‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62

ele1அரவான் சொன்னான்: தோழர்களே, அரவுகளுக்குரியது விழியும் செவியும் ஒன்றாகும் ஸ்ரவ்யாக்ஷம் எனும் யோகம். காட்சிகளை ஒலியென்று அறியவும் ஒலிகளை காட்சிகளாக விரிக்கவும் அவர்களால் இயலும். நாகர்குலத்து அன்னை உலூபியிலிருந்து இளைய பாண்டவர் அர்ஜுனர் கட்செவி யோகத்தை கற்றுக்கொண்டார். நாகர்களால் அந்த நுண்ணறிதல் அங்கநாட்டு அரசர் கர்ணனுக்கு வழங்கப்பட்டது. கௌரவர்களும் பாண்டவர்களும் போர்புரிந்த அவ்விரவில் விழிகொண்டவர்களாக அங்கு திகழ்ந்தவர்கள் அவர்கள் இருவருமே. துரோணர் ஒலிகளைக்கொண்டு போரிடும் சப்தஸ்புடம் என்னும் கலையை அறிந்தவர். அதை அவரிடமிருந்து அஸ்வத்தாமர் அறிந்திருந்தார். அன்றைய இரவுப்போரில் ஷத்ரியப் படைகளில் அந்நால்வர் மட்டிலுமே நோக்குகொண்டவர்கள்.

அரசகுடியினர் அனைவருமே அந்நால்வருக்கும் பின் அணிநிரந்தனர். அர்ஜுனரின் தேருக்குப் பின்னால் பதினெட்டு ஒளிச்செய்தியாளர்களை நிறுத்தினார் திருஷ்டத்யும்னர். அர்ஜுனரின் கையசைவை, வில்லசைவை, அம்பெழு திசைகளை அருகே நின்று நோக்கி அவற்றை ஒளியசைவுகளென இருட்திரையில் நிகழ்த்துவது அவர்களின் பணி. பாண்டவர்களின் தரப்பிலிருந்த ஷத்ரியப் படையினர் அனைவருக்கும் அவ்வசைவுகளே ஆணையெனச் சென்றன. ஒவ்வொரு ஷத்ரியப் படைப்பிரிவிலும் அந்த ஒளியசைவுகளைக் கண்டு ஆணைகளைப் பெற்று தங்களுக்குரிய ஆணைகளாக மாற்றும் இரண்டாம் நிலை ஒளிச்செய்தியாளர்கள் இருந்தனர். முதல் ஒளி நீலநிறத்திலும் இரண்டாவது ஒளி செந்நிறத்திலும் அமைந்திருந்தது. ஒவ்வொரு படைப்பிரிவிலும் இருளில் விழி துலங்கும் அசுரரோ அரக்கரோ நிஷாதரோ கிராதரோ படைமுகம்கொண்டு நின்றிருந்தனர்.

அவ்வண்ணமே கௌரவப் படைப்பிரிவுகளிலும் அரக்கர்களின் சிறு குழுக்கள் இருந்தன. அங்கநாட்டரசர் கர்ணனுக்குப் பின்னால் நாற்பத்தெட்டு ஒளிச்செய்தியாளர்கள் நின்று அவரது ஒவ்வொரு அசைவையும் ஆணையென்றாக்கி கௌரவப் படைகளுக்கு அளித்தனர். துரோணருக்குப் பின்னால் நால்வரும் அஸ்வத்தாமருக்குப் பின்னால் நால்வரும் ஒளிகளுடன் நின்றனர். கௌரவர்கள் மஞ்சள்நிற முதன்மை ஒளியையும் பச்சைநிற இரண்டாம் ஒளியையும் கொண்டிருந்தனர். தொலைவிலிருந்து பார்க்கையில் மின்மினிகள் சுழன்று பூசலிட்டுக்கொள்வதுபோல் குருக்ஷேத்ரம் தோற்றமளித்தது. போர் தொடங்குவதற்கு முன்னரே ஒளிகள் போரிடத் தொடங்கிவிட்டிருந்தன. ஏனென்றால் அவை அங்கிருந்தோரின் உள்ளத்துடன் நேர்தொடர்பு கொண்டிருந்தன.

இரு தரப்பினரும் இருளுக்குள் கருநாகம் சுருளவிழ்ந்து படமெடுப்பதுபோல அணிவகுத்து சூழ்கைஅமைத்து முகம்கொண்டனர். ஒருவரை ஒருவர் இருளுக்குள் உணர்ந்தபடி காத்து நின்றனர். “இருளுக்குள் யானையை எதிர்கொள்வதுபோல” என்று ஒருவன் சொன்னான். “ஆம், இருளெல்லாம் யானையென்றாகிறது” என்றான் இன்னொருவன். இருளுக்குள் எதிர்ப்படை நோக்குகொள்வதை அவர்களால் உணரமுடிந்தது. “அவர்கள் ஒவ்வொருவரின் நோக்கையும் உணர்கிறேன். பகலில் இந்நோக்குகள் எழுவதில்லையே!” என்று ஒரு வீரன் கேட்டான். “பகலில் நாம் நோக்குகிறோம்” என்று ஒருவன் மறுமொழி சொன்னான். “இருளுக்கு ஒரு கரவொளி இருக்கிறது. கரியவை அனைத்தையும்போல அதுவும் வளைவுகளில் மின்னுகிறது” என்றான் ஒருவன். “எதற்காகக் காத்திருக்கிறோம்!” என ஓர் இளைஞன் எவரிடமென்றிலாது கேட்டான். “இப்போது நிலவு போரை வகுக்கவிருக்கிறது” என்றது ஒரு குரல்.

