மிசிறு கடிதங்கள்

ants on thorn

மிசிறு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

மிசிறு பதிவை வாசித்தேன். தாவரங்களுக்கும் எறும்புகள் உள்ளிட்ட  பிற உயிரினங்களுக்குமான சார்பு வாழ்வைக்குறித்து எத்தனைபேருக்கு அறிதலிருக்கின்றதென்று நினைக்கையில் ஆதங்கமாகவே இருக்கும் எனக்கு எப்போதும்.   பிற  உயிர்களுடனிருக்கும் தொடர்பை விடுங்கள் தாவரங்களையே அறிந்திருக்கிறார்களா என்றால் இல்லை.  என் வீட்டிலிருந்து பின் வாசல் மதில் மேல் அடர்ந்து படர்ந்திருக்கும் கோளாம்பி மலரென்னும் அலமண்டாவை பின்வீட்டுப்பெண் செம்பருத்தியென பறித்து தலைக்கு தேய்க்கும் எண்ணையே காய்ச்சிவிட்டாள் ஒருமுறை. செம்பருத்தி தெரியாத ஆட்களெல்லாம் கூட இருக்கிறார்கள். குப்பை மேனி வேண்டுமென்று ஒருவர் 60 கிலோமீட்டர் தூரத்திலிருந்து வந்தார் தெருவோர சாக்கடையெங்கும் வளர்ந்திருக்கும் அதை தெரியவைல்லை அவருக்கு.

பிற உயிரினங்களுடன் எறும்புகளுக்கு இருக்கும்   தொடர்பினைக்குறித்த  பிரிவு, கிரேக்க மொழியில் ‘ எறும்பின் விருப்பம் ‘ எனப்பொருள்படும்.  மிர்மிகோஃபில்லி (Myrmecophily )  எனப்படும். இந்த, இருதரப்பிற்கும் உபயோகமான இந்த  Mutualisitic உறவில் பயறு வகைத்தாவரங்கள், ஆர்க்கிடுகள், உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தாவரங்கள் உள்ளன.

//நீர்ப்பருத்தி நோனி போன்ற சிலசெடிகள் மிசிறுகளை வரவேற்கும் தண்டுச்சாறுகளையும்நறுமணங்களையும் உருவாக்கி தங்களை பிற பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கின்றன என்கிறார்கள்ஆய்வாளர்கள்// ஆம். இத்தாவரங்கள் எறும்புகளுக்கு தங்குமிடம், உணவு . போன்றவற்றை அளிக்கிறது பதிலுக்கு எறும்புகள் தாவரங்களை உண்ண வரும் விலங்குகளிடமிருந்து பாதுகாத்தல், விதைபரவல் (myrmecochory), மகரந்தச்சேர்க்கை தாவரக்கழிவுகளை சுத்தம் செய்தல், சத்துக்களை அளித்தல்,  நோயிலிருந்து காத்தல் என பல வகைகளிலும் உதவுகின்றன

மிர்மிகொஃபைட்ஸ் (myrmecophytes.)  எனப்படும் இவ்வகையான  எறும்புகளுடன் இணைந்து வாழும் தாவரங்கள் , நீங்கள் குறிப்பிட்டிருக்கும்  இலையினைக்கொண்டு உருவாக்கப்படும் மிசிறுகள் மட்டுமல்லாது டொமேசியா (domatia,) எனப்படும் தங்குமிடங்களையும் எறும்புகளுக்காக கொண்டிருக்கும்.   உள்ளே வெற்றிடங்கள்  உள்ள கூரிய முட்கள், தண்டுகளின் உட்புறம், சுருண்ட இலைகளின் ஓரங்கள் ஆகியவற்றில் எறும்புகள் முட்டைகளை இட்டு பாதுகாப்பாக்க தங்கிக்கொள்ளும்.

20  குடும்பங்களைச்சேர்ந்த தாவரங்கள் எறும்புகளுக்கு தேவையான உணவுப்பொருட்களை இலைக்காம்புகளில், மகரந்தத்துகள்களில், இலைநுனிகளில், தண்டுகளில்  சேகரித்து வைத்திருக்கும், இன்னீர் சுரப்பிகளை மலருக்கு வெளியே (Extrafloral nectaries) எறும்புகளுக்கென உருவாக்கி வைத்திருக்கும் 66 தாவரக்குடும்பங்களும் உள்ளன

பல வகையான பழமரங்கள் எறும்புகளை பழங்கள் இருக்கும் காலத்தில் மட்டும் மட்டும் கூட வைத்துக்கொண்டு தன்னை பாதுகாத்துக்கொள்ளும். பிசின் போன்ற திரவத்தை எறும்புகளுக்காக சுரக்கும்  மாமரங்களிலும். வாசனையாக சுவையுடனிருக்கும் மகரந்தத்துகள்களையுடைய மலர்களுடன் கூடிய  கொய்யா மரங்களிலும் எப்போதும் எறும்புகள்,இருப்பதைக்காணலாம்  இன்னும் சில மரஙகளில் உள்ள  எறும்புகள்  தாவரத்தை உண்ண  வரும் விலங்குகளையும் பெரிய பூச்சிகளையும் கடிக்கவும், கடித்த இடத்தில் ஃபார்மிக் அமிலத்தை துப்பி எரிச்சலேற்படுத்தி அவற்றை விரட்டவும் கூட செய்யும்.

