‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-63

ele1பார்பாரிகன் சொன்னான்: அலாயுதன் இடும்பர்கள் விண்ணிலிருந்து விழுந்தெழுந்து தாக்குவதை கண்டான். அவனுடைய படைவீரர்கள் ஆணையிடாமலேயே தங்கள் நீண்ட வேல்களை மேல்நோக்கி கூர் நின்றிருக்க பிடித்து கீழே விழும் இடும்பர்களுக்கு நேராகக் காட்டி அவர்களை குத்திப் புரட்டி குருதிக்கலத்திற்குள் உள்தசைகள் உடைந்து சிக்க சுழற்றி பிழுதெடுத்து வெங்குருதியுடன் தூக்கி ஆட்டினர். குருதி தங்கள் உடலில் சிந்த நடனமாடினர். களத்திற்கு வந்த அப்பதினான்கு நாட்களில் அவர்கள் முதல்முறையாக போரில் ஈடுபட்டனர். போரிடுபவனின் தனிப்பட்ட வஞ்சத்தை, அச்சத்தை, களிப்பை மீறி எழும் ஒற்றைப்பேருணர்வொன்றை முதல்முறையாக அறிந்தனர். அனைத்துப் போர்களையும் நிகழ்த்துவது அதுவே என்றும், மொழியிலும் கனவிலும் புகுந்துகொண்டு போரை ஆழத்தில் அழியாது வாழச்செய்வதும் அதுவே என்றும் அவர்கள் அறிந்தனர்.

அவனுடன் வந்த பன்னிரண்டாயிரம் படைவீரர்களில் எண்ணூறுபேர்தான் அப்போது உயிருடன் எஞ்சியிருந்தனர். அவர்களை எட்டு குழுக்களாகப் பிரித்து எட்டு ஷத்ரியப் படையினருக்கு வழிகாட்டுக்குழுக்களாக அனுப்ப சகுனி ஆணையிட்டிருந்தார். ஷத்ரியப் படைகள் நடுவே ஒளியாலான தொடர்புவலை இருந்தது. அசுரரும் அரக்கரும் தங்கள் செவிகளுக்கு மட்டுமே பொருளென்றாகும் குறுமுழவொலிகளையும் சிற்றூதல் ஒலிகளையும் கொண்டிருந்தனர். அலாயுதனின் குடி உதட்டைக் குவித்து மெல்லிய சீழ்க்கை ஒன்றை எழுப்பி ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டது. அமைதியான அடர்காட்டில் வேட்டையாடுகையில்கூட அந்த ஓசை விலங்குகளை எச்சரிக்கை கொள்ளச் செய்வதில்லை. அதை பிறர் கேட்டால் சீவிடின் ஒலி சற்று சுதிகூடி எழுவதாகவே எண்ணுவார்கள். அவர்களின் குடியில் பிறந்து வளர்ந்து பிற குடிகளுடன் உரையாடலே இன்றி வாழ்பவர்களுக்கு மட்டுமே அது மொழியென்றாகியது.

அலாயுதனின் படைவீரர்கள் அனைவருமே வாய் குவித்து ஒலி எழுப்பியபடியேதான் போரிட்டனர். மிக அருகே கேட்கும் ஒலியுடன் தங்கள் ஒலியை அவர்கள் இணைத்துக்கொண்டனர். இணைந்து இணைந்து அவ்வோசை அங்கிருக்கும் அவர்களின் குடியை முழுமையாக ஒன்றாக்கி எழுந்தது. அதற்குள் ஒவ்வொருவரின் தனிக் குரலும் இணைந்தது. ஆனால் அவர்கள் அனைவருக்கும் மேலே எழுந்து தெய்வ ஆணை என அது அவர்களை ஆட்சி செய்தது. அந்தப் பொது ஒலியை உண்மையில் எழுப்புவது யார் என அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் அது மண்மறைந்த மூதாதையர் வாழும் உலகிலிருந்து எழுவதாக நம்பினர். அவர்கள் எவரிடமும் இல்லாத பேரறிவும் நுண்நோக்கும் கொண்டிருந்தது அது. அவர்கள் ஒவ்வொருவரையும் நன்கறிந்துமிருந்தது.

