புதியவாசகர் சந்திப்பு, ஈரோடு
இளம்வாசகர் சந்திப்பு -கடிதங்கள்
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
இவ்வருட புதிய வாசகர் சந்திப்பிற்கான இடம் கிடைத்ததிலிருந்து மனதில் ஒரே பரபரப்பும் பதட்டமும் தான். கடந்த இரு வாரமும் கதைகளையும் புதிய வாசகர்களின் படைப்புகளையும் வாசிப்பதிலேயே சென்றது. “தேர்விற்கு இவ்வாறு ஒழுங்காக படித்திருந்தால் வாழ்க்கையில் உருப்பட்டிருக்கலாம்”என்று அம்மாவின் குரல் அசரிரீ போல் இடையியே ஒலிக்கும். ஒரு வழியாக வெள்ளி இரவு பேருந்து ஏறினோம் நானும் விஜியும். வழமை போல சென்னையின் வாரஇறுதி போக்குவரத்து நெரிசல். பேருந்து இரண்டு மணி நேரம் தாமதம். அடுத்த பதட்டம் ஆரம்பம் ஆனால் அமைப்பாளர்கள் பொறுமையாக காத்திருந்து அழைத்து சென்றார்கள். பெருபாலும் அறுவடை முடிந்த நிலங்கள். சென்னையில் கழிவுநீர் ஓடையே பார்த்துயிருந்த எங்களுக்கு நன்நீர் ஓடை அவ்வளவு உற்சாகத்தை அளித்தது.
நாங்கள் வந்து சேரும் போது ஏற்கனவே வருகையாளர்கள் சிலர் வந்துவிட்டுயிருந்தார்கள். அங்கே வந்த பிறகு தான் அறிந்தோம் நீங்கள் வர இன்னும் சற்று நேரம் ஆகும் என்று. அப்போது தான் தாமதமாக வந்த அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டோம். குளித்து காலையுணவு முடித்ததும் முதல் அமர்வு துவங்கியது.
தங்களின் முதல் உரையாடலே தற்போதைய நம் வாழ்வில் நேரவிரயத்தையும் பெரும் கவன சிதறல்களையும் ஏற்படுத்தும் கைப்பேசி மற்றும் சமுக வலைதளங்கள் பற்றி. வாசிப்பிற்குகான நேரத்தையும் மனநிலையும் எவ்வாறு உருவாக்கி கொள்வது எப்படி தொடர்ந்து கடைபிடிப்பது என பேச்சு தொடர்ந்தது. அவ்வாறு இயல்பான உரையாடலாக நகர்ந்து முன் சென்று வாசிப்பில் நிகழும் பிழைகள் சமுகத்தில் அதற்கான இடம் என ஒன்று தொட்டு ஒன்று என நீண்டு பயணங்களால் அடைவது எதை? அவை இலக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? என்று தொடர்ந்தது. மிக உற்சாகமாக அனுபவங்களை பகிர்ந்து கொண்டீர்கள்.அதிலும் இமையம் பற்றிய பேச்சில் அவை இருமடங்கானது. வாழ்வில் ஒருமுறையேனும் அவற்றை கண்டு விடவேண்டும் என்ற என்னுடைய கனவு மேலும் உறுதியானது.
பயணம் பற்றிய பேச்சு ஹிப்பி கலாச்சாரம் வரை கொண்டுசென்றது. தங்கள் சந்திப்புகளில் ஒரு இனிய மரபாகவே மாறிவிட்ட மாலை நடை இனிதே ஆரம்பித்தது. சாதாரணமாக என்னை போன்ற நபர்களுக்கு முட்டியை கழட்டும் தூரம் அது. சிறு கிராமத்தில் ஒரு முப்பது பேர் ஒன்றாக நடந்து சென்றதில் மனிதர்களை விட நாய்கள் சற்றே கலவரமடைந்தன. இருந்தாலும் அவை தங்கள் எல்லையில் நின்றே குரைத்து வைத்தன. நடையின் எல்லை என ஒரு டீக்கடை அமைந்தது. அங்கே நின்று கொண்டு தஸ்தாவேஜ்யின் குற்றமும் தண்டனையும் நாவலை பற்றி பேச்சு தொடர்ந்தது.
