்ல அவன் “இளையோனே” என முனகினான்.
சர்வதன் கீழே படுத்தபடி நோக்கியபோது பறவைக்கூட்டங்களால் சூழப்பட்டவன்போல் அம்புகள் நடுவே நின்ற பீமனை கண்டான். அவன் உடலில் கவசங்களே இல்லை என்பதை உணர்ந்ததும் அவன் கண்களை மூடிக்கொண்டான். “தந்தையே! தந்தையே!” என்று அவன் கூவினான். கர்ணன் அம்பு ஒன்றை எடுத்து நாண் இழுத்து தொடுப்பதை அவன் அகத்தால் கண்டான். சூழ்ந்திருந்த பாண்டவப் படையினரின் அலறலோசைகள் சேர்ந்து எழுந்தன. பெரிய கரிய சுவர் ஒன்றால் பீமன் அனைத்து அம்புகளில் இருந்தும் காக்கப்பட்டதுபோல் உளமயக்கு எழ அவன் விழிதிறந்த அதே கணம் விண்ணிலிருந்து முழக்கமிட்டபடி கடோத்கஜன் கர்ணனுக்கும் பீமனுக்கும் நடுவே இறங்கினான்.
கர்ணன் அதை எதிர்பார்க்கவில்லை என்பதனால் வில் திகைக்க செயலிழந்தான். அந்த கணப்பொழுதே கடோத்கஜனுக்கு போதுமானதாக இருந்தது. அவன் கர்ணனின் தேர்மேல் பாய்ந்து அமரத்தின்மேல் இறங்கி அங்கே தேர்ப்பாகனாக அமர்ந்திருந்த கர்ணனின் உடன்குருதியினனான உக்ரசீர்ஷனை அறைந்து கொன்றான். தன் கவசங்களுடன் உடல்சிதைந்து குருதி தெறிக்க அவன் தேர்த்தட்டிலேயே விழுந்தான். கர்ணன் கையிலிருந்த அம்பால் கடோத்கஜனை குத்த அதை உடல் வளைத்து ஒழிந்து கதையைச் சுழற்றி கர்ணனை அறைந்தான் கடோத்கஜன். கர்ணன் அதை தன் வில்தண்டால் தடுத்து அக்கணமே வாளை உருவிக்கொண்டு கடோத்கஜனை தாக்கினான். வாள்வீச்சை ஒழிந்து துள்ளி எழுந்து இருளில் மறைந்த கடோத்கஜன் மறுகணமே கர்ணனின் தேருக்குமேல் இறங்கி தேரின் மகுடத்தை அறைந்து உடைத்தான். கர்ணன் வில்குலைத்து அம்புதொடுப்பதற்குள் மீண்டும் பறந்தெழுந்து மறைந்தான்.
இருபுறத்திலிருந்தும் ஊளைகள் முழங்க இடும்பர்கள் கர்ணனைச் சுற்றி இறங்கினார்கள். அவர்களின் நீள்வேல்களும் கதைகளும் கர்ணனைச் சூழ்ந்து வந்த அங்கநாட்டு வில்லவர்களை கொன்றுவீழ்த்தின. அவர்கள் வில்லெடுத்து தொடுக்கும் அளவுக்கு தொலைவு இருக்கவில்லை. வாளாலோ கதையாலோ தாக்க இடும்பர்கள் நிலைகொள்ளவுமில்லை. உருவெனத் திரளா இருளுடன் போரிடுவதாகவே அவர்கள் உணர்ந்தனர். இருள் உருவெனத் திரிந்துவந்து தாக்கி மீண்டது. அவர்கள் அஞ்சிக் கூச்சலிட்டபடி பின்னடைந்தனர். ஒருவரோடொருவர் முட்டி மோதினர். அவர்களை மேலிருந்து வந்து தூக்கிக்கொண்டு மேலெழுந்தனர் இடும்பர். மேலிருந்து எடையுடன் நிலமறைந்து விழுந்தவை தங்கள் தோழர்களின் உடல்கள் என அவர்கள் கண்டனர். பின்னர் அவர்களின் தலைகள் வந்து அவ்வுடல்கள்மேல் விழுந்தன.