களத்தில் அது எழுவதற்கு சற்று பிந்தும். தலைவனின் ஓசையே முதலில் எழும். பின்னர் அதனுடன் பிறருடைய ஓசைகள் இணைந்துகொள்ளும். ஒவ்வொரு ஓசையும் முந்தைய ஓசையுடன் சற்றே விலக்கம் கொண்டிருக்கும். சேக்கேறுவதற்கு முன்னர் வானில் கலைந்து அலையும் பறவைகள்போல் அவ்வோசைகள் பூசலிடும். பின்னர் ஒரு கணத்தில் அனைத்து ஓசைகளும் ஒத்திசைந்து அந்த முழுமையோசை எழத் தொடங்கும். அது அத்தலைவனாலும் ஆள முடியாததாக, அங்கிருக்கும் எதனாலும் திசைதிருப்பவியலாததாக இருக்கும். அது எழுந்த பின்னர் அவர்கள் அதை தனித்தறிவதில்லை. ஏனென்றால் அப்போது அவர்கள் எவருக்கும் தனியுள்ளம் இருப்பதில்லை. வேட்டையோ போரோ முடிந்த பின் விண்ணில் தூக்கிச் சுழற்றிய சுழல்காற்று ஒன்றிலிருந்து விழுவதுபோல் ஒவ்வொருவராக அதிலிருந்து பிரிந்து மீண்ட பின்னர் நினைவிலிருந்து அதை மீட்டு எடுப்பார்கள். அப்போது நிகழ்ந்ததென்ன என்றோ எவ்வாறு நிகழ்ந்தது என்றோ அவர்களால் அறியமுடியாது. அது நிகழ்ந்தது என்று மட்டுமே அவர்கள் அறிந்திருப்பார்கள்.

குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் வந்த நாளில் அவர்கள் அந்த ஒலியை எழுப்ப முயன்றனர். அவர்கள் அதற்கு முன்பு அடர்காட்டுக்கு வெளியே போரிட்டதில்லை. போர் தொடங்கிய முதற்கணம் எழுந்த பெருமுழக்கம் புயல் வந்து புழுதியை அள்ளிச்செல்வதுபோல தங்கள் மொழியை கொண்டுசெல்வதையே கண்டனர். போரில் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகவே நின்றனர். மூக்குத்திறனை இழந்துவிட்ட வேட்டைநாய்களைப்போல் முட்டிமோதித் தடுமாறினர். பின்னடைய இயலாமல் பின்னிருந்து வந்துகொண்டே இருந்த படைகளால் அவர்கள் களமையத்தின் அம்புப்பெருக்கை நோக்கி கொண்டுசெல்லப்பட்டார்கள். அம்புகள் பாய்ந்து ஒருவர்மேல் ஒருவரென விழுந்து தேர்ச்சகடங்களாலும் யானைக்கால்களாலும் அரைக்கப்பட்டு உடற்குவியலாக ஆனார்கள். அவர்களை பெரிய மூங்கில்கழைகளால் உந்தி களத்திலிருந்து பெயர்த்து உருட்டி ஒற்றைக் குவியலென எடுத்து வண்டிகளில் இட்டு தசைக்குப்பையாக பிலங்களுக்குள் போட்டனர் சுடலைக்காரர்கள்.

ஒவ்வொருநாளும் களத்தில் எஞ்சியவர்கள் எவ்வகையிலேனும் படைப்பின்னணியில் நின்றுவிட்டவர்களே. ஆகவே ஒவ்வொருமுறையும் அவர்கள் போர்முனையில் என்ன நிகழுமென்று அறியாமலேயே களத்திற்கு வந்தனர். தங்கள் திரள் குறைந்து மறைந்துகொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்தனர். அதைப்பற்றிப் பேசுவதற்கு அஞ்சினர். இரவுகளில் இருள் வந்து சூழ்ந்துகொள்ளும்போது மெல்லிய ஓசையாக இறந்தவர்கள் எழுந்து வந்து அவர்களருகே நின்றிருந்தனர். மெல்லிய வெம்மையாக, மூச்சுக்காற்றின் தொடுகையாக அவர்களை உணர்ந்தனர். அவர்களின் விழிகள் இருளுக்குள் மின்மினிகளாக செறிந்திருந்தன. துயில்கொண்டால் கனவில் அவர்கள் உடல்சூடி அருகணைந்து சொல்லாடினர். அப்போது அவர்களின் நிலத்தில் நீலமலைகளுக்கு அடியில் ஓசையிடும் மலையாறுகளின் கரையில் பசுங்காடு சூழ்ந்திருக்க அவர்கள் அமர்ந்திருந்தனர்.

