மனிதர்களுடனும் அப்பாலும்

jeya

அன்புள்ள ஜெ,

உங்களை தமிழ்ச் சமூகம் ஒட்டுமொத்தமாக பகிஷ்கரிக்கவேண்டும் என்று கூவிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் யமுனா ராஜேந்திரன் என்பவர். மார்க்ஸியராக தன்னை காட்டிக்கொண்டிருப்பவர். நான் வாசித்தவரை ஒரு வெத்துவேட்டு. ஆனால் சத்தம் அதிகம். நீங்கள் அவரை பொருட்படுத்துவதே இல்லை என்பதே அவருடைய பிரச்சினை என நினைக்கிறேன்.

ஆர்.இளங்கோ

அன்புள்ள இளங்கோ,

நான் அலட்சியத்தால் எவரையும் தவிர்ப்பதில்லை. ஒரு மனிதனை பொருட்படுத்தாமலிருக்க காரணம் ஏதுமில்லை. அவருக்கு ஓர் அறிவுத்தளத்தில் பேசுவதற்கான நேர்மை, நாகரீகம், அடிப்படைப் புரிதல் என்னும் மூன்று தகுதிகளும் இல்லை. ஆகவே பேசுவது வீண் என நினைக்கிறேன்.  நான் என்றல்ல, இங்கே அனேகமாக எவருமே அவரிடம் விவாதிப்பதில்லை என்பதை காண்க.

ஆனால் மனிதர் என்ற வகையில் எனக்கு அவரிடம் அனுதாபமே. வேலை இல்லாமல் அரசு அளிக்கும் நிதியுதவி, வேறு சிலரின் உதவியுடன் லண்டனில் வாழ்பவர். அவருடைய மிகைக்கொதிப்புகள் வெறுமனே அடையாளம்தேடும் முயற்சி, அதன் விளைவான காழ்ப்பு, தனிமை உருவாக்கும் உளக்கொந்தளிப்பு ஆகியவற்றின் விளைவு.

சில ஆண்டுகளுக்கு முன் நேசகுமார் என்ற பேரில் இஸ்லாம் குறித்து கடுமையான விமர்சனங்களை ஒருவர் எழுதிவந்தார். அவரை உலகளாவ இஸ்லாமிய அமைப்புக்கள் வேட்டையாடின. அப்போது அப்பெயரில் எழுதுவது நான்தான் என இவர் திட்டமிட்டு கிளப்பிவிட்டார். எனக்கு கடும் அச்சுறுத்தல் வந்தது. என்னை அழைத்துச்சென்று மிரட்டி என் மின்னஞ்சல்களைத் திறந்து ஆராய்ந்து நான் நேசகுமார் அல்ல என்று கண்டபின் விடுவிக்கப்பட்டேன். ‘திட்டம்போட்டு அடிச்சேன், தப்பிச்சிட்டான்’ என இவர் சொன்னதை அறிந்தேன். முன்னரே இவற்றை பதிவுசெய்திருக்கிறேன்.

மேலும் சில ஆண்டுகள் கழித்து ஒருநாள் இவரே தொலைபேசியில் அழைத்தார். கொஞ்சும் குரலில் சிரித்து மழுப்பி தனக்கு பிபிசியில் வேலைகிடைத்திருப்பதாகவும், அந்த வேலை நிரந்தரமாகவேண்டும் என்றால் பல தளங்களில் செயல்படும் பலருடனான தன் தொடர்புகள் சான்றாகவேண்டும் என்றும் நான் உதவிசெய்யவேண்டும் என்றும் கோரினார். “ஒண்ணும் மனசிலே வச்சுக்காதீங்க” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். நான் ஒரு பேட்டியும் இவருக்கு ஒரு நற்சான்றிதழும் அளித்தேன்.

