சைவம் – கடிதம்

thulanchan alagila-600x667

அலகிலா ஆடல் – சைவத்தின் கதை

சைவத்தின் கதை : துலாஞ்சனன் பேட்டி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

மிகுந்த நலம். நலம் விழைகிறேன்.

உங்கள் பதில் கண்டு மகிழ்ந்தேன். சைவத்தின் இன்றைய நிலை தொடர்பான தங்கள் கூற்றில் முழு உடன்பாடு உண்டு. ‘லகுலீச பாசுபதம்’ நூல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். தங்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அந்த இரு நூல்களையும்  விரைவில் வாசிக்கவேண்டும்.இன்றைய சூழலில் சைவம்  பற்றிப் பேசுபவர்களில் கருத்தில் கொள்ளப்படவேண்டியவர் என்று இலங்கை ஜெயராஜ் அவர்களை விதந்து கூறியிருக்கிறீர்கள்.  கம்பவாரிதி அவர்கள் இலங்கையின் காத்திரமான ஆளுமையே. எனினும்,  சில இடங்களில் அவர் மீது  எனக்கு மாற்றுக்கருத்து உண்டு.

இலங்கை மற்றும் தமிழகத்தின் சைவச் சூழலுக்கு நான் இன்னும் முற்றாக அறிமுகமாகவில்லை. என் சிற்றறிவுக்கு எட்டியவரை, இன்றுள்ள முதன்மையான சைவ அறிஞர்களில் ஒருவர் என்று  மரு.இராமநாதன் லம்போதரன் அவர்களைக் குறிப்பிடுவேன். அவர் தொழின்முறை மருத்துவர்.  கனடாவில் சைவ சித்தாந்த பீடத்தை நிறுவி அங்கு சமயம் வளர்ப்பவர். அவரிடம் கற்கும் பெரும்பாலானவர்கள் இளவயதினர். அடிக்கடி இலங்கைக்கும் வருகை தந்து சமயத்தெளிவூட்டும் ஒன்றுகூடல்களை நடாத்தி வருகிறார். அவரது  ஆசியுரை தான் அலகிலா ஆடலையும் அலங்கரிக்கின்றது. அவரது அருமையான பல உரைகளை Knowing our roots எனும்  யூடியூப் பக்கத்தில் காணலாம்.

இன்னொரு விடயம். மட்டக்களப்பில் கடந்த டிசம்பர் 29ஆம் திகதி, அலகிலா ஆடல்: சைவத்தின் கதை நூலின் அறிமுக விழா இடம்பெற்றிருந்தது. அதன் போது பேராசிரியர்.சி.மௌனகுரு அவர்கள் ஆற்றிய நயவுரை  தங்கள் பார்வைக்காக.

அலகிலாத எழுதுபணியின் நடுவே ‘அலகிலா ஆடலு’க்கு நீங்கள் ஒதுக்கும் நேரத்துக்காக நான் கடமைப்பட்டவன்.நூல் பற்றிய தங்கள் முழுமையான விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

வணக்கங்களும் அன்பும்.

துலாஞ்சனன்

thula
அன்புள்ள துலாஞ்சனன்,

என் கட்டுரை பற்றி ஈழத்தவர் எழுதிய நாலைந்து கடிதங்கள் வந்தன, எல்லாவற்றிலும் உள்ள ஒரு பிழைப்புரிதல் சற்று உங்கள் கடிதத்திலும் இருந்ததைக் கண்டேன். ஆகவே ஒரு சிறு விளக்கம்.