கருநிலவுக்கு முந்தைய நாள் ஆகையால் விழியால் காணமுடியாத பிறை அன்று எழுந்தது. அதை பொழுதுகணக்கிட்டு கணித்த நிமித்திகர்“பிறைநிலவு!” என அறிவிக்க பாண்டவர்களின் தரப்பிலிருந்து ஒற்றைப்போர்முரசு ஒலித்தது. கடோத்கஜன் தலைமைகொண்டு நடத்திய இடும்பர்களின் படையிலிருந்து நூற்றுக்கணக்கான முழவொலிகள் எழுந்தன. சிம்மவால் குரங்குக் கூட்டத்தின் ஓசைகள்போல அவை வானில் நிறைந்தன. குரங்குத்திரள் கிளைகளினூடாக எழுந்து அணைவதுபோல் ஒலிக்க பாண்டவப் படை இருளில் இருளலை என பெருகி வந்து இருள்வெள்ளமென நின்றிருந்த கௌரவப் படையை அறைய இரவுப்போர் தொடங்கியது. இரு படைகளும் இருளுக்குள் மோதிக்கொண்டபோது அம்புகளின் ஓசை மேலும் செவிகிழிக்கும் அரம்கொண்டு ஒலித்தது. யானைகளின் பிளிறல் மண்ணுக்கடியில் பாறைகள் புரள்வது போலிருந்தது. புரவிகளின் கனைப்பொலி உலோகத்தகடுகள் உரசுவதுபோலிருந்தது. வாள்வீச்சொலியை பற்களின் கூச்சமென, நாணிழுமும் ஒலியை நரம்புகளின் உலுக்கல் எனக் கேட்க முடிந்தது.

குருக்ஷேத்ரம் எத்தனை ஓசை நிறைந்தது என்பதை அப்போதுதான் அதுநாள் வரை அங்கு போர்புரிந்துகொண்டிருந்தவர்களே உணர்ந்தனர். அம்பை அம்பு அறைகையில் காட்டில் கிளைமுறியும் ஒலி. அம்புமுனை கவசங்களை அறைகையில் மணியோசை. அம்புமுனையை அம்புமுனை சந்திக்கையில் உலோகமணி கல்தரையில் உதிரும் கூரிய ஒலி. அம்புகளின் இறகுகள் அதிரும் ஓசை கழுகுச் சிறகொலிபோல், விசிறப்படும் பட்டுத்துணிபோல், உதறிக்கொள்ளும் புரவிவாலின் ஒலிபோல் வெவ்வேறு வகையில் எழுந்தது. தேர்ச்சகடங்கள் மரப்பலகைப் பரப்புகள் மேல் அதிர்ந்தன, இணைப்புகளில் திடுக்கிட்டன, உருண்டோடி தயங்கி முனகித் திரும்பின. அச்சுகளில் ஆணிகள் எண்ணைப்பிசின் பரப்பில் வழுக்கிச் சுழலும் ஓசையைக்கூட கேட்கமுடிந்தது. யானைச்சங்கிலிகளின் குலுங்கலில் எடை தெரிந்தது.

காற்று பல அடுக்குகளென்றாகியது. ஒலிகள் தங்கள் அடர்த்திகளுக்கேற்ப தங்கள் காற்றுவெளியை தெரிவுசெய்துகொண்டன. ஆவியும் எண்ணையும் நீரும் கசடும் ஒற்றைப் பளிங்குக் குடுவைக்குள் அடுக்கப்பட்டு தெரிவதைப்போல. புரவிக்குளம்புத் தாளங்கள், கனைப்புகள், ஆணைகள், செய்திக்கூவல்கள் ஓர் அடுக்கில் பெருகி அலைத்தன. சங்குகள், கொம்புகள், முழவுகள், சிற்றூதல்கள் வேறொரு காற்றில் நிறைந்து ஒன்றுடன் ஒன்று பின்னிப் பரவின. புண்பட்ட அலறல்கள், சாவுக்கூக்குரல்கள், வெறிக்கூச்சல்கள், எக்களிப்புகள், வலியழுகைகள் பிறிதொரு காற்றில் நிறைந்திருந்தன. குருக்ஷேத்ரமெனும் கலம் குலுக்கப்பட்டது, கவிழ்ந்தெழுந்தது, ஒளிகள் ஒன்றுடன் ஒன்று ஊடுருவிக் கலந்தன. தோழரே, வண்ண ஒளிச்சரடுகளைக் கொண்டு முடைந்த பெரும்பாய்போல களம் தோன்றியது.

