கர்ணனின் தேர் போர்முனையிலிருந்து பின்னடைந்து சுழித்துக்கொண்டிருந்த இரண்டாம்நிரையை அடைந்து நின்றது. புரவியில் இருந்தபடியே அத்தேரின் புரவிக்கடிவாளங்களைப் பற்றி அதை செலுத்திவந்த அங்கநாட்டுத் தேர்வலனாகிய சக்ரன் அதை நிறுத்திவிட்டு சங்கு எடுத்து முழக்க மருத்துவஏவலர் வந்து தலை அறுந்து ஒருக்களித்து விழுந்துகிடந்த துருமனின் உடலை எடுத்து நிலத்திலிட்டனர். அவன் தலைக்காக தேரின் அடியில் நோக்கியபின் உடலை மட்டும் தூக்கி அப்பால் கொண்டுசென்றனர். தேர்த்தட்டில் தளர்ந்து அமர்ந்தவனாக கர்ணன் அதை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். சக்ரன் “புரவிகளை மாற்றவேண்டும், மூத்தவரே. இரு புரவிகள் கழுத்து அறுபட்டு குருதி வார்கின்றன” என்றான். கர்ணன் தலையசைத்தான்.
சக்ரன் மீண்டும் சங்கொலி எழுப்ப இரு புதிய புரவிகளுடன் ஏவலர் வந்தனர். நுகத்திலிருந்து புரவிகளை அவிழ்த்து அப்பாலிட்டனர். அவை மெல்லிய உடல்துடிப்புடன் அப்போதும் ஓடிக்கொண்டிருப்பவைபோல கால்களை அசைத்தன. வால் நிலத்தில் கிடந்து சுழன்றது. குருதி பெருகி மண்ணை நனைப்பதை இருளிலும் நோக்க முடிந்தது. புதிய புரவிகள் குருதிவார்ந்துகொண்டிருந்த புரவிகளைக் கண்டு விழியுருட்டி நீள்மூச்செறிந்தன. கால்தயங்க நின்ற அவற்றை அடித்து முன்செலுத்தி நுகத்தில் கட்டினர். அவை மூக்குவிடைத்து ஒன்றையொன்று முகர்ந்து நீள்மூச்செறிந்தன. புரவிகளை கட்டி முடித்ததும் “முடிந்தது, மூத்தவரே” என்றான் சக்ரன். கர்ணன் “ஆம்” என்றான். ஆனால் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான். “கிளம்புவதா?” என்றான் சக்ரன். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் கழுத்துத்தசை மட்டும் மெல்ல அசைந்தமைந்தது. சக்ரன் அவன் சொல்லுக்காக காத்திருந்தான்.
கர்ணனை நோக்கி தேரில் வந்து பாய்ந்திறங்கிய துரியோதனன் “என்ன நிகழ்ந்தது? அங்கரே, உங்கள் இலக்கு பிழைத்தது என்று அறிந்தேன்” என்றான். கர்ணன் நிமிர்ந்து நோக்கி பெருமூச்சுவிட்டான். “நீங்கள் அவனை உயிருடன் விட்டுவிட்டீர்கள் என்கிறார்கள். நாகபாசம் குறிபிழைக்க வாய்ப்பே இல்லை என்றார்கள்” என்றான் துரியோதனன். கர்ணன் நோயுற்றவன்போல தாழ்ந்த குரலில் “என்ன நிகழ்ந்தது என்று அறியேன். அவனுடைய மூத்தோரின் நற்செயல்களின் பயன் வந்து அவனைக் காத்தது என்றே தோன்றுகிறது. அவன் தேரின் சகடம் பிலத்தில் ஆழ்ந்து தேர் சரிந்தது. என் அம்பு குறி தவறியது” என்றான். “அவர் இயற்றியதுதான் அது. ஐயமே இல்லை… அவர் தேரை பிலத்தில் இறக்கினார்” என்றான் துரியோதனன். “அவர் நோக்கவில்லை, அவர் விழிகள் தேர்ப்புரவிகளில் இருந்தன” என்று கர்ணன் சொன்னான். “அவர் நோக்காமல் இங்கு எதுவும் நிகழ்வதில்லை” என்றான் துரியோதனன்.
தேரில் அருகணைந்த துச்சாதனன் “மூத்தவரே, கடோத்கஜனின் படைகளை நம்மால் தடுக்க முடியவில்லை. நம் தரப்பின் அரக்கர்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுகின்றனர்” என்றான். துரியோதனன் கர்ணனிடம் “உங்கள் அரவம்பு எழுக… இன்றே அர்ஜுனன் களம்பட்டாகவேண்டும்” என்றான். கர்ணன் “அவன் ஊழ் அவனை காக்கிறது… என் ஊழ் என்னை தடுப்பதுபோல” என்றான். துரியோதனன் சினத்துடன் “எந்தப் போரும் ஊழுக்கு எதிரானதே. ஊழே வெல்லும் என்றால் நிமித்திகர்களே எவர் நாடாள்வது என்று முடிவெடுத்தால் போதும்” என்றான். கர்ணன் “நான் நிலைகுலைந்துள்ளேன். என் இலக்கு இன்றுவரை பிழைத்ததில்லை. அரவம்பு இலக்கு பிழைத்தது என்றால் அவனுடன் தெய்வங்கள் உள்ளன என்றே பொருள்” என்றான். “எனில் தெய்வங்களுடன் பொருதுவோம்” என்று துரியோதனன் கூவினான்.
