அன்புள்ள ஜெ,
உங்களோடு வருவதாக இருந்த கும்பமேளா திட்டம் என் வகுப்புக்கள் காரணமாக ஒரு வாரம் தள்ளிப் போய், வசந்தபஞ்சமியை அடுத்த வசந்த பெளர்ணமி, நீராடல் மிக முக்கிய நிகழ்வு என்பதால், இந்த வாரம் திட்டமிட்டோம். நண்பர்கள் சிவாத்மா, சண்முகம் , அவர் மாமா முருகதாஸ், என நால்வரும் சென்று வந்தோம். சென்னையில் ரயில் ஏறும் போதே மனதில் உற்சாகம் நிறைந்து விட்டது.
எதிர் இருக்கை பயணிகள் ஊர் ஊராக சென்று, “ஸ்ரீமத் பாகவத சப்தாஹம்” செய்யும் குழுவினர், எங்களை எங்கே போகிறீர்கள் என்று விசாரிக்க, தன்னிச்சையாக ” இலாபாத்” என்றேன். மகிழ்ந்து விட்டனர். ஏனெனில் அலகாபாத் என்று சொல்பவர் நிச்சயமாக இந்திய மைய நிலத்தை சார்ந்தவராக இருக்க வாய்ப்பில்லை. ஆழ்வார்திருநகரி யை, “ஆல்வார், “என்றோ, “ஆல்வார்னேரி” என்றோ சொன்னால் மட்டுமே அவர் திருநெல்வேலி காரராக இருக்க முடியும் என்பது போல.உ.பியின் ஹிந்திக்கும், மற்ற மாநில ஹிந்திக்கும் உள்ள வேறுபாடு இந்த போஜ்புரி மொழி கலந்த வட்டார வழக்கு தான். எனக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்த நண்பர்கள் அனைவரும் உ.பியை சேர்ந்தவர்கள், என்பதால் வடமாநிலங்கள் எனக்கு, மதுரைக்கோ, கோவைக்கோ போவது போன்ற இனிய பயணம் தான்.
நாங்கள் சென்று சேர்ந்தபோது, ஏற்கனவே இருந்த மக்கள் திரளோடு, மேலும் மக்கள் குவிய தொடங்கி இருந்தனர். ஊரின் சுத்தம் பற்றியும், கழிப்பிட வசதிகள் பற்றியும், நீங்கள் விலாவரியாக எழுதி விட்டீர்கள். நாங்கள் சற்றும் எதிர்பாராத அளவு, மொத்த ஏற்பாடுகளும், துல்லியமாக இருந்தது ஒருபுறம், அதிசயமாக மக்களின் ஒத்துழைப்பு. உண்மையில் நம் மக்கள் தானா இது என்பது போல மிகவும் பொறுப்பாக நடந்து கொண்டனர். பொதுவாக கங்கையின் மண் மிகமிருதுவான, பொடிமணல் என்பதால் நாம் காலார சற்று நடந்தாலே, கூட மூட்டு வரை வெள்ளை தூசு அப்பிக்கொள்ளும், கரையில்நீர் சேர்ந்தால் உடனே வழுக்கும், கோடிக்கணக்கான காலடிகள் நடக்கும் என்பதை கணித்து, கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர் சுற்றளவு கரைகளிலும் கோரைபுல், வைக்கோல் போன்றவற்றை முழுவதுமாகவோ, வெட்டியோ, பரப்பி உள்ளனர், சிறு வழுக்களோ,புழுதி படிந்த கால்களோ எங்கும் காணப்படவில்லை.