போர் தொடங்கிய சற்று நேரத்திலேயே இருளுக்குள் முட்டி மோதி போரிட்டுக்கொண்டிருந்த ஒவ்வொருவரும் தங்களை அறியாமலேயே செவியை விழியென மாற்றிக்கொள்ளத் தொடங்கினர். தொலைவில் தெரிந்த ஒளியாணைகளை மட்டுமே கண்டு, உடன் வந்த அரக்கர் குழுவினால் வழிகாட்டப்பட்டு போரிட்டனர். ஓசைகளுக்கும் அவ்வொளிகளுக்கும் இடையே ஒத்திசைவை கண்டுகொண்டதும் அவை ஒன்றாயின. போர் உளம்கூர்தலின் வெளி. உள்ளம் புலன்களை சமைக்கிறது. அங்கு ஒவ்வொன்றும் பிறிதொன்றால் நிரப்பிக்கொண்டு ஒத்திசைவை அடைகின்றன. இரு நாழிகைக்குப் பின் அங்கு போர்க்களத்தில் அத்தனை வீரர்களும் கட்செவி கொண்டவர்கள்போல் மாறினர். ஒளிபெய்யும் நடுப்பகலில் போர்புரியும் அதே இயல்புத்தன்மையுடன் அவர்கள் அம்புகளை எய்தனர், வேல்களை வீசினர். கதைகளையும் வாள்களையும் சுழற்றி ஒருவரோடொருவர் போரிட்டனர். தாங்கள் விழிநோக்கிழந்து செவிகளால் பார்த்துக்கொண்டிருப்பதையே அவர்கள் அறியவில்லை.

ஆனால் அவர்களைவிட மும்மடங்கு ஆற்றல் கொண்டிருந்தனர் நிஷாதர்களும், கிராதர்களும், அரக்கர்களும், அசுரர்களும். அவர்களிலேயேகூட இடும்பர்கள் விண்ணவருக்கு இணையான விசையும் கரவும் கொண்டிருந்தனர். நூலேணிகளில் என இருளில் கால்வைத்து ஏறி வானில் மறைந்தனர். இருள் அலைவுறும் இடியோசையுடன் மீண்டும் தோன்றினர். எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து பேரொலி எழுப்பி நகைத்தனர். முழவுகளை முழக்கியபடி, உடல்களில் அறைந்து வெடிப்பொலி எழுப்பியபடி தலைக்குமேல் பறவைகளைப்போல் வந்து தாக்கினர். மண்ணில் விழுந்து முற்றாக மறைந்து போயினர். ஒவ்வொரு கௌரவ வீரனும் தனக்கு மிக அருகே இடும்பன் ஒருவன் இருப்பதுபோல் உணர்ந்தான். தன்னுடன் நின்ற படைவீரர்கள் தாங்களே தங்கள் சங்கறுத்து விழுவதைப்போல் விழுந்து துடித்து உயிர்விடுவதை அவர்கள் கண்டனர். மின்னி வந்த வாளுக்குப் பின்னால் கைகளோ உடலோ இருக்கவில்லை. சுழன்றறைந்து சென்ற கதை அதற்குள் தெய்வம் குடியேறி பறப்பதுபோல் தோன்றியது.

“எங்குளர்? இருளில் கரைந்துவிட்டார்களா என்ன?” என்று ஒருவன் கூவினான். “ஆம்! இருள் முழுத்து எழுகிறார்கள், இருளென்றாகி மறைகிறார்கள்!” என்றான் இன்னொருவன். “இருள் தசை புழுத்து எழுந்த நெளிவுகள்!” என்று ஒருவன் கூவினான். அவர்களின் வீசுகொக்கிகளில் சிக்கி கௌரவ வீரர்கள் இருண்ட வானில் எழுந்து சென்றனர். வானில் அலறி குருதி மழைத்துளி சிதற மண்ணில் அறைந்து விழுந்தனர். “முகில்களில் ஊர்கிறார்கள்!” என்று எங்கோ ஓர் அலறல் எழுந்தது. “வௌவால்கள்! கூகைகள்!” என எவரோ கூச்சலிட்டார்கள். “விழிகள்! விழிகளை நோக்கியே அம்புகள் எழுகின்றன! விழிகளைக் கொத்தி அணைத்துவிடுகின்றன!” விழிகளில் பாய்ந்த அம்புகளுடன் வீரர்கள் சுழன்று நிலையழிய அவர்களை பொதிந்து வீழ்த்தி மேலும் மேலுமென வந்து தறைத்தன அம்புகள். விழிநடுப்புள்ளியை நாடி வந்து தலைக்கவசத்தை உடைத்து உட்புகுந்தன எடைமிக்க எறிவேல்கள்.