மறுபக்கம் தேரில் அருகணைந்த கிருபர் “இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? அர்ஜுனனும் பீமனும் முழுவிசைகொண்டு நம் படைகளை தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். விழியிழந்தவர்கள்போல் நமது படைகள் முட்டிமோதிக்கொண்டிருக்க அம்புகளால் கொன்றுகுவிக்கிறார்கள்… சாத்யகியும் திருஷ்டத்யும்னனும்கூட தடுக்கவியலாதவர்களாக ஆகிவிட்டனர்… நம்மை வழிநடத்திய அரக்கர்கள் அழிந்துகொண்டிருக்கிறார்கள். நமது படைசூழ்கையை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டியிருக்கிறது” என்றார். துச்சாதனன் “நம்மில் இரவுவிழி கொண்டவர் அங்கர் மட்டுமே. அவர் முன்னின்று நடத்தவேண்டும் இப்போரை” என்றான். துரியோதனன் “அங்கரே, நாங்கள் உங்களுக்கு அடைக்கலம். எங்களை காத்தருள்க!” என்றான். கர்ணன் பற்களைக் கடித்து விஜயத்தைத் தூக்கி “இது என் வஞ்சினம். நான் எழுகிறேன். அறிக, இப்போரில் பாண்டவர் ஐவரையும் வெல்வேன்! இன்று போர்முடிந்தால் அவர்கள் படைக்கலம் எடுக்கமாட்டார்கள்… இன்று என் அரவம்பு பலிகொள்ளும்!” என்றான்.
கிருபர் வாய்விட்டு நகைத்து “அங்கனே, சற்றுமுன் நீ போர்புரிந்ததை நான் என் விழிகளால் நோக்கினேன். உன் கைகள் சீறி எழுகின்றன. எதிர்ப்பைக் கண்டதும் மெல்ல மெல்ல தாழ்கின்றன. அந்தணர் சொல்லால் வீரர், வணிகர் சூழ்ச்சியால் வீரர், சூதர் கனவுகளில் வீரர் என்று கூற்று உண்டு. நீ உன் ஆணவப்பேச்சை நிறுத்தி ஊன்விழிகளால் களத்தை பார். அதன்பின் உன் ஆற்றலை உணர்ந்து எதிரியை கணக்கிட்டு களம்நின்று போரிடு” என்றார். கர்ணன் “என்ன சொன்னீர்?” என்று கூவியபடி கையில் அம்புடன் அவரை நோக்கி திரும்பினான். “என் வீரத்தை இழிவுசெய்வோர் எவரையும் எதிரி என்றே கருதுவேன்… எவரும் எனக்கு ஒரு பொருட்டு அல்ல” என்றான். “வீரமா? உனக்கா? எண்ணிப்பார், எத்தனை களங்களில் நீ தோற்றோடியிருக்கிறாய் என. அறிவிலி, விராடநாட்டுப் போரில் அர்ஜுனன் ஒருவனே உன்னை தோற்றுப் பின்னடையச் செய்தான். இங்கே பாண்டவர் ஐவரும் சிகண்டியும் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் கடோத்கஜனும் இணைந்து வந்துள்ளனர்…” என்றார்.
கர்ணன் உடல்பதற சொல்லிழந்து நின்றான். பின்னர் உடைந்த குரலில் “நச்சுநா கொண்ட அந்தணர் நீர். அவையமர்ந்து இழிசொல் உரைத்து இரந்துண்டு வாழும் கீழ்மகன். உயிருக்குத் துணிந்து இச்சொற்களை என்னிடம் சொன்னீர். உங்கள் உணர்வென்ன என்று புரிந்துகொள்கிறேன். அதற்குப் பெயர் அச்சம். அதற்கு அடிப்படை கோழையுள்ளம். பரிசில் பெற்று வாழும் பிறவிகொண்ட நீர் இங்கே எழும் அம்புகளைக் கண்டு அஞ்சிவிட்டீர். உயிர்பிழைத்து ஓடுவதைப்பற்றி திட்டமிடுகிறீர். பாண்டவர்கள் வென்றால் அவர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களின் அவையிலமர்ந்து இழிசொல் உரைத்து இரந்துண்டு வாழ எண்ணுகிறீர். ஆகவே இங்கே அரசர் முன் அவர்களை புகழ்ந்து பேசுகிறீர்” என்றான். நாணிழுத்து ஓசையெழுப்பி “கேளுங்கள், இந்த நாணோசை இனி இந்தக் களத்தை நிறைக்கும். இன்றே அவர்கள் ஐவரையும் வெல்வேன். அந்த அரக்கப்பிறவியை களத்தில் கொல்வேன். ஆணை!” என்றான்.
