சென்னையில் ஒரு கட்டண உரை
சென்னையில் ஒரு கட்டண உரை
அன்புள்ள ஜெ,
கட்டண உரை பற்றிய அறிவிப்பு மீண்டும் கொந்தளிப்புகளை உருவாக்கியிருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். உண்மையில் இப்படிக் கொந்தளிப்பவர்களின் எண்ணம் என்ன என்றுதான் புரியவில்லை. உரைக்குக் கட்டணம் வைக்கக்கூடாது என்கிறார்களா? அல்லது உங்கள் உரைக்குக் கட்டணம் வைக்ககூடாது என்கிறார்களா? அல்லது நீங்கள் உரையே நிகழ்த்தக்கூடாது என்கிறார்களா?
எஸ்.சிவராம்
அன்புள்ள சிவராம்,
இந்த கட்டண உரை என்னும் அறிவிப்பில் ஒரு சீண்டல் உள்ளது. அதாவது இங்கே இருக்கும் சில பொதுப்பிம்பங்களுக்கு எதிரானது அந்த அறிவிப்பு. இலக்கிய உரைக்கு ஆளிருக்கமாட்டார்கள், பத்துபேர் கூடுவார்கள், அவர்களும் ஆசிரியருக்குத் தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்பது ஒரு பொதுப்புரிதல். இலக்கிய உரை என்பது எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் பொத்தாம்பொதுவான அரட்டையாக இருக்கும், ஆகவே அதற்குச் செல்வது பயனற்றது என்பது இன்னொரு புரிதல். இலக்கியநிகழ்ச்சி என்பதே ஒருவகை அரட்டைக்கூடுகை என்பது இன்னொரு வகை புரிதல். இப்புரிதல்கள் அனைத்தையும் சீண்டுகிறது இது.
அதைவிட கூடுதலாக இங்கே இலக்கியச் சூழலுக்கு வெளியே உள்ள சில எண்ணங்களையும் சீண்டுகிறது. இங்கே பெரும்பேச்சாளர்கள் என அறியப்படுபவர்கள் வெறும் கேளிக்கையாளர்கள். மிகப்பொதுவான சில கருத்துக்களுடன் எளிய வேடிக்கைகளைக் கலந்து நேரத்தை வீணடிப்பவர்கள். ஆனால் அவர்களுக்குத்தான் இங்கே அவைகூடும், ஆழமானவற்றுக்கு ஆளிருக்காது என்ற நம்பிக்கை இங்கே உண்டு. அவர்களிடம் ஆழமான உரைகளுக்கு நேரம் மட்டுமல்ல பணமும் அளித்து வந்து கேட்க ஆளிருக்கிறது என்னும் செய்தியை இந்த அறிவிப்பு அளிக்கிறது. ஆகவே சீண்டல் நிகழுமென்றால் நல்லதுதான். அது விவாதமாகுமென்றால் மேலும் நல்லது.
சீண்டப்படுபவர்களில் இருவகை உண்டு. பொதுவாகவே இலக்கியத்தின்மேல் காழ்ப்பும் கசப்பும் கொண்டவர்கள். தங்கள் நுண்ணுணர்வுக்கு அப்பால் அது இருக்கிறதென்பதனாலேயே ஆணவம் புண்பட்டவர்கள் அவர்கள். எளிய அரசியல்தரப்புக்களே அவர்களுக்குப் புரியும். அவற்றைச் சார்ந்து மூர்க்கமான வாதிடுவது பொய்யான உணர்ச்சிவேகங்களை வெளிப்படுத்துவது ஆகியவற்றை அறிவுச்செயல்பாடு என்னும் பாவனையில் செய்துகொண்டிருப்பவர்கள். தன் அறிவார்ந்த தகுதி இல்லாமையை தானே உணர்ந்து அதற்கேற்ப அரசியல் செயல்பாட்டாளன், மனிதாபிமானி, முற்போக்காளன் என்றெல்லாம் வேடங்களைத் தாங்கியவர்கள்.
ஏதோ ஒருவகையில் தொடர்ச்சியாக இவர்கள் இலக்கியம் என்னும் இயக்கத்தை வசைபாடுவதைக் காணலாம். ஒரு வணிகசினிமா வந்தால் கொள்ளும் பரபரப்பில் ஆயிரத்தில் ஒருபகுதியைக்கூட ஒரு நூலில் இருந்து இவர்கள் அடைவதில்லை. இவர்களுக்கு இலக்கியத்திற்கு என இத்தனை தீவிரமாகச் சிலர் இருப்பது எரிச்சலூட்டுகிறது. பணம்கொடுத்து அங்கே வந்தமரும் ஒவ்வொருவரும் அச்செயல்மூலம் மறைமுகமாக இவர்களை நிராகரிக்கிறார்கள். அதை இவர்கள் உணர்கிறார்கள். ஆகவே கொந்தளிக்கிறார்கள்.இவர்களின் நக்கல்கள் கேலிகள் எல்லாமே இந்த இயலாமையின் விளைவு மட்டும்தான்.
