நீர்க்கூடல்நகர் – 6
நீர்க்கூடல்நகர் – 5
நீர்க்கூடல்நகர் – 4
நீர்க்கூடல்நகர் – 3
நீர்க்கூடல்நகர் – 2
நீர்க்கூடல்நகர் – 1
அன்புள்ள ஜெ,
தங்கள் பயணக்கட்டுரை ஒரு நிஜ அனுபவத்தையே எனக்குள் ஏற்படுத்துகிறது. நீங்களே என்னை கைப்பிடுத்து அழைத்துகிச்சென்று காட்டியது போன்ற உணர்வு. வெறும் சுற்றுப்பயணமாக அன்றி ஒரு தரிசனத்தையே முன் வைக்கிறது. பின்வரும் வரிகள் அனைவருக்குமான அவசியச்செய்தி
“
இந்தியா மிகமிக விரைவாக நடுக்குடியினரின் தொகையாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் மரபார்ந்த விழாக்கள், சடங்குகளுக்கு எதிராக மாபெரும் பிரச்சாரம் சுதந்திரசிந்தனை என்றபேரில் இங்கே ஊடகங்கள் வழியாக பரப்பப்படுகிறது. அதை இளையதலைமுறையினர் அள்ளி அள்ளி விழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். இதே கும்பமேளா சில ஆயிரம்பேருடன் சத்தமில்லாமல் நிகழ்வதைக் காணவும் நமக்கே வாய்ப்பு அமையலாம்”
மாதா பிதா குரு தெய்வம், இந்தப்படிநிலையில், பெற்றோர் சொல்வதை முதலிலும், ஆசிரியர் சொல்வதை இரண்டாவதும் கேட்கிறோம், இவர்கள் கையில்தான் உலகமே துவங்குகிறது, இவர்கள் எதையெல்லாம் ஆதரிக்கிறார்களோ அதையே நாம் செய்கிறோம், பாரம்பரியம், கோவில், திருவிழாக்கள், சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் இவர்களால் மறுக்காப்பட்டால்… அடுத்த தலைமுறை அதையே தொடரும்.
கும்பமேளா பற்றிய என் ஒட்டுமொத்த எண்ணமும் பன்மடங்கு மாறிவிட்டது. என் மகளுக்கும், என்னால் முடிந்தவரை பயணம், கதை, கடவுள் பற்றி வர்ணித்தும், விவரித்தும் வருகிறேன்.
பல்வேறு எதிர்மறை எண்ணங்கள் மாறிவருகின்றன.
அன்புடன்
பகவதி
இனிமை இல்லாமல் போன ஜெயம்
தற்போதுதான் உங்களது நீர்க்கூடல் நகர் தொடரையும், அதற்கான வாசகர் கடிதங்களையும் வாசித்து முடித்தேன். தெரியாமல்தான் கேட்கிறேன், நீங்கள் எதைச் சொன்னாலும் அதை ”அப்படியே” நம்பும் ஒரு நாலைந்து வாசகர் உங்களை படிப்பதற்கு உண்டு என்பதற்காக எதை வேண்டுமானாலும்,எப்படி வேண்டுமானாலும் எழுதுவீர்களா ?
உண்மையில் நீர் சென்று கூடிய நகரில் உங்கள் குழுவோடு நீங்கள் செய்த அழிச்சாட்டியத்தை எப்படியெல்லாம் திரித்து எழுதி இருக்கிறீர்கள் என்று சொல்லவா ? உண்மையில் நீங்கள் அங்கே செய்தது என்ன ? ஒரு அப்பாவி அகோரி. அவரது கஞ்சா முதல் உணவு இருப்பிடம் வரை அனைத்தையும் அபகரித்திருக்கிறீர்கள். அபகரித்த இடத்தில் இருந்துகொண்டு, அதில் கொட்டா சின்னது குளிர் தாங்கல என்று ஏகடியம். கிருஷ்ணனின் தலை ஈரமாகிவிட்டது என்ற பிலாக்கணம் வேறு.