அரக்கரும் அசுரரும் விண்ணிலெழுந்தமைந்து போரிட்டபோது நிஷாதரும் கிராதரும் உடலை மண்ணுடன் மண்ணென தழைத்து ஓசையில்லாது ஊர்ந்து வந்து எழுந்து போரிட்டனர். எண்ணியிராத இடங்களில் மண்ணிலிருந்து ஊற்று பீறிட்டெழுவதுபோல் அவர்கள் தோன்றினர். தரைக்கு அடியில் சென்றுவிட்டவர்கள்போல் அவர்கள் விழிகளில் இருந்து மறைந்துவிட்டனர். “அவர்கள் உரகங்களில் இருந்து பிறந்தவர்கள். நீரில் வாழ்பவை அவர்களின் தெய்வங்கள். ஓசையின்மையே அவர்களின் ஆற்றல்” என்று படைத்தலைவன் கூவினான். “வேல்களை தலைகீழாகப் பிடியுங்கள். விற்களை நிலம் நோக்கியும் தணியுங்கள். தரையில் எந்த அசைவெழுந்தாலும் தாக்குங்கள்.”

துரியோதனன் புரவியில் பாய்ந்து துரோணரை நோக்கிச்சென்று “ஆசிரியரே, இவர்கள் இப்போது தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும். இல்லையேல் இன்றுடன் நமது படை முற்றழியக்கூடும்” என்றான். “அவர்கள் தங்களின் ஆற்றலை காட்டட்டும். அதை புரிந்துகொண்ட பின்னரே அவர்களை நாம் வெல்லமுடியும்” என்றார் துரோணர். “இப்போதுதான் அவர்களின் சூழ்கையும் போர்முறையும் தெரியவருகிறது. இப்படையின் மையம் கடோத்கஜன். நான் அவனை சுற்றிவளைக்க முயன்றுகொண்டிருக்கிறேன்” என்றார். “அடிமரத்தை நாடி அதை முறிக்கவேண்டும். கிளைகளை வெட்டமுயல்வதில் பொருளில்லை…”

துரியோதனன் சீற்றத்துடன் “அவனை சுற்றிவளைக்க இயலாது, ஆசிரியரே. அவன் எங்குமிருக்கிறான். எண்ணுகையில் நமது படையில் பின்பகுதியில்கூட அவனிருக்கிறான் என்று தோன்றுகிறது. அங்கிருந்தும் அலறல்கள் எழுகின்றன…” என்றான். “அவர்கள் சரடுகளினூடாக பறப்பவர்கள். ஆனால் அத்தனை சரடுகளுக்கும் மைய முடிச்சென்று ஒன்று இருக்கும். அவர்கள் இப்படையெங்கும் பரவி போரிடும் வடிவத்திலிருந்தே குறுக்கிச்சென்று அம்மையத்தை அடையமுடியும். வலைச்சரடினூடாக மையத்தை அடைந்து அதை தாக்குவோம்” என்று துரோணர் சொன்னார். “போர் இன்னும் நான்கு நாழிகைக்குள் முடிந்தாகவேண்டும், ஆசிரியரே. நம் படைகள் அழிந்துகொண்டிருக்கின்றன” என்றபின் துரியோதனன் திரும்பிச்சென்றான்.

கிராதர்களும் நிஷாதர்களும் அசுரர்களும் விழிகளைக் கொண்டு உடல்வடிவம் சமைக்கும் அக்ஷரூபம் என்னும் கலையை கற்றவர்கள். வேட்டைவிலங்கின் விழிமின் துளிகளை மட்டுமே இருளில் அவர்கள் பார்ப்பார்கள். அவ்விழிகளின் ஒளியையும், அவை அமைந்திருக்கும் உயரத்தையும், அவற்றுக்கிடையான தொலைவையும் கொண்டு அவற்றின் தலையை உள்ளத்தால் வரைந்தெடுப்பார்கள். அவற்றுக்குப் பின் உடலை முழுமை செய்து கொள்வார்கள். தலைதிருப்புகையில் விழிகள் கொள்ளும் கோண மாறுபாடு, விழிகளின் விரைவு, விழிகள் மேலெழுந்து தாழும் வளைவு என பன்னிரண்டு அசைவுகளைக் கொண்டு எதிரில் வருவது எவ்விலங்கு என்று கணித்து அவற்றின் உடலில் எப்பகுதியிலும் அம்பெய்ய அவர்களால் இயலும்.

அக்ஷரூபக் கலையின்படி களத்தில் எதிரிகளின் விழிகளே அசுரர்களுக்கு அனைத்தையும் காட்டித் தந்தன. பகல்போர்களில் முழுக் களமும், எதிரியின் முழுதுடலும் தெரிகையில் அவர்கள் ஆற்றலற்ற போர்வீரர்களாக இருந்தனர். அவ்வுடலில் இலக்கு தேர்வதற்குள் அவர்களின் விழிகள் மலைத்தன. உடல்களுடன் உடல்கள் பின்னி, காட்சிகள் மேல் காட்சிகள் படிந்து கொந்தளிப்பு கொள்ளும் பெருவெளியில் இலக்கு தெரிவு செய்யத் தெரியாமல் அவர்கள் இழுத்த நாணில் அம்புடன் எப்போதும் தடுமாறினர். “உடல்களை இழுத்துப் பின்னி பாய் முடைந்ததுபோல் உள்ளது இப்போர்க்களம்” என்று இளைய கிராத இளவரசன் கம்றன் சொன்னது அவர்களுக்கிடையே புகழ்பெற்ற வரியாக இருந்தது. உடல்களின் வேர்ப்பின்னல், உடல்களின் முள்வேலி, உடல்களின் இலைத்தழைப்பு என அதை சொல்லிச் சொல்லி பெருக்கிக்கொண்டனர். அவ்வுடல்களை நோக்கி இலக்கின்றி அம்பெய்வதையே எப்போதும் இயற்றி வந்தனர்.

