சஞ்சயன் சொன்னான்: அரசே, எவருடைய கண்களால் நான் பார்க்கிறேன் என்று தெரியவில்லை. நான் எங்கோ இக்கதையை ஓர் அரக்கர் கூட்டத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கிறேன். மறு சொற்றொடரை நாகர்களுக்கு சொல்கிறேன். ஆழ்ந்த கனவென அக்காட்சி திரும்புகையில் அரண்மனையில் காந்தாரப் பேரரசியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இப்போது இதை சொல்லும்போது நான் எங்கோ ஒரு வழிச்சாவடியில் வணிகர் நடுவே விழியிலாத சூதனாக அமர்ந்து இக்கதையை பாடுவதாக உணர்கிறேன்.
படைகளுக்கு மேல் இரும்புக்கவசம் இருளில் விண்மீன் ஒளியில் மின்னும் சுனைநீர்போல அலைகொள்ள பால்ஹிகர் சென்றுகொண்டிருப்பதை துரியோதனன் பார்த்தான். முதலில் அது என்ன அசைவென்று அவனுக்கு தெரியவில்லை. அப்பால் ஒரு செய்தி அறிவிப்பு பந்தம் எழுந்து சுழன்றபோது கோட்டுருவில் அது யானைமேல் செல்லும் பால்ஹிகர் என்று புரிந்துகொண்டு “பிதாமகரா! அவர் களம்காண வேண்டியதில்லை என்று சென்று சொல்” என்று கூவினான். “அவர் இரவில் நோக்கும் விழி கொண்டவரல்ல. ஒளிச்செய்திகளையோ ஒலிச்செய்திகளையோ கேட்டு போரிடவும் அறிந்தவர் அல்ல.”
பால்ஹிகர் முகில்களின் மேல் கால்வைத்து நடப்பவர்போல் தோன்றினார். அங்காரகனின் கவசங்கள் கரியவையாக இருந்தமையால் அது முற்றாகவே இருளுக்குள் மறைந்துவிட்டிருந்தது. பால்ஹிகரை நோக்கியபின் கீழே நோக்கியபோது இருளின் புரளலாக யானை தெரிந்தது. இருளின் ஓர் அலைமேல் பால்ஹிகர் செல்வதுபோல. “அவர் படைமுகம் செல்லக்கூடாது… என் ஆணை” என்றான் துரியோதனன். சுபாகு புரவியில் ஏறிக்கொண்டு பாறைப்பகுதியின் ஆறுபோல முட்டிமோதிச் சுழன்ற கௌரவப் படையினூடாக பிளந்து சென்றான். வழிவிடும்பொருட்டு அவன் கூச்சலிட்டுப் பார்த்தான். ஆனால் எவ்வொலியும் எவர் செவிகளிலும் விழவில்லை என உணர்ந்தபின் வீரர்களை பிடித்துத் தள்ளியும் இடைவெளிகள் வழியாக சிட்டுக்குருவி என வளைந்து சுழன்றும் அவன் முன் சென்றான்.
விண்ணிலிருந்து அரக்கர்களும் அசுரர்களும் வௌவால்கள்போல் இறங்கி தாக்கி அலறல்களையும் கூச்சல்களையும் எஞ்சவிட்டு மீண்டும் எழுந்தகன்றுகொண்டிருந்தனர். நிஷாதர்களும் கிராதர்களும் எய்த அம்புகள் குறி பிழைக்காது வந்து ஷத்ரியர்களை அலறி விழச்செய்தன. நீண்ட கழைகளை ஊன்றி விண்ணில் தாவி எழுந்து எடையுடன் இறங்கிய இடும்பர்கள் கையிலிருந்த நீண்ட சாட்டை நுனியில் கட்டப்பட்ட கூர்முனை கொண்ட இரும்புவட்டை வீசி வீரர்களின் கழுத்துகளை வெட்டி மீண்டும் கழைகளை ஊன்றி எழுந்தகன்றனர். கௌரவப் படைகள் அணிகுலைந்து ஒன்றையொன்று முட்டி நெருக்கி சில இடங்களில் விரிந்தகன்று குழம்பி அலைகொண்டிருந்தன. அவற்றின் நடுவே சுழியில் சிக்கிக்கொண்ட பெருங்கலம்போல் தயங்கியும் சுழன்றும் நிலையழிந்து நின்றிருந்தது அங்காரகன். அதைச் சூழ்ந்து கௌரவப் படை வட்டமிட்டது.
சுழிபிளந்து அங்காரகனை அணுகிய சுபாகு புரவி மேல் எழுந்து நின்று “பிதாமகரே! தாங்கள் பின்னடைய வேண்டுமென்று ஆணை! தாங்கள் போருக்கெழ வேண்டியதில்லை! பின்னடைக!” என்று கூறினான். பால்ஹிகர் தனது கதையைச் சுழற்றி அறைந்தபடி “மேலும்! மேலும்!” என யானையை முன்செலுத்த முயன்றுகொண்டிருந்தார். அங்காரகன் நான்கு அடி முன் சென்று சுழன்று திரும்பி மூன்றடி பின் வந்து மீண்டும் முன்சென்றது. பால்ஹிகரின் கதைச்சுழற்சியில் அவரைச் சூழ்ந்திருந்த கௌரவ வீரர்களே பெரும்பாலும் அறைபட்டு விழுந்தனர். தன் முன் சீறலொலியுடன் கதை உருளை கடந்து செல்ல சுபாகு தலைகுனிந்து அதிலிருந்து தப்பினான். உரத்த குரலில் “பிதாமகரே, தாங்கள் இப்போரை நிகழ்த்த இயலாது. செல்க! பின்திரும்பிச் செல்க!” என்று கூவினான். “பின் திரும்புக! அரசாணை! பின் திரும்புக!”