அது எப்போதும் என் கொள்கை. மனிதர்கள் வேறு, அவர்களின் பொதுவெளிப் பிம்பங்கள் வேறு. தனிப்பட்ட முறையில் எவரிடமும் எந்நிலையிலும் விலக்கம் கூடாது, ஒருவர் கஷ்டப்படுகிறார் என்றால் எப்போதும் அவருடன் நின்றிருக்கவேண்டும் என்பதே என் நிலைபாடு. அதற்குச் சான்றாக பலர் உண்டு.

இன்று அவர் மீண்டும் அந்தக்கூச்சலை போடுவதற்கு பலகாரணங்கள் இருக்கலாம். அன்று அவ்வாறு இறங்கி உதவிகோரியதனாலேயே இன்று அந்நினைவு அவரை தொந்தரவு செய்யலாம். தன் சுயபிம்பம் அடிபடலாம். இன்று அதை தனக்குத்தானே சமாளித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். மனிதர்கள் பலவகை பாவனைகள் வழியாகவே வாழ்கிறார்கள். பெரிய மனிதர்கள் பெருநிலையை பாவனைசெய்து, அங்கே சென்றடைகிறார்கள். இவர் மிகமிகச்சிறிய மனிதர்.

மனிதர்களைப் பற்றிய இப்புரிதல் கொண்டவர் எந்நிலையிலும் மனிதர்களை அந்தரங்கமாக விலக்கமுடியாது. இன்னொருமுறை யமுனா ராஜேந்திரன் அதே ‘மனசிலே வச்சுக்காதீங்க’ பேச்சுடன் வந்தாலும் என் பதில் அதுவே. நான் மனதில் வைத்துக்கொள்வதே இல்லை.

இதை இன்று சொல்வதுகூட இங்கே விவாதிக்கும் புதிய தலைமுறையினருக்காக மட்டுமே. கருத்துக்களை அப்படியே எடுத்து மனிதர்களை மதிப்பிடுவதுபோல பிழை வேறில்லை. அப்படி செய்தால் நிழலுடன் போரிட்டு பொழுது வீணாகும். மனிதர்கள் வேறெங்கோ இருக்கிறார்கள். வேறு எதன்பொருட்டோ அக்கருத்துக்களை சூடிக்கொள்கிறார்கள். அச்சமும் ஐயமும் தாழ்வுணர்ச்சியும் தனிமையும் மனிதர்களை ஆட்டிப்படைக்கின்றன. அஞ்சுபவன் கத்தி வைத்துக்கொள்வதுபோல் கருத்துக்களை வைத்துக்கொள்பவர்கள் உண்டு. அப்பாவிகள் கடாமீசை வைத்துக்கொள்வதை சாதாரணமாக நாம் பார்க்கலாம்.

இங்கே நண்பர்களை, வாசகர்களை திரட்டி நான் உண்மையாக அடைவதொன்றும் இல்லை. எந்த எழுத்தாளனுக்கும் ஆழத்தில் இருப்பது ஒரு தனிமைதான். ஆகவே உண்மையாகவே தமிழ்ச்சமூகம் முற்றாகவே புறக்கணித்தால்கூட அதில் இம்மிகூட வருத்தம் இல்லை. மேதைகளாகிய என் முன்னோடிகள் பலர் அவ்வாறு முற்றாக புறக்கணிக்கப்பட்டவர்களே. என்றும் எழுத்தாளனை நோக்கி ‘அவனை புறக்கணியுங்கள்’ என ஒரு குழு கூவிக்கொண்டேதான் இருக்கிறது.

இங்கே இந்தக் கூச்சல்கள், பூசல்கள் நடுவேதான் இருக்கிறேன். உண்மையில் முயன்று இங்கே என்னை இருத்திக்கொள்கிறேன். இயல்பாக நான் இருப்பது இங்கே அல்ல. அங்கே இவர்கள் எவரும் இல்லை. அங்கிருந்துதான் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒருநாள் அங்கே எழுதாமல் அமர்ந்திருப்பேன்.

ஜெ

முந்தைய கட்டுரைஊமைச்செந்நாய் மலையாளத்தில்…
அடுத்த கட்டுரைஅ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’