எதிர்பாராத கணத்தில் கர்ணனின் தேரின் பின்புறத்தில் தோன்றிய கடோத்கஜன் அவனை முதுகில் அறைந்து வீழ்த்தினான். வில்லுடன் தேரின் முகப்பை நோக்கி விழுந்த கர்ணன் அடுத்த அறை விழுவதற்குள் உருண்டு கையூன்றி எழுந்தான். மேலும் ஒரு அறை விழ அவன் துள்ளி கீழே பாய்ந்தான். நீள்வேலால் கடோத்கஜனை தாக்க அவன் எழுந்து விண்ணுக்குள் மறைந்தான். சினத்துடன் கர்ணன் கூச்சலிட்டான். வெறுங்காற்றில் தன் வேலை வீசினான். அவனைச் சூழ்ந்து அங்கநாட்டு வில்லவர்களின் உடல்கள் மேலிருந்து விழுந்தன. அவன் கீழிருந்து கதை ஒன்றை எடுத்துக்கொண்டு விண்நோக்கி கைதூக்கி அறைகூவல் விடுத்தான்.
மேலிருந்து இறங்கிய இடும்பன் ஒருவன் அவனை அறைவதற்குள் நாகபடம்போல் விரைவுடன் திரும்பி அவனை தலையிலறைந்து வீழ்த்தினான். முகத்தில் தெறித்த அவன் தலைச்சேறுடன் துள்ளி எழுந்து மேலிருந்து விழுவதற்குள்ளாகவே இன்னொரு இடும்பனை அறைந்துகொன்றான். அப்பால் கழையில் எழ முயன்ற இடும்பன் ஒருவனை கதையை எறிந்து வீழ்த்தி பாய்ந்து சென்று நீள்வேலால் அவன் நெஞ்சில் குத்தி தூக்கிச் சுழற்றி அப்பாலிட்டான். அவன் கதையை எடுப்பதற்குள் விண்ணிலிருந்து இறங்கிய கடோத்கஜன் அவனை கதையால் அறைந்தான். மூன்று அறைகளையும் ஒழிந்து கதை நோக்கிப்பாய்ந்து அதை எடுத்துக்கொண்ட கர்ணன் கடோத்கஜனை அறைந்தான். அதை தவிர்த்து துள்ளி அப்பால் விலகி மீண்டும் விண்ணில் எழுந்து மறைந்தான் கடோத்கஜன்.
கர்ணனின் தேரை இழுத்து பின்னால் கொண்டுசென்றார்கள். அதில் இறந்து தொங்கிய புரவிகளை அகற்றி புதிய புரவிகளைக் கட்டி கர்ணனின் குடியிளையோன் சாந்தன் ஓட்டிக்கொண்டு வந்தான். கர்ணன் சரிந்துகிடந்த சிதைந்த தேர்களில் கால்வைத்து பாய்ந்தோடி தன் தேரிலேறிக்கொண்டான். விஜயத்தை எடுத்து அவன் நாணொலி எழுப்பியதும் அகன்றுசென்று முட்டிமோதிக்கொண்டிருந்த அங்கநாட்டுப் படைவீரர்கள் பெருங்கூச்சலுடன் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டு எழுந்தனர். வில்குலைத்து நாணொலி எழுப்பியபடி அவர்கள் உடையாத தேர்களில் ஏறி தங்களை நிரையாக்கிக்கொண்டு வந்து அவன் முன் கூடினர்.