திரும்பும் வழியில் இங்கொன்று அங்கொன்றுமாய் விளக்குகள் எரிய நிலவின் ஒளியில் உரையாடி கொண்டு வந்தது பெரும் உள எழுச்சியை அளித்தது. அனைத்திற்கும் மேல் நண்பர் திரு.அன்புராஜ் அவர்களுடன் பேசியது மன நிறைவை கொடுத்தது. “அத்தனை துயரங்களையும் சிறுமைகளையும் தாண்டி எது உங்களை உயிர்ப்புடன் வைத்திருந்தது”என்ற எங்கள் கேள்விக்கு “எப்படியாவது என்றாவது விடுதலையாகி என் மக்களோடு என்னுடைய ஊரில் வசிக்க வேண்டும் என்ற விருப்பமே என்னை உந்தியது”என்றார். மேலும் வாசிப்பும் கலையார்வமும் தன்னை காத்தது என்றார். தற்போது தன் வாழ்வின் வரமாக எண்ணும் அவரின் இனிய மகளின் பிறப்புச்சான்றிதழில் பிறந்தஇடம் என்னும் இடத்தில் சிறைச்சாலை என்று குறிப்பிட்டுயிருந்ததை தொடர்ந்த சட்ட போராட்டத்தின் வாயிலாக இப்போது மருத்துவமனை என மாற்றப்பட்டுள்ளதாக கூறினார். அவற்றை சொல்லும் போது ஒரு தந்தையின் தவிப்பையும் மன சங்கடத்தையும் நன்கு உணர்ந்தோம்.
இரவுணவு முடிந்த பிறகு சிறுகதை வடிவமைப்பு பற்றிய உரையாடல். அவற்றிலிருந்து நான் உணர்ந்து கொண்டது ஒரு நல்ல சிறுகதை ஆரம்பத்திலேயே ஒரு முடிவையும் முடிவிலே ஒரு ஆரம்பத்தையும் கொண்டு இருக்க வேண்டுமென. சரியா என்று தெரியவில்லை. உறங்க செல்வதற்கு முன் பேய்க்கதை கேட்க எண்ணி தயக்கத்தினாலும் கூச்சத்திலும் கேட்கவில்லை. ஒருவரை ஒருவர் குற்றம் சாற்றி கொண்டு துயின்றோம். மறுநாள் புதிய வாசகர்களின் படைப்புகள் பற்றிய விமர்சன உரையாடல். அவற்றில் அதிகமும் இளம் பிள்ளைகள் எழுதியவை. ஆகவே அவற்றேக்கே உரிய பிழைகளையும் தத்தளிப்புகளையும் களைந்து முன் செல்லவும் தன் வழிகளை கண்டடையவும் உந்தினீர்கள். நல் படைப்புகளை குறிப்பிடவும் தவறவில்லை.
அமர்வு முடிந்து மதிய உணவு முடித்து புகைப்படம் எடுத்ததும் சந்திப்பு நிகழ்வு இனியதாக நிறைவுற்றது. நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் விடைபெற்று சென்றார்கள். மனதில் கேள்விகளும் ஐயங்களும் மிகுதியாகவே இருந்தன. ஆனாலும் அவைகளை மீறி ஒரு நம்பிக்கையும் உற்சாகமும் இணையாக ஓடிக்கொண்டிருந்தது. இரு தினங்கள் பெரிய இடைவேளை ஏதும் இன்றி தொடர்ச்சியாக இலக்கியம் வரலாறு பயணம் என்று புதிய வாசகர் முன் உரையாடுவது என்பது தங்களால் மட்டுமே இயலுவது. அவை எங்களின் நல்லூழ் என்றே கருதுகிறேன்.
இந்நிகழ்வை சாத்தியமாக்கும் உங்கள் நண்பர்கள் அனைவர்க்கும் பங்கேற்ற எங்கள் அனைவரின் சார்பிலும் நன்றியும் அன்பும்.
மிக்க அன்புடன்
தேவி. க
ஆவடி, சென்னை.
திரு . ஜெயமோகன் அவர்களுக்கு ,
இந்த அளவு , இவ்வளவு நேர்த்தியான பயிற்சி இதற்கு முன் நான் கலந்துகொண்டதில்லை . ஜெயமோகன் அவர்களுக்கு மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மிக்க நன்றி.