எனக்கு நீங்கள் மிசிறு பற்றி இத்தனை விவரமாக எழுதினதில் பெரும் மகிழ்ச்சி.  மிசிறுகள் இல்லையெனினும் என் வீட்டுத்தோட்டத்திலும்   பல தாவரங்களுடன்  எறும்புகள் கூடி வாழ்கின்றன. செண்டு மல்லியில் எப்போதும் தீயெறும்பிருக்கும் கடித்தால் நெருப்பு பட்டதுபோலவே இருக்கும் தருண் யூகேஜி படிக்கையில் அவற்றை எப்படியோ கடி வாங்காமல்  சட்டைபாக்கட்டுக்குள் போட்டுக்கொண்டு பள்ளிக்கு சென்றுவிட்டான். அவன் டீச்சர் இதை புகாரளித்தார்கள். வீட்டுக்கு வந்து காரணம் கேட்டதற்கு  சிலந்தி கடித்து ஸ்பைடர் மேன் ஆனது போல்  பாக்கெட்டுக்கு உள்ளிருக்கும் ஹார்ட்டில் எறும்பு கடித்தால் ant man  ஆகலாமென்று  நினைத்ததாக சொன்னான்.நல்ல வேளையாக அது கடிக்கவில்லை.

செம்பருத்தியிலும் பப்பாளியிலும் மாவுப்பூச்சிகளைக்கொண்டு வந்து வைத்து அவை செடிகளில் பரவி வளரத்துவங்கியதும் அவற்றை வேண்டிய மட்டும் சாப்பிடும் புத்திசாலி எறும்புகளிடமிருந்து  நீங்கள் சொல்லியிருப்பது போல  நாம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது.

பல தாவரவியல் தகவல்களுடனான மிசிறு பதிவிற்கு மிக்க நன்றி

அன்புடன்

லோகமாதேவி

அன்பின் ஜெ,

வணக்கம். மிசிறு பற்றிய அருமையான எழுத்தை வாசித்தேன்.

என்ன சிறுவயதிலிருந்தே இதை நிறைய பார்த்திருக்கிறேன். எங்கள் ஜவ்வாதுமலையில் எட்டி மரங்களில் இக்கூடுகள் அதிகமாக இருக்கும். காடுகளில் இன்னும் நிறைய இருக்கும்.

இதன் பெயர்  மிசிறு  என்று நீங்கள் எழுதி தான் தெரிந்தது. எங்கள் மலையில் பழங்குடியினர் இதனை முசுர்கொட்டை எறும்பு என்று சொல்வார்கள். அங்கு நிறைய வார்த்தைகளை மாத்தி மாத்தி தான் சொல்லுவார்கள்.

சீதை என்பதை சீட்டை  என்று நிறைய பெண்களுக்கு பெயர் வைத்திருப்பார்கள். ஆயா ஆசாளாக மாறி விடுவாள்.(  முதன்முறையாக கீழ்நாட்டார் என்று அவர்கள் அழைக்கும் பிற இன  மக்கள் அதாவது வேறு ஊர்களிலிருந்து மலைக்குச் சென்றவர்கள்,ஆஷாஎன்று ஒரு பிள்ளைக்கு பெயரிட்ட போது, அங்குள்ள மக்கள் ஆசான்னு கூடவா பேரிடுவாங்கன்னு கேலியாய் பேசியதை நான் பார்த்திருக்கிறேன்.)

சீயன், சீட்டனாகி விடுவான்.லக்ஷ்மி அவர்களுக்கு

ரச்சுமி தான்.கோரு என்றால் உட்காரு என்று அர்த்தம்.அந்தி அவர்களுக்கு அந்திரி.

எனவே இது முசிர்.இந்த எறும்புகளின் அடுக்ககங்கள்,ராணி எறும்பு பற்றியெல்லாம் நீங்கள் விவரித்திருந்தது எனக்கு என் சிறு வயதிற்குள் சென்றதைப் போலிருந்தது.நான் எழுதிய சில கதைகளில் ஜவ்வாது மலை பற்றிய செய்திகளில் இந்த முசிர்கொட்டை எறும்புகளை எழுதியிருக்கிறேன்.

மோனிகா மாறன்.

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம். பல முறை உங்களுக்கு கடிதம் எழுத ஆரம்பித்து கைவிட்டிருக்கிறேன். இலக்கியத்தில் கத்துக்குட்டிக்கும் கீழே நான். சமீபத்தில் தான் மீண்டும் ஒரு வேகத்துடன் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் வாசகன் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இன்னமும் படிக்கவில்லை.

ஆனால் இந்த கட்டுரை கொஞ்சம் தைரியம் கொடுக்கிறது, எனக்கு கொஞ்சம் அனுபவம் இருப்பதனால்.

நாங்கள் வசிப்பது சேலம் மாவட்டத்தில் கல்வராயன் மலையில். மா பலா மரங்கள் அதிகம். இங்கு இந்த எறும்பை முசுறு என்கிறார்கள். முசுறு மேலே ஏறிய உடனேயே கடிப்பதில்லை. முதலில் கொஞ்சம் ஒட்டிக்கொள்ளும் பிறகே கடிக்க ஆரம்பிக்கும். பொதுவாக முசுறு இருக்கும் மரத்தில் மகசூல் நன்றாக இருக்கும் – இயற்கை பண்ணைகளில்.

வணக்கத்துடன்

ராம்ஸ்.

ஒரு வேண்டுகோள். உங்கள் கதைகளை podcastல் நான் படித்து வெளியிட விரும்புகிறேன். தங்கள் அனுமதி வேண்டுகிறேன். சில கதைகளை இங்கே பதிவு செய்திருக்கிறேன்

முந்தைய கட்டுரைபால் – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஉரையாடும் காந்தி – ஓர் உரையாடல் – வேலூர்