கிருபர் “நீ சொன்னவற்றை இன்றுவரை செய்ததில்லை… செய்தபின் வா, உன் சொல்லை செவிகொள்கிறேன்” என்று திரும்பிச் சென்றார். கர்ணன் திரும்பி துரியோதனனிடம் “அரசே, இழிசொல் உரைக்கிறார். என் வீரத்தை களத்தில் இகழ்கிறார். இவருடைய உள்ளம் செல்லும் திசையை உணர்க!” என்றான். துரியோதனன் “இன்று இக்களத்தில் பெரும்பாலானவர்கள் எண்ணுவது அவருடைய சொற்களையே” என்றபின் தன் தேரை திருப்பினான். அத்தருணத்தில் நாணோசையுடன் அவர்களை நோக்கி வந்த அஸ்வத்தாமன் கர்ணனை நோக்கி “கீழ்மகனே, உன் நா எல்லை மீறியது என்று கேட்டேன். சாகத் துணிந்து நீ சொல்லெடுத்திருக்கிறாய். அந்தணர்குலத்து ஆசிரியரை இழித்துரைக்க உனக்கு என்ன தகுதி? பேடியல்ல என்றால் எடு உன் வில்லை. இக்களத்திலேயே காட்டுகிறேன் நீ ஒரு வெற்றுச்சொல்வீரன் என்று. மண்ணில் இழையும் புழு நாகமென படமெடுக்க முயல்வதே உன் வீரம் என்று உனக்கே தெரியச் செய்கிறேன்… எடடா அம்பை” என்றான்.
கர்ணன் “நீ யார்? அந்தணனா? நிலம் விரும்பி வில்லெடுத்த நீ அந்தணனும் அல்ல. அந்தணக்கொடையாக மண்பெற்று ஆள்வதனால் ஷத்ரியனும் அல்ல. குலமிலாதவன் நீதான்… உன்னை கொன்றுவிட்டு உன் உடல்நோக்கி காறி உமிழ்கையில் சொல்கிறேன் நீ கேட்டதற்கு மறுமொழியை” என்று தன் வில்லை தூக்கினான். துச்சாதனன் பாய்ந்து கர்ணனின் தேரிலேறி வில்லை பற்றிக்கொண்டான். “மூத்தவரே, நாம் நமக்குள் போரிட்டுக்கொள்ளவா இந்தக் களத்திற்கு வந்தோம்? இங்கே நீங்கள் ஒருவருக்கொருவர் பாய்ச்சிக்கொள்ளும் ஒவ்வொரு அம்பும் சென்று தைப்பது என் தமையனின் நெஞ்சில் என்று உணருங்கள்.” கர்ணனின் வில் தாழ்ந்தது. அஸ்வத்தாமன் “இவ்விழிமகனின் நாவை அறுக்காமல் நின்றிருந்தால் என் குலம் என்னை பழிக்கும். என் தந்தைக்கு முன் இழிவுகொண்டவன் ஆவேன்” என்றான்.
“இங்கே நாம் அனைவருமே நிலைகுலைந்திருக்கிறோம்… நாம் ஒவ்வொருவரும் தோற்றுக்கொண்டிருப்பதை உணர்கிறோம். அதுவே நம்மை கீழ்ச்சொல் பேசச் செய்கிறது” என்றான் துச்சாதனன். “எவர் சொன்னார் நான் தோற்றேன் என? எங்கு நான் தோற்றேன்? சொல்!” என்று அஸ்வத்தாமன் கூவினான். “தோற்றவன் இந்தச் சூதன்மகன். இவன் கூறிய அத்தனை சொற்களும் வீண் என களத்தில் காட்டிவிட்டு தன் தம்பியர் அனைவரையும் களத்தில் பலியிட்டுவிட்டு இதோ வந்து நின்றிருக்கிறான்…” கர்ணன் “நீ வென்றவர்களின் பெயரை சொல்… இரந்து நாடுபெற்று ஆண்டு தருக்கும் கீழ்மகனே, சொல். நீ களத்தில் கொன்றவர் எவர்?” என்று கூவினான். அஸ்வத்தாமன் திகைத்தான். பின்னர் “கொல்கிறேன். இன்றே கொன்றுகுவிக்கிறேன்… நீ உன் விழிகளால் நோக்கு” என்றான். “சொல்லாதே, செய்துகாட்டு. அதன்பின் என் முன் எழு” என்றான் கர்ணன்.