கர்ணன் அம்புகளை வானோக்கி ஏவி இருளில் ஒரு கூரை என நிறுத்தினான். அம்புகள் பட்டு மேலிருந்து இடும்பர்கள் அலறியபடி விழுந்தனர். “விண்ணை முழுமையாக அம்புகளால் நிறையுங்கள்… அம்பு படாது ஒருவன்கூட கீழிறங்கலாகாது” என்று கர்ணன் ஆணையிட்டான். பின்னடைந்து படைநிரைக்குள் புகுந்து தன் உடலில் இருந்து அம்புகளை அகற்றி, புண்களுக்கு கட்டுபோட்டு புதிய கவசங்களை அணிந்து புதிய தேரில் மீண்டு வந்த பீமன் “எழுக! எழுந்து சூழ்க!” என தன் படையினருக்கு ஆணையிட்டுக்கொண்டு முன்னெழுந்து கர்ணனை தாக்கினான். கர்ணன் இருபுறங்களையும் அம்புகளால் செறுத்தபடி வானிலும் அம்புகளை செலுத்தி கௌரவப் படையை முற்றாகக் காத்தபடி முன்னெழுந்து வந்தான். அவனை பாண்டவர்களின் எந்த அம்பும் சென்றடையவில்லை. அவன் அம்புகள் பட்டு விண்ணிலிருந்து விழுந்த இடும்பர்களை வில்லவர்கள் அம்புகளால் மேலும் மேலும் அறைந்து சிதைத்தனர். தன் தேரின்மேல் விழுந்த இடும்பன் ஒருவனை வாளால் தலைவெட்டி அதை உதைத்து தெறிக்கச் செய்தான் கர்ணன். கௌரவப் படையினர் பெருங்கூச்சலிட்டு நகைத்தபடி எழுந்து வந்துகொண்டிருந்தார்கள்.
அரவான் சொன்னான்: தோழரே, அறிக! நான் போரை பார்த்துக்கொண்டிருக்கிறேன். எத்தனையோ யுகங்களுக்கு அப்பால் என்றுமினி மீளமுடியாத காலத்தொலைவில் நிகழ்ந்து அணைந்துவிட்டிருக்கிறது அந்தப் போர். கர்ணனுக்கும் கடோத்கஜனுக்கும் நிகழ்ந்த களமோதலை கதிரவனுக்கும் இருளுக்கும் இடையேயான போர் என்று களம்பாடும் சூதர்கள் சொல்கின்றனர். ஒளி ஊடுருவுவது, கடந்துசெல்வது, எழுந்தணைவது. இருள் சூழ்ந்துகொள்வது, என்றுமிருப்பது, அலகிலாத விரிவுகொண்டது. இருளை ஒளி பல்லாயிரம் முறை வெல்லும். ஆனால் இருளே என்றுமிருக்கும்.
படைப்பு முதற்பொழுதில் இப்புடவியைச் சமைத்த பிரம்மன் இரு கைகளிலும் ஊடும் பாவுமென கடுவெளியில் இருந்து இருளையும் ஒளியையும் எடுத்துக்கொண்டான். இருளால் மண்ணை உருவாக்கினான். ஒளியால் அனலை உருவாக்கினான். ஒளியையும் இருளையும் கலந்து நீரை சமைத்தான். இருளால் யானையை உருவாக்கினான். ஒளியால் செம்பருந்தை உருவாக்கினான். இருளையும் ஒளியையும் கலந்து நாகங்களை படைத்தான். வேர்கள் இருளால், தளிர்கள் ஒளியால். விதைகள் இருளால், மலர்கள் ஒளியால். ஆற்றல் இருள். விசை ஒளி. சொல் இருள், பொருளே ஒளி. ஒன்றிலாது ஒன்றிலாது முடையப்பட்டு ஒன்றுடன் ஒன்று போரிட்டுக்கொண்டிருக்கின்றன அவை.