பொதுவாக இவ்வகை விஷயங்களை இணையச்சூழலில் எழுதுவதில்-விவாதிப்பதில் ஒரு சிக்கல் உண்டு. இதில் ஆர்வமும் முன்னறிவும் கொண்ட ஒரு வட்டத்திற்குள்ளேயே இவை பேசப்பட முடியும், அவர்களுக்கே புரியும். ஆனால் இணையம் ஆதலால் தொடர்பற்றவர்கள், பெரும்பாலும் வம்புகளை விரும்பி அதில் திளைப்பவர்களும் வந்து வாசிப்பார்கள். அவர்கள் தங்களுக்குப் புரிந்த ஒன்றை அரைகுறையாகச் சொல்லத் தொடங்க அது முதல்குரல் என்பதனால் அறிந்தவர்களுக்கும் அந்தப்பார்வையே உருவாகிவிடும். இச்சூழலில் மையப்பொருள் திசைதிரும்பாமல் சொல்லாடுவது மிகப்பெரிய சிக்கல்.

என் கட்டுரையில் சைவப்பேச்சாளர்களைப் பற்றியே சொல்கிறேன். இதை நான் முன்னரும் எழுதியிருக்கிறேன். தமிழ்ச்சைவம் பெரும்பேச்சாளர்களை உருவாக்கி, அவர்களினூடாக வளர்ந்தது. தமிழ் மேடைப்பேச்சுக்கலையே பெரும்பாலும் சைவப்பேச்சாளர்களின் கொடை – அவர்களிடமிருந்தே அந்த மொழியும் முறையும் திராவிட இயக்கப் பேச்சாளர்களிடம் சென்றது. ஆனால் இன்று சைவப்பேச்சாளர்களில் சைவத்தை ஓரளவேனும் உணர்ந்துபேசுபவர்கள் இல்லை. சைவத்தின் பெயரால் இன- மொழிக் காழ்ப்புகளை முன்வைப்பவர்களே உள்ளனர். விதிவிலக்காக சைவம் பற்றிப் பேசும் பேச்சாளர் இலங்கை ஜெயராஜ், நான் சொன்னது இதுவே.

நான் குறிப்பிட்டது புகழ்பெற்ற சைவப்பேச்சாளர்களைப் பற்றி மட்டும். தமிழக மேடைகளில் நன்கு அறிமுகமான சைவப்பேச்சாளர்களைப் பற்றி மட்டுமே. சைவம் ‘தெரிந்தவர்களை’ அல்ல. சைவத்தை ‘கற்பிப்பவர்களை’யும் அல்ல. சைவ அறிஞர்கள் என்றுமிருப்பார்கள் என்றும், அந்த மெய்மரபு எப்போதும் அறுபடாது என்றும்தான் நான் நம்புகிறேன். இன்றைய தமிழகச் சூழலில் அத்தகைய அறிஞர்களை தேடிச்செல்வதும் கற்பதுமெல்லாம் பெரும்பாலும் இயல்வதாக இல்லை, அதற்குவிலக்கு சிலரே என்று சொல்லியிருந்தேன்.

சைவ அறிவியக்கத்தில் அலகிலா ஆடல் போன்ற நூல்களின் பங்களிப்பு பெரிது. ஆனால் பெருந்திரளான மக்களிடம் சைவம் பற்றிப் பேசும் பெரும்பேச்சாளர்களாலேயே அது ஓர் மக்களியக்கமாக நிலைபெற முடியும். இன்று சைவ மெய்யியலை பேசும் மேடைப்பேச்சாளர்களே மிகுதியாகத்தேவை – காழ்ப்புக்கும் வெறுப்புக்கும் மாற்றாக சைவத்தின் மெய்தேடலைப் பேசுபவர்கள். அதன் விடுதலையை அளிப்பவர்கள்.

நூலைப்பற்றிய என் கருத்தை விரிவாக எழுதுகிறேன்  அர்ப்பணிப்புள்ள மாத்வ வைணவரும் ஆய்வாளருமான என் நண்பர் பி.அனீஷ்குமாரன் நாயர் அவர்களுக்கும் இந்நூலை அளிக்கவேண்டும் என நினைக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு உரையாடல் அரங்கு, சென்னை
அடுத்த கட்டுரைபோலிச்சீற்றங்கள்