ஆனால் அவர்களை நாடிவந்த ஷத்ரியர்களின் அம்புகள் இலக்கு கொண்டிருந்தன. அவர்கள் அணிந்திருந்த யானைத்தோல் கவசங்களின் இடுக்குகளை, உடலின் நரம்பு முடிச்சுகளை, உயிர்நிலைகளை நாடியே அவை வந்தன. குருதி குடித்து நின்று அதிர்ந்தன. அவர்களை ஷத்ரியர்கள் கலைந்து முட்டிமோதி அதனாலேயே எளிய இலக்குகளென்றாகும் மான்கூட்டங்களும் பறவைத்திரள்களுமென்று எண்ணினர். இரு படையினரும் ஷத்ரியர்களுக்கு முன்னால் இழுத்துவிட வேண்டிய புதர்த் திரைகளாகவோ ஷத்ரிய விசைக்கு எதிரான சகடத் தடைகளாகவோதான் அவர்களை பயன்படுத்தினர். வேல்களாலும் வாள்களாலும் வெட்டிக்குவிக்கப்பட்டு, அம்புகளால் அறைந்து வீழ்த்தப்பட்டு, யானைகளாலும் புரவிகளாலும் மிதிக்கப்பட்டு எவராலும் அறியப்படாதவர்களாக விழுந்து குருக்ஷேத்ரத்தின் பிலங்களுக்குள் மறைவதே அவர்களின் போராக அமைந்திருந்தது. அவர்களைக் கொன்ற ஷத்ரியர்கள்கூட ஒருகணம் ஏறிட்டு தங்கள் இரைகளின் முகத்தை நோக்கவில்லை.

ஆனால் இருளுக்குள் அவர்களுக்கு இலக்குகள் நன்கமைந்தன. “இருள் தேவையற்ற அனைத்தையும் மறைத்துவிட்டது. தேவையானவற்றை மட்டும் தெரிவு செய்துகொள்ள இடமளித்தது. இருளில் நாம் மறைந்துகொள்கிறோம். நம்மை தாக்குபவர்கள் நாம் ஒளியில் தவிப்பதுபோல் இருளில் முட்டித் தவிக்கிறார்கள். நமக்கு இலக்கென்று வெட்டவெளியில் நின்றிருக்கிறார்கள்” என்றார் கிராதர் குலத்தலைவர் சம்புகர். “நம் தெய்வங்கள் அவர்களை ஏற்கெனவே இலக்கு வைத்துவிட்டன. குருதி அளிப்பது மட்டுமே நமது பணி…” அவர்கள் முதல்முறையாக போர்வெறி கொண்டனர். கொல்லுந்தோறும் பெருகும் அவ்வெறியை அவர்களில் பலர் முன்னர் அறிந்திருக்கவில்லை. அவர்களில் பலர் போர்க்களத்தில் நின்று பொருதியதே இல்லை. வேட்டைவிலங்கை கொன்றபின் எழும் துயரம் போர்க்களத்தில் இல்லை என்பதை அவர்கள் கண்டனர். அங்கே உயிர்விடும் விழிகளின் இறுதி ஒளி எழுந்து கொன்றவனின் உள்ளத்தில் கூரின் சுடர் என குடியேறுவதில்லை. அதை அணையச்செய்ய தெய்வங்களை வழிபட்டு எழுப்ப வேண்டியதில்லை.

கிராதர்களும் நிஷாதர்களும் அசுரர்களும் வேட்டைவிலங்குகள் இருளில் தங்களை காணாமலிருக்கும்பொருட்டு விழிகளை கிழே தாழ்த்தி இமைகளை பெரும்பாலும் மூடிக்கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தனர். அவர்களின் அம்புமுனைகள் கூர்தீட்டப்பட்ட பின்னர் கரி கலந்த அரக்கில் மூழ்க்கி எடுக்கப்பட்டு மின்னிலாதிருந்தன. அவர்களின் விற்களும் கவசங்களும்கூட கரிய அரக்கு பூசப்பட்டிருந்தன. கால்களில் அவர்கள் மரப்பட்டைகளைச் சதைத்து உருவாக்கப்பட்ட மென்மையான குறடுகளை அணிந்திருந்தனர். அவர்களின் விற்கள் நாணொலி எழுப்புவதில்லை. எனவே இருளில் முற்றாக மறைந்து தடமின்றி எழுந்து வர அவர்களால் இயன்றது. கொன்று மீள்கையில் தாங்கள் வந்ததையும் கொன்றதையும் அவர்கள் மட்டுமே அறிந்தனர்.