அஸ்வத்தாமன் வில் தாழ்த்தி பெருமூச்சுவிட்டான். கர்ணன் “நான் உயிருடன் எஞ்சினால் உன்னைத் தேடி வருவேன். நீ இப்போது சொன்ன சொற்களுக்காக உன் நாக்கை அறுக்க எழுவேன்… இப்போது செல்” என்றான். அஸ்வத்தாமன் “நான் சொல்வதும் அதையே. உன் நாவுக்காக நான் வருவேன்… எண்ணிக்கொள்க!” என்றான். “மூத்தவரே, நீங்கள் களமெழுந்தாகவேண்டும். இக்களத்தில் விழிகொண்டோர் இன்று நீங்களும் உத்தரபாஞ்சாலரும் மட்டுமே. இருவரும் இங்கே போரிட்டுக்கொண்டிருந்தால் நம் படைகளை நாம் அர்ஜுனனின் அம்புகளுக்கு பலிகொடுக்கிறோம் என்று மட்டுமே பொருள்” என்றான் துச்சாதனன். கர்ணன் “ஆம், நான் ஐவருக்கும் இன்று குருதிச்சுவையை காட்டுகிறேன். அருள்க தெய்வங்கள்!” என்றபின் வில்லை எடுத்தபடி களமையம் நோக்கி சென்றான்.
சஞ்சயன் தொடர்ந்தான்: போர்க்களத்தில் இவ்வாறு தங்களுக்குள் பூசலிட்டுக்கொள்வதும் இழந்துகொண்டிருக்கும் அகவிசையை மீட்டுக்கொள்ளும் சூழ்ச்சியே. ஒருவரை ஒருவர் சிறுமைசெய்து சினமூட்டி அச்சினத்தை பகைவர்மேல் திரட்டிக்கொண்டு களமெழுந்தனர். தளர்ந்த நரம்புகளை மீண்டும் முறுக்கிக்கொண்டனர். அவர்கள் அறிந்து அதை செய்யவில்லை, ஆனால் எதைச் செய்து எழவேண்டும் எனத் தவித்த அவர்களின் அகம் அதை கண்டுகொண்டது. கிருபரும் அஸ்வத்தாமனும் சினத்தால் விரல்நுனிகள் அதிர பற்கள் உரசும் ஒலி காதுகளில் ஒலிக்க களம் நோக்கி சென்றனர். தன் இளையோர் இறந்த உளத்தளர்விலிருந்து மீண்டு காலால் ஓங்கி தேர்த்தட்டை மிதித்து செல்க செல்க என ஆணையிட்டு கர்ணன் போர்க்களம் சென்றுசேர்ந்தான்.
அஸ்வத்தாமன் தொலைவிலேயே திருஷ்டத்யும்னன் முழுவீச்சுடன் கௌரவப் படையினரை வென்று பின்னடையச் செய்தபடி வருவதை கண்டான். நாணொலி எழுப்பியபடி சென்று அவனை எதிர்கொண்டான். கர்ணனிடம் சொல்ல எஞ்சியிருந்த சொற்கள் அவன் நாவிலிருந்து எழுந்தன. “கீழ்மகனே, நீ ஆண்மையற்றவன் என்று அறிந்திருந்தேன்… வில்லெடுத்து எளிய வீரரைக் கொன்று உன் ஆண்மையை நீ நிறுவமுடியாது… என் வில்லுக்கு எதிர் நில்” என்றான். மிகச் சரியாக பாஞ்சாலனிடம் எச்சொல்லை சொல்லவேண்டும் என தான் அறிந்திருப்பதை அவனே வியந்தான். எளிய வம்புகளுக்கு அவன் ஒருநாளும் செவிகொடுத்ததில்லை. ஆனால் ஒரு சொல்விடாமல் அனைத்தும் எவ்வகையிலோ உள்ளே சென்று சேர்ந்துள்ளன. அந்த ஆவநாழியை அவன் அறிந்ததே இல்லை. ஆனால் நா அறிந்திருந்தது. தேவையென்றபோது இயல்பாகச் சென்று உரியதைத் தொட்டு எடுத்தது. கொலைநச்சு கொண்டது. எரிந்து எரிந்து எழுவது.
இங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைப் பற்றியும் உரிய சொற்களை வைத்திருக்கின்றனர் என அஸ்வத்தாமன் எண்ணிக்கொண்டான். தோழர்களுக்கு, உடன்பிறந்தாருக்கு, ஆசிரியர்களுக்கு, பிதாமகர்களுக்கு. ஒருகணத்தில் அந்தக் களத்தில் ஒவ்வொருவரும் பிறர்நோக்கி உமிழ்ந்த சொற்களை அவன் நினைவுகூர்ந்தான். நஞ்சுகொண்ட ஒரு சொல்லும் ஆவநாழியில் இல்லாத ஒருவர் இக்களத்தில் இருப்பாரா? யுதிஷ்டிரர் இருக்கக்கூடும். அதனால்தான் அவர் எதிரிகள் ஒவ்வொருவரையும் அஞ்சுகிறார். தன்னவர் ஒவ்வொருவரைப் பற்றியும் அச்சம்கொண்டிருக்கிறார். இந்தக் களத்தில் வஞ்சினம் என்றும் உளச்சோர்வென்றும் ஒரு இழிசொல்கூட உரைக்காதவர் அவர் மட்டுமே. இக்களத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் தெய்வங்கள் வருந்துமென்றால், கொல்பவரின் குடிமேல் தீராப் பழி சேருமென்றால் அது யுதிஷ்டிரர் மட்டும்தான்.