அரக்கர்களை மண்ணில் இருந்தும் அசுரர்களை வேர்களில் இருந்தும் படைத்தான் பிரம்மன். கந்தர்வர்களை அனலில் இருந்தும் தேவர்களை ஒளியிலிருந்தும் படைத்தான். மண்ணில் உடல்படைத்து அனலில் உளம்சமைத்து மானுடரை அமைத்தான். தேவரும் அசுரரும் மாளாப் போரில் ஈடுபட்டிருக்கின்றனர். அறிக, ஒவ்வொரு மானுடருக்குள்ளும் அப்போர் ஒவ்வொரு கணமும் என நிகழ்கிறது. ஆணவம் அசுரர்களின் இயல்பு, விழைவு தேவர்களுக்குரியது. சினம் அசுரர்களை யாக்கிறது, சீற்றம் தேவர்களின் விசை. வஞ்சம் அசுரர்களுக்குரியது, வீறு தேவர்களுக்குரியது. வெற்றியில் தேங்கித் திளைக்கிறது ஆசுரம், வென்றபின் வெறுமைகொண்டு கடந்து செல்கிறது தேவம். மானுடர் இரு முனைகளில் ஓயாது ஊசலாடும் எளியோர்.
எண்ணிஎண்ணிப் பெருகுபவர்கள் இருளின் மைந்தர்களான அரக்கர்கள். ஆணவமும், சினமும், வஞ்சமும் அவர்களின் தலைகளும் கைகளுமாகின்றன. கடோத்கஜன் ஆயிரம் தலைகளுடன் விண்ணிலெழுந்தான். பல்லாயிரம் கதைகள் கௌரவப் படைகள் மேல் விழுந்தன. துரியோதனன் தன் படைத்தலைவர்கள் உடல் சிதைந்து இறப்பதைக் கண்டான். முதன்மைப் படைத்தலைவனாகிய சண்டஹஸ்தனின் உடல்சிதறிய குருதி அவன் முகத்தில் தெறித்தது. விழிதிகைத்து நோக்கிநிற்கையிலேயே துணைப்படைத்தலைவர்களான அலம்பலனும் உதயகீர்த்தியும் சாருசித்ரனும் உடல்சிதைந்து மண்ணில் பரவினர். வானிருளே கைகள் பூண்டு தாக்குவது போலிருந்தது. படைத்தலைவர்கள் அபீருவும் அமத்யனும் கிருமீளனும் அவன் உடன்பிறந்தான் கிருஷேயனும் கொல்லப்பட்டனர்.
விண்ணிலிருந்து அறைவிழுந்து துச்சகனின் தேர் உடைந்தது. இளையோனின் அலறல் கேட்டு துரியோதனன் “மைந்தா!” என்று கூவினான். துள்ளியெழுந்து மறைந்த கடோத்கஜனின் விழிகளின் ஒளியை ஒருகணம் கண்டான். “நோக்குக! இளையோனை நோக்குக!” என அலறியபடி அவன் தேரிலிருந்து தாவ முயல சரிந்த தேருக்கு அடியிலிருந்து துச்சகன் உடலை இழுத்து எடுத்துக்கொண்டு அப்பால் ஓடினான். அவ்வண்ணம் துரியோதனன் தாவியதனால் அவன் தேர்மேல் விழுந்த அறையிலிருந்து தப்பினான். வெடித்துச் சிதறிய தேரின் துண்டுகள் அவன் உடலை அறைந்து விழுந்தன. அடுத்த அறையில் அவன் அருகே நின்றிருந்த யானை சிதறித் தெறித்தது. அதன் குருதியும் நிணமும் உடலெங்கும் வெம்மையுடன் பொழிய அதில் வழுக்கி அவன் விழுந்தமையால் அடுத்த அறை அவனை கடந்துசென்று நிலத்தில் பதிந்து மண்ணை எழுப்பியது. அவன் எழுந்து அந்தக் குழியில் கால்தடுக்கி விழுந்தமையால் அடுத்த அறையிலிருந்து தப்பினான். அவன் பாய்ந்து யானைச்சடலங்களிலும் தேர்உடைவுகளிலும் மறைந்து எழுந்து ஓடி பிறிதொரு தேரில் ஏறிக்கொண்டான். “அங்கரே, அந்த அரக்கனை தடுத்து நிறுத்துங்கள். இல்லையேல் நாம் எவரும் எஞ்சப்போவதில்லை” என்று கூவினான்.