மாறாக ஷத்ரியர்கள் மின்னும் கவசங்கள் அணிந்திருந்தனர். ஒலிக்கும் குறடுகளும் சுடர் சூடிய படைக்கல கூர்களும் கவச வளைவுகளும் கொண்டிருந்தனர். அவர்களின் அஞ்சித் திகைத்த விழிகள் வெறித்து “இங்குளோம்! இவ்வாறுள்ளோம்” என்று காட்டின. கிராதர்களும் நிஷாதர்களும் அசுரரும் அரக்கரும் கள்ளிச்செடிகளையும் காட்டுக்கற்றாழைகளையும் என ஷத்ரியர்களை வெட்டி வீழ்த்தினர். “இத்தனை எளிதாக நான் வேட்டையாடியதே இல்லை. விழிகள் ஒளிக்கு மயங்கிய எலிகளைப்போல் அம்புபட்டுச் சாகிறார்கள்” என்று கிராத குல இளவரசனாகிய பூதன் சொன்னான். “நெருங்கி காய்த்து குலை செறிந்து கிளைதாழ்ந்த மாமரக் கிளையில் கல்லெறிவது போலுள்ளது” என்று நகைத்தான் அசுரர்குடி இளவரசனாகிய காமிதன். சுழற்காற்றில் ஆலமரம் காயுதிர்ப்பதுபோல் ஷத்ரியர்கள் குருக்ஷேத்ரக் களமெங்கும் விழுந்தனர்.

அர்ஜுனனும் கர்ணனும் இருபுறத்திலிருந்தும் வழிகாட்டிய படைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர் அம்பு கோத்துப் போரிட அப்போரின் நிழல்பெருகிய வானசைவுபோல பாண்டவ கௌரவப் படைகள் போரிட்டன. அர்ஜுனனின் ஆவத்தூளியிலிருந்து எழும் அம்பின் ஓசையை கர்ணன் கேட்டான். அதற்கு நிகரான அம்பெடுத்து இருளில் வந்த அதன் ஒலிச்சீற்றத்தை இரண்டென முறித்தான். கர்ணனின் நாண் இழுபடும் ஓசையிலேயே அவ்வம்பின் விரைவை அர்ஜுனன் அறிந்தான். முன்னவர்களின் அம்புகள் ஒன்றையொன்று தாக்கி வீழ்த்த படையினர் எய்த விழியற்ற அம்புப்பெருக்கு அலை எழுந்து அலையை அறைந்து நுரை எழுப்பி சிதறுவதுபோல் படைகளின் தலைக்குமேல் கொந்தளித்தது. அம்புகள் பட்டு அலறிச் சரிந்தவர்களின் உடல்களிலும் குருதிக்குழம்பிலும் பிறர் முட்டித்தடுமாறினார்.

அப்பால் எரிந்த அறிவிப்பு விளக்குகளின் மெல்லிய ஒளியில் அனலென சுடர் கொண்டிருந்தது கர்ணனின் தேர். அவன் நெஞ்சக்கவசம் உருகும் பொன் என நெளிந்தணைவதை, அவன் குண்டலங்கள் இரு விண்மீன் துளிகள் என அசைவதை அர்ஜுனன் ஒருகணம் கண்டான். ஒருவரை ஒருவர் ஓர் அணுவிடையும் குறையாது எதிர்க்கும் அப்போரில் எப்போதுமென இருவரும் பிறராகி நின்று பொருதினர். அம்புகளால் கவ்விக்கொண்டு முடிவிலா சுழலொன்றில் சுற்றிவந்தனர். அந்த அம்புகளில் எழுந்தனர் நீத்தவர்கள், நினைவானவர்கள், நெஞ்சக்கதுப்பில் புதைந்து காத்திருந்தவர்கள். அபிமன்யு அர்ஜுனனின் அம்பில் எழுந்து கர்ணனை நோக்கி சீறிச் சென்றான். அவனை நோக்கி பாய்ந்து வந்தான் ஜயத்ரதன். ஏகலவ்யன் கர்ணனின் அம்பில் முழக்கமிட்டான். அர்ஜுனனில் இருந்து எழுந்து வந்தான் அரவான். பீஷ்மரும் பரசுராமரும் அங்கே போரிட்டனர். பின்னர் காற்றில் எழுந்த குந்தியை ராதை எதிர்கொண்டாள். அவர்களின் வஞ்சம் பிற அனைத்தையும் தன் படைக்கலமாகக் கொண்டு காற்றில் திகழ்ந்தது.

ele1அவ்விரவுப்போர் கடோத்கஜனுக்கு உரியதாக இருந்தது என்று அரவான் சொன்னான். அவனை எதிர்க்க எவராலும் இயலவில்லை. துரோணர் சிலந்திவலையை இருளில் தொட்டுணர்வதுபோல மெல்ல மெல்ல அவனுடைய தாக்குதலின் சுழிமையத்தை உய்த்துணர முயன்றார். தன் செவிவிழியால் அம்புகள் எங்கிருந்து எங்கு நோக்கி செல்கின்றன என்று கணித்தார். இடும்பர்கள் எத்திசையில் தாவி தாக்கி எவ்வண்ணம் நிலைமீள்கிறார்கள் என்று உணர்ந்து மெல்ல மெல்ல அந்த சுழிமையத்தை நோக்கி தன்னைச் சூழ்ந்திருந்த படைவீரர்களை கொண்டுசென்றார். சல்யரும் அஸ்வத்தாமரும் இருபுறத்திலிருந்தும் அவரை துணைத்தனர். தாக்குதலின் கொண்டாட்டத்திலிருந்த இடும்பர்கள் துரோணரின் பொறி கைகளை விரித்துச் சூழ்வதை உணரவில்லை. கௌரவப் படைவீரர்கள் கடோத்கஜனை அவனறியாமலேயே நெருக்கி ஒற்றைப் புள்ளியை நோக்கி கொண்டுசென்றனர்.