பின்னர் உணர்ந்தான், அப்போர் தொடங்கிய நாள் முதல் அவரிடம் எவருமே உரையாடியதில்லை என்று. ஒரு சொல்லும் உரைக்கப்படாதவராக, பிறரை நோக்கி ஒரு சொல்லும் உரைக்காதவராக அந்தப் பதினான்கு நாட்களும் அவர் குருக்ஷேத்ரக் களத்தில் இருந்தார். அவர் அறிந்தது புலரியில் ஒலிக்கும் போர்முரசின் அறைகூவலை மட்டுமே. அந்தியில் போர்முடிவுக்குப் பின்னரும்கூட பெரும்பாலான நாட்களில் அவர் கதைசுழற்றி போரில் மூழ்கித்தான் இருந்தார். சூழ்ந்திருந்த படைகள் விலகி பின்னடையத் தொடங்குகையில் அதைக் கண்டு அங்காரகனே முடிவெடுத்து பின்னடையத் தொடங்கும். தன் பாடிவீட்டை அடைந்ததும் அவர் யானையிலிருந்து இறங்கி எடை மிக்க கவசங்கள் குலுங்கி ஒலிக்க தன் குடிலுக்கு முன்னால் சென்று வெறுந்தரையில் கால் நீட்டி அமர்வார். ஒவ்வொரு முறையும் அந்த இடத்தை புதிதெனக் கண்டு துணுக்குறுபவர்போல் அவர் தோன்றுவார்.
யானை அவர் அருகிலேயே நின்றிருக்கும். அதை யானைக்கொட்டிலுக்கு கொண்டுசெல்ல முயன்றபின் அதன் மறுப்பை உணர்ந்து பாகர்கள் கைவிட்டனர். அங்காரகனை பாகர்கள் எவரும் அணுகவோ ஆணையிடவோ இயலவில்லை. அத்திரிகள் இழுக்கும் வண்டிகளில் அதற்கான உணவு கொண்டுவரப்பட்டது. உப்புநீர் நனைத்த வைக்கோலும், காட்டுத்தழையும், கிழங்குகளுடன் வேகவைத்து உருட்டிய புல்லரிசிச்சோற்றுக் கவளங்களும் அதன் முன் விரித்த ஈச்சைப்பாயில் குவிக்கப்பட்டன. அங்காரகன் உடலை அசைத்தபடி சீரான துதிக்கைச் சுழற்சிகளுடன் அவ்வுணவை உண்டது. அருகே பால்ஹிகருக்கும் கூடைகளில் அப்பங்களும், ஊன்துண்டுகள் நிறைந்த கொப்பரைகளும், மதுக்குடங்களும் கொண்டுவந்து வைக்கப்பட்டன. அவர்கள் இருவரும் உண்பதை அப்பால் நின்று கௌரவப் படைவீரர்கள் பார்த்தனர். தொன்மையான வேள்விச்சடங்கு ஒன்றை பார்ப்பதுபோல் சிலர் அறியாது கைகூப்பினர்.
அங்கே பல்லாயிரம் பேர் சூழ்ந்திருந்த போதிலும்கூட அவர்களிருவரும் முற்றிலும் தனிமையில் இருப்பதை பலமுறை அங்கே நின்று சுபாகு பார்த்ததுண்டு. அவர்களிடையேகூட எதுவும் பேசப்படுவதில்லை. யானையிலிருந்து இறங்கியதுமே பால்ஹிகர் யானையையும் அறியாதவரானார். அவர் எப்போதுமே கவசங்களை கழற்றுவதில்லை என்பதை முதல்நாளுக்குப் பின் அப்படையில் அனைவருமே அறிந்திருந்தனர். தலைக்கவசத்தை உணவுக்குப் பின் மீண்டும் அணிந்துகொண்டு வெறுந்தரையில் கைகால்களை விரித்து அவர் படுத்திருக்கையில் அப்பால் நின்று நோக்கும்போது இரும்புக்கலங்கள் நீட்டி அடுக்கப்பட்டதாகவே தோன்றும். இரவில் பந்தங்களின் ஒளி கவசங்களின் வளைவுகளில் நெளிந்துகொண்டிருக்கும். பின்னிரவில் நிலவொளியில் நனைந்து அங்கே ஒரு நீர்ச்சுனை ஊறியிருப்பதுபோல் தோன்றும். அவர் குறட்டை விடுவதில்லை. துயிலில் புரண்டுபடுப்பதுமில்லை. அந்தக் கவசங்களுக்குள் அப்போது ஒரு மானுட உடல் இருப்பதாகவே தோன்றாது.