கர்ணன் தன் அம்புத்தூளியிலிருந்து எடுத்த அம்பு நாகத்தின் உடல்கொண்டிருந்தது. அதை அவன் ஏவியபோது மண்ணில் விழுந்த அதன் நிழல் கணம் ஆயிரமெனப் பெருக தரையெங்கும் நாகங்கள் நிறைந்தன. உடல் நெளிய படமெடுத்து சீறின. விண்ணிலிருந்து விழுந்த இடும்பர்களை நோக்கி பாய்ந்துசென்று கால்களில் கவ்விச் சுற்றிக்கொண்டன. கடோத்கஜன் வானில் முகிலென பெருகியெழுந்தான். அவன் இரு கைகளையும் ஓங்கி அறைந்தபோது மின்னல்கீற்றுகளால் வான் கிழிந்து அதிர்ந்தது. செவி ரீங்கரிக்கும் பேரோசையுடன் இடித்தொடர் எழ நாகங்கள் அனல்பட்ட புல்தளிர்கள்போல பொசுங்கிச் சுருண்டு உருளைகளாகி மண்ணுடன் ஒட்டிக்கொண்டன. விண்ணிலிருந்து மழைக்கற்றை ஒன்று அவர்களை வந்து அறைந்து மூட அத்திரைக்குள் இறங்கிய கடோத்கஜன் தன் கதையால் அங்கு நின்றிருந்த கௌரவப் படையை அறைந்துகொன்று குருதிவெறியாடி மீண்டான்.
“அங்கரே, அவனைக் கொல்க… இக்கணமே கொல்க. இன்னும் அரைநாழிகைப் பொழுது அவனைத் தாளாது நமது படை!” என்று துரியோதனன் கூவினான். கர்ணனைச் சூழ்ந்தது அரக்கனின் மாயை. நூற்றுக்கணக்கான யானைகள் பிளிறி, கொம்பு குலுக்கி, துதிக்கை சுழற்றியபடி வந்து அவனை சூழ்ந்துகொண்டன. துதிக்கைகளால் அவை தேர்களைத் தூக்கி மண்ணிலறைந்தன. கொம்புகளால் குத்தி தூக்கிச் சுழற்றி அப்பாலிட்டன. வீரர்களின் உடல்களை மிதித்து அரைத்து அக்குருதிச் சேற்றில் வழுக்கின. கர்ணனின் அம்புகள் கூரிய கொடுக்குகளுடன் குளவிக்கூட்டமாக எழுந்தன. அவை யானைகளின் செவிகளுக்குள் புகுந்துகொண்டன. கண்களைக் கொட்டி நஞ்சூட்டின. துதிக்கைகளுக்குள் புகுந்துகொண்டன.
அமறலோசையுடன் எருமைக்கூட்டமெனத் திரண்டு எழுந்தான் கடோத்கஜன். கர்ணனின் அம்புகள் அவற்றின் கொம்புகளுக்கு நடுவே பாய்ந்தன. கடோத்கஜனின் மாயை கருங்கரடிகளாக ஒன்றை ஒன்று தூக்கி முன்னால் வீசி தாவி வந்தது. பன்றிக்கூட்டங்களாக முட்டிமோதிப் பெருகி வந்தது. கூகைகளாக குழறலோசை எழுப்பியபடி சிறகடித்துச் சுழன்றது. கர்ணன் அம்புகள் ஓய்ந்து பின்னடைந்துகொண்டே இருந்தான். துரியோதனன் “அங்கரே, இவை உளமயக்குகள். அரக்கனின் மாயைகள்… இவற்றை எதிர்கொள்ள நம்மிடம் படைக்கலங்கள் இல்லை” என்று கூவினான். காண்டாமிருகங்கள் இருளிலிருந்து எழுந்துவந்து கௌரவத் தேர்களை உடைத்தெறிந்தன. முழுமையாகவே படைசூழ்கை கலைந்து சிதறி ஓடிய கௌரவர்களை பன்றிகள் தேற்றைகளால் கிழித்து வீசின. எருமைகள் குத்தித் தூக்கி எறிந்தன. அவற்றுக்குமேல் மழை வீசி வீசி அறைந்தது. இடியோசையும் மின்னல்களும் அதிர்ந்தன. இடியை விழிகளால் காணமுடிந்தது. மின்னல் உடல் மேல் அதிர்வெனக் கடந்துசென்றது. இறந்துவிழுந்தவர்கள் இறந்து நெடுநேரம் கடந்தும் தாங்கள் இறந்துவிட்டதை அறியவில்லை. அது தீக்கனவு என்று விழித்துக்கொள்ளலாம் என்றும் நம்பினர். தலையுடைந்த உடல்கள் எழமுயன்று துள்ளின. வெட்டுண்ட துண்டுகள் திமிறிப்புரண்டன. அவர்களுக்குமேல் கனவு எடையுடன் உருண்டு சென்றது. கனவுருவாகிய யானை இத்தனை எடைகொண்டிருக்குமா என அவர்கள் மலைத்தனர்.