வளைகழை முனையில் எழுந்து வண்டெனத் தெறித்து இருளில் மிதந்து சென்று தூண்டில் முனைபோல் இறங்கி காந்தார தேர்ப்படைகளைத் தாக்கி உடைத்துச் சிதறடித்துவிட்டு துள்ளி இருளினூடாக எழுந்த இடத்திற்கே கடோத்கஜன் வந்திறங்கினான். தேர்மகுடங்களின்மேல் விண்ணிலிருந்து பெரும்பாறைகள் உதிர்வதுபோல் இறங்கி அவ்விசையிலேயே கதைகளால் அடித்து உடைத்து சிதர்களாக தெறிக்கச் செய்து, வில்லேந்திய வீரர்களையும் மழுவும் கதையும் பாசமும் ஏந்திய மல்லர்களையும் தலையுடைத்தும் உடல் சிதைத்தும் கொன்று, என்ன நிகழ்கிறது என்று அவர்கள் உணர்ந்து ஒருங்கிணைத்துக் கொள்வதற்குள் மீண்டும் கழை பற்றி ஏறி தன்னை தெறிக்கச்செய்து மையநிலைக்கே மீண்டு, ஒருவரோடொருவர் ஒலியிலா ஒற்றைச்சொல்லில் மீண்டு வந்ததை அறிவித்து, மறுபடியும் நாற்புறமும் தங்களை எய்துகொண்டனர் இடும்பர்.

பொறிகளை சிதறடித்தபடி சுழன்று செல்லும் அனலுருளை போலிருந்தது அவர்களின் வட்டம். அதன் மையத்தில் கடோத்கஜன் வந்திறங்கி நிலைகொண்டதும் எட்டுத் திசையிலிருந்தும் இடும்பர்கள் மீண்டு வந்து அங்கு தங்கள் உடல்களைப் பொழிந்துகொண்டு வளையமாயினர். “எவரும் இழப்பில்லை! செல்க!” என்று கடோத்கஜன் சொன்னதும் அவர்கள் மீண்டும் இருளில் எழுந்தனர். கடோத்கஜன் கழைவளைக்கவிருந்த கணத்தில் அங்கே துரோணர் தன் படைகளுடன் தோன்றினார். போர்க்கூச்சலிட்டபடி அசுரர்களால் நடத்தப்பட்ட கௌரவப் படைகள் அம்மையத்தை முழுமையாக சூழ்ந்துகொண்டன. “இலக்கு நோக்க வேண்டியதில்லை! இடைவெளியில்லாமல் அம்புகளால் அறையுங்கள்! விண்ணை நோக்க வேண்டாம்! விண் அவர்களின் மாயவெளி என்று உணர்க! அம்மையத்தின் மண்நிலையிலேயே அறைக! ஒருமுறையேனும் அம்மையத்தில் காலூன்றாமல் அவர்களால் எழ இயலாது” என்று துரோணர் கூவினார்.

பாஞ்சாலர்களும் விராடர்களும் இந்திரப்பிரஸ்தத்தின் வீரர்களும் பாண்டவப் படையின் முகப்பில் அரைவட்டமெனத் திரண்டு இருமுனைகளும் அகன்று துரோணரின் சூழ்கையை எதிர்த்து அது முழு வளையம் என்று ஆகாமல் தடுத்தனர். காந்தாரர்களும் உத்தரபாஞ்சாலர்களும் சைந்தவர்களும் கேகயர்களும் மகதர்களும் கோசலர்களும் கலிங்கர்களும் அங்கர்களும் வங்கர்களும் அடங்கிய கௌரவப் படை சீற்றத்துடன் அவர்களை அம்புகளால் அறைந்து விரித்து இடும்பர்களை முற்றாக வளைக்க முயன்றது. எழுந்து சென்ற அதே விசையில் மீண்டும் அங்கே வந்தாகவேண்டும் என்ற வடிவ ஒழுங்கு இடும்பர்களுக்கு எதிரியாக அமைந்தது. சுழன்றறைந்து குருதி சூடிய உடம்புடன் இருளிலெழுந்து அவர்கள் சீறிப் பாய்ந்த அம்புகளால் நிறைந்திருந்த அந்தச் சுழிமையத்திற்குள்ளேயே வந்து விழுந்தனர். உடம்பெங்கும் அம்புகள் தைக்க அலறியபடி ஒருவர் மேல் ஒருவர் உதிர்ந்தனர்.