திருஷ்டத்யும்னன் அஸ்வத்தாமனின் சொற்களால் தன் சினத்தை எரித்து பெருக்கிக்கொண்டான். கைநீட்டி இளிவரலும் வெறுப்பும் நிறைந்த முகத்துடன் “அளிக்கொடையெனக் கிடைத்த நிலத்தை ஆளும் நீயா ஆண்மைகொண்டவன்? செல்க, இன்னும் சில ஷத்ரியர்களுக்கு மலம்கழுவிவிடுக! அவர்கள் அளிக்கும் மண்பொருக்குகளை கூட்டிவைத்து மன்னன் என்று அமர்க!” என்றான். அச்சொல் அதுவரை அங்கே பேசப்பட்ட அனைத்திலும் கீழ்மை என உணர்ந்து அஸ்வத்தாமன் உடல்நடுங்கினான். சிலகணங்கள் சொல்லே எழவில்லை. ஆனால் தான் அங்கே எதிர்பார்த்தது அதுவே என அவனுடைய அகம் அறிந்திருந்தது. அப்போரில் கௌரவர் வெல்லப்போவதில்லை என அகம் அறிந்திருந்தது. வஞ்சமென்றும் எதுவும் எஞ்சவில்லை. எரிந்தேறும் சினமில்லையேல் அக்களத்தில் வில்லுடன் எழ முடியாது.
“இழிமகனே, இதன்பொருட்டே உன் தலையை உதைத்து விளையாடுவேன். பேடி! நீ ஆண்மகன் என்றால் உன் நிலத்தை ஆண்டுகொண்டிருந்த என்மேல் படைகொண்டு வந்திருக்கவேண்டும்” என்று அஸ்வத்தாமன் கூவினான். அச்சொற்களில் கீழ்மை போதவில்லை என உணர்ந்த அகம் உடனே மேலும் சொற்களை அள்ளிக்கொண்டது. “நிலம் ஷத்ரியனுக்கு மனைவியைப்போல. தன் துணைவியை பிறன் பெண்டாள நோக்கியிருப்பவன் பேடி மட்டும் அல்ல, பேடியின் மைந்தனும்கூட.” திருஷ்டத்யும்னன் “கீழ்பிறப்பே…” என்று கூவியபடி அம்புகளால் அஸ்வத்தாமனை அறைந்தான். அதே வெறியுடன் அஸ்வத்தாமன் திருஷ்டத்யும்னனை அறைந்தான். ஒவ்வொரு சொல்லுக்கும் அவர்கள் வசைபாடிக்கொண்டார்கள். வசைகளே வில்லென்றாகி நாண் என உள்ளத்தை இழுத்து இறுக்கி அந்த அம்புகளை ஏவின.
அவர்கள் இருவரும் புரிந்த போர் அதன் இயல்கையின் எல்லையில் தொடங்கியது. எனவே ஒவ்வொரு அம்பும் உச்சவிசைகொண்டு சென்று எதிரியின் தேரை அறைந்தது. ஆனால் ஒவ்வொரு அம்பாக அவர்களை உளவிசை தளரச்செய்தது. அம்புகள் எழுந்தோறும் அகம் ஓய்ந்தனர். அஸ்வத்தாமன் அதுவரை திருஷ்டத்யும்னனை பார்க்கவில்லை என பார்வை மெல்ல மெல்லத் தெளிந்தபோது உணரத்தொடங்கினான். அவனுடைய தோற்றம் அணுக்கமாகத் தெரிந்தது. அவன் உடற்தசைகள், நரம்புப்புடைப்புகள், விழியலைவுகள், உதடுகளின் அசைவுகள். அவனை இக்கணம்தான் முதல்முறையாக பார்க்கிறேன். இதுவரை பார்த்திருந்த நூறாயிரம் வடிவங்களுடன் சென்று இணைத்துக்கொள்கிறேன். இத்தனை இனியவனாகவே அவன் முன்பும் இருந்திருக்கிறான். அவனை என் உடன்பிறந்தான் என்றே என்றும் நான் உணர்ந்திருக்கிறேன். விழிமூடிவிடாமலிருந்தால் அவனை நோக்கி நான் அம்புகளை பெய்திருக்கப் போவதில்லை. என் கைகளால் இவன் இறந்தால் நான் என்னில் ஒரு பகுதியை கொன்றழிக்கிறேன்.