இப்படி ஒரு சிறு விஷயம் முதல் போக்குவரத்து வரை அனைத்தையுமே கவனத்தில் கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்ற பட்ட ஒரு நீண்ட திருவிழா என்று மட்டுமே சொல்லவேண்டும். புனித நீராடல் பலமுறை செய்தபின் அன்று இரவு நாகாபாபா குடிலில் தங்கவேண்டும் என நண்பர்கள் விரும்ப, “அகாடா ” பிரிவுக்கு சென்றோம், நீங்கள் சந்தித்த ராமேஷ்வர்கிரி பாபாவை பார்த்து வணங்கி விட்டு, அவரின் ” பஞ்தசநாமி” குருமரபை சார்ந்த கோபால் கிரி, சதானந்த கிரி, போன்ற வயது முதிர்ந்த மூத்த பாபாக்களை வணங்கி, சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம், நான் இரவு அங்கே தங்கும் எங்கள் விருப்பத்தை சொல்ல, உடனடியாக சம்மதித்தார். நாங்கள் கங்கையை சுற்றி விட்டு இரவு 8 மணிக்கு அவரிடம் சென்று நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அவர்களுக்கு என் குருமரபான, சிவானந்த மரபையும், , தசநாமி,சரஸ்வதி, பரம்பரை பற்றியும் நன்றாக தெரிந்தே இருக்கிறது, பாபாக்கள் மரபில் சாதகனின் நான்கு படிநிலைகள் பற்றியும், அங்கிருந்த பல பாபாக்களில் யார்யார் எந்த நிலையில் இருக்கின்றனர் என்பது பற்றியும் விளக்கினார்.
முதல் 12வருடங்கள் குருசேவையில் இருப்போருக்கு, ” ப்ரதம அக்ஷர த்வனி” எனும் ஓரிரு வார்த்தைகள் கொண்ட முதல் மந்திர தீட்ஷையும், ஆடை, உணவு நியமங்களும். இரண்டாவதாக, சற்று நீண்ட மந்திர ,ஆடை அடையாள நியமங்களும், மூன்றாவது காடேகுதல், திரிதல், ஒழிந்து இருத்தல் என கடும் நியமங்களும், கடைசியாக விண்ணெகுதல்போன்ற நிலையும் விளக்கி விட்டு, “இது தாமஸ சாதகமாக தோன்றலாம், ஆனால், அவ்வுலகுக்கு, சாத்வீக சாதகனோ, தாமச சாதகனோ ஒரு பொருட்டே அல்ல. சாதகம் ஒன்றே குறிக்கோள்,” என்று சொல்லி விட்டு, ” ஒருவகையில் நானும் சுவாமி சிவானந்தரும், வேறு வேறு அல்ல, அவர் என் சகோதரர் தான் ” என்று சொல்லி என் முதுகில் அறைந்து சிரித்தார். கண்கள் கலங்க, என் மேல் என் குருபரம்பரை யின் அத்தனை கைகளின் மென்தொடுகையை உணர்ந்து சிலிர்த்தேன்.
அன்று இரவு, அவர்கள் கையால் மிகச்சிறந்த நெய் ரொட்டியும், சப்ஜியும், பரிமாற பட்டு, அவர்கள் அருகே அமர்ந்து உண்டோம், பெரிய மரத்தடிகள் எந்நேரமும் அந்த யாககுண்டத்தில் எரிந்து கொண்டே இருந்ததால், குளிருக்கு இதமாக, குடிலில் தூங்கினோம், காலையில் ஒரு இளைய பாபா துளசி தேநீர் கொடுத்து எழுப்பினார். குடிலுக்குள்ளேயே பல் துலக்கி, காலைகடன் முடித்து மீண்டும் முதிய பாபாவை சந்தித்து நெடுநேரம் பேச வாய்ப்பு கிடைத்தது.
சிவாத்மாவும், சண்முகம் அண்ணாவும், கேட்ட கேள்விகளை நான் மொழிபெயர்த்து சொல்ல அவர் நீண்ட பதில்கள் அளித்தது நண்பர்களை மகிழ செய்தது, அவர்களுக்கு இது முதல் அனுபவம் என்பதால். எங்கள் யாருக்குமே சிவமூலிகை இழுக்க தெரியாததையும், விதவிதமாக சிலிம்பியை முகத்தருகே கொண்டு சென்றும் “வெறும் காத்து தாங்க வருது” என்ற போது அந்தக்கூடாரமே கைகொட்டி சிரித்தது. இப்படியாக சிரித்து, மகிழ்ந்து, கண்ணீர் விட்டு அவரிடம் விடை பெற்றோம்.