அன்றிரவு அவர்கள் படைமுகப்புக்கு வருவது வரை அச்சமும் தயக்கமும்தான் கொண்டிருந்தார்கள். அலாயுதனின் கூரிய ஓசையை முதலில் கேட்ட படைவீரர்கள் கடுங்குளிர் கொண்ட மலைக்காற்று வந்து அணைத்துக்கொண்டதுபோல மெய்ப்பு கொண்டனர். அவர்களை அறியாமல் அவர்களுக்குள் இருந்து எழுந்த சீழ்க்கையோசையை கேட்டு அச்சமும் கிளர்ச்சியும் அடைந்தனர். பின்னர் தங்கள் ஒலிகளால் பெருக்கொன்றை உருவாக்கி அதில் தாங்களும் ஒழுகினர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனி எண்ணமும் இலக்கும் களிப்பும் இருந்தது. ஆழத்தில் அவர்கள் ஒன்றென்று இணைந்தும் இருந்தனர். இடும்பர்களின் வேல்களால் குத்தப்பட்டோ கதைகளால் அறையப்பட்டோ அவர்கள் உயிர்விடுகையில் அக்கணத்திற்கு முன் அந்தப் பெரும்பெருக்கிலிருந்து அவர்கள் உதிர்ந்திருந்தனர். ஆகவே இறப்பவர்களை அப்பெருக்கு அறியவே இல்லை. நீரள்ளிய பள்ளம் நிறைவதென அவர்களின் இடத்தை அப்பெருக்கு அக்கணமே நிரப்பிக்கொண்டது.

போர் விசைகொண்ட சற்றுநேரத்திலேயே இடும்பர்களை வெல்ல அரக்கர்களால் மட்டுமே இயலும் என்று உணர்ந்துகொண்ட சகுனி நேரடியாக அலாயுதனிடமும் அலம்புஷரிடமும் ஆணையிட்டு அவர்களை மேலும் மேலும் முன்னே செலுத்தினார். கௌரவப் படையின் வலது எல்லையில் கர்ணன் போரிட்டுக்கொண்டிருக்க அவனைச் சூழ்ந்து சென்ற படைகளில் இருந்து மேலெழுந்துசென்ற அலம்புஷர் படைகள் இடும்பர்களை முழுமையாகவே தடுத்து நிறுத்திவிட்டன. இடது எல்லையில் துரோணரால் இடும்பர்களை எதிர்கொள்ள இயலவில்லை. சகுனி “இடது எல்லைக்குச் செல்க! இடும்பர்களை எதிர்கொள்க!” என்று அலாயுதனுக்கு ஆணையிட்டார். அலாயுதன் தன் படைகளுடன் துரியோதனனும் அஸ்வத்தாமனும் போரிட்டுக்கொண்டிருந்த படைமையத்திலிருந்து இடது எல்லை நோக்கி சென்றான்.

இடும்பர்களை விண்ணிலேயே அலாயுதனின் குலத்து அரக்கர்கள் கண்டுகொண்டார்கள். அவர்கள் இருளில் மறைந்த பின்னரும் எஞ்சும் இருட்தடமும் அவர்களே என்று உணர்ந்திருந்தமையே அவர்களின் வெற்றியை அமைத்தது. அத்தடங்களை வேலாலும் வாளாலும் தாக்கினால் அந்த இடும்பன் அலறி அப்பால் விழுவதை அவர்கள் கண்டனர். அவர்கள் அங்கே களத்திற்கு வந்தபின்னர்தான் பிற மக்களை அணுக்கமாக கண்டு அறிந்தனர். ஷத்ரியர்கள் தங்களை ஒரு பொருட்டென எண்ணவில்லை என்பதை முதல்நாளிலேயே அறிந்தனர். ஒவ்வொருவரிடமும் ஒரு ஷத்ரியனாவது ஒருமுறையாவது “என்றேனும் ஒருநாள் உங்களை நாங்கள் போரில் கொல்வோம்” என்று சொல்லாமல் இருந்ததுமில்லை. அவர்கள் அனைவருக்குமே ஷத்ரியர்கள்மேல் ஒவ்வாமை எழுந்து வெறுப்பு என திரண்டிருந்தது. போரில் ஒரு ஷத்ரியன் விழக்கண்டால் அவர்களின் உள்ளம் மகிழ்ந்தது. ஒரு ஷத்ரியனை தங்கள் படைக்கலத்தால் வீழ்த்தினால் உவகைகொண்டாடினர். அன்றைய போர் தொடங்கியதுமே அவர்கள் எலிகளை வேட்டையாடுவதுபோல் ஷத்ரியர்களைக் கொன்று மகிழ்ந்தாடினர். ஆனால் மிக விரைவிலேயே அது அவர்களுக்கு சலிப்பூட்டியது. இடும்பர்களை எதிர்கொண்டபோதே அவர்கள் தங்களுக்குள் நிறைவை அடைந்தனர்.