சினம்கொண்டிருக்கையில் பார்வையே முதலில் இல்லாமலாகிவிடுகிறது. பார்ப்பவை அனைத்தும் இலக்குகள் மட்டுமாக பிரிந்து சிதறிவிடுகின்றன. இன்னும் இன்னும் என உள்ளம் எழுகிறது. சினமும் உடலில் இருந்து ஒருவகை வெளியேற்றம் மட்டுமே. ஐந்து உடல்மலங்களைப்போல நுண்ணுருக்கொண்ட ஒன்று. வெளியேறும் மலம் உடலை தூய்மைப்படுத்துகிறது. வெளியேறவேண்டும் என்னும் அதன் துடிப்பே உந்துதலாக ஆகிறது. எத்தனை வெறியுடன், விசையுடன் அது உடலைவிட்டு நீங்குகிறது! வில்லில் இருந்து எழும் அம்புகளைப்போல. மலத்தை உமிழ்கிறது உடல். மலத்தை வீசியடிக்கிறது. மலம் உடலுக்குரியது அல்ல. அதை உடலைவிட மலம் நன்கறிந்திருக்கிறது. அது மண்ணுக்குரியது. மண் அதை மீண்டும் அமுதெனச் சமைக்கிறது. மலம் இழந்த உடல் வெறுமையை அல்ல நிறைவையே உணர்கிறது. மலமிருந்த இடத்தில் வந்தமைவது உடலுக்குள் வாழும் இனிமைகள். ஆகவேதான் மலவெளியேற்றம் மானுட உடலின் இன்பங்களில் ஒன்றென அமைந்திருக்கிறது. முற்றொழியவேண்டும். ஒரு துளிகூட எஞ்சாமல். இச்சினமெனும் அழுக்கு நீங்கி நான் இங்கே எடையில்லாது நின்றிருக்கவேண்டும்.
அஸ்வத்தாமன் தன் வில்லை திருப்பிக்கொண்டு அப்பால் செல்ல அக்கணத்தை முன்பறிந்திருந்தவன்போல திருஷ்டத்யும்னன் உடல்தளர்ந்து தேர்த்தட்டில் அமர்ந்தான். அவன் நெஞ்சிலும் தோளிலும் தொடையிலும் கவசங்கள் உடைந்த இடைவெளிகளில் அம்புகள் தைத்திருந்தன. அவன் தேர் உடைந்து காற்று சீறிக்கொண்டிருந்தது. அவன் உளநிலையை அறிந்தவனாக பாகன் தேரை பின்னிழுத்து கொண்டுசென்றான்.
வில்லுடன் எழுந்த கர்ணன் படைப்பிரிவுகளினூடாக அர்ஜுனனை தேடிச்சென்றான். இரவுக்குள் பாண்டவப் படைகளும் கௌரவப் படைகளும் வெறிகொண்டு போரிட்டுக்கொண்டிருந்தன. முழுப் படையையும் நோக்கும் விழிகள் இல்லாமலாகிவிட்டிருந்தமையால் ஒவ்வொருவரும் ஒற்றை இலக்கை தெரிந்தெடுத்து அது ஒன்றே போர் என எண்ணி களம்நின்றனர். சல்யர் விராடருடன் போரில் ஈடுபட்டிருந்தார். விராடர் சல்யரின் அம்புகளை ஏற்று பின்னடைந்துகொண்டிருந்தார். வில்லைக் குலைத்தபடி எழுந்து சென்று ஒரே அம்பில் விராடரின் நெஞ்சை துளைக்கவேண்டும் என கர்ணனின் உள்ளத்தில் வெறியெழுந்தது. விஜயத்தை இறுகப்பற்றி அந்த எழுச்சியை அடக்கிக்கொண்டு “முன்னேறுக! முன்செல்க!” என்று தேர்ப்பாகனாக அமர்ந்த தன் குடியிளையோனாகிய சக்ரனிடம் சொன்னான். நூறுமுறை விராடரை கொன்றுகொன்று கணங்களினூடாக முன்னால் சென்றான்.