கர்ணன் விழிகளை மூடித்திறந்து அந்த மாயையிலிருந்து விலக முயன்றான். ஆனால் அது மாயை என மீளமீள உளம்நோக்கி கூவிக்கொண்டாலும் கண்முன் அது அவ்வண்ணமே திகழ்ந்தது. கண் மின்னும் எருமைகள், குருதித்துளிகள் சூடிய முடிமுட்கள் சிலிர்த்த பன்றிகள், கொம்புகளில் குடல்மாலைகள் வழுக்கும் யானைகள். அவனுடைய அம்புகள் அவற்றின்மேல் அறைந்து அறைந்து உதிர்ந்தன. பின்னிருந்து சகுனி “செல்க! அரக்கர் சிலரே அங்குள்ளனர்! சூழ்ந்துகொள்க…” என்று முரசொலித்துக்கொண்டே இருந்தார். “என்ன நிகழ்கிறது அங்கே? ஏன் அந்த நிலைகுலைவு? சூழ்ந்துகொள்க! சூழ்கையை மீட்டமையுங்கள்… அங்கே அழிவு நிகழ்கிறது… அஸ்வத்தாமரும் துரோணரும் துணைக்குச் செல்க!”
பதினெட்டு கைகளுடன் பேருருவ அரக்கன் ஒருவன் கால்களை அடிமரத்தூர்கள் என தூக்கிவைத்து களத்தில் நடந்தான். அவன்மேல் அம்புகளால் அறைந்து அறைந்து பின்னடைந்து கொண்டிருந்த கர்ணன் எருமைத்தலையும் எட்டு கைகளும் கொண்ட பிறிதொரு அரக்கனை பார்த்தான். நான்கு எருதுத் தலைகள்கொண்ட இன்னொரு அரக்கன் களத்தில் குருதியாட்டமிட்டான். “அங்கே கடோத்கஜன் ஒருவனே உள்ளான்… இடும்பர்கள் பெரும்பாலும் சிதறிவிட்டிருக்கின்றனர். ஒருவன் மட்டிலுமே. அவனை சூழ்ந்துகொள்க… அவனை வெல்க!” என்று சகுனியின் முரசுக்குரல் ஒலித்தது. கைகளை விரித்து எட்டுச் சிறகுகளாக ஆக்கி அரக்கன் வானில் எழுந்தான். முதலைபோல மாபெரும் செதில்வால் கொண்டிருந்தான். அதைச் சுழற்றி அவன் களத்தை அறைந்தான். துடைப்பத்தால் சருகுகளை அள்ளிக் கூட்டி வீசுவதுபோல அவன் தேர்களையும் யானைகளையும் அறைந்து தெறிக்கச் செய்தான்.
