சென்னையில் ஒரு கட்டண உரை
கட்டண உரையின் தேவை
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விழாவுக்கு கோவைக்கு ஐந்து ஆண்டுகளாக வந்துகொண்டிருப்பவன் நான். மாணவனாக வரத் தொடங்கினேன். இப்போது வேலையில் இருக்கிறேன். இன்றுவரை ஒரு பைசாகூட அளித்ததில்லை. சென்றுவருவதற்கான பேருந்துக் கட்டணத்தை மட்டுமே நான் செலவிட்டிருக்கிறேன். கோவையில் இரண்டுநாள் தங்கி ஆறுவேளை சாப்பிட்டு நாற்பது மணிநேரம் இலக்கியம்பேசி திரும்பியிருக்க்கிறேன். வரும் ஆண்டில்தான் நிதியளிக்கவேண்டும் என நினைத்திருக்கிறேன். என் நண்பன் ஒருவன் உங்கள் கட்டண உரையைப் பற்றிய அறிவிப்பைச் சுட்டிக்காட்டி ‘ஜெமோ நிதிசேர்க்கிறார்’ என்று சொன்னபோது இதைச் சொன்னேன். அவன் ’உன்னைக்காட்டி ஜெமோ எங்காவது நிதி வாங்கியிருப்பார்’ என்று சொன்னான். இவனையெல்லாம் பேசித்திருத்தமுடியாது என்று விட்டுவிட்டேன். உங்களுக்கு இது தெரியவேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்
டி.செந்தில்குமார்
அன்புள்ள செந்தில்,
மிக எளிதாக இந்த வகை நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இன்றைய உளவியல்படி பணம்கொடுத்து வாங்குவனவற்றுக்கு மட்டுமே பொதுவாக மதிப்பு இருக்கிறது. இது கருத்துத் திணிப்புக்காக நிகழ்வது அல்ல, கேட்பவரின் தேவையும் உடையது என்ற எண்ணம் கட்டணம் வழியாக உருவாகிறது. நான் ஏற்கெனவே சொல்வதுபோல இது கேட்பவருக்கும் பேசுபவருக்கும் பொறுப்பு ஏற்கும்படி ஆணையிடுகிறது.
விஷ்ணுபுரம் விழாக்கள் நண்பர்களின் நிதிக்கொடையால் சென்ற இரண்டு ஆண்டுகளாக நிகழ்கின்றன. பிற நிறுவன நிதிக்கொடைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அதற்குமுன்பு விஷ்ணுபுரம் வட்டத்தின் நண்பர்களின் நிதிக்கொடைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சி முழுக்கமுழுக்க இலவசம்தான். கட்டணம் என ஏதுமில்லை. தங்குமிடம், உணவு அனைத்துமே அளிக்கப்படும்.. கண்டிப்பாக கலந்துகொள்ளவேண்டும் என நாங்கள் விரும்பிய ஆளுமைகள் மற்றும் கலந்துகொள்ளும் அளவுக்கு நிதிவசதி இல்லாத இளம் வாசகர்களுக்கு பயணச்செலவையும் அளித்தோம். ஊட்டி நிகழ்விலும் இதே நெறிதான்.
அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் விழாவுக்கான நிதிவருவாயில் எஞ்சிய தொகை பல்வேறு வகைகளில் பொருளியல் சிக்கல்களில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு உதவிசெய்யும்பொருட்டு அளிக்கப்பட்டது. அவ்வாறு நிதியளித்தோம் என்பதை பொதுவாக வெளியே சொல்வதில்லை, அது இங்குள்ள வம்பர்கள் நிதிபெற்றவர்களை இழிவுசெய்ய வாய்ப்பளிக்கும் என்பதனால். விஷ்ணுபுரம் விழாக்களும், ஊட்டி சந்திப்புகளும் இனிமேலும் இவ்வாறுதான் நிகழும். ஒவ்வொரு ஆண்டும் என் சொந்தப்பணத்தில் ஒரு பகுதியை இதற்காக செலவழிக்கிறேன். முன்னரே எடுத்து வைத்துவிடுவதனால் அது இழப்பு அல்லது கொடை ஆக தோன்றுவதில்லை.
இதைவிட பெரும் செலவில் நிகழ்ந்த வெண்முரசு நூல்வெளியீட்டு விழா என் நண்பர் சிலரின் சொந்தச் செலவில்தான் ஒருங்குசெய்யப்பட்டது. ஏனென்றால் அது என் நூல்களுக்கான விழா, என்னை முன்னிறுத்துவது அது. இது கட்டண உரை, வருபவர்கள் கற்றுக்கொள்ள, சிந்திக்க சிலவற்றை அளிப்பதே இதன் நோக்கம். இவ்வேறுபாட்டையே இங்கே அழுத்திக்காட்ட விரும்புகிறேன்.
கட்டணக்கூட்டம் என்பது ஓர் அறைகூவல். இங்கே இலக்கியத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள இத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்கள் அதன்பொருட்டு செலவிடவும் சித்தமாக இருக்கிறார்கள் என்னும் அறிவிப்பு. உண்மையில் சென்னையில் ஓர் ‘இலவச’ இலக்கியக்கூட்டத்திற்கு ஒரு வாசகர் வருவதாக இருந்தாலும் இந்த அளவுக்கே செலவாகும். பெட்ரோல், வெளியே டீ சாப்பிடுவது எல்லாம் செலவுதான். அந்தச் செலவுக்கு நிகராக எதுவும் கிடைப்பதில்லை பலசமயம். இங்கே நாங்கள் ஒரு பயனுறுமதிப்பை அளிப்போம், வெறுமனே எங்களைப் பற்றி பேசிக்கொள்ள, அரட்டையடிக்க பொழுதை செலவிட மாட்டோம் என்னும் உறுதிப்பாட்டை அளிக்கிறோம். அந்த ஒப்பந்தமே இவ்வறிவிப்பில் உள்ளது.
நான் பலமுறை சொன்னதுபோல, இதேபோல பிற எழுத்தாளர்கள், கலாச்சார அறிஞர்கள் பங்குகொள்ளும் கட்டண உரைகள் நிகழ்த்தப்படவேண்டும். மாதம் ஒரு நிகழ்வு என்றாலும்கூட அது பெரிய தொகையேதும் அல்ல. ஒரு சினிமாவுக்கான கட்டணம், இரண்டுவேளை உணவுக்கான தொகை மட்டுமே. இதில் மிச்சமாவது என்ன, இது ‘லாபகரமா’ என்பது அல்ல கேள்வி. பெரிதாக மிச்சமாகப்போவதும் இல்லை. ஆனால் இது நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் ஒரு கட்டளை. நாங்கள் இவ்வாறு இங்கு செயல்படுகிறோம் என்னும் வெளிப்பாடு.
ஜெ