அங்காரகனும் கவசங்களை கழற்றுவதில்லை. அதன் இரும்புக் கவசங்கள் பிறிதொரு யானை அளவுக்கே எடை கொண்டவை. துதிக்கையின் அடுக்குக்கவசங்களை கழற்றாமல் உணவை அள்ளிச்சுருட்டி உண்ண பிற யானைகளால் இயல்வதில்லை. அங்காரகன் தன் துதிக்கையை சரித்து வளைத்து கவசங்களுடன் உண்ணவும் கற்றுக்கொண்டிருந்தது. அதன் அசைவில் உலோகப் பொருட்கள் நிறைந்த வண்டி மேடுபள்ளங்களில் செல்வதுபோல் கவசத் தகடுகள் உராய்ந்து ஒலியெழுப்பின. அதன் காதுகள் அசைகையில் நுனிகளில் கட்டப்பட்ட மணியோசை வண்டிமாடுகள் செல்வதுபோல் கேட்டது. அங்காரகன் பால்ஹிகரைப் போலவே குரலற்றது. படைமுழுக்க பிற யானைகள் முழக்கமிடும்போதுகூட அங்காரகன் அவ்வொலியுடன் கலந்துகொள்வதில்லை. மலையுச்சிப் பாறைபோல விழியருகில் நெடுந்தொலைவில் இருப்பது. குளிர்ந்தது. அவ்வப்போது முழுமையாகவே வானில் மறைந்துவிடுவது.
முதல் இருநாட்களில் அவ்விருவரும் கௌரவப் படையினருக்கு பெருவிந்தையென இருந்தனர். மிக விரைவிலேயே அவ்விந்தையும் பழகியது. கதையுருளையிலிருந்து தெறித்த குருதி வழிந்து உறைந்து பிசுக்காகி, அரக்காகி, பொருக்காகி படிந்த கவசங்களுடன் மாபெரும் இரும்புப்பாவை என நின்றிருந்த அங்காரகன் சற்றும் அறியாமல் அவ்வழியாகச் செல்லலாயினர் படையினர். அவர்களின் உடலிலிருந்து அச்செய்தியை பெற்றுக்கொண்ட அத்திரிகளும் கழுதைகளும் புரவிகளும்கூட அதை ஒரு இரும்பு மண்டபம் என்றோ கற்பாறை என்றோ எண்ணியவைபோல் நடந்துகொண்டன. பறவைகள் இயல்பாக அதன்மேல் வந்தமர்ந்து எழுந்துசென்றன. எப்போதேனும் பாகர்கள் அருகே வந்து உணவு வைத்துச் செல்கையில் அதன் சிறிய விழிகளை அருகே கண்டு உளம் அதிர்ந்தனர். ஒருவன் அலறியபடி பின்னால் சரிந்து விழுந்து உடல்நடுங்கி எழுந்து அப்பால் சென்று மீண்டும் விழுந்தான். அவன் மீண்டும் உளம்மீளவே இல்லை. அங்காரகனுக்குள் வாழும் தெய்வத்தை அவன் கண்டுவிட்டான் என்றனர்.
பால்ஹிகர் முழுக் கவசத்துடன் காலையில் எழுந்தார். தலைக்கவசத்தையும் இடைக்கவசத்தையும் மட்டும் கழற்றி முகத்தைக் கழுவி காலைக்கடன் முடித்தார். உணவை உண்டு மீண்டும் கையுறைகளை அணிந்தபடி காத்திருந்தார். அங்காரகன் அந்தப் பெருங்கதையுருளையை தன் துதிக்கையில் சுருட்டித் தூக்கியபடி சீரான அசைவுகளுடன் வந்து அவர்முன் நின்றதும் ஏறி அமர்ந்துகொண்டார். அங்காரகன் செவிகளை மட்டும் அசைத்தபடி முரசொலிக்காக காத்திருந்தது. அதன் கவசங்களுக்கிடையே பாறைவெடிப்புக்குள் பொன்வண்டு என விழிகள் ஒளிகொண்டிருந்தன. படைநகர்வு தொடங்கியதுமே எறும்புகளால் இழுத்துச் செல்லப்படும் வண்டுபோல் நிரைக்குள் நுழைந்து படைமுகப்பை நோக்கி சென்றது. போர்முரசு எழுந்ததும் பிளிறலோ தலைகுலுக்குதலோ இல்லாமல் கதையைச் சுழற்றியபடி எதிரிப்படைக்குள் புகுந்து சென்றது. நீரில் மூழ்கும் இரும்புருளைபோல.