இடும்பர்கள் தாங்களே என அவர்களின் அகம் அறிந்தது. தங்களுக்குத் தாங்களே போரிடுகையில் மட்டுமே போருக்குரிய தெய்வங்கள் மகிழ்கின்றன என உணர்ந்தனர். விண்ணில் இருள் முகிழ்த்து எழும் இடும்பன் ஒருவனைக் கண்டு தங்கள் நீள்கழியில் பாய்ந்தெழுந்து இருள்நிறைந்த வெளியில் அவனை சந்தித்து படைக்கலம் முட்டிக்கொண்டு போரிட்டு இறங்கி சுழன்று எழுந்து அறைந்து விழுந்து மீள எழுந்து பொருதி வென்று எழுகையில் அவர்களுக்குள் இருந்து மூதாதையர் கொப்பளித்தனர். இடும்பர்களும் அவர்களையே நாடிவந்தனர். மிக விரைவிலேயே அக்களத்தில் போர் அரக்கர்களுக்குள் மட்டுமே நிகழ்வதென ஆகியது.

கடோத்கஜனுடன் கதைமுட்டிக்கொண்டு துள்ளி விலகி கொம்புநீட்டிச் சுற்றிவரும் காட்டெருமைகள்போல் சுழன்று வந்துகொண்டிருந்த அலாயுதன் மறுபக்கம் தன்னை நோக்கியபடி சுழன்றுவருவதும் தானே என்றுணர்ந்தான். அந்தக் காலடிகள், அந்தக் கையசைவு, அந்தக் கூர்நோக்கு அவனுடையதே. அவன் பாய்ந்த அக்கணமே கடோத்கஜனும் பாய இருவரும் இருளில் மிதித்து ஏறி விண்மீன் பெருகிக்கிடந்த கரிய வானில் சந்தித்துக்கொண்டனர். கதை தெறிக்க அறைந்து மூச்சொலியுடன் இறங்கி அக்கணமே மீண்டும் இருளில் ஏறினர். அறைதலும் தடுத்தலும் ஒன்றேயான சுழற்சி. கதைகள் முட்டிக்கொள்கையில் இருளில் பரவிய அதிர்வு யானைகளை விழிசுருங்கச் செய்தது. கடோத்கஜன் ஏழுமுறை பாய்ந்துவந்து அலாயுதனை அறைந்தான். ஏழு அறைகளும் ஏழு அறைகளால் நிறுத்தப்பட விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவி இறங்கிச் சுழன்றான். மேலும் மேலுமென விசைதிரட்டி இருவரும் அறைந்துகொண்டனர். பதினேழு அறைகள் ஒற்றை காலப்புள்ளியின் திகைப்பு மட்டுமே என்றான பின்னர் பதினெட்டாவது புள்ளியில் அவர்கள் காட்டில் ஓர் ஓடைக்கரையில் சந்தித்துக்கொண்டார்கள்.

கடோத்கஜன் அலாயுதனை தோளைப்பற்றி அழைத்துச்சென்றான். அவர்களின் காலடியில் ஓடை ஓசையிலாது பெருகி மிக ஆழத்தில் அருவியென விழுந்தது. அது புகையென மாறிச் சென்றடைந்த பரப்பு பச்சைநிறம் செறிந்து நீலம்கொண்டதாக, முகில்புகை மூடியதாக அலைகளில்லாத நிகர்வெளியாக தொடுவான் வில் வரை நிரம்பியிருந்தது. “இளையோனே, நீ எவருக்காக போரிடுகிறாய்?” என்று கடோத்கஜன் கேட்டான். “என் குடித்தலைவனைக் கொன்றவனுக்கு எதிராக. நம் குருதி மூத்தோனின் பழியை ஈடுசெய்ய” என்று அலாயுதன் சொன்னான். கடோத்கஜன் “நாம் ஏன் இப்படி வஞ்சங்களால் அலைக்கழிக்கப்படுகிறோம்? அன்பின் பொருட்டு நாம் ஏன் போரிடுவதில்லை? இளையோனே, உலகப்பற்றின்பொருட்டு போரிட்டால்கூட அதுவும் நன்றல்லவா? நாம் வஞ்சம் சூட பழி தேடி அலைகிறோமா? அகழ்ந்து அகழ்ந்து சினங்களைத் தேடிச்சேர்த்துக் கொள்கிறோமா?” என்றான்.