வாசகர் ராஜ் கொடுத்த சுட்டிக்கு எவ்வளவு மழுப்பலான பதில். அரவிந்தன் கண்ணையன் சுட்டிக்காட்டியது ஒரு வரலாற்று ஆவணம். எண்ணூறு பேரை அகோரிகள் அடித்தே கொன்றிருக்கிறார்கள். இதற்க்கு உங்கள் பதில் மௌனம். ஏன் மௌனம்? உங்கள் வரலாற்று ஞானம் அவ்வளவுதான். இந்த வரலாற்று துயர் உங்களை துன்புறுத்தி இருந்தால், அந்த பாபா குடிலில் தூங்குவதை ஒத்திப் போட்டு, அவரிடம் ஒரு விரிவான பேட்டி எடுத்திருப்பீர்கள். அப்படி நேர்காணல் கண்டிருந்தால் சுதந்திரத்துக்குப் பிறகு நேருவிய சதிகளின் பலனான ஜனநாயகத்தில் வாழும் வகைமை வேண்டி, எத்தனை வன்முறை குணம் கொண்டவர்களாக இருந்த அகோரி குலம், இன்றைய ஆட்சியில் அது வழங்கும் நிறைவின் பயனாக எவ்வாறு அஞ்சினான் புகலிடம் அமைக்கும் அருகர்கள் என மாறி நிற்கிறார்கள் எனும் இந்த்துத்துவ அரசியலின் இன்றைய பொற்காலம் குறித்த அடிப்படைகளை அவர் சொல்லி இருப்பார். கஞ்சா அடித்து குப்புறக்கா படுத்து தூங்குவதில் உள்ள கவனத்தை கொஞ்சம் அதிலும் காட்டி இருந்தால், இப்படி கண்ணையன் போன்றோரின் அவதூறுக்கு இந்துத்துவம் இலக்காகி இருக்குமா ?
இது கூட பரவா இல்லை. அத்யாயம் அத்யாயமாக சுத்தம் சுத்தம் என அலப்பறை விட்டீர்களே, இதன் பின்புலமான பிரதமரின் தொண்டு உள்ளம் சார்ந்து ஒரு வார்த்தை உங்களால் உதிர்க்க இயலவில்லை.ஆனால் வசைபாட மட்டும் என்ன ஒரு உத்வேகம். இதை கேள்வி கேட்டால் இந்துத்துவர் என்று சொல்லி நீங்கள் அடிப்பீர்கள், கேட்கா விட்டால் இந்துத்துவர்கள் அடிப்பார்கள் . ஒரு வாசகன் என்னதான் ஐயா செய்வது ? தெரியாமல்தான் கேட்கிறேன்,கங்கைத் தாய் தனது தவப் புதல்வனை வணங்குவதில் உங்களுக்கு ஏன் அவ்வளவு பொச்சரிப்பு. உலகுக்கே ஆசி வழங்கும் பேரன்பு கொண்டவர் அதில் கொஞ்சத்தை கங்கைக்கும் கொடுத்திருக்கிறார், இதற்கு ஏன் இத்தனை கூப்பாடு? எல்லோரும் உங்களை மட்டுமே வணங்கிக்கொண்டிருக்க வேண்டும், நீங்கள் மட்டுமே எல்லோருக்கும் ஆசி அளித்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற உங்களது தன்முனைப்பு நல்லதுதான். ஆனால் அது பாசிசம். இது ஜனநாயக தேசம் இங்கே விளிம்பு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரதமருக்கும் கங்கைக்கு ஆசி அளிக்க எல்லா உரிமை உண்டு.
இப்படி எல்லாம் எழுதுவதால் நான் இந்துத்துவ சதி வலையில் விழுந்து விட்டேன் என நீங்கள் நினைக்கக் கூடும். கும்பமேளா வருகிறீர்களா எனக் கேட்டபோது, சமூக அரசியல் ரீதியாக அது ஒரு இந்துத்துவ சதி, இலக்கிய ரீதியாக அது ஆதிக்கத்தை நிலை நிறுத்த வந்த பெருங்கதையாடல், ஆகவே மதச்சார்பின்மை அரசியல் கொண்டவனாக, பின்நவீனத்துவ வாசகனாக நின்று, முரட்டுத்தனமாக ”நான் வரமாட்டேன்” என்று ,குடுகுடுப்பைக்காரன் கை ,குடுகுடுப்பை போல, தலையை கிடுபுடு என ஆட்டி நான் மறுத்ததை நீங்கள் அறிவீர்கள்.