இன்னொருவகையினர் என்மேல் கசப்பு கொண்டவர்கள். அவர்களில் ஒருபகுதியினர் என் கருத்துக்களால் ஒவ்வாமை அடைந்தவர்கள். ஆனால் பெரும்பகுதியினர் எனக்கிருக்கும் முக்கியத்துவத்தால் பொறாமை கொள்பவர்கள். அதைத் தவிர்க்கவே முடியாது. முப்பதாண்டுகளாக இவர்களின் பொறாமைக்குரிய இடத்திலேயே இருந்துகொண்டிருக்கிறேன். நானாக விலகும்வரை அங்குதான் இருப்பேன். அது என் எழுத்துக்களால் நான் உருவாக்கிக் கொண்டது. அதை எவரும் எனக்கு மறுக்க முடியாது
இலக்கியம் என்னும் செயல்பாட்டில் நம்பிக்கையும் மதிப்பும் கொண்டவர்கள் எவராயினும், தானும் ஓர் எழுத்தாளன் என்னும் தன்னம்பிக்கை அவர்களுக்கு இருந்தால் நவீனத் தமிழிலக்கியத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதைப்பற்றிய பெருமிதத்தையே அடைவார்கள் என நினைக்கிறேன். இது ஒரு தொடக்கம் என்றும், இது இலக்கியத்தின் இடத்தை நிறுவுவது என்றும், அதன்மூலம் அனைத்து வகை இலக்கியச்செயல்பாடுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
என் கருத்துக்களால் ஒவ்வாமை கொண்டவர்களிடம் மட்டுமே எனக்குச் சொல்வதற்கு இருக்கிறது, அந்த ஒவ்வாமை இயல்புதான். கருத்துக்களின் ஊடுபாவில் நானும் அவர்களும் இருவகையில் முக்கியமானவர்கள் என அவர்கள் எண்ணினால்போதும். அவர்களும் இத்தகைய கூட்டங்களை நிகழ்த்தலாம். உரியஉழைப்பைச் செலுத்தி ஆழமான உரைகளை நிகழ்த்தலாம். நான் அந்நகரில் இருந்தால் கட்டணம் கொடுத்து அந்த உரைகளைக் கேட்க வந்து அமர்வேன். எனக்கு முரண்பாடு இருந்தால் தீவிரமாக பின்னர் எதிர்வினையும் ஆற்றுவேன். என் குரல் போலவே அவர்களின் குரலும் முக்கியம்தான் என்றே கருதுகிறேன்
உண்மையில் தமிழகத்தில் இலக்கிய அழகியல், மரபிலக்கியம், தத்துவம், கலைக்கொள்கைகள் ஆகியவற்றைச் சார்ந்த தலைப்புக்களில் முதன்மையான ஆளுமைகள் இவ்வாறு கட்டண உரைகள் நிகழ்த்துவது இன்றைய தேவை என நினைக்கிறேன். ஆண்டுக்கு பத்துப்பன்னிரண்டு நிகழ்ச்சிகள் இவ்வாறு நிகழும் என்றால் நாம் சிந்திக்கும் முறையிலேயே பெரிய மாறுதல் உருவாகிவரும். முகநூல் உருவாக்கும் ஒற்றைப்பத்தி வாசிப்பு, ஒற்றைவரி விவாதம் என்னும் நச்சுச்சூழலில் இருந்து நாம் வெளியே செல்லமுடியும். நம்முடைய அத்தனை விவாதங்களும் மேலோட்டமாக ஆகிக்கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பச்சூழல் இன்றுள்ளது. நாமே முயன்று அதை செறிவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஜெ
கட்டண உரை –ஓர் எண்ணம்
கட்டணக் கேட்டல் நன்று !
கட்டண உரை பற்றி…
கட்டண உரை -கடிதங்கள்
கட்டண உரை -கடிதங்கள்
கட்டண உரை -கடிதம்
கட்டண உரை -கடிதங்கள்
கட்டண உரை- கடிதம்
கட்டண உரை -கடிதங்கள்
கட்டண உரை -கடிதங்கள்
கட்டண உரை- கடிதங்கள்