“அவர் போரிடவில்லை. இங்கு நிகழ்வது எதையும் அவர் புரிந்துகொள்ளவும் இல்லை. அவர் பிறிதொன்றை செய்து கொண்டிருக்கிறார். அவர் மானுட உயிர் என்பதையே அறிந்திருக்கவில்லை” என்று கௌரவப் படைவீரர்கள் சொன்னார்கள். “தொல்நிலத்தின் கொடுந்தெய்வம் ஒன்றை மானுட உடலில் ஏற்றி கொண்டுவந்திருக்கிறார்கள். லட்சம் தலைகளை உடைத்து குருதிபலி கொண்ட பின்னரே அது மண் நீங்கும்” என்று பாண்டவர் தரப்பில் கூறினார்கள். முதல் சில நாட்களுக்குப் பின்னர் எவ்வகையிலும் பால்ஹிகரை எதிர்கொள்ள இயலாதென்று பாண்டவப் படையினர் உணர்ந்தனர். பாண்டவப் படையில் பீமனும் கடோத்கஜனும் மட்டுமே அவரை சற்றேனும் எதிர்கொண்டு செறுத்தனர். அவர்களும் அவர் பெருங்கதையின் வீச்சை ஒழிந்தும் தவிர்த்தும் களமாடி அவரை தாங்கள் எண்ணிய இடத்தில் நிலைகொள்ளச் செய்வதையே போர்முறையென்று கொண்டிருந்தனர்.
பீமனும் கடோத்கஜனும் பின்னடையும்போது பாண்டவப் படைகளுக்குள் புகுந்த அங்காரகன் கதை வீசி தேர்களையும் யானைகளையும் மானுடத் திரளையும் உடைத்துச் சிதைத்தழித்தபடி ஊடுருவிச்சென்று சுழன்று மீண்டது. அங்காரகனைப் பார்த்ததுமே படைவீரர்கள் சிதறி அகன்று வழிவிட, காற்றுச் சருகுகளை ஊதி விலக்குவதுபோல் வெற்றிடத்தை உருவாக்கியபடி அவர் பாண்டவப் படைகளுக்குள் சுழன்று வந்தார். யானைகளும் புரவிகளும்கூட இயல்பாக அகன்றோடி அவரை தவிர்த்தன. ஆனால் அணிநிறைந்த படை எங்கோ ஓரிடத்தில் சுழித்து அசைவிலாது சிக்கிக்கொள்ள நேர்ந்தது. அப்போது அதன் மேல் பறந்த கதை குருதி உண்டு விண்ணில் சுழன்றது. படைவீரர்கள் அஞ்சிச் சிதறி ஓடினர். வழி மூடிக்கொண்டபோது விழிமூடி உடலை இறுக்கி தலைகொடுத்து விழுந்தனர். சில தருணங்களில் ஆட்கொள்ளப்பட்டவர்கள்போல வீரர்கள் அப்பாலிருந்து படைக்கலங்களை எறிந்துவிட்டு “பிதாமகரே, என்னை கொள்க!” என கூச்சலிட்டபடி வந்து அவர்முன் மண்டியிட்டு தலையை அக்கதைக்கு அளித்து சிதறிவிழுந்தனர்.
தொலைவிலிருந்து போர்புரியும் பால்ஹிகரை பார்க்கையில் அக்கவசங்களுக்குள் ஒரு மானுட உடல் இருப்பதே தெரியவில்லை. அவர் தன் கதைச்சுழற்சியை எவ்வகையிலும் மாற்றிக்கொள்ளவில்லை. விசைகூட்டவோ குறைக்கவோ செய்யவில்லை. வென்று களிப்புறவோ, பின்வாங்கி சீற்றம் அடையவோ, இலக்கு தேடி செல்லவோ, தவறும் இலக்குகளை குறிவைத்து தொடரவோ இல்லை. அந்த விலக்கமே பேரச்சத்தை உருவாக்குவதாக இருந்தது. அவர் படைகளை வழிநடத்தவில்லை. ஆனால் யானை சென்ற வழியே சென்றுமேயும் மான்கூட்டங்கள் என கௌரவப் படை அவரைச் சூழ்ந்து பின்தொடர்ந்தது. அவர் செல்லும் வழியை தங்களுக்கான திறப்பாக பயன்படுத்திக் கொண்டது. அவர் அனைத்து ஆணைகளுக்கும் அப்பாலிருந்தார்.
அவரிடம் எச்சொல்லும் சென்றடையாதென்று உணர்ந்தபின் சுபாகு புரவியை திருப்பி பின்னடைந்தான். எதிரில் வந்துகொண்டிருந்த துர்முகனை நோக்கி “எப்போதும் பிதாமகரின் இருபுறமும் கௌரவர்கள் ஐவர் நிலைகொள்க! அவர் இப்போது தனித்து பாண்டவப் படைக்குள் சென்றுவிடலாகாது. அவரை கிராதர்கள் சூழாது நோக்குக!” என்று ஆணையிட்டான். துர்முகன் தலைவணங்கி கைவீசி பிற உடன்பிறந்தாருக்கு ஆணையிட்டபடி பால்ஹிகரை நோக்கி சென்றான். சுபாகு புரவியில் திரும்பி துரியோதனனை வந்தடைந்தான். கர்ணனும் துரோணரும் அஸ்வத்தாமனும் மூன்று முனைகளில் பாண்டவர்களின் படையெழுச்சியைத் தடுத்து பின்னடையச் செய்துகொண்டிருந்தனர். கிராத படைத்தலைவரும் வெவ்வேறு முனைகளிலிருந்து எதிர்பாராத தருணத்தில் தோன்றி அவர்களை அறைந்து அக்கணமே அலையென பின்வாங்கி மறைந்து மீண்டும் தோன்றி தாக்கினர்.
