மதுரை, அபி, இறையியல் கல்லூரி, தலித் இலக்கியம்

abi1

நேற்று முன்னாள் [22-2-2019] என்று மதுரை சென்றிருந்தேன். மதுரை இறையியல் கல்லூரியில்  ‘இன்றைய இலக்கியப்பரப்பில் தலித் இலக்கியத்தின் தாக்கம்’ என்னும் தலைப்பில் பேசினேன். இறையியல் கல்லூரி நண்பர் அலெக்ஸ் பணியாற்றிய நிறுவனம். இப்போது அலெக்ஸின் மனைவியும் அங்கேதான் பணியாற்றுகிறார். அதனாலேயே எனக்கு அணுக்கமானது. அலெக்ஸ் பல நிகழ்ச்சிகளை அங்கே ஒருங்கிணைத்திருக்கிறார். அயோத்திதாசர் ஆய்வுமையம் சார்பிலான கூட்டங்கள் அங்கேதான் நடந்தன. அங்குள்ள விருந்தினர் விடுதியில் பலமுறை தங்கியிருக்கிறேன். மதுரை நகரின் மையத்திற்குள் மரங்கள் அடர்ந்த ஒரு சிற்றூர் போலிருக்கும்.அலெக்ஸுக்கும் எனக்கும் நண்பரான க்ரூஸ் துரை என்னை அழைத்திருந்தார்

நானும் லக்ஷ்மி மணிவண்ணனும் என் காரில் காலை 9 மணிக்குக் கிளம்பி மதுரை சென்றோம். செல்லும்வழியெல்லாம் பொதுவான உரையாடல். பெரும்பாலும் இலக்கியம், கொஞ்சம் அரசியல். மதுரையில் அம்மா மெஸ்ஸில் சாப்பிட்டோம். மதுரையின் சிறப்பு அசைவ உணவுதான். அயிரைமீன் குழம்பு, கோளா உருண்டை, மட்டன் சுக்கா. அங்கிருந்து கவிஞர் அபியின் வீட்டுக்குச் சென்றோம். அவர் இல்லம் இருக்கும் இடம் பாரதிநகர் என்றது விலாசம். அதை கூகிளில் தேடி வைகைக் கரை ஓரமாக தத்தனேரி வட்டாரத்துக்குள் சுற்றி தட்டழிந்து கடைசியில் மதுரையில் ஏராளமான பாரதிநகர்கள் உள்ளன என்பதைக் கண்டறிந்து மகாத்மா காந்தி நகரில் இருக்கும் பாரதிநகருக்குச் சென்று அபியின் வீட்டைக் கண்டடைந்தோம். அவரிடமே கேட்டு தொந்தரவு செய்யலாகாது என நினைத்தோம். அவரிடமே கேட்கவேண்டியிருந்தது

abi2

கவிஞர் அபி பற்றி நான் விரிவாக எழுதியிருக்கிறேன் [உள்ளுணர்வின் தடத்தில் என்னும் நூலில் அந்த மிகமிக நீண்ட கட்டுரை உள்ளது] தமிழ் நவீனக்கவிதையின் முதன்மைச் சாதனையாளர்களில் ஒருவர். வானம்பாடி குழுவிலிருந்து உருவானவர். பின்னர் ஆழமான ஆன்மிக அலைக்கழிப்புகளுக்கு உள்ளாகி எழுதிய கவிதைகளால் தமிழ்ப்புதுக்கவிதையில் ஒரு புதிய உலகை உருவாக்கினார். அருவக் கவிதைகள் தமிழில் அவரால் முழுமையடைந்தன. பிரமிள், அபி, தேவதேவன் ஆகிய மூவரையும் அவ்வகையில் ஒரு வளர்ச்சிப்போக்கில் வைக்கமுடியும். மௌனத்தின் நாவுகள், அந்தரநடை, மாலை ஆகியவை அவருடைய தொகுதிகள். தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியவர் 2000 த்தில் ஓய்வுபெற்றார். அபி லா.ச.ராவின் புனைவு உத்திகளைப் பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்.

அபியின் இயற்பெயர் அபிபுல்லா. அபி மதுரையில் மகனுடன் வசிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் மனைவியை இழந்தவர். மாடியில் ஒரு தனியறை. கவிஞனின் அறை. புத்தகங்கள், ஒலிநாடாக்கள். நாங்கள் இரண்டரை மணிக்குச் சென்றோம். ஐந்து மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். தமிழ்க்கவியுலகம், இலக்கியச்சூழல். கொஞ்சம் இலக்கியம், நிறைய சிரிப்பு. நான் ஐந்தரை மணிக்கு இறையியல் கல்லூரியில் பேசவேண்டும். துரை கூப்பிட்டுக்கொண்டே இருந்தார். ஆகவே விடைபெற்றுக் கிளம்பி மீண்டும் கொஞ்சம் குழம்பி சுற்றியடித்து ஐந்தேமுக்காலுக்கு இறையியல் கல்லூரிக்குச் சென்றுசேர்ந்தேன். இறையியல் கல்லூரி மதுரையின் பண்பாட்டு நடவடிக்கைகளின் மையங்களில் ஒன்று. நகர்நடுவே இருக்கிறது. பெரும்பாலான கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு இடம் அளிப்பது. சீர்திருத்தக் கிறித்தவ சபைகளுக்கான போதகர்கள் பயிலும் கல்லூரி.

abi4

நிகழ்ச்சியில் க்ரூஸ் துரை என்னைப் பற்றி மாணவர்களுக்கு ஓர் அறிமுகக்குறிப்பை வழங்கினார். நான் முக்கால் மணிநேரம் இந்திய தலித் இலக்கியச் சூழல், அதன் செல்வாக்கு குறித்து பேசினேன். இந்திய நவீன இலக்கியம் உருவான பின்னணி, அதில் தலித் வாழ்க்கையைப்பற்றி எழுதப்பட்ட தொடக்க காலம் முதல் இன்றுவரையினால கோட்டுச்சித்திரம், அதன் பல்வேறுபோக்குகள், அதன் தேக்கங்கள், செல்திசைகள் பற்றி. நல்ல உரைதான். நான் இதுவரை இப்படி ஒட்டுமொத்தமாகத் தொகுத்துச் சுருக்கிக்கொண்டதில்லை. இன்னொருமுறைகூட எங்கேனும் பேசிப்பார்க்கலாம். அதன்பின் மாணவர்களுடனான கேள்விபதில்கள்.

ஸ்டாலின் ராஜாங்கம் வந்திருந்தார். அவருடன் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம். இரவு 11 மணிக்கு வீடுதிரும்பிவிட்டேன். நீண்ட கார்ப்பயணம் என்னை முழுக்க வீழ்த்திவிடும். போருக்குப்போய் மீண்டதுபோல. ஆனாலும் நிறைவான ஒரு நாள் எனத் தோன்றியது.

அபி கவிதைகள்- இணையப்பக்கம்
அபி பேட்டி அழியாச்சுடர்கள்
அபி பற்றி ஆபிதீன்
முந்தைய கட்டுரைஉரையாடும் காந்தி – ஓர் உரையாடல் – வேலூர்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-63