“அங்கரே, நம் படைத்தலைவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள்… நமக்குத் துணை எவருமில்லை…” என்று துரியோதனனின் குரல் கேட்டது. “அங்கரே, அவனைக் கொல்க… அவனைக் கொன்று எங்களை காப்பாற்றுங்கள்!” என்று துச்சகன் கூவினான். கண்முன் பனைமரங்கள்போல் நடமாடிய மாபெரும் கால்களையே கர்ணன் கண்டான். பனைமரக் காடு. அசையும் காடு. அவனுடைய அம்புகள் அனைத்தும் வீணாயின. “அங்கே ஒருவன் மட்டுமே இருக்கிறான்… கடோத்கஜன் மட்டுமே உங்களை அழித்துக்கொண்டிருக்கிறான்…” என்று சகுனி கூவினார். கர்ணனின் தேர்மேல் அறை விழுந்தது. தேர் தூக்கி வீசப்பட்டதுபோல் தெறிக்க அதன் அடியில் கர்ணன் சிக்கிக்கொண்டான். அடியிலிருந்து அவன் உடனே தன்னை உருவிக்கொண்டு விலக தேரில் விழுந்த அறையால் அது உடைந்து உருக்குலைந்தது.
கர்ணன் பாய்ந்து கீழே கிடந்த சடலங்கள் நடுவே படுத்துக்கொண்டான். அப்பால் அவனுடைய வில்லும் அம்புத்தூளியும் கிடந்தன. அவன் புரவிகளும் தேர்ப்பாகனும் ஆவக்காவலனும் நசுங்கி குருதிக்கூழாகக் கிடந்தனர். அவன் தலைக்குமேல் பிளிறலோசையுடன் கால்கள் நடந்தன. வானிலென அரக்கர்களின் முகங்கள் தெரிந்தன. “அங்கரே” என்று துரியோதனன் அலறினான். கர்ணன் அறியாது கையூன்றி எழ உடைந்த தேரிலிருந்து பாய்ந்து துரியோதனன் ஓடுவதைக் கண்டான். துச்சகன் அப்பால் எங்கோ இருந்து “மூத்தவரே, பின்னணிக்கு வருக… இங்கே வந்துவிடுங்கள்” என்று கூவிக்கொண்டிருந்தான். பாய்ந்து தன் வில்லை எடுக்க எண்ணி கர்ணன் உடலை அசைத்தான். அவ்வசைவு நிகழ்ந்ததுமே அவனை அறைந்தது விண்ணிருள். அவன் உருண்டு அந்த அறையிலிருந்து தப்ப அங்கே கிடந்த உடல்கள் கூழாகி அவன் மேல் சேறெனத் தெறித்தன.
“அங்கே ஒருவனே இருக்கிறான்… அவன் ஒருவன் மட்டிலுமே உங்களைத் தாக்குகிறான். அவனை வெல்க… அங்கர் உடனே அவனைக் கொன்றெழுக!” என்று சகுனியின் முழக்கம் கேட்டுக்கொண்டே இருந்தது. அங்கே நூற்றுக்கணக்கான பெருங்கால்கள் நிலம் நடுங்க அலைந்தன. அறைபட்டு பூழி எழுந்துதெறிக்க வீரர்கள் அலறி சிதறி அழிந்துகொண்டிருந்தனர். இது விழிமயக்கா? உள்ளம்தான் மயங்கியதா? கர்ணன் தன் வில்லை நோக்கி மெல்ல மெல்ல முன்னகர்ந்தான். ஆனால் உடல் நகரவில்லை என்பதை உணர்ந்தான். மேலுமொரு முறை உள்ளத்தை உந்தியபோது மெல்லிய அசைவை உணர்ந்தான். ஒரு தசை அசைவு கொண்டிருக்கக்கூடும். மேலிருந்து உறுமலோசை எழுந்தது. கதை ஒன்று தாழ்ந்து வந்து அவன்மேல் பறந்து தேடியபடி அப்பால் சென்றது.