அவர்கள் மேல் வந்திறங்கிய கடோத்கஜனின் உடலில் துரோணரின் பதினெட்டு அம்புகள் வந்து தைத்தன. பேரெடை கொண்ட தன் உடல் மண்ணில் அறைந்து விழுந்ததுமே நிகழ்வதென்ன என்று அவன் தெரிந்துகொண்டான். நாணொலிக்க வில்நின்று வெறியாட்டுகொள்ள விழிகூட அசையாமல் கைமட்டும் சுழல போரிட்டுக்கொண்டிருந்த துரோணரை தொலைவிலேயே அவன் கண்டான். தன் பாசக்கொடியை துரோணரின் தேர் மேல் ஏவி அதனூடாக பறந்தெழுந்து சிலந்தியென அவர் தேர் மேல் இறங்கினான். தன் கதையால் துரோணரின் தேர்ப்பாகனின் தலையறைந்து கொன்றான். இன்னொரு அறையால் தலைகாக்க வளைந்தொழிந்த துரோணரின் தேர்த்தூணை உடைத்தான். மீண்டும் அவனுடைய கதை சுழன்று வருவதற்குள் துரோணர் தேர்த்தட்டிலிருந்து பின்னால் தாவி இறங்கி தன் வில்லுடன் ஓடி அங்கு ஊர்பவன் விழ தயங்கிச் சுழன்றுகொண்டிருந்த புரவியொன்றின்மேல் ஏறிக்கொண்டார். கடோத்கஜன் காற்றில் தாவி எழுந்து விழுந்துகிடந்த தேர்களினூடாக நிலையழிந்து கனைத்துச்சுழன்ற குதிரைகளின் மீதாக பாய்ந்து சென்று துரோணரை தாக்கினான்.

கடோத்கஜனின் கதையின் வீச்சை தவிர்க்க அம்புகளால் தொடர்ந்து அறைந்தபடி துரோணர் கௌரவப் படைகளுக்குள் பின்வாங்கிச் சென்றார். கடோத்கஜனின் கதை அவன் கையிலிருந்து நெடுந்தொலைவுக்கு எழுந்து வந்து அறைந்து மீண்டது. நின்ற இடத்திலேயே கரைந்து எதிர்ப்புறத்தில் அவன் தோன்றினான். அவன் அறைகள் ஒவ்வொன்றும் சூழ்ந்திருந்தோர் காதுமடல்களை குளிரச்செய்யும் காற்றுவிசை கொண்டிருந்தன. துரோணர் புரவியிலேயே துள்ளி அகன்று அவன் கதை விசையைத் தவிர்க்க அந்த அறைகள் கௌரவர்களின் தேர்கள் மீதும் யானைகள் மீதும் புரவிகள் மீதும் பட்டு குருதி சிதறச்செய்தன. துரோணர் வெம்மைகொண்ட குருதிமழையில் நனைந்தார். இரவுக்காற்றில் குருதி குளிர நடுக்கு கொண்டார். அரக்கனின் விழிமின்களை அருகிலெனக் கண்டார். அம்பை எடுப்பதற்குள் அவை இரு மின்மினிகளென்றாகி அகல்வதை உணர்ந்தார்.

துரோணரின் புரவியின் மேல் கடோத்கஜனின் அடி விழ அது அலறவும் வாயிலாது தெறித்து அப்பால் விழுந்தது. அதற்கு அடியில் அவர் உடல் சிக்கிக்கொண்டது. கையூன்றி அவர் எழுவதற்குள் விண்ணிலிருந்து பாய்ந்து அவர் மேல் இறங்கினான் கடோத்கஜன். துரோணர் வானிலென அவன் முகத்தை கண்டார். அவன் கதாயுதத்தைச் சுழற்றி அவர் தலையை அறைந்துடைக்க முயன்றபோது இருளுக்குள் பாய்ந்து வந்த அலாயுதன் கடோத்கஜனை தன் கதாயுதத்தால் அறைந்து அப்பால் வீழ்த்தினான். இரு அரக்கர்களும் பேரொலியுடன் தங்கள் கதைகளை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பொறி தெறிக்க மோதிச் சுழன்றெழுந்து மீண்டும் அறைந்தனர். உறுமல்களும், பெருமூச்சொலிகளும், பற்களைக் கடிக்கும் ஓசையும், தொடையிலறைந்து வஞ்சினம் காட்டும் ஓசையும் எழ அரக்கர்கள் இருவரும் மண்ணிலும் விண்ணிலுமென பொருதினர். இருளை மிதித்துத் தாவி விண்ணிலெழுந்து அங்கேயே அறைந்துகொண்டனர். மலையிலிருந்து பாறைகள் உதிர்வதுபோல் நிலத்தில் விழுந்து சுழன்றெழுந்து மீண்டும் அறைந்தனர். நிகர்வீரர் போர்புரிவதைக் காண எழும் தெய்வங்கள் ஒவ்வொருவராக விண்ணில் தோன்றலாயினர்.

முந்தைய கட்டுரைகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு – இன்று
அடுத்த கட்டுரைபால் – ஒரு கடிதம்