நீர்க்கூடல்நகர் – 1
அந்த டீ – ஒரு கடிதம்
அன்புக்குரிய ஜெ அவர்களுக்கு,
தங்கள் நலமறிய விழைகிறேன். நீர்க்கூடல்நகர் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்கு பாலா அவர்கள் எழுதிய எதிர்வினையோடு நான் சில விஷயங்களில் மாறுபடுகிறேன். பெரிய தனியார் நிறுவனங்களோ அல்லது அரசு நிறுவனங்களோ பாலில் கலப்படம் செய்வது சாத்தியமில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் என்னுடைய தனிப்பட்ட அனுபவம் வேறு வகையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது நெருங்கிய நண்பரும் உறவினருமான ஒருவர் தன்னுடைய நண்பர் ஒருவருடன் சேர்ந்து மதுரையின் புறநகர்ப் பகுதி ஒன்றில் மாட்டுப் பண்ணை ஒன்றைத் துவங்கினார். தினம் சுமார் 15 லிட்டர் பால் கறக்கும் 16 கலப்பின மாடுகளுடன் அந்த பண்ணை துவங்கப்பட்டது. அந்தப் பாலை விற்கும் பொருட்டு பாலா அவர்கள் குறிப்பிட்டுள்ள நான்கு பெருநிறுவனங்களில் ஒன்றைத் தொடர்பு கொண்டார் அந்த நண்பர். அவர்கள் ஒரு லிட்டர் பாலை 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய தயாராக இருந்தார்கள். இது மிகக் குறைவான விலை என்று நண்பர் சொன்ன போது அவர்கள் கூறிய பதில், 100 லிட்டர் பால் உடன் யூரியா கலந்து 200 லிட்டர் பாலாக மாற்றி கொண்டு வந்தால் அந்த 200 லிட்டர் பாலையும் அதே 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக அந்த நிறுவனம் கூறியது. இதற்கு மனம் ஒப்பாத அந்த நண்பர் மற்ற நிறுவனங்களைத் தொடர்பு கொண்டபோதும் இதே பதில்தான் கிடைத்தது. அரசு நடத்தும் பால் கொள்முதல் நிறுவனத்தில் அவர்கள் கேட்கும் விலைக்கு பால் விற்பது இவருக்கு கட்டுபடி ஆகாது என்பதால் அந்த மாட்டுப் பண்ணையையே மற்ற நண்பருக்கு கொடுத்துவிட்டு அவர் தற்போது வண்ண மீன்கள் விற்கும் தொழிலுக்குச் சென்று விட்டார்.
இந்த தகவலை அவர் என்னிடம் பகிர்ந்ததிலிருந்து தனியார் கம்பெனிகள் விற்கும் பாலை நாங்கள் வாங்குவதே இல்லை. வேறு வழி இல்லை என்றால் ஆவின் பால் வாங்குவதோடு சரி. இந்த கலப்பட பாலின் தரம் அதைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு பெரும்பாலான நேரங்களில் தெரிவதே இல்லை. ஆனால் பாலை நேரடியாக விவசாயிகளிடமிருந்துப் பெற்றுப் பயன்படுத்தியவர்கள் இந்த வேறுபாட்டை எளிதில் உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க விரும்ப மாட்டார்கள். ஒருவேளை அந்த நிறுவனம் பாலா அவர்கள் சொல்வது போல கலப்படம் செய்யாவிட்டாலும் கூட அந்த நிறுவனத்திடம் பாலை விற்கக் கூடியவர்கள் அந்தக் கலப்படத்தை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். அந்த நிறுவனம் விற்கும் பால் தரமானதாக இருக்க மட்டும் வாய்ப்பே இல்லை. இந்தத் தொழிலில் ஈடுபடும் தனிநபர்களின் அனுபவம் இதுவாகவே இருக்கும் என்பதே என் கருத்து.
பாலா அவர்களின் கருத்தைப் பற்றி அந்த நண்பரிடம் பேசியபோது அவர் மிகவும் வருத்தப்பட்டார். அவருடன் பேசிய பின்பே இந்த கடிதத்தை எழுது கிறேன்.
தங்கள் அன்பு மாணவன்,
இ.மாரிராஜ்
இனிய ஜெயம்
அந்தட் டீ சாதாரண டீ அல்ல.இந்தியாவில் எங்கும் கிடைக்கும் பிரத்யேக டீ, சுலைமானி டீ அளவே பிரபலமான இந்த டீ க்கு பெயர் பொல்டீ : ).
First Published : 24 Oct 2009 03:36:32 AM IST; Last Updated : 24 Oct 2009 04:03:49 PM IST
கம்பம், அக். 23: கம்பத்தில், கேரள மாநிலம் ஆலுவாயைச் சேர்ந்த கிருஸ்துதாஸ் என்பவர் பால் குளிரூட்டும் நிறுவனத்தை கடந்த 12 ஆண்டுகளாக நடத்திவருகிறார். தேனி மாவட்டத்திலுள்ள ஓடைப்பட்டி, வருசநாடு, கம்பம் ஒன்றியத்திலுள்ள கிராமங்களிருந்தும் தினந்தோறும் 12 ஆயிரம் லிட்டர் பால் காலை, மாலை இரண்டு முறையும் சேகரித்து குளீருட்டுப்பட்டு, கேரளத்துக்கு அனுப்பப்பட்டு வந்தது.
இந் நிலையில், கேரள அரசின் புகாரின்படி, தமிழக பால்வளத் துறையைச் சேர்ந்த மாநில பால்வள அலுவலர் அலெக்ஸ் ஜீவதாஸ், தேனி மாவட்ட பால் கூட்டுறவு துணை பதிவாளர் சண்முகராஜா ஆகியோர் தலைமையில் பால்வளத் துறையினர் இந்த பால் நிறுவனத்தில் திடீர் சோதனை செய்தனர்.