அவன் கையை உதறி விலகி “நீங்கள் எதற்காகப் போரிடுகிறீர்கள், மூத்தவரே?” என்றான் அலாயுதன். “நீ வஞ்சம்கொண்டிருப்பவர் என் தந்தை. அவருக்காக பொருதிக் காத்துநின்றிருப்பது என் கடன். அவர்மீது நான் கொண்டுள்ள பேரன்பின்பொருட்டே களம்நிற்கிறேன்” என்று கடோத்கஜன் கூறினான். அலாயுதன் சினத்துடன் “அரக்கருக்கு மானுடர் தந்தையல்ல. இப்புவியாளும் பெற்றிகொண்ட அரக்கர்கள் மானுடரால் வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டவர்கள். அறிக, ஒருநாள் இப்புவிமேல் அரக்கர்களின் அரசு எழும்! அன்று பிரகலாதனும் விபீஷணனும்போல நீங்களும் குலவஞ்சகன் என்றும், நெறிபிழைத்து மூதாதையரின் பழி கொண்டவன் என்றும் அறியப்படுவீர்கள்” என்று சொன்னான். “ராகவராமனை வணங்கி அவன் ஆற்றலை துணைகொண்டதனால் வாழ்ந்தது அரக்கர்குலம். அவன் வாழ்த்துபெற்று பெருகியது வானரர்குடி. அவர்கள் அழிந்தது தங்களுக்குள் பூசலிட்டும் பகைமைகளை புளிக்கப் புளிக்கப் பெருக்கி நஞ்சாக்கி உளம்நிறைத்துக்கொண்டும். தலைமுறைகளாக நிகழ்ந்த குலப்போரில் அழிந்தவர் நாம்” என்றான் கடோத்கஜன்.

“அடிபணிந்து ஆற்றல்பெறும் நிலையில் இல்லை அரக்கர். அவர்கள் இந்தத் தொல்பாறைகளைப்போல என்றுமிருப்பவர்கள். இப்புவி சுழல்காற்றில் சுருண்டு எழுந்து பறக்காமலிருக்க தெய்வங்கள் வைத்த எடை அவர்கள். முகில்கள் பாறைகளை மூடக்கூடும். நூறுமடங்கு பெரிதெனக் காட்டி விழிமலைக்கச் செய்யவும்கூடும். மூத்தவரே, பாறைகள் முகில்களால் கரைக்கப்படுவதில்லை” என்றான் அலாயுதன். “இனி அந்த மூதன்னைக்கதைகள் இங்கு வாழாது என்றறிக! தன்னிழிவை தற்பெருமையால் மறைத்துக்கொண்டு கதைகளில் வாழும் வாழ்க்கையிலிருந்து வெளியேறுக! இனியேனும் அரசியலை அறிந்துகொள்க!” என்று கடோத்கஜன் சொன்னான். “இனி ஒருபோதும் அரக்கர்கள் பிறரில்லாத நிலத்தை ஆளமாட்டார்கள். இனி எந்நிலமும் எவருக்கும் முழுதுரிமையாக இருக்காது. அதை அறிவுளோர் அறிந்துகொண்டுவிட்டனர். அந்த மெய்யை அறிந்தோருக்கும் அறியாதோருக்கும் இடையே நிகழ்வது இப்போர்.”

“எங்கள் மண், எங்கள் குருதி, அது எந்நிலையிலும் அழியாதது, எதையும் கடந்து ஓங்குவது. என் முன்னோரின் சொற்கள் அதை எனக்கு கற்பித்தன. என்றும் என் உள்ளம் அதிலிருந்து விலகாது” என்றான் அலாயுதன். அவன் தோளை கைநீட்டி தொடவந்த கடோத்கஜனை அவன் விலக்கி பின்னகர்ந்தான். கை நீண்டு நிற்க கடோத்கஜன் சொன்னான் “நான் கூறுவதை சற்றேனும் உளம்கொள்க! ஷத்ரியராயினும் அரக்கராயினும் அசுரரும் கிராதருமாயினும் பிறரைக் கலந்து அனைத்துத் திறன்களையும் உள்ளிழுத்துக்கொண்டு வேர்பரவி எழுபவர்களே இனி கிளைவிரித்து உலகாள்வார்கள். எத்துணை ஆற்றல்கொண்டவர் எனினும் தனித்தமைவோர் அழிவையே சென்றடைவார்கள். இதோ தங்கள் தூயகுருதியின்பொருட்டு படைகொண்டெழுந்திருக்கும் இவர்கள் வெறும் பெயரென, நினைவென எஞ்சும் காலம் அணுகிக்கொண்டிருக்கிறது.”