இருப்பினும் எனது நிலைப்பாடுளுக்கு வெளியே உண்மை என ஒன்றிருக்கிறது அதை எவர் திரித்தாலும் அப்படியே பொங்கி அழுது சை எழுந்து விடுவேன் . நான் கறாரான வாசகராக்கும் .
கடலூர் சீனு
அன்புள்ள ஜெ
கும்பமேளா பற்றிய உங்கள் பதிவுகள் அருமையான சித்திரத்தை அளித்தன. வழக்கம்போல ஏராளமான காட்சிப்பதிவுகள். கூடவே கருத்துப்பதிவுகள். ஆனால் ஒரு விஷயத்தைப்பற்றிய என் கடுமையான மாற்றுத்தரப்பைச் சொல்ல விரும்புகிறேன். உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஏராளமான என்கவுண்டர்களைப் பற்றிச் சொன்னீர்கள். உத்தரப்பிரதேசம் ஒரு வகையான வைல்ட் வெஸ்ட் நிலம், அங்கே துப்பாக்கியால்தான் அமைதியை உருவாக்கமுடியும் என்று சொல்லியிருந்தீர்கள். வெளியே நின்று பார்க்கும் பார்வைக்கு சில எல்லைகள் உண்டு. வெளியே இருந்துகொண்டு சொல்லும் ஒரு கருத்து இது. அங்குள்ள உண்மையான நிலைமையை நம்மால் சொல்லிவிடமுடியாது
நிலைமை எதுவாக இருந்தாலும் அரசவன்முறை என்பது எவ்வகையிலும் ஒரு சமூகச்சூழலை மேம்படுத்தாது. என்கவுண்டர் கொலைகளால் நீதியோ சட்டம் ஒழுங்கோ பேணப்படாது. ஏனென்றால் அதைச்செய்பவர்கள் போலீஸ்காரர்கள். அவர்கள் அந்த சமூகத்தின் ஒரு பகுதி. ஒரு பகுதி குற்றம்நிறைந்ததாக உள்ளது என்றால் அங்குள்ள காவல்துறையும் குற்றம்நிறைந்ததாகவே இருக்கும். ஆகவே என்கவுண்டர் என்பது ஒரு குற்றவாளிக்குழுவை இன்னொன்றுக்கு எதிராகத் தூண்டிவிடுவதாகவே அமையும். அந்தப்போலீஸ் சட்டத்திற்காக நிலைகொள்ள மாட்டார்கள். அவர்களும் குற்றங்களில் மூழ்கியிருப்பார்கள். என்கவுண்டர்களை தங்கள் நலனுக்காகவே அவர்கள் செய்வார்கள். லஞ்சம் கேட்பார்கள். கொள்ளைகளில் பங்கு கேட்பார்கள். கிடைக்காவிட்டால் கொலைசெய்வார்கள். அதை என்கவுண்டர் என்பார்கள்
ஏற்கனவே இதெபோல என்கவுண்டர்கள் அல்லாமல் வேறுவழியில்லை என்று சொல்லப்பட்ட இடம் மும்பை. அங்கே பல என்கவுண்டர் கொலைகளைச் செய்தவர்கள் இருக்கிறார்கள். அந்தப்போலீஸார் சூப்பர்கிரிமினல்களாகவே செயல்பட்டார்கள் என்பது இன்று தெளிவாகியிருக்கிறது. பலர் சிறையில் தள்ளப்பட்டார்கள். என்கவுண்டர்களுக்கான அனுமதி என்பது போலீஸ்துறைக்கு மிதமிஞ்சிய அதிகாரத்தை அளிக்கிறது. சட்டம் ஒழுங்கு என்பது நீதி அமைப்பு சிவில்நிர்வாக அமைப்பு ஆகிய இரண்டும் சேர்ந்து செய்யவேண்டிய ஒன்று. என்கவுண்டர் கொலைகள் முழுக்கமுழுக்கப் போலீஸிடம் எல்லா அதிகாரத்தையும் கொடுப்பதுதான். போலீஸ் என்ன செய்யும், அவர்களின் மனநிலை என்ன என்பதெல்லாம் என்னைவிட உங்களுக்கே நன்றாகத்தெரியும். எந்நிலையிலும் எதற்காகவும் என்கவிண்டர் நியாயப்படுத்தப்படக்கூடாது. அது சாமானியர்களுக்கு எதிராக அரசாங்கம் ஆயுதம்தூக்குவது மட்டும்தான்
டி.தியாகராஜன்