மீண்டும் சங்கமத்தில் குளியல், பலலட்சம் மக்களோடு திரிதல் என வாழ்ந்தோம். குஜராத், ம.பி, பிகார், உ.பி . மக்கள் மட்டுமே 80சதவிகிதம் வந்திருந்தனர், எங்கும் பாடல்களும், பஜனையும், உற்சாக குரல்களும், நிரம்பி வழிய, ஒரு குஜராத்தி குழுமம், தெய்வ புலவர்நரசிங்க் மெஹ்தாவின் வைஷ்ணவ ஜனதோ” பாடலையும், நாட்டுப்புற பாடலான, ” ராமனை போற்று, ராமனை போற்று, அவன் குளித்த கங்கையை போற்று, கங்கையை போற்று, ” என்கிற பாடல்களை வெவ்வேறு மெட்டுகளில் மெல்லிய குரலில் பாடியபடி குளிக்க சென்றனர், அத்தனை பெரிய சப்தங்களுக்கு நடுவிலும், இவ்வளவு துல்லியமாக அது எப்படி எங்கள் காதுகளில் ஒலித்தது என்பது ஆச்சரியமாக இருந்தது.
இந்த கும்பமேளாவிற்க்கு நாலாயிரம் கோடிகள் செலவிடப்பட்டுள்ளதாக, பிரதமரும், மாநில முதல்வரும், கையசைத்தபடி ஒரு விளம்பர பலகையில் சிரித்த படி நின்றனர். நாம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய் வரிப்பணமும் எப்படி எல்லாம் வீணாகிறது, என்பது பற்றி, கூற நம் அனைவருக்கும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மிக அபூர்வமாக நம் வரியில் இருந்து ஒரு ரூபாய் இந்த தேசத்தின் ஆன்மாவை மலரச்செய்யும் ஒரு நிகழ்வுக்கு சென்று சேர்ந்திருக்கிறது என்று நிச்சயமாக நம்பலாம் நாம்.
அன்று மதியம், உள்ளூரிலேயே இருக்கும் நேருவின் வீடான, ” ஆனந்த பவனம்” சென்றோம்” இது வெறும் வீடு அல்ல, இந்த தேசத்தின் வரலாற்று தருணங்கள், தீர்மானிக்கப்பட்ட இடம் ” என்று தன்னை அறிமுகம் செய்து உள்ளே அழைத்தது. ஆனந்த பவனம்.
மூன்று முக்கியமான அறைகள் மெய்சிலிர்க்க வைப்பவை.
முதலில் பின்புறம் மிகப்பெரிய புத்தக அலமாரியும், அதன் தரையில் பெரிய மெத்தை விரிப்பில், திண்டுகள் வைத்து தரையில் கால் மடித்து அமர்ந்து, பெருந்தலைவர்கள் அனைவரும் பேசிய மாடி அறை.
இரண்டாவது , மகாத்மா காந்தி வந்தால் ஓய்வெடுக்க உள்ள கட்டில் மெத்தை போடப்பட்ட சிறிய அறையும், அதில் காந்தி படுத்திருக்க, சிறு பெண்ணாக இந்திரா காந்தி, சிரித்த படி அருகே அமர்ந்திருக்கும் படத்துடன் கூடிய அறை.
மூன்றாவது, தலைகீழாக நின்றேனும் சுதந்திரம் வாங்காமல் விடுவதில்லை என்பது போல ” சிரசாசனத்தில்” நின்றிருக்கும், படத்துடன் கூடிய நேருவின் அறை.
சிவாத்மாவிற்க்கு சென்னையில் அவசர வேலை இருந்ததால் அவர் மட்டும் ரயில் ஏற, நாங்கள் காசி நோக்கி பயணித்தோம், நண்பர்களுக்கு இது முதல் முறை காசி பயணம் என்பதால், சண்முகம் அண்ணா மிக ஆர்வமாக காணப்பட்டார், காஞ்சி சிவாவின் உதவியுடன், மடத்தில் அறை ஏற்பாடு செய்யப்பட்டது, சரியான வாடகையில், மிகத்தரமான அறை, இரவு “ஹரிசந்திர காட்” சென்றதும், தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் சடலங்களும், நண்பர்களுக்கு ஒரு திகில் அனுபவமாக இருந்தது. சிவராத்திரி திருவிழாவிற்க்காக பெரும்பாலான பாபாக்கள், கும்பமேளாவிலிருந்து காசி வரத்தொடங்கி விட்டனர். சில பாபாக்களை சென்று வணங்கினோம்.