சீற்றத்துடன் அலாயுதன் கைநீட்டியபடி முன்னகர்ந்தான். “நான் உங்கள் நெஞ்சுநோக்கிக் கேட்கிறேன், நீங்கள் எவருக்காக படைகொண்டு வந்திருக்கிறீர்கள்? நீங்கள் வந்திருப்பது இப்புவி முழுதாளும் வேட்கைகொண்ட யாதவர்களின் பொருட்டுதானே? ஷத்ரியர்களை வெல்ல யாதவர்களை துணைப்பதுதான் உங்கள் கடனா?” என்றான். “நீ எதன்பொருட்டு வந்தாலும் போரிடுவது ஷத்ரியர்களுக்காக. உன்னால் அவர்கள் வென்றால் இங்கு காட்டெரிபோல் பரவி மண்ணை கைப்பற்றி முழுதாள்வார்கள். அவர்களின் படைக்கலங்களால் அரக்கர்குலம் முற்றழியும். அரக்கர்களின் தொல்நிலங்கள் உருவழிந்து அவர்களின் நாடுகளென்றாகும். என் தந்தையும் அவரை ஆளும் மெய்யாசிரியனும் வென்றால் அரக்கர்களும் பிறரும் கலந்து ஒன்றென்றாகி இங்கு பொலிவார்கள். யாதவர் நிலமாள முடியும் என்னும் நெறியெழுந்தால் நாளை அரக்கரோ அசுரரோ நாடாள்வதும் அந்நெறியால் இயல்வதாகும். அந்நெறிக்கு எதிராக படைக்கலம் தூக்கியவர்களை காக்க நீ நின்றிருக்கிறாய்.”

“அறிக, அரக்கர் குருதி மானுடர் குருதியுடன் கலக்கத் தொடங்கிவிட்டது! இனி மானுடர்களில் அரக்கர் எழுவார்கள். அரக்கர்களில் மானுடம் திகழும். வெற்றிகொள்வீரன் நீ. எழும் ஒரு புது உலகுக்காக வருக! உன் வீரத்தை நாளை முளைத்தெழும் நம் குடிகள் புகழ்ந்து பாடுவார்கள். அறியாமையால் பிழை இயற்றாதொழிக!” என்றான் கடோத்கஜன். ஒரு கணத்தில் சினம் எரிந்தேற அலாயுதன் ஓங்கி கடோத்கஜனின் முகத்தில் துப்பினான். “அறிவிலி நீ. பெருவஞ்சகன் ஒருவனின் படைக்கலம் என ஆனவன்” என்று கூவினான். “நீயே என் முதல் எதிரி. உனைக் கொன்று உன் உடல்மேல் எழுந்து நின்று மூதாதையரை நோக்கி கூவுவேன், எந்தையரே, நீங்கள் விரும்பும் குருதிப்பலி இது, கொள்க என்று…”

கடோத்கஜன் தன் முகத்தை துடைத்தபடி கசப்பு நிறைந்த சிரிப்புடன் “இது சென்றகாலப் போர். இரணியனுக்கும் பிரகலாதனுக்கும், விபீஷணனுக்கும் கும்பகர்ணனுக்கும், வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையே நிகழ்ந்தது. இன்று அது முடிவடையப்போகிறது” என்றான். “நம்மால் எளிய காலவட்டத்திற்கப்பால் நோக்க இயல்வதில்லை. நம் தந்தையர் சொன்னவற்றையே மீள நாமும் சொல்கிறோம். காலம் கடந்து நோக்கும் விழிகொண்டவன் ஒருவனின் அடிபணிந்து அவன் சொல்லை ஏற்பதொன்றே நாம் இயற்றக்கூடும் நன்று. தந்தையர் சொல் மெய்மை, ஆனால் அதுவே முழு மெய்மை அல்ல. ஏற்பதற்கு நிகராகவே உடைத்தெழுவதும் நிகழும் குடிகளே வென்று இங்கு வாழ்கின்றன. நோக்குக, இதோ இப்பால் சம்பராசுரரின் குடியும் பாணாசுரரின் குடியும் படைகொண்டு நின்றிருக்கிறார்கள்! நிஷாதரும் கிராதரும் படைகொண்டு போரிடுகிறார்கள். எது அவர்களை இணைக்கிறதோ அது மேலும் ஆற்றல்பெற்றெழும். காலம்கடந்த நோக்கை பீலிவிழி எனச் சூடியவனின் அழியாச் சொல்.”