சாத்யகி தேரில் நின்றபடி பால்ஹிகனாகிய பூரியுடன் போரிட்டுக்கொண்டிருந்தான். நகுலன் சகுனியுடனும் கிருபர் சிகண்டியுடனும் போரிட்டனர். ஒவ்வொரு போரும் உச்சத்தில் நிகழ்ந்தது. கர்ணன் தன் உள்ளத்தால் ஒவ்வொருவருடனும் சென்று போரிட்டான். சிகண்டியின் தலையை வீழ்த்தி தேர்ச்சகடத்தை அவர் உடல்மேல் ஓட்டிச்சென்றான். சாத்யகியை அம்புகளால் அறைந்து வீழ்த்தி அவன் தலையைக் கொய்து வானில் நிறுத்தினான். நகுலனை அம்புகளால் அடித்து தேர்த்தூணுடன் சேர்த்து பொருத்தினான். அவர்களின் குருதியில் நனைந்தான். தன் உடலெங்கும் மிதப்பென, விழி நனையச்செய்யும் கூச்சமென எழுந்த சினத்தை வெல்ல கைவிரல்களை இறுக்கிக் கொண்டான். பற்களைக் கடித்து மூச்சை இழுத்து வெளிவிட்டான். இச்சினம் அவனுக்குரியது. அவனை இப்போதே இக்களத்திலேயே கொல்வேன். ஆம், நான் அளித்த சொல்லால் ஆளப்படுகிறேன். இதோ அதை கடப்பேன். என் எல்லைகள் அனைத்தையும் கடப்பேன். முதல் எல்லை அச்சொல். என் தெய்வங்களின் முகத்தில் காறியுமிழ்வேன். இன்று அவன் குருதியாடாது திரும்பமாட்டேன். எழுக என் நச்சம்பு… என் வஞ்சத்தின் கடுங்கசப்பு!
அவன் தொலைவில் அர்ஜுனனை பார்த்தான். “செல்க, அர்ஜுனனை நோக்கி செல்க!” என ஆணையிட்டான். அந்த ஆணையால் சக்ரன் ஊக்கமடைந்தது தெரிந்தது. தேரை விசைகூட்டி அவன் அர்ஜுனனை நோக்கி சென்றான். ஆனால் துரோணருடன் போரிட்டுக்கொண்டிருந்த அர்ஜுனன் அவனை பார்ப்பதற்குள் இளைய யாதவர் தேரை பின்னாலிழுத்து பாண்டவப் படைகளுக்குள் கொண்டுசென்றார். பாஞ்சாலர்களின் வில்லவர் நிரை துரோணரை எதிர்கொண்டது. மறுபக்கத்திலிருந்து துருபதர் நாணொலி எழுப்பியபடி வந்து துரோணரை சந்தித்தார். “அர்ஜுனனை தொடர்க… அர்ஜுனனின் இடத்தை கண்டறிக!” என்று கர்ணன் ஆணையிட்டான். என் சினம்நிறைந்த கலம் தளும்புகிறது. ஒரு துளியும் சிந்தாமல் இதை காக்கவேண்டும். இது இன்று அவனை கொல்லும் விசையென்றாகி எழுக! நாகங்களே, என்னைச் சூழ்ந்தெழுக! நச்சுப்படங்களின் நிழல் என்மேல் எழுக! வஞ்சம்கொண்ட நிலைக்காத வால்கள் எழுக! இமையா விழிகள் எழுக! பிளவுண்ட நாவுகள் எழுக!
அர்ஜுனன் மிக அப்பால் படைகளுக்குள் இருந்து வெளிப்பட்டான். “செல்க… அர்ஜுனனை எதிர்கொள்க!” என்று கர்ணன் தேர்ப்பாகனுக்கு ஆணையிட்டான். அவனுடைய தேர் அர்ஜுனனை நோக்கி செல்ல சிகண்டியும் சாத்யகியும் இருபுறமும் எழுந்து வந்து அவனை சந்தித்தனர். அவன் இருவரையும் அம்புகளால் எதிர்த்தான். சாத்யகி தேரில் விழுந்தான். சிகண்டி அம்புகளால் அறைபட்டு பின்னால் நகர்ந்தார். அவர் நெஞ்சில் அறைந்த கர்ணனின் வாளி அவரைத் தூக்கி அப்பாலிட்டது. வில்லுடன் திரும்பிய கர்ணன் அர்ஜுனன் மறைந்துவிட்டிருப்பதை கண்டான். விழிகளால் துழாவி இளைய யாதவர் அப்பால் தேரை கொண்டுசெல்வதைக் கண்டான். பாண்டவப் படை எழுந்து காட்சியை மூடியது. “அவனை நீங்கள் காக்க இயலாது, யாதவரே” என அவன் தனக்குள் கூவினான். “செல்க, அர்ஜுனனை தேடிச் செல்க!” என அவன் சக்ரனுக்கு ஆணையிட்டான்.
அவனுடைய தேர் படைமுகப்பினூடாகச் செல்கையில் எதிரில் சகதேவன் தேரில் தோன்றினான். “நில்லுங்கள் அங்கரே, உங்களை நேரில் சந்திக்கவென்று வந்தேன்” என்று நாணொலி எழுப்பியபடி கூவினான். “செல்க சிறுவனே, இது உன் போர் அல்ல” என்று சொல்லி அர்ஜுனனுக்காக விழிகளால் துழாவினான் கர்ணன். “ஆம், நான் சிறுவனே. பாண்டவ ஐவரில் நானும் என் இணைபிறந்தோனும் மட்டுமே உங்களை வெல்லாதுள்ளோம். அந்தப் புகழ் நாடியே வந்தேன்” என்றான் சகதேவன். கர்ணனின் உள்ளே பொங்கிக்கொண்டிருந்த சீற்றத்தை அச்சொல் அவனை நோக்கி பீறிட்டெழச் செய்தது. “என்ன சொன்னாய்? யாரிடம் பேசுகிறாய் என அறிவாயா? உன் தலையை மண்ணில் உருட்டிவிட்டு மீள்வேன்” என்றான் கர்ணன். “உங்களைக் கொல்லும் தருணம் வந்தும் இரு மூத்தவரும் விட்டுவிட்டனர். எனக்கு அவ்வாய்ப்பை அவர்கள் அளித்திருக்கின்றனர்” என்றான் சகதேவன்.