மறுநாள் கங்கையில் குளித்து, விஸ்வநாதரை வணங்கி, காலபைரவர் கோயில் சென்று, படகில் நீண்ட பயணம் செய்து, ஊர் முழுவதும் நடந்தே சுற்றினோம், ஒரு கட்டிட தொழில் நிபுணரான சண்முகம் அண்ணாவுக்கு, காசியின் 5-6அடி அகலமுள்ள சிறு சந்துகளில் எப்படி 5மாடி கட்டிடங்கள் எழுப்புகிறார்கள், என்று ஒரே ஆச்சரியம், ஒரு கட்டிடம் கட்டி கொண்டிருக்கும் சிறிய சந்துக்குள் அழைத்து சென்று, அவர்களோடு பேசி தெரிந்து கொண்டார். மிகக்குறைந்த கூலியில், கடினமான வேலைக்கு அங்கே ஆட்கள் கிடைப்பது, சண்முகம் அண்ணாவிற்கு ஒரு ஏக்கமாகவே இருந்தது. நம்மூரில் இது சாத்தியமில்லை என்று.
ஒருவழியாக அறைக்கு வந்து சிறிது ஓய்வெடுத்து, நான் இரவு வண்டிக்கு முகல்சராய் கிளம்ப. ( பண்டித் தீன் தயால் உபாத்யாய் ஜங்க்சன், ஜானாஹே..!!!!- இது நான்…….அரேபாய் முகல்சராய் ஜானாஹே..க்யா?..சலோ அந்தர் ஆவ்…..!!!! இது ஆட்டோ டிரைவர்) பெயர் மாற்றினால் கூட மக்கள் புழக்கத்தில் எது உள்ளதோ அதுவே மொழி போல.
பத்து வருடங்களுக்கு முன் இதே ரயில் நிலையம் வந்திருக்கிறேன், அன்று இது நம் உசிலம்பட்டி போல ஒரு நகர்புற கிராமம், ரயில் நிலையத்தில் குளிரில் குமட்டலான நாற்றத்துடன், ஒரு இரவு முழுதும் தங்கி இருந்தேன், இனி இங்கே வரவே கூடாது என்று நினைத்து, மிககவனமாக அந்த நிலையத்தை தவிர்ப்பேன், ஆனாலும் வருடத்தில் இரண்டு முறை வட இந்திய பயணம் செய்வேன்.
இன்று இங்கே முழுதும் மாறி இருக்கிறது. சர்வதேச “ப்ராண்ட்” டுகளின் கடைகள் திறக்கபட்டு, வண்ண விளக்குகள், இந்த ஊரை ஒரு நகரமாக மாற்றிக்கொண்டு இருக்கிறது. நம்மூர் கடைகளை இரவில் பூட்டி கற்பூரம் சுற்றி கண்ணேறு கழிப்பது போல, வடக்கே துடைப்பத்தின் நுனி பகுதியை எரித்து மூடிய கடையை மூன்று முறை சுற்றுவார்கள்.நான் இன்று அட்டகாசமான ஒரு பெரிய சர்வதேச ஷோரூமின் முன்னால் இந்த காட்சியை கண்டேன், ஆம் கண் திருஷ்டி படாமல் இருக்க வேண்டும் என நினைத்து கொண்டேன்.
ரயில் நிலையம் நம் எழும்பூர் போல முகம் கொள்கிறது. வாசலில் பெரிய எல்.ஈ.டி. திரையில் , காந்தியின் 150ஆவது நினைவை போற்றும் வகையில், பல்வேறு நாட்டு பாடகர்கள் பாடும் ” வைஷ்ணவ ஜனதோ” ஓடிக்கொண்டிருக்க, சுவற்றில் இப்படி ஒரு வாசகம் இருந்தது.
“ஆசிர்வதிக்கப்பட்ட இந்த காசி நகரம் மீண்டு எழட்டும், அதன் புனித ஒளி நம் ஒவ்வொருவரையும் தொடட்டும்”
அன்புடன்
செளந்தர்.ஜி