நீர்க்கூடல்நகர் – 6
நீர்க்கூடல்நகர் – 5
நீர்க்கூடல்நகர் – 4
நீர்க்கூடல்நகர் – 3
நீர்க்கூடல்நகர் – 2
நீர்க்கூடல்நகர் – 1
மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருப்பீர்கள் என எண்ணுகிறேன். நீங்கள் கும்பமேளாவில் இருந்த அதே நேரத்தில் நானும் அலஹாபாத் கும்பமேளாவில்தான் இருந்தேன். தனியாகச் சென்று காசியில் தங்கி தை அம்மாவாசையன்று கும்பமேளாவிற்குச் சென்று திரும்பி அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்தே காசியிலிருந்து கிளம்பினேன்.
அலகாபாத் கும்பமேளா தொடர்பான உங்கள் கட்டுரை நான் கவனிக்கத்தவறிய பலவற்றை மனதினுள் தொகுக்க உதவியது. இவ்வளவு பெரிய ஜனத்திரள் குவியும் இடத்தில் கங்கை நதிக்கரையில் குப்பைகளே இல்லாதது மிகவும் ஆச்சரியமளித்தது. நான் சென்ற மெளனி அம்மாவாசையன்று குவிந்த கூட்டத்திற்கு இடையிலும் குப்பைகளில்லாமல் இருந்தது. ஆச்சரியம் என்னவெனில் குப்பைத் தொட்டிகள் கூட நிரம்பி வழியும் முன்னர் காலியாக்கப்பட்டன. மக்கள் திரளில் பெரும்பாலும் மிகமிக எளிய மனிதர்கள் பல்லாண்டுகாலத் தொடர்ச்சியின் கண்ணியாக நீராட வந்திருந்தனர். 40 வயதிற்கும் கீழானவர்களை அதிகம் காண இயலவில்லை. எனக்குத் தெரிந்த ஆங்கிலம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை. நீங்கள் குறிப்பிட்டதுபோல மிக மிக எளிய ஆங்கிலம் கூட காவலர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்த ஹிந்தியில் “முஜ்ஜே ஹிந்தி நஹி மாலும்” என்பதைத் தவிர வேறு சொல் எனக்குத் தெரியாது.
எப்படியோ கும்பமேளா சென்று புனித நீராடி திரும்பினேன். 130 கிலோ மீட்டர் பயணம் செய்ய ரயிலில் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆனது. படுக்கை வசதி முன்பதிவு டிக்கெட் இருந்தும் அப்பெட்டியில் என்னால் நுழைய முடியவில்லை. அத்தனைப் பெட்டிகளையும் ஆக்கிரமித்திருந்த மக்கள் கூட்டம் பெட்டிகளை உட்பக்கம் தாழிட்டு அமர்ந்திருந்தனர். எஞ்சினின் அடுத்த லக்கேஜ் வேனில் மக்களோடும் பொருட்களோடும் ஒட்டிக் கொண்டே பயணித்தேன். கடும் குளிரில் என் வாழ்நாளில் மறக்க இயலாப் பயணம் அது. தொலைக்காட்சிகள் கும்பமேளா தொடர்பாக எதிர்மறைச் செய்திகளை வெளியிடுவதாகச் சொன்னீர்கள். எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லாததால் அம்மாதிரியான சிக்கல்கள் என் மனதை அடைவதில்லை. தமிழகத்தின் தாமிரபரணி புஷ்கரணிக்கு எழுந்த எதிர்ப்பினைப்போலவே கும்பமேளாவினையும் எதிர்க்கின்றனர். ஜாக்கி ஜட்டி போட்டுக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உலகமயமாகலுக்கும் எதிராகப் பேசும் அரைகுறை அறிவு ஜீவிகளை மக்கள்தான் இனம்கண்டு ஒதுக்க வேண்டும். மொழிதெரியாத என்னை எவருமே ஏமாற்ற முயலவில்லை. இனிவரும் ஒவ்வொரு கும்பமேளாவிற்கும் செல்வதாகவே உத்தேசித்துள்ளேன். பல தலைமுறைகளாக தொடரும் ஒரு சடங்கில் நான் பங்கு பெற்றதை மாபெரும் புண்ணியமாகக் கருதுகிறேன்.
பாலா ஆர்
அன்பின் ஜெ,
வணக்கம்.
நீர்க்கூடல்நகர் என்ற வார்த்தையே நேரடியாக எங்களை அலகாபாத் திற்கு அழைத்துச் செல்கிறது.எத்தனை அழகான வார்த்தை
உங்கள் பயணக் கட்டுரைகள் எப்பொழுதும் எனக்கு அணுக்மானவை.அவை எல்லாவற்றிலும் நீர் கூடல்நகர் முதன்மை பெறுகிறது.