சோதனையில் பாலில் கலப்படம் செய்திருப்பது கண்டறியப்பட்டது. பாலில் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட வேதிப் பொருள்கள் கலந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது நிறுவனத்தின் ஊழியர்கள் சந்தோஷ், டோமி ஜார்ஸ் ஆகியோர் உடனிருந்தனர். கலப்படப் பால் 5 ஆயிரம் லிட்டர் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் நிறுவனத்தை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து பாலவளத் துறை அதிகாரிகள் கூறியபோது:
ஆய்வில் முறையான ஆவணங்கள் பயன்படுத்தவில்லை. தமிழக அரசின் அனுமதி சான்று பெறவில்லை. மேலும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கான சான்றிதழும் பெறவில்லையென்று தெரிவித்தனர். தேனி மாவட்டத்தில் 4 பால் நிறுவனங்கள் அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன. அதன் மீதும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார்.
மேற்கண்டது 2009 ஆண்டின் தினமணி செய்தி.
மேற்கண்ட செய்தி, வாரணாசியில் குறிப்பிட்ட மையத்தில்இருந்து வெளியேறும் ஒரு லட்சம் லிட்டர் பாலில்,முப்பது சதமானம் கலப்படம் என கண்டறிந்திருக்கிறது. [வாஷிங் பௌடர் நிர்மா பாலை போலே வெண்மை].
அதன் பின் [இடையில் எட்டு ஆண்டுகள் இருக்கலாம்] பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி ஹர்ஷவர்த்தன், அன்றைய ஆண்டில் பாரத நிலத்தில், பொதுமக்கள் புழக்கத்துக்கு என செல்லும் மொத்த பால் அளவில் அறுபத்தி எட்டு சதமானம் கலப்படம் என தெரிவித்து இருக்கிறார்.
தினசரிகள் வழியே என் போன்ற சாமான்யனை வந்தடையும் செய்திகளை வாசிக்க பதட்டமாகத்தான் இருக்கிறது. இனிமேல் பதட்டம் கொள்ளாமல் இருக்க பாலா அண்ணன் அளிக்கும் புள்ளி விவர கட்டுரைகளை மட்டுமே படிப்பது என முடிவு செய்திருக்கிறேன் :).
கடலூர் சீனு
அன்புள்ள கடலூர் சீனு, மாரிராஜ்
முன்பொருமுறை நண்பர் ஈரோடு கிருஷ்ணன் நீதித்துறையில் அனேகமாக ஊழலே இல்லை என ஆவேசமாக, ஏராளமான தரவுகளின் அடிப்படையில் பேசிக்கொண்டிருந்தார். அருகே இருந்தவர் இன்னொரு நண்பர், அவர் நீதித்துறை ஊழல்களை மிக நன்றாக அறிந்தவர், சொல்லப்போனால் அவருடைய உலகமே அதுதான். ஆனால் அவர் கிருஷ்ணனை எதிர்த்து வாதிடவில்லை. நான் பின்னர் இவரிடம் கேட்டேன், ஏன் அவர் மறுக்கவில்லை என்று. “அந்த நம்பிக்கை இல்லேன்னா அவரால கறுப்புக்கோட்டு போட்டுட்டுப் போய் நின்னு வாதாட முடியாது சார். அவர் அந்த நம்பிக்கைய வருஷக்கணக்கா தனக்குள்ளேயே பேசிப்பேசி நியாயப்படுத்தி வச்சிருப்பார். அவரோட தொழில்தேவை அது. அதனால அவர்கிட்ட நம்மால பேசவே முடியாது. அதோட அப்டி ஒருத்தர் ஒரு நல்ல நம்பிக்கையோட இருக்கிறது நல்லதுதுதானே, அவரால நம்ம தொழிலுக்கே பெருமைதானே?” என்றார் அவர்.
பாலா உணவு உற்பத்தித்துறையில் உயர்நிலையில் பணியாற்றியவர். அவரிடம் வரும் தகவல்கள் வழியாக செயல்பட்டவர். அவருடைய மறுப்புக்கட்டுரையின் மொத்தச்சாராம்சமும் ‘புள்ளிவிவரப்பொய்’ எனப்படும் ஒருவகை உண்மை என எனக்கு ஐயமே இல்லை. அவருடைய பொருளியல் கட்டுரைகளும் பெரும்பாலும் அவருடைய நம்பிக்கைகள் என்றே நினைக்கிறேன். இதேதான் முன்பு ராஜகோபாலன் காப்பீடு பற்றி எழுதியதைக்குறித்த என் எண்ணமும். அந்நம்பிக்கையில் பற்றிக்கொண்டு வாழ்பவர்கள். அதை நம்மால் உடைக்க முடியாது. அந்தத்தரப்பும் பதிவாகட்டுமே என நினைக்கிறேன். அதனால் நான் ராஜகோபாலனை நம்பி மருத்துவக்காப்பீடு போடுவேன் என்றோ பாலாவை நம்பி செயற்கைப்பாலை இயற்கைப்பால் என ஏற்றுக்கொண்டு குடிப்பேன் என்றோ பொருளில்லை. ஏனென்றால் செயற்கைப்பால்பொடியை மாவும் யூரியாவும் கலந்து உற்பத்திசெய்யும் ஒரு தொழிற்சாலைக்குள்ளேயே சென்று நான்கு மணிநேரம் சுற்றி நேரடியாக பார்த்தவன் நான். பாலா அதுவும் இயற்கைப்பால்தான் என புள்ளிவிரவங்களை கையில் வைத்திருப்பார் என எனக்குத் தெரியும்.
ஜெ