துரியோதனனை அணுகிய சுபாகு “மூத்தவரே, பிதாமகரை எவ்வகையிலும் நம்மால் கட்டுப்படுத்த இயலாது. நம்மிடமிருந்து ஒரு சொல்லும் அவரை நோக்கி செல்வதில்லை” என்றான். ஒரு கணத்திற்குப்பின் அவன் சொல்வதை புரிந்துகொண்ட துரியோதனன் “ஆம், உண்மை. நானும் அதை முன்னரே பலமுறை உணர்ந்திருக்கிறேன்” என்றான். பின்னர் “ஒன்று செய்க, அவரது யானையுடன் நம்மால் உரையாடமுடியும்! அங்காரகனிடம் கூறுக!” என்றான். “அங்காரகனிடமா?” என்று சுபாகு கேட்டான். “ஆம், அது நம் சொற்களை கேட்கும். பிதாமகர் நாமறியாத நிலத்திலிருந்து இங்கே எழுந்தவர். அங்காரகன் நம்முடன் குழவியாக இருந்து வளர்ந்தது. இங்கு பட்டத்து யானையாக பழகியது. அதனுடன் பேசுக! அதற்கு ஆணையிடுக! உளம் கொண்டால் அது கேட்கக்கூடும்” என்றான்.
“மூத்தவரே, அது மதம் கொண்டதுபோல் தோன்றுகிறது. சூழ மானுடர் இருப்பதையே உணராததுபோல் இருக்கிறது. அவர் முற்றமைந்து அதை ஆள்கிறார். தான் வாழும் விண்ணுலகிலிருந்து அதனுடன் பேசிக்கொண்டிருக்கிறார்” என்றான். “முறையிடுக! அதை நோக்கி ஓயாது பேசிக் கொண்டிரு. ஓரிரு சொற்களையேனும் அது ஏற்கக்கூடும். செல்க!” என்று துரியோதனன் சொன்னான். “இன்று இரவு பிதாமகர் இக்களத்திலிருந்து மீண்டாக வேண்டும். நாம் அவரை முன்னரே களமெழாது செய்திருக்க வேண்டும். பெரும்பிழை செய்துவிட்டோம் என்று என் உள்ளம் பதைக்கிறது. செல்க!” என்றான்.
அக்கணம் விண்ணிலிருந்து அவன் முன் இறங்கிய இடும்பன் ஒருவன் தன் இரு கைகளிலும் இருந்த நீண்ட வாள்களால் அவனை அறைந்தான். வில்லின் கணையால் இரு வாள்முனைகளையும் தடுத்து “பின்னடைக! பின்னடைக!” என்று பாகனுக்குச் சொல்லி தேரை பின்னடையச் செய்தபின் தன் வாளை உருவியபடி அவ்வரக்கனை எதிர்த்துப் போரிட்டான் துரியோதனன். ஒரு வாள் உடைந்து பிறிதொரு வாளை துரியோதனன் மேல் வீசி எறிந்தான் இடும்பன். தலை தணித்து அதை தவிர்த்து தன் இடையிலிருந்த வேலை எடுத்து இடும்பனை நோக்கி எறிந்தான். இடும்பன் வௌவால்போல் ஒலி எழுப்பிச் சிதறி மல்லாந்து விழ பிறிதொரு இடும்பன் வந்திறங்கி கதையோடு அவனை நெருங்கினான். அவனிடம் கதையால் போரிடத் தொடங்கினான் துரியோதனன்.
சுபாகு தன் புரவியை திருப்பிக்கொண்டு விண்ணிலிருந்து இறங்கி பொருதி மீண்டு ஏறிச் சென்றுகொண்டிருந்த இடும்பர்களையும் மண்ணிலிருந்து முளைப்பதெனத் தோன்றிய கிராதர்களையும் ஒழிந்து விழுந்துகிடந்த பிணங்களின் மேல் தாவி நிலைகெட்டு சுழன்று கொண்டிருந்த யானைகளினூடாக வளைந்து பால்ஹிகர் போரிட்டுக்கொண்டிருந்த இடம் நோக்கி சென்றான். சங்கொலி எழக் கேட்டு திரும்பிப்பார்த்தபோது கடோத்கஜனும் கர்ணனும் எதிர்நின்று போரிடுவதைக் கண்டான். அவர்களின் அசைவுகளுக்கேற்ப விளக்கொளிகள் சுழன்று அப்போரை விண்ணில் ஒளியாடலென ஆக்கிக்கொண்டிருந்தன. பல்லாயிரம் நாகங்கள் செந்நா பறக்க படமெடுத்து சீறி, அறைந்து வால்பின்னி நெளிய இருளெல்லாம் நிறைந்து போரிடுவது போலிருந்தன அவை.