இந்திய மண்ணின் ஆதாரமான இந்து ஞானத்தையும் மெய்யியலையும் நாகா துறவிகளையும் பற்றிய உங்களது விவரணைகள்,உத்தரபிரதேசத்தையும கங்கை நதியையும் நீங்கள் வர்ணித்துக் கூறும் அழகு அத்தனையும் மிக அற்புதமானவை.
நேரடியாக நாங்கள் அங்கு சென்று இருந்தால்கூட இத்தனை கவனித்து இருக்க இயலாது. இந்திய மண்ணின் அடிப்படை நன்மைகளையும் இந்துக்களின் நம்பிக்கைகளையும் நதிகளில் புனித நீராடுவதையும் பற்றி நீங்கள் கூறியிருந்த விளக்கங்கள் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் ஏற்றவை. கும்பமேளாவைப் பற்றி எதிர்மறையான செய்திகள் மட்டுமே வெளி வரும் சூழலில் அதன். உண்மைத்தன்மையை, உள்ளீட்டை பற்றிய உங்களின் கட்டுரைகள் மிக முக்கியமானவை.
நன்றி
மோனிகா மாறன்.
ஜெமோ,
“ விடியற்காலையிலேயே மக்கள்பெருக்கு தொடங்கிவிட்டிருந்தது. சாலை எங்கள் தலைக்கு மிக அருகே என்பதனால் தலைக்குமேல் பெருங்கூட்டம் சென்றுகொண்டிருப்பதாகவே தோன்றிக்கொண்டிருந்தது…”
கும்பமேளாவுக்கு இங்கிருந்து செல்பவர்கள் மிகவும் குறைவு. அப்படியே சென்றாலும் எண்ணெயும் தண்ணீருமாய் விலகியிருந்து தரிசிப்பவர்கள் மத்தியில் அங்கேயே உருண்டு புரண்டு நாகபாபாக்களின் கூடாரத்திலேயே இரவுத் தூக்கம் என ஒன்றிப் போயுள்ளீர்கள். உங்களுடன் பயணம் செய்வதற்கு தேவையான உளநிலையே வேறு என்று எண்ணிக்கொண்டேன்.
சைவ மதப்பிரிவுகளின் இணைவாக்கத்தின் குறியீடு தான் இந்த நாகபாபாக்கள் என்றுணர்த்தியது கிராதத்தின் பிச்சாண்டவரை நினைவுபடுத்தியது. எத்தனை படிநிலைகள் இவ்வுச்சத்தை அடைவதற்கு. அர்ஜுனனின் நான்குதிசை பயணங்களோடு இப்படிநிலைகளை தொடர்புபடுத்திக் கொண்டேன்.
‘’ஆழத்தில் வானம் நெளிந்தது” என்று இரவில் நீங்கள் மேற்கொண்ட கங்கையின் படகுப் பயணத்தை விவரித்தது ‘இரவு’ நாவலின் நாயகனும் நாயகியும் இரவில் மேற்கொண்ட நதிப்பயணங்களை ஞாபகப்படுத்தியது.
இத்தனை சிரத்தைகளுடன் நடத்தப்படும் இப்பெருவிழாவை வழக்கம்போல் ஊடகங்கள் தங்கள் சிற்றறிவுகொண்டு மட்டுமே விளங்கிக் கொள்ள முயல்வது துரதிர்ஷ்டமே. அதிலும் நவீன வளர்ச்சியால் கைவிடப்பட்டவர்களான கடைநிலை சமூகங்களுக்கான விழாவாக மட்டுமே சித்தரிக்கமுயல்வது கயமைத்தனமானது. இதை மிக ஆழமாக பண்பாட்டழிவுக்கான முயற்சியென்று சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.
அன்புடன்
முத்து
அன்புள்ள ஜெ,
உங்கள் வாசகர் ஒருவர் உங்கள் கட்டுரை பற்றி நான் எழுதியதை, “கும்பமேளா பற்றிய உங்கள் கட்டுரைக்கு அரவிந்தன் கண்ணையன் எதிர்ப்பை எழுதியிருந்தார். அது ஒரு இந்துத்துவா கட்டுரை என்று.”
தமிழில் தான் எழுதினேன். அவர் எப்படி அந்த மாதிரி புரிந்துக் கொண்டார்? ஓ உங்களை நான் மறுத்தாலே உங்களை இந்துத்துவர் என்று குறிப்பிட்டிருப்பேன் என்ற நம்பிக்கைப் போலும் அவருக்கு. உங்கள் கட்டுரையை இந்துத்துவ கட்டுரை என்று குறிப்பிட வில்லை. இன்னும் சொல்லப் போனால் என் கட்டுரையில் இந்துத்துவ என்கிற வார்த்தையே இல்லை (தேடிப் பார்த்து தான் சொல்கிறேன். இருந்தாலும் உங்கள் கட்டுரையை அப்படிச் சொல்லவில்லை).
நன்றி
அரவிந்தன் கண்ணையன்