பின்னர் அவ்வரக்கன் நன்றாகக் குனிந்து சடலங்களை தேடத் தொடங்கினான். கதையால் ஒவ்வொரு உடலாக தூக்கிப்புரட்டினான். முகர்ந்தபடி வரும் கரிய கரடிபோல் அந்தக் கதை அணுகி வருவதை கர்ணன் கண்டான். விழிகள் அறியாது மூடியபோது ஒருசில கணங்களே ஆகிவிட்டிருந்தன என்று தோன்றியது. திடுக்கிட்டு கண்திறந்தான். விழிமூடியபோது அவன் அந்தக் கால்களை காணவில்லை, அந்த கதை சிறிதாக இருந்தது. அவன் மீண்டும் விழிமூடினான். ஓசைகள் வழியாக உணர்ந்தவை காட்சிகளென்றாக அங்கே கடோத்கஜன் மட்டும் நின்றிருப்பதைக் கண்டான். அவன் கதையால் நிலத்தில் இடைவெளியின்றி குவிந்திருந்த சடலங்களை அகற்றி தேடிக்கொண்டிருந்தான்.
சற்று அப்பால் தன் வில்லையும் அதற்கப்பால் ஆவநாழியையும் கர்ணன் கண்டான். கணம்கணமென எண்ணிக் கணக்கிட்டு விழிகளை மூடியபடியே பாய்ந்தெழுந்து தன் ஆவநாழியையும் வில்லையும் எடுத்துக்கொண்டு மேலும் பாய்ந்து உருண்டு சென்று அகன்று எழுந்து நின்று அதே விசையில் ஆவநாழியிலிருந்து அரவம்பை எடுத்து கடோத்கஜன் மேல் ஏவினான். கர்ணனின் அசைவைக் கண்டு கதையுடன் அவனை நோக்கிப் பாய்ந்த கடோத்கஜன் விண்ணில் இருக்கையிலேயே அவன் நெஞ்சை நாகவாளி தாக்கியது. உடல் அதிர்ந்து தசைகள் இழுபட்டு வலிப்புகொள்ள தூக்கிவீசப்பட்டவன்போல கடோத்கஜன் மல்லாந்து மண்ணில் விழுந்தான். நாகவாளி அவன் நெஞ்சில் கவ்வியபடி கிடந்து நெளிந்தது.
அம்புபட்ட கணமே கண்களைத் திறந்து நோக்கிய கர்ணன் விண்ணிலிருந்து மலை என கடோத்கஜன் விழுவதைக் கண்டான். பனைமரத்தடிபோல் பருத்த கரிய நாகம் அவனைச் சுற்றிக்கட்டி அசைவிழக்கச் செய்திருந்தது. அவன் மேல் மேலும் ஒரு பேருருவ அரக்கன் விழுந்தான். அவன் மேல் இன்னொருவன் விழுந்தான். அவர்கள் அனைவரும் நாகங்களால் கட்டுண்டிருந்தனர். ஒருவர் மேல் ஒருவர் என அவர்கள் விழுந்துகொண்டே இருந்தனர். அவ்வதிர்வில் நின்றிருந்த தேர்கள் துள்ளின. தரை அதிர வீரர்கள் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டனர். மேலிருந்து சுழன்றெழுந்த பூழியும் சருகுகளும் பொழிந்து அரக்கர்குவியலை மூடின. அவர்கள் விழுந்தமையால் கொந்தளித்த காற்று மெல்லமெல்ல அடங்க நெடுநேரமாகியது.
கர்ணன் வில்தாழ்த்தி நீள்மூச்செறிந்தான். துரியோதனனும் துச்சகனும் அவனை நோக்கி ஓடிவந்து இரு கைகளையும் பற்றிக்கொண்டனர். துரியோதனன் “ஒரு தீக்கனவு… இதிலிருந்து மீள்வோமா என்றே அஞ்சினேன், அங்கரே” என்றான். துச்சகன் “நம்மை முற்றழித்திருப்பான்!” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் அவர்களின் கைகளை விலக்கி படைவிரிவு நோக்கி நடந்தான். விழிக்கு வேறுபாடு தெரிய திரும்பி நோக்கியபோது மண்ணில் கைவிரித்துக் கிடந்த கடோத்கஜனை கண்டான். அதுவரை விழிமாயத்தால் திகைத்து நின்றிருந்த கௌரவப் படையினர் வெற்றிமுழக்கமிடத் தொடங்கினர்.