IIT – வளாகத்தில் ஒரு முறை இரண்டு நாள் பயிற்சி வகுப்பு கலந்துகொண்டிருக்கிறேன். அதற்க்கு பிறகு அதை விட மிக நேர்த்தியான உரையாடல் நிகழ்ச்சி .
பகின்றுகொண்டவற்றின் பதிவுகள்
Content/contribution/comment – விரிவாக ஒப்பு நோக்குடன் விவாதித்தது
Theme/Plot/treatment – விரிவாக ஒப்பு நோக்குடன் விவாதித்தது.
இயற்கை அறிவியல் பற்றி கதை எழுதுபவர்கள் அறிந்துகொள்வதின் அவசியம்
எழுத வருபவர்களுக்கு புறவய உலகைச் சொல்லவேண்டியதன் அவசியத்தை புரியவைத்தது . கடல் -இரவு/பகல் பார்வைக்கு அதன் கலர்வேறுபடும் தன்மை பற்றி விவாதித்தது .
உள்ளூர் வரலாறு மாற்று தன் மண்/இடம் சார்ந்து இருக்கும் இதன் சார்ந்து வரலாற்று தகவல்களைதெரிந்துகொள்வது .
உலகின் மிக சிறந்த சிறுகதைகளை எடுத்து உரைத்து , அதன் கட்டமைப்பு மற்றும் சுவரசியத்தன்மை பற்றிவிவாதித்தது.
சிறுகதைக்கு உண்டான இலக்கணத்தை மிக விரிவாக விவாதித்தது .
சிறுகதைக்கு குறு நாவலுக்கும் உள்ள இடைவெளியை – வரையறை செய்தது .
நாவலுக்கும் சிறுகதைக்கு உள்ள கட்டமைப்பு வேற்றுமை .
நாவலையும் சிறுகதையும் முடிவுரை (முடிக்கும் ) தொனி .
நாவல் கோட்பாடு – திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதியது – சுட்டுகயாக வைத்துக்கொள்ள
கவிதை எழுதுபவர்களுக்கு திரு. ஜெயமோகன் அவர்களின் பரிந்துரைப்பு. கொங்குதேர் வாழ்க்கை – கவிதைதொகுப்பு – தமிழினி வெளியீடு. நவீன தமிழ் கவிஞர்களின் சிறந்த கவிதைகளின் தொகுப்பு.
புதிவர்களின் படைப்புக்களை விவாதித்து , கருத்துக்களை சொன்னது . பிற்பாடு அவை எப்படி முழுமையாக எழுதப்பட்டிருக்கலாம் என்று விவாதித்தது.
நாம் வாழ்க்கையில் கவனிக்கும் சிறு சிறு நிகழ்ச்சிகள் பிற்பாடு கதை எழுத பின் புலமாக அமையும். உதாரணத்திற்கு : லோகிததாஸ் அவர்கள் ஒரு மீனவன் தன சிறு பெண் குழந்தையை பள்ளிக்கூடம் செல்லவில்லை என்பதை கண்டித்து அடிப்பதை ஒரு ரோட்டில் பார்த்து , ஒரு மீனவன் தன பெண்ணை படிக்க வைக்க முயற்சிப்பதாக எழுதியதுதான் அமரம் என்னும் மலையாள கிளாசிக் திரை படம்
செயல் உருப்படிகள்
புதிய வாசகர்கள் அவர்கள் எழுதிய கவிதைகளை கோட்பாடுகளின்படி மாற்றி எழுத முயற்சிப்பது .
புதிய வாசகர்கள் அவர்கள் எழுதிய கதைகளை திரு ஜெயமோகன் பரிந்துரைத்தபடி மாற்றி எழுத முயற்சிப்பது
உள்ளூர் வரலாறு மற்றும் தன் மண்/இடம் சார்ந்து இருக்கும் வரலாற்று தகவல்களை தெரிந்துகொள்வது .
விவாதித்த விஷயங்களின் அடிப்படையில் இனிமேல் படிக்கும் கதைகள் எழுதப்பட்டிருக்கும் கட்டமைப்பு மற்றும் தளங்களை ஆராய்ந்து புரிந்துக்கொள்வது
சரியாக பதிவு செய்ய முயன்றிருக்கிறேன் . தவறுகள் இருந்தால் பொருத்தருளவும்.
நன்றி
ஜெயமுருகன்