சுபாகு புரவியைத் தூண்டி பால்ஹிகரை நோக்கி சென்றான். பால்ஹிகரின் இருமருங்கும் நின்றிருந்த கௌரவப் படையினர் திரைபோல் மூடியிருந்த இருளுக்குள் இலக்கிலாது அம்புகளை தொடர்ந்து செலுத்தி அங்கிருந்து இடும்பர்கள் வந்திறங்காது செய்தனர். “பிதாமகரின் கதை சுழலும் எல்லைக்குள் நமது படைவீரர்கள் எவரும் செல்ல வேண்டியதில்லை… விலகுங்கள்!” என்று துர்முகன் ஆணையிட்டுக்கொண்டிருந்தான். சுபாகு பால்ஹிகரை அணுகி அங்காரகனின் செவியசைவுக்கு நேராக சென்று நின்று “அங்காரகன் அறிக! அங்காரகன் அறிக! பின்னடைக! பின்னடைக!” என்றான். “மூத்தவரே, என்ன செய்கிறீர்கள்?” என்று துர்முகன் கூவினான். “அங்காரகனிடம் சொல்க! பின்னடையும்படி அதனிடம் ஆணையிடுக! இப்போர் அவருடையதல்ல என்று அதனிடம் விளக்குக!” என்று சுபாகு சொன்னான். “யானையிடமா?” என்று துர்மர்ஷணன் கேட்டான். “ஆம், நம்முடன் வளர்ந்தது அது. நம் மொழி அதற்கு தெரியும். சொல்க!” என்றபின் “அங்காரகன் அறிக! பின்னடைக! பின்னடைக! என்று சுபாகு கூறினான்.
அத்தருணத்தில் இரு யானைகளின் மேல் காகங்கள்போல் மொய்த்து ஊர்ந்து வந்த இடும்பர்கள் அதன் விலாக்களிலிருந்து சிறகுகொண்டு எழுந்து காற்றில் பாய்ந்து வந்து அங்காரகனை தாக்கினர். அங்காரகனின் துதிக்கையால் தூக்கி சுழற்றப்பட்ட பெருங்கதை அவர்களை அறைந்து சிதறடிக்க யானைகள் அலறி விழுந்தன. “பின்னடைக! பின்னடைக!” என்று சுபாகு சொல்லிக்கொண்டிருந்தான். யானையின் செவிகள் அவன் குரலை கேட்டதாகத் தோன்றவில்லை. “அம்புகள் ஓயவேண்டியதில்லை. அம்புகளால் வேலியிடுங்கள்!” என்று துர்முகன் கூவிக்கொண்டிருந்தான். அங்காரகன் கதையுடன் பாண்டவப் படையை அழுத்தி முன்னால் சென்றது. இடும்பர்கள் கூச்சலிட்டபடி வானில் எழ பாண்டவப் படையினர் இருளில் முட்டிமோதிச் சிதறினர். சிலர் கீழே விழுந்தனர். எழக்கூடாதென அவர்களுக்கு தெரிந்திருந்தும் எழுந்து தலையறையப்பட்டு உயிர்விட்டனர்.
தொலைவில் பீமனின் தேர் வருவதை சுழலும் விளக்கொளி அறிவித்தது. “பீமசேனர் இங்கு வருகிறார். அவர் பால்ஹிகரை எதிர்கொள்ளக் கூடாது. பின்னடையச் செய்யுங்கள்!” என்று சுபாகு சொன்னான். ஆனால் தன்னெதிரில் வந்த இடும்பர்களை அறைந்து வீழ்த்தியபடி அங்காரகன் மேலும் முன்னடைந்தது. “இறையுருவே, செவி கொள்க! பின்னடைக! இப்போர் உனக்குரியதல்ல! பின்னடைக! பின்னடைக!” என்று சுபாகு கூவிக்கொண்டிருந்தான். ஒருகணம் யானையின் செவிகள் அசைவிழப்பதை அவன் கண்டான். மெய்யாகவே அது நிகழ்கிறதா என அவன் உள்ளம் துணுக்குற்றது. பின்னர் ஆம் என்று அவன் அகம் கொந்தளித்தது. “அங்காரகனே, அறிக! பின்னடைக! இப்போரிலிருந்து பின்னடைக!” என்று அவன் கைகளை வீசியபடி கூவினான்.
யானை தலைதிருப்பி அவனை பார்த்தது. அடுக்கடுக்காக அமைந்த இரும்புக்கவசங்களுக்கிடையே அதன் விழிகள் எங்கிருக்கின்றன என்று தெரியவில்லை. ஆயினும் சுபாகு அதன் பார்வையை உணர்ந்தான். “பின்னடைக, தேவா! பின்னடைக!” என்று இறைஞ்சிக் கூவினான். இரு கால்களையும் ஊன்றி உடலை முன்னும் பின்னும் அசைத்து புல்முனை நீர்த்துளிபோல் அசைந்தது அங்காரகன். பின்னர் அது முன்வலக்காலை பின்னெடுத்து வைத்தது. “பின்னடைகிறது! யானை பின்னடைகிறது!” என்று சுபாகு உவகையுடன் கூறினான். அங்காரகன் மேலும் மேலும் கால்களை எடுத்து வைத்து பின்னடைந்தது. கதாயுதத்தை நிலத்திலிட்டு இழுத்தபடி கௌரவப் படைகளுக்குள் புதைந்தது. சுபாகு “நான் அதை வழிநடத்தி கொண்டுசென்று படைப் பின்னணியில் அமரச்செய்கிறேன். யானை எழவில்லையென்றால் பிதாமகரும் போருக்கெழமாட்டார்” என்றான்.
