அன்புள்ள ஜெ
முகநூலில் அனீஷ்கிருஷ்ணன் நாயர் இவ்வாறு எழுதியிருந்தார்
தமிழகத்தில் லகுலீச பாசுபதம் புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதற்காக சில கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்தேன் .அப்போது இந்த கல்வெட்டு தொடர்பான குறிப்பு கண்ணில் பட்டது .கர்நாடகாவில் உள்ள கேதாரேஸ்வரர் கோவில் அருகில் இருந்த கோடீஸ்வர மடம் /கோடி மடம் என்னும் இடத்தில் கண்ட கல்வெட்டு .இது காளாமுக மடம் என்று கருதப்படுகிறது .பொது 1162 ஆண்டு கல்வெட்டு .இரண்டு விஷயங்கள் மீண்டும் தெளிவாகின்றன .1) காளாமுகர்கள் வேதத்தை மறுக்கவில்லை 2) தத்துவ விவாதங்கள் /போர்கள் ஒருபக்கம் இருந்தாலும் பல்வேறு தத்துவ பிரிவினரும் மதிக்கப்பட்டுள்ளனர் .ஒரே அடியாக ஹிந்து ஐக்கியம் என்று வெள்ளை அடிப்பதும் தவறு,சைவர்களும் வைணவர்களும் ,சமணர்களும் மாறி மாறி வெடிகுண்டு வைத்துக்கொண்டிருந்தனர் என்ற பரப்புரையும் தவறு.
அனீஷ் கிருஷ்ணன் நாயர்
உங்கள் பார்வைக்காக
ராஜ்
அன்புள்ள ராஜ்
லகுலீச பாசுபதம் இந்த தளத்தில் தொடர்ச்சியாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் சில வினாக்களுக்கான ஒரு தகவல்களஞ்சியம். அந்நூலை நான் அனீஷுக்கு அளித்து மதிப்புரை எழுதும்படி சொன்னேன். இன்னமும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார் என்றால் நல்லதுதான்.
பொதுவாக இந்தியாவின் மதப்பூசல்களைப் பற்றிய என் உளச்சித்திரம் இதுதான். இங்கே எப்போதும் ‘அரியும் சிவனும் ஒண்ணு’ என்னும் வகை சமரசம் இருந்ததில்லை. இந்துமதம் அல்லது வேதம் என்னும் ஒற்றைச்சரடில் அனைத்தும் கோக்கப்பட்டிருக்கவுமில்லை. மதப்பூசல்கள் இருந்தன. அரிதாக அது நேர்ப்பூசலாகவும் ஆகியது. ஒவ்வொரு தரப்பும் தங்கள் நம்பிக்கைகளையும் மரபுகளையும் பிறவற்றிலிருந்து வேறுபடுத்தி முன்னெடுக்கவே முயன்றது. ஆகவே கடுமையான விவாதங்கள் நிகழ்ந்தன.
ஆனால் மதப்போர் என்பது இந்தியாவின் மரபில் அனேகமாக இல்லாத ஒன்று. மத்தியகால மதப்போர்களில் உருவான உலகப்பார்வைகொண்ட ஐரோப்பியர்கள் இங்கிருந்த மதப்பூசல்களில் இருந்து தடையங்களைச் சேகரித்து உருவாக்கிக் கொண்டது அது. நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளில், மூலநூல்களில், ஆலயக்கட்டமைப்புகளில் மதத்தரப்புகள் ஒன்றாக அமர்ந்து ஒன்றாக விவாதித்தமைக்கான சான்றுகள் உள்ளன. திரும்பத்திரும்ப அவை வந்துகொண்டே இருக்கின்றன. இந்துமதப்பிரிவுகளுக்கு இடையே மட்டுமல்ல சமண பௌத்த மதங்களுக்கிடையேகூட அத்தகைய நிலையே நிலவியது.
பலநூறு கல்வெட்டுக்களை முற்றாக நிராகரித்து மன்னர்களின் சில போர்களுக்கு மதப்பின்னணி காரணமாக இருக்கலாம் என வலிந்து பொருள்கொண்டு ஐரோப்பியர் தொடர்ந்து இந்தியாவின் மதப்போர்களைப்பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். நம்பவிரும்பும் அரசியல்கொண்டவர்கள் நம்பிக்கொண்டே இருக்கிறார்கள்
ஜெ