“செல்க… என் முன்னாலிருந்து செல்க… நான் பாய்ந்து உன் குருதிகுடிக்க முற்படுவதற்கு முன் அகல்க!” என்றான் கடோத்கஜன். “உன் தோற்றம் என் உள்ளத்தை உருக்குகிறது. என் உடன்பிறந்தான் நீ எனக் காட்டுகின்றன உன் தோள்கள். உன் விழிகள் எனக்கு என் மைந்தரை காட்டுகின்றன. இக்களத்தில் உன்னைக் கொன்றால் இதன் பொருட்டு ஏழு பிறப்பிலும் நான் துயருறுவேன். புரிந்துகொள்க, இப்போர் நமக்குள் நிகழலாகாது! இது ஷத்ரியர்களின் மாறாமைக்கும் எழுயுகத்தின் மாறும் தன்மைக்குமிடையே நிகழ்வது. அழியாச் சொல்லிலிருந்து அறச் சொல்லொன்று பிறக்கும்பொருட்டு நிகழ்வது. நாம் அதன் அறுவடையை கொய்பவர்கள் மட்டுமென நின்றிருப்போம்” என்று கடோத்கஜன் சொன்னான். “இழிமகனே!” என்று கூவியபடி பாய்ந்த அலாயுதன் கடோத்கஜனின் நெஞ்சில் எட்டி மிதித்தான்.

ஒரு கணத்திற்குள் அவ்வுரையாடல் நிகழ்ந்து முடிய இருவரும் கதைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சுழன்றனர். அவர்களின் போரைக் காண வந்தமைந்தன போர்த்தெய்வங்கள். மத்தகங்களை ஆளும் கஜன், எருதுக்கொம்புகளில் குடியிருக்கும் ரிஷபன், மான்நெற்றிகளில் வாழும் மிருகன், முதலைவாலில் எழும் மகரன், துதிக்கைகளின் ஆற்றலான கரன், கரடிக்கைகளில் குடியிருக்கும் ஜாம்பன், குரங்குக்கால்களின் தெய்வமான மர்க்கடன், மலைப்பாம்புகளை கைகளாகக் கொண்ட பன்னகன். குரங்குப்பிடியை உடைத்தெழுந்தது எருது. முட்டி அதிர்ந்து பின்னடைந்து மீண்டும் பாய்ந்தன மத்தகங்கள். இறுகப்பற்றிய கரடியை வாலால் அறைந்து தூக்கி வீசியது முதலை. மான்கள் அறைந்துகொண்ட ஓசையில் காடு விதிர்த்தது. தழுவிப் போரிட்டன துதிக்கைகள். ஒன்றென்றே ஆகி முறுகி நிலத்திலுருண்டன மலையரவுகள்.

இருவர் கதைகளும் தெறித்து அப்பால் சென்று விழ விலகி நிலத்தில் அறைந்து போர்க்கூச்சல் எழுப்பியபடி எழுந்து நெஞ்சில் அடித்துக் கூவியபடி அலாயுதன் கடோத்கஜனின் மேல் பாய்ந்தான். கடோத்கஜன் அவன் உடலை தன் உடலால் மோதித் தடுத்தான். பெருங்கைகளால் இருவரும் அறைந்துகொண்டனர். கால்களால், நெஞ்சினால் முட்டி ஓசையெழுப்பினர். இரு களிறுகள் கொம்பு கோத்து சுழற்றுவதுபோல் ஒருவரை ஒருவர் தோள்பற்றி இறுக்கி புரட்ட முயன்றனர். முதலைகள்போல் கால்களால் அறைந்தனர். காட்டெருமைகள்போல் தலைகளால் முட்டிக்கொண்டனர். ஒருவர் பற்களை இறுகக் கடித்த ஓசை பிறிதொருவருக்கு கேட்டது. ஒருவரின் எலும்புகள் உரசிக்கொண்ட ஓசையை இன்னொருவர் அறிந்தார். தசைகள் இறுகும் ஒலி அக்களமெங்கும் ஒலித்தது.