புரவியில் ஏறி யானைக்குப் பின்னால் சென்றபடி அவன் கூவினான். “பெருகி வரும் எதிரிகளை இங்கு நின்று எதிர்கொள்ளுங்கள். வந்துகொண்டிருப்பவர் பீமசேனர் என நினைவில் கொள்க! அவர் ஒலிகளை விழிகளாக்கும் திறனற்றவர். வழிகாட்டி வரும் இடும்பர்களை அறைந்து வீழ்த்துங்கள். அவர்களின் விளக்கடையாளங்களை நோக்கி அம்புகளை குறிவையுங்கள்.” சுபாகு புரவிமேல் எழுந்து யானையின் காதை நோக்கி “பின்னடைக! அங்காரகனே, பின்னடைக! பின்னடைக!” என்றான். யானை பின்னடைவதன் விசை மேலும் கூடியது. கௌரவப் படைகளின் முகப்பு மீண்டும் ஒன்றாக இணைந்து பால்ஹிகரை முழுக்க மூடிக்கொண்டது. தன் யானை பின்னடைவதைக்கூட உணராதவராக பால்ஹிகர் இருந்தார். யானையின் விழிகளின் மின்னை ஒருகணம் சுபாகு கண்டான். கண்டோமா என மறுகணம் ஐயுற்றான்.
மறுபக்கம் பாண்டவப் படைமுகப்பில் இடும்பர்களால் வழிகாட்டப்பட்டு பீமன் தோன்றினான். இரு இடும்பர்கள் ஓங்கி ஊன்றிய கழைக்கோல் வழியாக எழுந்து கௌரவப் படையின் முகப்பில் பாய்ந்திறங்க அவர்களுக்குப் பின்னால் பீமனின் தேர் விரைந்து வந்தது. நீளம்பொன்றை எடுத்து அவன் அங்காரகன் நெற்றி நோக்கி அறைந்தான். அம்பு அங்காரகனின் தலைக்கவசத்தின் மேல் மணியோசை எழுப்பியபடி அறைந்து உதிர்வதை சுபாகு கேட்டான். “பின்னடைக! இது உங்கள் போரல்ல! அங்காரகனே, பின்னடைக!” என்று அவன் கூவினான். மீண்டும் மீண்டும் பீமனின் அம்புகள் வந்து அங்காரகனை அறைந்தன. அங்காரகன் அவ்வம்புகளை பொருட்படுத்தாமல் பின்னடி வைத்து திரும்பிச் செல்வதற்காக திரும்பிய கணம் அம்பு ஒன்று வந்து அதன் கவச இடுக்குக்குள் நுழைந்தது. உரக்கப் பிளிறியபடி அங்காரகன் திரும்பியது.
“வேண்டாம், அங்காரகனே! வேண்டாம்! நில்லுங்கள், இறையுருவே! கரியே, நில்லுங்கள்!” என்று சுபாகு கூவினான். ஆனால் பிளிறலோசையுடன் மீண்டும் பெருங்கதையைத் தூக்கிச் சுழற்றியபடி பீமனை நோக்கி அங்காரகன் சென்றது. அங்காரகனின் கதையால் அறைபட்டு இடும்பர்கள் சிதறி விலகிய வழியினூடாக அது வெறிகொண்ட பிளிறலுடன் பீமனை நோக்கி சென்றது. போர்க்களத்தில் அதன் குரல் முதன்முறையாக எழுவதை சுபாகு கேட்டான். பீமன் தன் தேரிலிருந்து பாய்ந்திறங்கிய கணமே அங்காரகனின் பெருங்கதை பீமனின் தேரை அறைந்து துண்டுகளாக சிதறடித்தது. சூழ்ந்திருந்த இடும்பர்கள் சிதறி விலக கதை அப்பகுதியெங்கும் விம்மலோசை எழுப்பியபடி சுழன்றெழுந்தது. அது தொட்ட இடங்களெல்லாம் உடைந்து தெறித்தன. யானை ஒன்று குருதி சிதற சிதைந்து மண்ணில் விழுந்து துடிப்பதை சுபாகு கண்டான்.
பீமன் பாய்ந்து புரவியொன்றின் மேலேறி அங்காரகனை நோக்கி வந்தான். அங்காரகனின் கதைச்சுழற்சியை புரவியிலமர்ந்தபடி மிக எளிதாக ஒழிந்து அதை அணுகி கையிலிருந்த நீள்வேலை அதை நோக்கி எறிந்தான். அங்காரகனின் அலறல் கேட்டதுமே மீண்டும் கவச இடைவெளியினூடாக வேல் உள்ளே சென்றுவிட்டதென்பதை சுபாகு உணர்ந்தான். பீமன் புரவியில் பின்னடைந்து தன்னை நோக்கி வந்த இடும்பர்களிடமிருந்து பிறிதொரு நீள்வேலை வாங்கி ஓங்கி வீச அந்த வேலும் அங்காரகனின் அதே கவச இடைவெளியில் பாய்ந்தது. அங்காரகன் அலறியபடி உடலை ஊசலாட்டி தன்னைத்தானே சுழற்றியது. என்ன நிகழ்கிறது என்பதை சுபாகு புரிந்துகொண்டான். பகலில் விழிகளால் இலக்குகள் சிதறடிக்கப்பட்டு அங்காரகனின் கவசத்தை கடந்து அம்புகள் செல்லாதொழிந்தன. இரவில் ஒலிகளையே இலக்காக்கி தாக்குவதனால் முதல் இலக்கு தற்செயலாகப் பட்ட அதே புள்ளிக்கு மீண்டும் மீண்டும் அம்புகளையும் வேலையும் செலுத்த பீமனால் முடிந்தது.