கர்ணன் உறுமியபடி சகதேவனை அம்புகளால் அறைந்தான். அவன் எண்ணியதற்கு மாறாக சகதேவன் தன் அம்புகளால் கர்ணனை நிகராக எதிர்த்து நின்றான். அவன் அம்புகள் அனைத்தையும் விண்ணிலேயே அறைந்து வீழ்த்தினான். கர்ணனின் நெஞ்சக்கவசத்தை அவன் அம்புகள் வந்தறைந்து உடைத்தன. கர்ணன் அதன் பின்னரே தன் முழுஆற்றலையும் திரட்டி சகதேவனை தாக்கினான். அவன் தேர்ப்புரவிகளை கொன்றான். பாகனின் தலையை அறுத்தான். தேர்மகுடத்தையும் தூண்களையும் உடைத்தான். அவன் கவசங்களை சிதைத்தான். தேரிலிருந்து பாய்ந்திறங்கிய சகதேவன் அப்போதும் பின்னடையாமல் கதையுடன் கர்ணனை எதிர்க்கும்பொருட்டு பாய்ந்தான். கர்ணன் தன் கதையுடன் எழுந்து புரவிகள்மேல் பாய்ந்து அவனை அணுகி ஏழுமுறை சுழன்று பதினெட்டாவது அறையில் அவன் கதையை உடைத்தெறிந்தான். சகதேவன் தேர்ச்சகடம் ஒன்றை எடுத்து கர்ணனை அறையவந்தான். தன் கதையால் அதை உடைத்து வீசினான் கர்ணன்.
வெற்றுடலுடன் படைக்கலமில்லாத கைகளுடன் நின்ற சகதேவனிடம் “செல்க, நீ மாத்ரியின் மைந்தன்! அவளுக்கு காட்டில் உன்னை பரிசளித்தவன் எவன் எனத் தெரியுமென்றால் அவனை எண்ணிக்கொள்க! ஒருவேளை அவன் கிராதனோ நிஷாதனோ என்றால் கீழ்பிறப்பினன் ஒருவனிடம் நிகர்நின்று பொருதிக் கொன்றேன் என்னும் பழி எனக்கு வரலாகாது என்று அஞ்சி உனக்கு உயிர்க்கொடை அளிக்கிறேன். ஓடி ஒளிந்துகொள்” என்றான். சகதேவன் நீர்வழியும் கண்களுடன் நோக்கி நின்றான். அவன் முகத்தில் மிக மெல்லிய நீரலைபோல் அர்ஜுனன் சாயல் வந்துசென்றது. “ஓடு கீழ்மகனே, நீ ஓடுவதைக் கொண்டு முடிவெடுக்கிறேன் காட்டில் உன் அன்னையைப் புணர்ந்தவன் எவன் என” என்றான் கர்ணன். சகதேவன் ஒருகணத்தில் குனிந்து தன் காலடியில் கிடந்த அம்பொன்றை எடுத்து தன் கழுத்தில் வைத்தான். கர்ணன் உரக்க நகைத்து “நன்று, நான் சொன்ன உண்மையால் உயிர்விட்டாய் என்று சூதர் பாடுக!” என்றான்.
சகதேவன் கையை தழைத்து தலைதாழ்த்தி விம்மினான். கர்ணன் மாறிய குரலில் “செல்க! செல்க, இளையோனே! சென்று ஓய்வுகொண்டு மீண்டும் களத்திற்கு வருக!” என்றான். திரும்பிக்கொண்டு “என் குருதிகண்டு மகிழும் வாய்ப்பு உனக்கு அமைக!” என்றபின் தேரைத் திருப்பி கொண்டுசெல்ல ஆணையிட்டான். அங்கிருந்து அகன்றபோது சொற்கள் அனைத்தும் ஒழுகி அகல மீண்டும் உடல்தளர்ந்து கைசோர்ந்து தேர்த்தட்டில் அமர்ந்தான். மிக அப்பால் அர்ஜுனனும் கிருபரும் போரில் ஈடுபட்டிருப்பதை கண்டான். வெறுமனே அவர்களின் தேரை நோக்கிக்கொண்டிருந்தான். தேர்முகப்பில் அமர்ந்திருந்தவனின் பீலிவிழியை அங்கிருந்தே காணமுடியும் என்று தோன்றியது.