பின்னர் இருவரும் தெறித்து விலகி கால்களால் நிலத்தை அறைந்து எருதுகள்போல் சுரைமாந்தி மீண்டும் எழுந்து தாக்கினர். இருவரும் தழுவி நிலத்தில் விழுந்து உருண்டு அவ்வண்ணமே எழுந்தனர். ஓருடலாக இருளுக்குள் களமெங்கும் ததும்பினர். பின்னர் அலாயுதன் கடோத்கஜனை தலைக்குமேல் தூக்கி நிலத்தில் அறைந்தான். உடற்தசைகள் அதிர நிலத்தில் விழுந்த கடோத்கஜன்மேல் அவன் துள்ளி நெஞ்சுமேல் பாய கடோத்கஜன் கால்களைத் தூக்கி அவன் வயிற்றை மிதித்து அப்பாலிட்டு கையறைந்து எழுந்து அவன் மேல் பாய்ந்து இரு தோள்களையும் பற்றித் தூக்கி ஓங்கி முழங்கால்களால் அறைந்து அவன் விலா எலும்பை உடைத்தான். அலாயுதன் இருமி குருதி துப்பி கடோத்கஜனை உந்தி புரண்டெழுந்து அப்பால் சென்றான். கடோத்கஜன் எழுவதற்குள் அலாயுதன் அவன் மேல் பாய்ந்து அருல் கிடந்த கதையை எடுத்து அவன் தலையை ஓங்கி அறைந்தான். கணநேரத்தில் ஒழிந்து புரண்டதால் அவ்வறை நிலத்தில் விழ மண் பொடியெழ அங்கொரு குழி உருவாயிற்று. கடோத்கஜன் வெட்டுண்டு விழுந்துகிடந்த களிறொன்றின் காலை எடுத்து அலாயுதனை அறைந்தான். அதை ஓங்கி வலக்கையால் அறைந்து அப்பால் சரித்த பின் நின்றிருந்த தேர்ச்சகடம் ஒன்றைத் தூக்கி கடோத்கஜனை அறைந்தான் அலாயுதன்.

எழுந்து விண்ணில் நெஞ்சு முட்டிக்கொண்டு இருவரும் மண்ணில் விழுந்தனர். அலாயுதன் தலை கடோத்கஜனின் தலையுடன் முட்டியது. ஒருகணம் கடோத்கஜனின் விழிகளை அலாயுதனின் விழிகள் சந்தித்தன. கடோத்கஜனின் நோக்கில் இருந்த தெளிந்த நிலையுறுதி அலாயுதனின் உள்ளத்தை அசைத்தது. என்ன நிகழ்ந்தது என அறியாமல் அவன் உடலெங்கும் தசைகள் ஒருகணம் தளர்வுற்றன. அந்த கண இடைவெளியில் கடோத்கஜன் அவன் வலக்காலையும் இடக்கையையும் பற்றித்தூக்கி சுழற்றி மண்ணில் அறைந்தான். மலைத்து அசைவிழந்த அவன் உடல்மேல் பாய்ந்து நெஞ்சின்மேல் அமர்ந்து தன் கைகளால் ஓங்கி அவன் தலையைப்பற்றி திருப்பி கழுத்தெலும்பை உடைத்தான். தசைக்குள் எலும்பு உடையும் ஓசை நீருக்குள் எனக் கேட்டது. மிகமிக மந்தணமாகச் சொல்லப்பட்ட ஒரு சொல் என.

அலாயுதனின் உடல் துடித்தது. கட்டைவிரல் விலகி அதிர, பற்கள் கிட்டிக்க, விழிகள் மேலேறி மறைய, கைவிரல்கள் விரிந்து விரிந்து நெளிய கழுத்துத்தசைகள் இழுபட்டு விதிர்க்க அலாயுதன் அடங்கினான். அத்துடிப்பு தன் உடலிலும் குடியேற பற்களை இறுகக்கடித்து இரு கைகளையும் விரல் சுருட்டி மடித்து அமர்ந்திருந்தான் கடோத்கஜன். எலும்புகள் உடலெங்கும் உரசிக்கொள்ளும் ஓசை தலைக்குள் கேட்டது. பின்னர் குருதிக்குமிழிகள் கண்களுக்குள் மெல்ல மிதந்து கீழிறங்கத் தொடங்கின. அவன் எழுந்து திரும்பிப்பார்க்காமல் அகன்றான். அவர்களைச் சூழ்ந்து நின்றிருந்த இரு குடியின் அரக்கர்களும் திகைத்த விழிகளுடன் வெறுமனே நோக்கினர். எவரும் இறந்தவனுக்காக வாழ்த்தொலி எழுப்பவில்லை. எவரும் வெற்றிக்கூச்சலும் முழக்கவில்லை. கைகளிலிருந்து தளர்ந்த படைக்கலங்களை முறுகப்பற்றியபடி அவர்கள் நிலைமீண்டபோது மீண்டும் போருக்கு அழைக்கும் ஓசைகளை கேட்டனர். தளர்ந்த கால்களுடன், தாழ்ந்த தலையுடன் அவர்கள் பிரிந்து அகன்றனர்.

முந்தைய கட்டுரைமதுரை, அபி, இறையியல் கல்லூரி, தலித் இலக்கியம்
அடுத்த கட்டுரைதலித் இலக்கியம்,திருமாவளவன்- கடிதங்கள்