சுழலும் யானையின் உடலில் அந்த இலக்கை எப்படி அறிகிறான்? மீண்டும் ஒரு வேலால் பீமன் அங்காரகனை அதே இலக்கில் அறைந்தான். சுழலும் யானையை கவசங்களின் உரசல் ஒலியாக மட்டுமே பீமன் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவ்வொலியை மிக அருகிலென பார்க்க இயல்கிறது. ஒளியாலான இலக்குகள் தொலைவால் மங்கலடைகின்றன. ஒலியாலான காட்சிகளுக்கு அண்மையும் சேய்மையும் இல்லை. கைகளால் தொட்டு உணர்வதுபோல் இலக்குகளை அறிய முடிகிறது. மீண்டுமொரு வேல் அங்காரகனின் அதே இலக்கை தாக்க சுழன்று அலைபாய்ந்த யானையின் செவிப் பள்ளத்தில் புதைந்திருந்த ஏழு வேல்களை சுபாகு பார்த்தான். “அங்காரகனை காத்துக்கொள்க! சூழ்ந்துகொள்க!” என்று அவன் கௌரவர்களுக்கு ஆணையிட்டான். அவர்கள் தங்கள் விற்களுடன் அங்காரகனைச் சூழ்ந்து வந்து பீமனை தாக்கினர். பீமனைச் சூழ்ந்துவந்த ஷத்ரியர்கள் விற்களால் கௌரவப் படைகளை தாக்கினர்.
பீமன் அங்காரகனுடன் போர்புரிந்துகொண்டே எதிர்பாராத கணத்தில் புரவியிலிருந்து எழுந்து தாவி வந்து கதாயுதத்தால் துர்மர்ஷணனை அறைந்து கொன்றான். திகைத்துப் பின்னடைந்த துர்தர்ஷனையும் ஊர்ணநாபனையும் கொன்றான். சுபாகு பின்னடைந்து “விலகுக! விலகுக!” என்று கூவிக்கொண்டிருக்கையில் பாய்ந்து அங்காரகனின் அந்த செவிப் பள்ளத்தில் மீண்டுமொரு வேலால் அறைந்தான். அங்காரகனின் கையிலிருந்து பெருங்கதை நழுவி தரையில் விழுந்தது. சங்கிலி உருவி வளையங்களாகி அதன்மேல் பொழிந்தது. யானை உடலை முன்னும் பின்னும் ஊசலாட்டி துதிக்கையைச் சுருட்டி தலைகுலுக்கி உரக்க பிளிறியது. காற்றில் பாய்மரம் உலைவதுபோல் ஆடி கவசத்தின் இரும்புப் பலகைகளும் சங்கிலிகளும் உராய்ந்து எழுந்த குவியலோசையுடன் பக்கவாட்டில் விழுந்தது. கவசங்களின் எடையால் அந்த வீழ்வொலி நிலத்தை அதிரச் செய்தது. பீமன் பாய்ந்து அங்காரகனின் மேலேறி அதன் செவிப் பள்ளத்தில் பாய்ந்திருந்த வேலின்மேல் கதையால் ஓங்கி அறைந்து இறக்கினான்.
யானையின் உடலுடன் சேர்ந்து விழுந்து ஒரு கால் யானைக்கு அடியில் சிக்கிக்கொள்ள கையூன்றி எழ முயன்றுகொண்டிருந்த பால்ஹிகரை அணுகி தன் கதையால் அவர் தலையை ஓங்கி அறைந்தான் பீமன். தலைக்கவசம் உடைந்து தெறிக்க பால்ஹிகர் நிமிர்ந்து பீமனை பார்த்தார். மறுமுறை கதையைச் சுழற்றி பால்ஹிகரின் தலையை அறைந்து மண்டை ஓடு உடைந்து அகலச் செய்தான். மீண்டும் இருமுறை அறைந்து தலைக்கூழ் அப்பகுதியெங்கும் சிதறச் செய்தபின் தன் கதையை தலைக்குமேல் தூக்கினான். சூழ்ந்திருந்த இடும்பர்கள் தங்கள் படைக்கலங்களைத் தூக்கி வெற்றிக்குரலெழுப்ப அவ்வோசை பாண்டவப் படைகளுக்குள் பரவிச்சென்றது. சுபாகுவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. புரவியைத் தட்டி செலுத்த அவனால் இயலவில்லை. அவன் உணர்வுகளை புரிந்துகொண்டதைப்போல் புரவி பின்னடைந்து பாய்ந்து விலகி கௌரவப் படைகளுக்குள் புகுந்து ஓடியது. அவனைச் சூழ்ந்து “பிதாமகர் விண்புகுந்தார்! விண்ணேகுக மூதாதை! விண்திகழ்க பெருந்தந்தை!” என வாழ்த்தொலிகள் எழுந்து பரவிக்கொண்டிருந்தன.